Enable Javscript for better performance
காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரை- Dinamani

சுடச்சுட

  

  காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரை

  By முனைவர் அ. பிச்சை  |   Published on : 13th September 2019 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீர் பிரச்னைக்கு தான் வாழும் காலத்திலேயே ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முன்னாள் பிரதமர் பண்டித நேரு விரும்பினார். ஆகவே, 1964-இல் அந்தப் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத் துறை விற்பன்னர்கள், நடுநிலையான அரசியல் சித்தாந்தவாதிகள், உயர் நிலை அரசு அதிகாரிகள் ஆகியோரோடு கலந்து பேசினார். தன் நம்பிக்கைக்குரிய அன்றைய  அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியின் கருத்தையும் கேட்டறிந்தார்.
  அதன் விளைவாக அவர் (1) சிறையில் வைக்கப்பட்டிருந்த ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும். (2) கலந்துரையாடல் மூலம் ஒரு தீர்க்கமான எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வைக் காணவேண்டும். (3) அதனைத் தன் வாழ்நாளிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற முடிவை பண்டித நேரு எடுத்தார்.
  பண்டித நேருவின் இந்த முடிவை அறிவித்தவர் அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. அறிவிப்புக்கான ஆதரவு எதிர்பாராதவிதமாக, உறுதி படைத்த இரண்டு பெரும் தலைவர்களிடமிருந்து வந்தது.  இருவரும் காந்திய வாதிகள்: ஒருவர் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அடுத்தவர் மூதறிஞர் ராஜாஜி.  
  இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இந்தமுயற்சியை வரவேற்றுப் பாராட்டியது. இந்துமகாசபையும், இடதுசாரி இயக்கங்களும், காங்கிரஸின் சில தலைவர்களும்  இந்த முயற்சியை எதிர்த்தார்கள். விடுதலை பெற்ற  ஷேக் அப்துல்லா நேராக புது தில்லி சென்றார்: பிரதமர் இல்லமான தீன்மூர்த்தி பவனில் பண்டித நேருவைச் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். பழைய கருத்து  வேற்றுமையை மறந்து இருவரும் தீன்மூர்த்தி பவனில் மனம் திறந்து பேசினார்கள்.
  அடுத்து ஜம்மு, காஷ்மீர், லடாக்  ஆகிய மூன்று பகுதிகளுக்கும் ஷேக் அப்துல்லா சென்றார்.  பல தரப்பு மக்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். பயணத்தை முடித்து மீண்டும் புது தில்லி திரும்பி நேருவின் இல்லத்திலேயே தங்கினார், நீண்ட பேச்சுவார்த்தை இருவருக்குமிடையே நீடித்தது.  இருவரையும் உபசரித்து மகிழ்ந்த இந்திரா காந்திக்குக்கூட அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது.
  அடுத்து அன்றைய பிரதமர் நேருவின் அனுமதியுடன் 1964 மே மாதம் 6-ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜியை ஷேக் அப்துல்லா  சென்னையில் சந்தித்தார்.  சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.  இருவரும் இணைந்து ஒரு சமரச வரைவுத் திட்டம் வகுத்துவிட்டதாக செய்தி வெளியானது.  
  அதே நாளில் ஷேக் அப்துல்லாவைச் சந்திக்க பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் விரும்புவதாக தகவல் வந்தது.  அடுத்த நாள் அப்துல்லா புது தில்லி திரும்பினார். தீன்மூர்த்தி பவனில் நேருவைச் சந்தித்தார். இருவரும் ராஜாஜியின் ஆலோசனை பற்றி சுமார் 90 நிமிஷங்கள் பேசினர்.
  இதற்கிடையில்,  தனக்கு காஷ்மீர் விஷயத்தில் ஆலோசனை வழங்க அதிகாரப்பூர்வமற்ற ஒரு குழுவை பண்டித நேரு நியமித்தார்.  அந்தக் குழுவில் வெளியுறவுச் செயலர் ஒய்.டி. குண்டேவியா, பாகிஸ்தானுக்கான தூதர் ஜி.பார்த்தசாரதி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்ருதீன் தியாப்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  இந்த மூவரும் மூன்று வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குழுவைச் சந்தித்து கலந்து பேசும்படி ஷேக் அப்துல்லாவை பண்டித நேரு அனுப்பினார்.  பிரச்னையின் முழுப் பரிமாணத்தையும்  ஆய்வு செய்த அந்தக் குழு, சில மாற்றுத் திட்டங்களையும் முன்வைத்தது. அந்தக் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
  அதன் பிறகு, பாகிஸ்தானுக்கு ஷேக் அப்துல்லா பயணித்தார்.  அங்கு மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். 1964-ஆம் ஆண்டு மே 25, 26-ஆம் நாள்களில் அதிபர் அயூப் கானுடன் சுமார் 7 மணி நேரம் கலந்து பேசினார்.  பண்டித நேருவின் காலத்திலேயே காஷ்மீருக்குத் தீர்வுகாண வேண்டும் என்றார்.  பண்டித நேருவின் ஓரளவு ஒப்புதலோடு தயாரிக்கப்பட்டிருக்கும் வரைவுத் திட்டம் குறித்தும் சொன்னார்.  அதிகம் பேசியது அப்துல்லாவே.  அயூப்கான் தன் நிலைப்பாடு என்ன என்பதை இறுதிவரை வெளிப்படுத்தவே இல்லை.
  ஆனாலும், அயூப் கான் ஜூன் மாதம் புது தில்லிக்கு வருவதற்கும், பண்டித நேருவைச் சந்திப்பதற்கும் சம்மதம் தந்தார். அந்த முடிவு ஷேக் அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஷேக் அப்துல்லா சென்று அந்த மக்கள் கருத்தறியத் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் எதிர்பாராத வகையில் அன்றைய தினம் (மே 27) நேரு இறந்து விட்டார் என்ற சோகச் செய்தி வந்தது.  அந்தச் செய்தி கேட்டு நிலைகுலைந்து போனார் ஷேக் அப்துல்லா.
  புது தில்லிக்குப் பறந்தார் ஷேக் அப்துல்லா.  தீன்மூர்த்திபவனில் நேருவின் உடலைக் கண்டார். என் அன்புச் சகோதரனே! காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் சக்தியும் செல்வாக்கும் உன்னிடம்தானே இருந்தது! நீ எரிந்து சாம்பலாகி விடுவாய்? இனி யார் காலத்தில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்? எனக் கதறி அழுதார்.
  பண்டித நேரு மேற்கொண்ட கடைசி முயற்சியில் மூன்று முக்கிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அவை: இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவது, இந்தியாவின் மதச் சார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்துவது, இரு நாடுகளிலும் சிறுபான்மையினர் நலனைப் பாதுகாப்பது ஆகியவை ஆகும்.
  நடந்த பேச்சுவார்த்தையின்போது நான்கு விதமான யோசனைகள் பரிசீலிக்கப்பட்டனவாம். அவை எதுவும் முழு வடிவம் பெறவில்லை. காற்றோடு கலந்து விட்ட நேருவின் ஆவியோடு, பரிசீலிக்கப்பட்ட ஆலோசனைகளும் அப்படியே மறைந்து விட்டன. 1971-இல் நடை பெற்ற போருக்குப் பின்பு பாகிஸ்தான் தடுமாற்றத்தில் நின்றது, அதன் பிறகு, பாகிஸ்தான் அரசுடன்   இந்திரா காந்தி சிம்லா ஒப்பந்தம் செய்து கொண்டார்.  அதன் படி இருக்கும் நிலை அப்படியே தொடரவேண்டும்; எந்த மாற்றமும், எல்லை மீறலும் தவிர்க்கப்படவேண்டும் என்பதே. காலப்போக்கில் அதுவும் பாகிஸ்தானால் மீறப்பட்டது.
  இதற்கிடையில்  ஷேக் அப்துல்லாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு இந்திரா காந்தி வந்து காஷ்மீரின் நிலையை உறுதிப்படுத்த முயன்றார். ஷேக் அப்துல்லாவின் மறைவுக்குப் பின் பதவி ஏற்ற அவரது மகன் பரூக் அப்துல்லா, மாநில முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு தேசிய அரசியலில் அடி எடுத்து வைத்தார். இந்திரா காந்திக்குத் தீவிரமான எதிர்ப்பு நிலையை எடுத்தார். அதன் விளைவாக இந்திரா காந்தியால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  தீராத பிரச்னை தீவிரமடைந்தது.
  1999-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற வாஜ்பாய் தன் ஆட்சிக் காலத்தில் கராச்சிக்குப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினார். பஸ் பயணம் மேற்கொண்டார்.  அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன்  ஒப்பந்தம் செய்ய முயன்றார். அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
  இறுதியில்  ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை தற்போதைய மத்திய அரசு ரத்து செய்துள்ளது; அந்தப் பகுதியை மற்ற மாநிலங்களைப் போல், இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்-ஐ ஒரு யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் சட்டம்-ஒழுங்கை தன்கைக்குள் கொண்டுவந்துள்ளது.
  இந்த அறிவிப்பை இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு மக்கள் வரவேற்பார்கள்; தங்கள் இயற்கை வளம் சுரண்டப்படாது என உறுதி அளிக்கப்பட்டால் பெரும்பான்மையாக பௌத்தர்கள் வாழும் லடாக் மக்கள் வரவேற்பார்கள்; காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் (பெரும்
  பான்மை முஸ்லிம்கள்) இந்த முடிவை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்.
  அங்குதான் பயங்கரவாதிகளும், பாகிஸ்தானிலிருந்து வரும் ஊடுருவல்காரர்களும், அப்பாவி இளைஞர்களை வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள். ஆக, காஷ்மீர் பள்ளத்தாக்குதான் பிரச்னைக்குரிய பகுதி ஆகும். பள்ளத்தாக்கில் உள்ள மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். அந்த மக்களையும் அரசின் பாதைக்குத் திருப்புவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 
  காஷ்மீரின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எடுத்த முடிவுக்கு  அவர்களையும் இணங்கச் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  தேசத்தின் முக்கியத் தலைவர்களையும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்வது நல்லது. அரசியல் கசப்புணர்வை அனைவரும் அறவே மறக்க வேண்டும்.
  இது கட்சிப் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வுபூர்வமான, தேசப் பாதுகாப்பை உள்ளடக்கிய பிரச்னை. தேசம்  எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.
  தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தன் அன்பால், அகிம்சை முறையால், ஜெனரல் ஸ்மட்சின் மனதை மாற்றினார். அதே வழியில் சத்தியத்தின் துணை கொண்டு பிரிட்டிஷ் அரசுடன் போராடி, தேசத்துக்கு விடுதலை பெற்றுத் தந்தார். அந்த மகான் வாழ்ந்த புண்ணிய பூமியில் பிறந்த நாம், அவரது 150- ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நாம், அவரை நினைவுகொள்ள வேண்டிய நேரம் இது.
  அந்நியர்களை  மனமாற்றம்  செய்தார்  மகாத்மா காந்தி. அன்புச் சகோதரர்களின் ஆதரவைப் பெறுவோம் நாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai