"செயலி' வணிகம் படுத்தும் பாடு!

"பட்டனைத் தட்டிவிட்டால் ரெண்டு தட்டினில் இட்டிலியும் நம்ம பக்கத்தில் வந்திடணும்' என்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கனவு இப்போது நனவாகி வருகிறது.


"பட்டனைத் தட்டிவிட்டால் ரெண்டு தட்டினில் இட்டிலியும் நம்ம பக்கத்தில் வந்திடணும்' என்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கனவு இப்போது நனவாகி வருகிறது. அதற்குத் தேவை, நம் கையில் ஓர் அறிதிறன்பேசியும் (ஸ்மார்ட் ஃபோன்), அதில் உணவைத் தேடும் ஒரு செயலியும். 

"உணவு விடுதி இருக்கும் இடம் தேடி'ப் போக வேண்டிய அவசியம் இல்லாமல், "நாம் இருக்கும் இடம் தேடி' வந்து சேர்கின்றன பசிக்கும் வயிற்றுக்கான உணவுகள். அதுவும் இரு சக்கர வாகனங்களில் அறிதிறன்பேசியில் ஆர்டர் செய்த அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிஷங்களில் வீட்டு வாசலுக்கு வந்து சேர்கின்றன. ஆனால், இப்படி உணவு கொண்டு வருபவர்கள் சாலை விதிகளை மதிப்பதில்லை; 

தங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; சாலையில் செல்பவர்களின் உயிரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் ஏன் சிறு நகரங்களில்கூட ஊபர், ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்களின் சீருடைகளை அணிந்துகொண்டு, உணவு விடுதிகளிலிருந்து பொருள்களை முதுகில் சுமந்தபடி பறக்கும் இளைஞர்களைக் காணமுடிகிறது. சென்னையில் இருக்கும் ஒருவர், தூத்துக்குடியில்  தனியாக வசிக்கும் வயதான தன் தந்தைக்கு, சென்னையில் இருந்து அறிதிறன்பேசியில் உணவை வழங்கப் பதிவு செய்ய, தூத்துக்குடியில் வசிக்கும் தந்தை அதைப் பெறுகிறார்.

எங்கிருந்தாலும் யாருக்கும் இருந்த இடத்தில் அவர்கள் வீட்டுக்கே உணவு செல்ல ஏற்பாடு செய்ய முடியும் என்பது, தொழில்நுட்பத்தின் உச்சம்தான் என்றாலும், இப்படி உணவுகளைச் சுமந்து செல்பவர்கள் சாலை விதிகளையும், சாலையில் வருவோர் போவோரையும் பற்றிக் கவலைப்படாமல், எல்லா விதிமுறைகளையும் மீறுவதும், சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமல் பயணிப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அவர்களின் கவனக் குறைவு பலருக்கும் கவலை அளிப்பதாகவும், தொந்தரவாகவும் இருந்து வருகிறது.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சிறு குடும்பங்கள் நடைமுறையாகிவிட்டன. வீட்டில் சமைப்பதை நிறுத்திவிட்டு, உணவகங்களில் சாப்பிடுவது பொது வழக்கமாகவே மாறியிருக்கிறது. விடுதிகளில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்கிற மேலைநாட்டுக் கலாசாரம், வளர்ச்சியின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. உணவு விடுதிகள் நடத்துவது என்பதுதான் தற்போது மிகப் பெரிய வியாபாரமாக மாறியிருக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, வெளியில்போய் சாப்பிடுவதும், உணவு விடுதிகளில் உணவு உண்பதும் கெளரவக் குறைச்சலாகக் கருதப்பட்டு வந்தது. விதவிதமான உணவு வகைகளைச் சமைப்பது குடும்பப் பெண்களின் தனித்துவமாகவும், பெருமையாகவும் கருதப்பட்ட நிலைமை இப்போது அடியோடு மாறிவிட்டது. படித்து வேலைக்குப் போகத் தொடங்கிய பெண்கள் மத்தியில், சமைப்பது என்பது தகுதிக் குறைவான செயலாக மாறியிருப்பது, சமுதாய மாற்றத்தின் அடையாளம் என்றுதான் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இந்தப் பின்னணியில், உணவு விடுதிகள் அதிகரித்திருப்பதையும், சிறு குடும்பங்கள் உணவு விடுதிகளில் உணவு உண்பதை வழக்கமாகிக் கொண்டிருப்பதையும் நாம் அணுக வேண்டியிருக்கிறது. கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போனதால் ஏற்பட்டிருக்கும் வருவாய் அதிகரிப்பின் விளைவால், விடுதிகளில் உணவு உண்பது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அதிகரித்துவரும் இந்தப் போக்கை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்தி, வீடு தேடி உணவுப் பொருள்களை வழங்கும் வியாபார உத்தியை ஸொமாட்டோ, ஸ்விகி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

மும்பை "டப்பாவாலா'க்களின் தொழிலை இவர்கள் பின்பற்றினாலும், இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை அவர்களுடன் ஒப்பிடுவது தவறு. அவர்களது செயல்பாட்டில் வயிற்றுப் பிழைப்பு இருந்தது, வணிகம் இருக்கவில்லை. சேவை இருந்தது, மற்றவர்களுக்குத் தொந்தரவு இருக்கவில்லை.

முன்பெல்லாம் சாலையில் பயணித்தால் தண்ணீர் லாரிகளும், கண்டெய்னர் லாரிகளும், கழிவு நீர் லாரிகளும் முன்னோ பின்னோ வந்தால்தான் பயப்பட வேண்டும்; எங்கே அவர்கள் வரும் வேகத்தில் நம்மை இடித்துத் தள்ளிவிடுவார்களோ என்று. ஆனால், இப்போதெல்லாம் பறக்கும் படைகளாகப் பறந்து செல்லும் இந்த உணவுப் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனப் பணியாளர்களைப் பார்த்தால்தான் அடிவயிறு பதறுகிறது.

இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் பறக்கும் இவர்களில் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து செல்வதில்லை. வாகனங்களில் பயணித்துக்கொண்டே ஒரு கையில் செல்லிடப்பேசியில்,  செல்ல வேண்டிய இடத்தை (லொகேஷன்) பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்வது வாடிக்கையான காட்சி. சாலையில்  வருவோரை கவனிக்காமல், சாலையில் நான்குமுனை சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகளைக் கவனிக்காமல் செல்வது வழக்கமாகிவிட்டது. சாலையில் நடமாடவோ வாகனம் ஓட்டவோ அச்சமாக இருக்கிறது.

உணவு விடுதிகளிலிருந்து உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று வழங்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று வழங்கினால் அதற்கேற்ப ஊக்கத்தொகை தரப்படுகிறது. அதனால், அரக்கப் பறக்க புயல் வேகத்தில் இரு சக்கர வாகனங்களில் பறக்கிறார்கள். பொதுமக்கள் பயத்தில் உறைகிறார்கள்.

சாலை விதிமுறைகளை மீறிச் செல்பவர்களை சாலைகளில் இருக்கும் கண்காணிப்புக் கேமராக்களும் படம் பிடித்ததாகத் தெரியவில்லை; இவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களும் இவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது குறித்துக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறதே, அது சரிதானா என்று கேள்வி கேட்க யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

எல்லாமே வணிகமயமாகிவிட்ட சூழல். அறிதிறன்பேசி வந்த பிறகு சுறுசுறுப்பாக செயல்பட்ட வாழ்க்கை முறை மாறி, "செயலி' வாழ்க்கையாக மாறியிருக்கிறது. எல்லாம் சரி, தங்களுக்கும் பாதுகாப்பில்லாமல், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத "செயலி' அடிப்படையிலான செயல்பாடுகளை காவல் துறை கண்காணிக்காமல் இருப்பது என்ன நியாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com