திறமையான பேராசிரியர்கள் உருவாக...

உயர் கல்வி வகுப்புகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களும், பேராசிரியர்களும் எவ்வளவு திறமையுடன் பணிபுரிகிறார்கள் என்பது, எல்லா நாடுகளின் பல்கலைக்கழகங்களாலும் கூர்ந்து நோக்கப்படுகிறது.

உயர் கல்வி வகுப்புகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களும், பேராசிரியர்களும் எவ்வளவு திறமையுடன் பணிபுரிகிறார்கள் என்பது, எல்லா நாடுகளின் பல்கலைக்கழகங்களாலும் கூர்ந்து நோக்கப்படுகிறது. முற்காலங்களில் பொறியியல் பாடத்தைப் போதிக்கும் பேராசிரியர் ஒருவரிடம், "அவர் என்ன பணி செய்கிறார்' என அவரை முதலில் சந்திக்கும் ஒருவர் கேட்டால், தான் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணி செய்வதாகக் கூறுவது வழக்கம் என அமெரிக்காவின் உயர் கல்வி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார்.  கல்வி கற்பிப்பது நீதி போதனை போன்ற ஓர் அம்சம் எனக் கருதி பேராசிரியர்களாக பலர் வேலை செய்து வந்ததும் இந்த ஆராய்ச்சியாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறியியல் வகுப்புகளில் பல மாணவர்கள் சரியான போதனை கிடைக்காமல் தூங்கி வழிவது உண்டு எனக் கூறும் வேளையில், மேரி சன்ஸலோன் எனும் ஆசிரியை மிகவும் சிறப்பாக வகுப்பை நடத்திச் சென்று மாணவர்களை ஊக்கத்துடன் கற்கச் செய்ததைச் சுட்டிக் காட்டினர் பலர்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் இந்தப் பேராசிரியை காலை 9 மணிக்கு முன்னரே வகுப்பறைக்கு வந்துவிடுவார்;  வகுப்பு ஆரம்பிக்கும் நேரமான காலை 9 மணிக்கு மாணவர்கள் வரத் தொடங்குவார்கள்; சுமார் 60 மாணவர்கள் படிக்கும் இந்த வகுப்பு முழுமையாக காலை 9:05  மணிக்கு நிரம்பிவிடும்.

இந்தப் பேராசிரியையின் கற்பித்தலைக் கேட்டு மாணவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரிப்பார்கள்; இதைக் கேட்டு பிற வகுப்புக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் பலரும் இந்த வகுப்புக்கு வருவது இயல்பு.  இவர் கட்டடங்கள் கட்டப்படுவது எப்படி என்று விவரிப்பார்.  செங்கல், சிமெண்ட், பல இரும்புக் கம்பிகள், தூண்கள் மற்றும் தளங்கள் போடுவது, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அமைப்பது போன்றவற்றின் படங்களைப் போட்டு தெளிவாக விளக்குவார். இவற்றை நன்றாகப் புரிந்துகொண்டு மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

மறுநாள் வகுப்பில்தான் மேரி சன்ஸலோனின் முழுத் திறமையும் வெளிப்படும். "நேற்று நான் உங்களுக்குக் கட்டடம் கட்டுவது எப்படி என்பதைத் தெளிவாக விளக்கினேன்.  அதை பாடப் புத்தகங்களில் படித்து நீங்கள் உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.  அது தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க உதவும்' எனக் கூறி வகுப்பை ஆரம்பிப்பார்.  

அடுத்து, இன்றைய வகுப்பில் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது நல்ல தரமான கட்டடங்கள் மழை பெய்து நீரால் நனையும்போதும், பலத்த காற்று அடித்து ஜன்னல்கள் மற்றும் வாயில் கதவுகள் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் விளக்க உள்ளதாகக் கூறுவார்.

உலகின் இயற்கைச் சூழல்களான, மழை, வெள்ளம், பெருங்காற்று, கடல் சீற்றம் மற்றும் நில அதிர்வுகள் பொறியியல் பாட புத்தகங்களில் கிடையாது. அவை தேர்வுகளில் கேள்விகளாகக் கேட்கப்படுவதும் இல்லை.  ஆனால், மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் வகையில் இவை கற்பிக்கப்பட்டால் மாணவர்களின் அறிவு, பல வகையில் அதிகரிக்கும் என்பது இந்த ஆசிரியையின் கருத்து.

பாலங்கள் இடிந்து விழுவது, சாலைகள் உடைந்து போவது, பெரிய கட்டடங்கள் இடிந்து போவது எல்லாவற்றையும் விளக்கியபின், இவற்றுக்கான அடிப்படைக் காரணம் இவை சரியான முறையில் கட்டி அமைக்கப்படாததே என்பதையும் இந்தப் பேராசிரியை விளக்குவார். இவரது சிறப்பான கற்பித்தலை சக ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். இவருடைய  மாணவர்களில் சிலர் எதிர்காலத்தில் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தால் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் எனப் பலர் போற்றினர்.

19-ஆம் நூற்றாண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றிய அலெக்ஸாண்டர் அஃகாசிஸ் அடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்.  இவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு, ஆளுக்கு ஒரு மீனைக் கொடுத்து அதை விவரமாக ஆராய்ந்து அதன் உறுப்புகள் பற்றியும் மற்ற அமைப்புகளையும் எழுதிக் கொண்டுவர வேண்டும் எனக் கூறிவிட்டு, அருகிலுள்ள தனது அறைக்குச் சென்று விடுவாராம்.  

ஒரு வாரம் கழித்து ஒவ்வொரு மாணவராக அவரிடம் வந்து தாங்கள் அந்த மீனின் உறுப்புகள் பற்றியும் பிற விவரங்களையும் எழுதியதைக் காண்பிப்பார்களாம்.  அவற்றில் முழுமை இல்லாவிட்டாலும், தவறுகள் இருந்தாலும், அவை சரியல்ல எனக் கூறி மீண்டும் ஒரு வாரம் அதைச் சரியானபடி கவனித்து, தவறுகளைத் திருத்தியும் கூடுதல் விவரங்களைக் கொண்டுவருமாறும் கூறுவாராம்.

சில வாரங்களில் சரியான, முழுமையான விவரங்களை அறிந்து பட்டியலிட்டு வரும் மாணவரைப் பாராட்டி அனுப்புவாராம் அஃகாசிஸ். இந்தப் பேராசிரியர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பித்த முறை கவனிக்கத்தக்கது. புரிந்துகொள்ளுதல், குறிப்பிட்ட விவரங்களை மாணவர்களாகவே கண்டுபிடித்துக்  கொள்ளுதல், இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை, புரிந்து கொண்ட விவரங்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து அறிந்துகொள்ளும் தன்மை மற்றும் இவை எல்லாவற்றையும் தாங்களாகவே கண்டுபிடித்து அறிந்ததால் ஏற்படும் திருப்தி ஆகியவை மாணவர்களுக்கு உருவாக வேண்டும்.

பேராசிரியர் ஒருவர் பாடப் புத்தகங்களில் கூறப்பட்டிருக்கும் விவரங்களை மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் உரையாற்றி விட்டு, அவற்றுக்கான கேள்விகளை தேர்வில் கேட்பது அசாதாரணமான நடைமுறை. மாறாக, பாடங்களை மாணவர்களை மனப்பாடம் செய்து அதை தேர்வில் கேள்விகளுக்கு விடைகளாக அளித்து குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறுதல் சாதாரணமான நடைமுறை. 

பாடங்களைக் கற்பிக்கும்போதே அவை தொடர்பான சமூக விவரங்களையும் கற்பிப்பது திறமையான பேராசிரியர்களின் கடமை.  பொருளாதாரம் மற்றும் நிர்வாகத் துறைகளுக்கான எம்.பி.ஏ. போன்ற வகுப்புகளில் பாடங்களைக் கற்பிக்கும்போதே பல நிறுவனங்களில் உருவாகும் பிரச்னைகளையும் விவாதிப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம்.

உதாரணமாக, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ. எனும் முதுநிலை படிப்பில், வகுப்பில் உள்ள மாணவர்களை சுமார் 5 பேர் கொண்ட பல குழுக்களாகப் பிரித்து விடுகிறார்கள்.  இந்தக் குழுக்களிடம் ஒரு வியாபார நிறுவனத்தின் பிரச்னையை அளித்து அதற்கான தீர்வை வகுப்பில் அளிக்கும்படி கூறுகின்றனர். ஒரு குழுவில் உள்ள ஐந்து பேரும் கொடுக்கப்பட்ட பிரச்னையை தங்களுக்குள் விவாதித்துக்  கொள்ள வேண்டும். 

சில கம்பெனிகளில் உருவான பிரச்னைகளுக்கான விடை பாடப் புத்தகங்களில் இருக்காது.  அவற்றைக் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களிடம் அளித்து, பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்பதை அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் தெரிந்து கொள்வதற்காக  அனுப்பப்பட்டுள்ளன. "கன்ஸல்டன்ஸி' எனும் இத்தகைய அறிவுரைக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படும். இவற்றை, பேராசிரியர்கள் ஆராய்ந்து விடையளிப்பது ஒருபுறம் என்றாலும், எம்.பி.ஏ.  படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அவற்றை அளித்து  பிரச்னைகளை ஆராயும் ஆற்றலை வளர்ப்பது பல்கலைக்கழகங்களின் திட்டம்.

இதுபோன்ற ஒரு நிகழ்வில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரச்னையை 8 குழுக்களாக மொத்தம் 40 மாணவர்கள் பிரிந்து, அந்த விவரங்களை ஆராய்ந்தனர்.  ஒரு கம்பெனியில் லாபம் குறைந்துள்ளது; அதைத் தவிர்ப்பது எப்படி என்பதும்தான் பிரச்னை.  பிரச்னையை தங்களுக்குள் ஒரு வாரம் விவாதித்த பிறகு பேராசிரியரிடம் தங்கள் பதில்களை மாணவர்கள் வழங்கினர்.  

7 குழுக்களின் பதில்களில், "உற்பத்தியைப்  பெருக்க வேண்டும், விற்பனை செய்யப்படும் பல பொருள்களின் விலைகளை உயர்த்த வேண்டும்' எனப் பல பதில்களை 7 குழுக்களைச் சேர்ந்தவர்கள் அளித்தனர்;  ஆனால், "அந்த நிறுவனம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை.  தற்போது உள்ளதுபோல் ஆலையின் உற்பத்தியையும் மற்ற துறைகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்தால் சிறிது காலத்தில் நிலைமை சரியாகிவிடும்;  அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை காரணமாகவே இந்த நிறுவனத்தின் பொருள்கள் அதிகம் விற்பனையாகவில்லை' என்ற 8-ஆம் குழுவின் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் அளித்த பதில்தான் சரி என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இது போன்ற உயர் கல்வி முறை, திறமையானவர்களை உருவாக்கும்.  

"எங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடைக்காததால் ஆசிரியர் வேலையைத் தேர்ந்தெடுத்தோம்' என நம் நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் கல்லூரி ஆசிரியர்கள் கூறுவது இயல்பு.  நம் நாட்டில் கல்லூரி ஆசிரியர் ஒருவர் தன்னைவிட புத்திசாலியான மாணவர் ஒருவரை தன் வகுப்பில் கண்டால், அந்த மாணவன் மீது வெறுப்பைக் காட்டுவதை பலர் உணர்த்துவது கவனிக்கத்தக்கது.

நம் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் சிலர் இருப்பதும் நமக்குத் தெரியும். மாணவர்களுக்கு திறமையான வகையில் பாடம் நடத்தி, அவர்களுக்குப் பல ஆற்றல்களை உருவாக்கி, அவர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடையும் பேராசிரியர்களைக் கொண்டது  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள். நம் நாடும் அந்த நாடுகளின் வரிசையில் இடம்பெற வேண்டும்.

கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com