போரை மறப்போம், மறதி தவிர்ப்போம்!

உலக அமைதி மற்றும் உலக ஞாபக மறதி நோய் விழிப்புணர்வு நாள் இன்று (செப்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதகுலம் தழைத்தோங்க உலகில்

உலக அமைதி மற்றும் உலக ஞாபக மறதி நோய் விழிப்புணர்வு நாள் இன்று (செப்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதகுலம் தழைத்தோங்க உலகில் என்றும் அமைதியும், நல்லிணக்கமும் தேவைப்படுகிறது. ஆனால், அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்தே அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கலிங்கத்துப் போரைப் பார்த்த பிறகு அசோகர் மனம் மாறினார். சிதறிக் கிடந்த உடல்களும், கதறி அழுத பெண்களும் போரின் அவலத்தையும், அமைதியின் அவசியத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டின.
அதன் பிறகு ஆட்சியிலும், ஆட்சி முறையிலும் மாற்றங்கள் வந்து போர்க்களம் மாறியதே தவிர போர்கள் மாறவில்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் தலைவிரித்தாடிய வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ஐ.நா. சபையை உலக நாடுகள் 1945-ஆம் ஆண்டு உருவாக்கின. கடந்த 2002-ஆம் ஆண்டு உலக அமைதி நாளாக செப்டம்பர் 21-ஆம் தேதியை ஐ.நா. சபை  பிரகடனப்படுத்தியது. ஆனால், உலக நாடுகளிடையே அமைதி என்பது இன்றுவரை மௌனம் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கிணறுகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. எனவே, அந்த நாட்டின் மீது சைபர் தாக்குதல், நேரடி ராணுவத் தாக்குதல் என பல்முனை நெருக்கடியைக் கொடுக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது. அப்படி நடைபெற்றால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கும். அமைதி நிலவும் நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகள் எப்போதும் கடைசி இடத்திலேயே இருக்கின்றன. அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறு நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக அமைதியைக் கடைப்பிடிப்பதில் ஐஸ்லாந்து முதலிடம் வகிக்கிறது.
அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இந்தியா. ஆனால், கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, 141-ஆம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், 2016 -ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு சீராக இல்லாததே காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. பதற்றத்தை உருவாக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு எப்போதும் இந்தியா பதிலடி கொடுக்குமே தவிர என்றுமே வன்முறையைத் தூண்டியதில்லை. அதனால்தான் புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து போன்ற பிரச்னைகளில் நமது பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டதன் அடையாளமாக உலக நாடுகள் நமக்குச் சாதகமாகக் குரல் கொடுத்தன. 
தற்போது உலகமயமாதல் கொள்கையால் அனைத்து நாடுகளும் வணிகம், தொழில் தொடர்பு, அரசியல், பண்பாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவே, எந்த நாடும் தான்தோன்றித்தனமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. மீறிச் செயல்பட்டால் பொருளாதார சிக்கல்களைச் சந்திக்கும் கட்டாயம் உள்ளது. குடியரசு ஆட்சி முறை பரவல், முதலாளித்துவ அமைதிக் கொள்கை என அமைதியை நிலைநாட்ட வெவ்வேறு முறைகள் கூறப்பட்டாலும் ஒவ்வொன்றிலும் பாதிப்புகள் அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  உலகமயமாதல் என்பது அமைதிக்கான ஒரு சிறந்த முறையாகவே பார்க்கப்படுகிறது.
எனினும், தான் என்ற அகங்காரமும், ஆணவமும் இல்லாமல் மனிதத்தைப் புரிந்துகொண்டு ஒரு நாடு செயல்பட்டால் அங்கு அமைதி ஏற்படும். அதற்கேற்றவாறு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தலைவர்கள் ஆட்சி புரிய வேண்டும். பசியில்லாமலும், பிணியில்லாமலும், அண்டை நாடுகளின் பகையில்லாமலும் இருப்பதே ஒரு நல்ல அரசாகும். 
அடுத்து, ஞாபக மறதி நோய் (அல்ஸைமர்) விழிப்புணர்வு நாள் குறித்துப் பார்ப்போம்.  முதுமையில் பெரும்பாலானோரைப் பாதிக்கும் ஞாபக மறதி நோய் (அல்ஸைமர்) நரம்பியல் மருத்துவத் துறை தொடர்புடையது; டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் இழப்பு-மொழி உச்சரிப்பில் தடுமாற்றம் - அன்றாடச் செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தொகுப்பின் ஒரு வகை நோய்தான் அல்ஸைமர் ஆகும். உதாரணமாக, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்கான வழியை மறக்கச் செய்யும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ஸைமர் நோய்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைச் செல்கள் சிதைந்து, அவர்களது நினைவாற்றல் மங்கத் தொடங்குகிறது. தொடர் விளைவாக, அவர்கள் தங்களையே மறக்கத் தொடங்கி விடுவார்கள். நாள்கள் செல்லச் செல்ல நடத்தையில் முரண்பாடு, உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகின்றனர். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பதில் சிக்கல், அண்மையில் நடந்த சம்பவங்களைக் கூட மறத்தல், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத தன்மை, நன்கு பழக்கப்பட்டவரைக்கூட அடையாளம் காண்பதில் சிரமம் போன்றவை அல்ஸைமர் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம் என்று நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.  நூல்கள் அதிகம் வாசித்தல், எழுதுதல், இசை கேட்டல்,  மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, தினமும் நடைப் பயிற்சி, தியானம் , யோகா போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நினைவாற்றல் செல்களை ஞாபக மறதி நோய் நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com