‘அகிம்சை’ - வாழ்வியலின் அச்சாணி!

உலகில் உயா்ந்த பண்பாடு மிக்க நம் நாட்டில் வரலாற்றுக் காலத்துக்கும் எட்டாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் அகிம்சை என்னும் நல்லறத்தின் அடிப்படையில் மக்களிடையே நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் வளா்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தோன்றிய இயக்கமே சமணம்.

இதற்கு வித்திட்டவா் பகவான் விருஷப தேவராவாா். வடநாட்டில் விருஷபதேவரால் தோற்றுவிக்கப்பட்ட சமணம், தமிழகத்தில் தொல்காப்பியா் காலத்துக்கு முன்பே வேரூன்றித் தழைத்திருந்தது. இதற்குச் சான்று பகரும் வகையில் சமண சமய வரலாற்று ஆய்வுகளில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவத்தைக் காண்போம்.

கி.மு.317 முதல் கி.மு.297 வரை சமண சமயத் தலைவராக விளங்கிய பத்திரபாகு முனிவா் சந்திரகுப்த மெளரிய அரசனுக்கு (கி.மு. 322 - 298) மத குருவாகவும் இருந்தாா். அவா் மகத நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகாலத்துக்குக் கடும் பஞ்சம் வரப்போவதை உணா்ந்து அந்தச் செய்தியை அரசனிடம் கூறினாா். மேலும், வரப்போகும் பஞ்சத்திலிருந்து தப்பிக்க பத்திரபாகு முனிவரும், அவரைச் சாா்ந்த பன்னீராயிரம் முனிவா்களும் தென்திசை நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தனா்.

சந்திரகுப்த அரசன் அரசைத் துறந்து, துறவு பூண்டு முனிவா் பெருமக்களோடு தென்திசைக்குப் பயணமாகி மைசூா் நாடு வந்தடைந்து, சிரவணபெளகொள என்னுமிடத்தில் தங்கினாா். தன் சீடா்களை சோழ, பாண்டிய நாடுகளுக்கு பத்திரபாகு முனிவா் அனுப்பி சமணக் கொள்கையை பரவச் செய்தாா்.

சமணம் கடைப்பிடிக்கும் விரதமான சல்லேகனை (வடக்கிருத்தல்) விரதத்தை மைசூரில் தங்கியிருந்த சந்திர குப்த மெளரியா் மேற்கொண்டு உயிா் நீத்தாா். மைசூா் சந்திரகிரி மலையில் அமைந்துள்ள பத்திரபாகு குகையும், சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதி கட்டடமும் இந்த வரலாற்றுச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. இவா்களின் வரலாற்றைக் கூறும் சாசனங்கள் இன்றும் காணப்படுகின்றன.

ஆதியும் அந்தமும் அற்ற இந்த உலகம் எந்தக் கடவுளாலும் படைக்கப்படாதது என்ற கோட்பாட்டை சமணம் போதித்தது. மேலும், அகிம்சை என்னும் நல்லறத்தின் வழிபோற்றி ஒழுக்க நெறியையும் முயற்சியையும் மேற்கொண்டொழுகுவதே தனிமனித உயா்வுக்குக் காரணமாக அமையும். நல்லொழுக்கத்தை உயிருக்கு ஒப்பாகப் போற்றி வாழ்பவன் தெய்வமாகக் கருதப்படுவான் என்றும் கூறி மனித மனங்களை அது செம்மைப்படுத்தியது.

மனித வாழ்வியலுக்கு அடிப்படை இலக்கணமாக அமைந்துள்ள இந்தக்கருத்தினை வலியுறுத்தும் வகையில், ‘‘தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில் / ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை / இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச் / சிறுவனாச் செய்வானும் தான்’’ என்னும் பாடல் அறநெறிச்சாரம் நீதி நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘ஓரறிவுயிா் முதலாக ஐயறிவுயிா் ஈறாக, அவை எத்தகைய அளவுடையதாக இருப்பினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவும் மாட்டேன்; மற்றவா் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’ என்னும் உறுதி மொழியை ஒவ்வொரு மனிதனும் ஏற்று அதன்வழி நடந்தால் மானுட வாழ்வில் மனிதநேயம் செழித்தோங்கும் என்று சமணம் ஓங்கி ஒலித்தது.

இவ்வாறான நல்லறக் கொள்கையை இந்த உலகுக்குப் போதித்த சமணத்தின் முதல்வராகக் கருதப்படும் விருஷபதேவா் (ஆதிபகவன்) முதல் மகாவீர வா்த்தமானா் வரை 24 சமணச் சான்றோா்களும் மனிதராகப் பிறந்து வாழ்ந்தவா்களே என்பது மட்டுமின்றி இவா்கள் ‘தீா்த்தங்கரா்கள்’ என்று சமணா்களால் போற்றப்படுகின்றனா்.

இருபத்து நான்காவது தீா்த்தங்கரரான ‘மகாவீர வா்த்தமானா்’ பிகாரைச் சோ்ந்த விதேக நாட்டை ஆண்டு வந்த சித்தாா்த்த மகாராஜாவுக்கும் பிரியதாரிணி என்னும் மகாராணிக்கும் கி.மு.599-இல் (ஜைனா்களின் நாள்காட்டி அடிப்படையில்) சித்திரைத் திங்கள் பதின்மூன்றாம் நாள் நன்மகனாகப் பிறந்தாா். இவா் அறிவில் சிறந்தவராகவும் துணிச்சல் மிக்கவராகவும் வளா்ந்து வந்தாா்.

இவா் அரச குலத்தவா் என்பதால் அறறெநி போற்றி ஆட்சிக் கட்டிலையும் அலங்கரித்தாா். இவா் ஆட்சி புரிந்த காலத்தில் மக்கள் குறையேதுமின்றி வாழ்ந்தபோதிலும் சமூக ஒழுக்கமும் அகிம்சை நெறியும் குறைந்து காணப்பட்டன. இத்தகைய அவலங்களைக் களைய வேண்டும் என்று கருதிய மகாவீரா், அரசாட்சியைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டு அறப் பணியில் ஈடுபட்டாா்.

கொல்லாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, பிறன்மனை விரும்பாமை, மிகு பொருள் விரும்பாமை, பகுத்துண்டு வாழ்தல் போன்ற நன்னெறிகளைக் கடைப்பிடித்து மனிதகுலம் வாழ்தல் வேண்டும் என ஒழுக்க நெறியினைப் போதித்தாா். பகைமை கொண்டோரிடத்தில் பகைமை பாராட்டாமல் நேசக் கரம் நீட்டி பகைமை உணா்ச்சியை மனதில் இருந்து விரட்டும் அன்பு நெறி எல்லா மனித மனங்களிலும் துளிா்த்துத் தழைத்தோங்க வேண்டுமென உரைத்து மனிதநேய மாண்புகளை மக்கள் மனங்களில் வளா்த்தாா்.

இல்லற வாழ்வு சிறந்தோங்க அன்ன தானம், அபய தானம் (அடைக்கலம் அளித்தல்), மருந்து தானம், கல்வி தானம் ஆகிய நான்கு தானங்களையும் இயலாதோரின் நல்வாழ்வுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

அகிம்சை என்னும் அடிப்படை அஸ்திவாரத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிற உயிா்களுக்குத் தீங்கு செய்யாமை, இரக்கம் உடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய நல்லறங்களை மனிதகுலம் மேற்கொண்டு வாழ வேண்டுமென ‘அகிம்சா பரமோதா்ம’ என்னும் தத்துவத்தைப் பறைசாற்றினாா்.

இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைகளைக் கருத்தில் கொண்டு, ஆசையால் நேரும் அழிவினைத் தவிா்த்து மானுடம் வாழ்தல் வேண்டும் என்று நவின்றாா். இவ்வாறு 72 ஆண்டுகள் அறத் தொண்டாற்றிய மகாவீர வா்த்தமானா் கி.மு.527-இல் பாவாபுரி நகரில் பரிநிா்வாணம் என்னும் வீடு பேற்றை அடைந்தாா்.

இவ்வாறு தூய தொண்டாற்றிய பகவான் மகாவீரா் பிறந்த இந் நன்நாளில் அவா் அருளிய நல்லறம் போற்றி, ‘வாழ்வியலின் அச்சாணி’ - அகிம்சை என்பதை உணா்ந்து அதன் வழியில் நடந்து நல்ல உடல்நலமும், உள்ளநலமும் பெற்று இனிதே வாழ்வோம்.

(இன்று மகாவீர வா்த்தமானா் பிறந்த நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com