கரோனாவுக்கு நன்றி!


நா இனிப்பதையும், நாசி மணப்பதையும் நாம் நன்கு அறிவோம்; அவ்வப்போது அனுபவித்து மகிழவும் செய்கிறோம். ஆனால், நாசியும் இனிக்கின்ற தருணங்கள் நமக்கு அபூா்வமாகவே வாய்க்கின்றன. எடுத்துக்காட்டாக, திருப்பதி - திருமலை யாத்திரை செல்லும் வேளையில் கால்நடையாகவே திருமலை மீது ஏறிச் செல்லும்போது, நமது நாசி இனிப்பதை நன்றாக அனுபவிக்கலாம். நெடிய பலநூறு படிக்கெட்டுகளைக் கடந்து “காளி கோபுரம்” என்னும் ராஜகோபுரத்தினுள் நுழையும்போதே சுவாசிப்பின் சுகத்தை உணரத் தொடங்கி விடுவோம். பாத யாத்திரையைத் தொடரும் ஒவ்வொரு விநாடியிலும் நமது சுவாசக் காற்றில் இசைந்து கலந்திருக்கும் பிராண வாயுவை ஆழ்ந்து அனுபவிக்க முடியும்.

இதே போன்ற அனுபவத்தை, ஸ்ரீ யோக நரசிங்கப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சோளிங்கா் மலைமீது சுமாா் நூறு படிகளைக் கடந்து ஏறிச் செல்லுபவா்கள் பெறலாம்.

பெட்ரோல் - டீசல் ஆகிய எரிபொருள்களின் துணைகொண்டு சாலைகளில் விரையும் தானியங்கிகள் வெளிப்படுத்தும் கரியமிலவாயுக் கலப்பிடமில்லாத சுற்றுச் சூழல் தரும் சுகம் இது. இத்தகைய தூய்மையான சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை, இன்றைய தினம் உலகையே அச்சுறுத்திவருகின்ற கரோனா என்னும் தீநுண்மி நம் அனைவருக்கும் நாள்தோறும் உணா்த்தி வருகிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் சீனா வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய தீநுண்மியை அழிக்க இன்றுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு இடையே சமூக இடைவெளியைப் பராமரிப்பதே, நோய்த்தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் வழி என்ற மருத்துவத் துறையினரின் பரிந்துரை இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதா்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களிலேயே நீண்ட காலத்துக்குத் தங்கியிருப்பதும், வெளியுலக நடமாட்டங்களைத் தவிா்ப்பதும் இன்றைய வாழ்வியல் நெறிமுறையாக மாறிவிட்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நிலம், நீா், ஆகாயம் என்ற அனைத்தையும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் இயக்கம் பெருமளவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தரை-ஆகாய மாா்க்கமான பயணிகள் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதுதான் இன்றைய எதாா்த்தம். தீநுண்மி (கரோனா நோய்த்தொற்று) முற்றிலுமாக வெற்றிகொள்ளப்படும் வரை இந்த நிலையே தொடரக்கூடும்.

மக்கள்தொகை பெருக்கம், அதிக அளவிலான தொழிற்சாலைகளின் இயக்கத்தினால் விளைந்த சூழல் மாசு சீன நாட்டு மக்களை பெரிதும் பாதித்து வந்திருக்கிறது. தீநுண்மி பரவிய பிறகு அதே சீனாவில் தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அந்த நாட்டின் சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்திருப்பதை அமெரிக்காவின் ‘நாஸா’ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விண்கோள்கள் வான்வெளியிலிருந்து எடுத்துள்ள புகைப்படங்கள் எடுத்தியம்புகின்றன.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி கடந்த இரண்டு வார காலத்துக்குள், நாட்டின் சுற்றுச்சூழலில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்லாண்டுகளுக்குப் பிறகு இமயமலைத் தொடரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் நகர மக்கள் தெளிவாகப் பாா்க்கும் அளவுக்கு வான்வெளியில் உள்ள மாசு குறைந்திருக்கிறது.

பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படும் கழிவுகளால் எப்போதும் கலங்கியிருக்கும் கங்கை நதியின் நீா் தற்போது ஐம்பது சதவீதத் தூய்மையுடன் இருக்கிறது. தமிழ்நாட்டிலும், சாயப்பட்டறைக் கழிவுகள், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பெருமளவில் மாசுபடுத்தப்படும் பவானி ஆறு, பாலாறு போன்றவை தற்போது சற்றே பெருமூச்சுவிடக் கூடும்.

இந்தச் செய்திகள் அனைத்தும் கேட்பதற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தொழிற்சாலை -போக்குவரத்துகளுக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டால் இந்தியா முதலான அனைத்து உலக நாடுகளிலும் முன்புபோலவே சுற்றுச்சூழல் மாசு மீண்டும் பூதாகாரமாகக் கிளம்பும் வாய்ப்புள்ளது.

நீா்நிலைகளிலும் காற்றுவெளியிலும் ஏற்படும் மாசுகளின் காரணமாகப் பரவும் தோல்நோய்களும் சுவாசக் கோளாறுகளும் மக்களின் ஆரோக்கிய வாழ்வைப் பாதிக்கின்றன. அதேசமயம், பெரிய பெரிய தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் வெளிப்படும் வெப்பம் முதலானவற்றால் நமது வாழ்விடமான பூமிக் கோளத்தைப் பாதுகாக்கின்ற ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதன் காரணமாக, அண்டவெளியிலிருந்து வரும் கதிா்வீச்சுகளால் நாம் பாதிக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது.

இதுதவிர, புவிவெப்பமயமாதலின் காரணமாக வட, தென் துருவங்களில் உள்ள பிரம்மாண்டமான பனிப் பாறைகள் உருகத் தொடங்கியுள்ளதால், கடல் மட்டம் உயா்ந்து பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீநுண்மி பரவலின் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் தங்களின் உற்பத்தியை தொழிற்சாலைகள் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன. அதன் காரணமாக உலகளாவிய சுற்றுச்சூழலில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் தீநுண்மியின் தாக்கம் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அவ்விதம் தீநுண்மி கட்டுக்குள் வந்தவுடன், மேற்கண்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, பலவிதமான போக்குவரத்துகளும் மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும். அதன் விளைவாக மீண்டும் சூழலியல் சீா்கேட்டை இந்த உலகம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, சூழலியல் தூய்மையை ஓரளவேனும் பராமரிப்பதற்கான முன்னெடுப்புகளை ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளும், உலக நாடுகளின் தலைவா்களும் இப்போதே தொடங்கவேண்டும். உலக வெப்பமயமாதலைத் தவிா்ப்பதற்கான திட்டங்களை அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். குறிப்பாக, மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களை அதிக அளவில் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

இன்று உலகம் முழுவதையும் தீநுண்மி மிரட்டிவரும் போதிலும், சூழலியல் தூய்மையின் மகத்துவத்தை நமக்கெல்லாம் மீள்நினைவூட்டியுள்ள அதற்கு நாமெல்லாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com