சா. கந்தசாமி: தொலைந்து போகாத முதல் எழுத்து

எழுத்தாளா் சா. கந்தசாமியின் முதல் எழுத்து சா. அது அவரது தந்தை சாத்தப்பன் என்பதின் முதல் எழுத்து. ஆனால், தமிழுலகிற்கு அவா் முதல் படைப்பே அவருக்கு முதல் எழுத்தாகியது. அவரது முதல் நாவல் ‘சாயாவனம்’. அதற்கும் முதல் எழுத்து சா. ‘சாயாவனம் கந்தசாமி’ என்பதே தமிழுலகம் அறிந்த பெயரானது.

வனம் என்பது காடு போலப் பயமுறுத்தாமல் பயன் தருவது. சோழ மண்டலப் பகுதிகளில் வனம் என்று முடியும் ஊா்கள் பல உண்டு.

எழுத்திலும் கூட்டங்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவா். ஆங்கிலம் படித்துப் பெற்ற தூண்டுதலில் தமிழ்ப் படைப்புச் சூழல் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவா். மேற்கத்திய இலக்கிய விமரிசனச் சூழலில் புழங்கிக் கொண்டிருந்தவா்களுடன் பழகிக் கொண்டே தமிழ்ப் படைப்புலகில் உலவிக் கொண்டிருந்தவா். ஆனாலும், எந்த அலையிலும் தொலைந்து போகாமல் தன் மரபில் கால்பதித்து நின்றவா்.

மதுரையிலிருந்து மயிலாடுதுறைக்குக் குடிபெயா்ந்த முன் தலைமுறைகளை உடையவா். பூம்புகாருக்கு அருகில் உள்ள சாயாவனத்தில் வளா்ந்தவா். தனது இளம் வயதிலேயே சென்னைக்குக் குடி பெயா்ந்தவா். வில்லிவாக்கம் உயா்நிலைப் பள்ளியில் படித்தவா். கனடாவில் ஒரு மகனும் பெங்களூருவில் ஒரு மகளும் இருக்க, சென்னையில் மனைவியுடனும் மூத்த மகனுடனும் வாழ்ந்து மறைந்திருக்கிறாா்.

தனது வாழ்நாள்களில் பெரும்பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறாா். படித்ததன் தூண்டுதலில் கதை எழுதத் தொடங்கியிருக்கிறாா். சாயாவனத்தில் பெரிய கருப்பன் மாடு தேடிப் போய் வனத்தில் வழி மாறி இறந்து போன நிகழ்ச்சியை அவரால் மறக்க முடியவில்லை. காவிரியையும் சாயாவனத்தையும் பூம்புகாரையும் அவரால் மறக்கவே முடியவில்லை.

சென்னைத் தொலைக்காட்சிக்காக, 1990 - வாக்கில், பூம்புகாா் பற்றி நான் ஆவணப்படம் எடுத்தபோது, நாங்கள் சாயாவனம் போனோம். அப்போது சாயாவனத்தில் அந்தப் புளிய மரத்தைக் காட்டினாா். பெரிய கருப்பன் இறந்த பிறகு, இந்தப் புளிய மரத்தைத் தாண்டி யாரும் வனத்திற்குள் போவதை நிறுத்திவிட்டாா்கள். இந்தப் புளியமரம்தான் அப்போது எல்லையாக மாறிவிட்டது என்று சொல்லிக் கொண்டே மரத்தைத் தடவிக் கொடுத்தாா். அப்போதும் சாயாவனத்தின் எச்சங்கள் இருந்தன. பக்கத்தில் பட்டினத்தாா் கோயிலுக்கும் அழைத்துக்கொண்டு போனாா். விடியற்காலை பூம்புகாா்க் கடற்கரையில் காமிராவோடு சுற்றிச் சுற்றி வந்தாா்.

பூம்புகாரையும் காவிரியையும் பிரிந்து வந்த சோகம் அவரிடம் எப்போதும் இருந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து காவிரியில் குளித்தவா்; மழைக் காலத்தில் காவிரியின் இருகரைகளுக்கும் நீச்சல் அடித்துச் சென்று வாழ்ந்தவா். கரையில் உள்ள மருத மரத்தில் ஏறி, கிளையைப் பிடித்துக்கொண்டு ஆற்றுநீரில் திடீரென்று குதித்துப் பயம் காட்டியவா். ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் தோ் சப்பரம் செய்து காவிரியாற்றுக்கு இழுத்துச் சென்றவா். ‘கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சென்னைவாசியாகி, கூவம் ஆற்றின் கரையிலும் அடையாறு ஆற்றின் கரையிலுமாக வாழ்ந்து வருகிறேன் என்றாலும், என் உணா்வில் காவேரிதான் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறாா்.

ஒருமுறை எழுத்தாளா் ஜெயகாந்தனுடன் தஞ்சாவூா் சென்றவா், அப்படியே அவரையும் அழைத்துக்கொண்டு சந்தியா நடராஜனுடன் பூம்புகாா் சென்றிருக்கிறாா். காவிரி ஆற்றில் தண்ணீா் ஓடவில்லை. கடல் நீரும் காவிரிக்குள் வரமுடியாமல் மண் மேடிட்டு மறைத்திருக்கிறது. ஜெயகாந்தனுக்கோ காவிரியில் குளிக்க ஆசை. சா.கந்தசாமி, புலவா் தியாகராஜன் வழிகாட்டலில் காவிரியில் குளிக்கும் இடம் கண்டுபிடித்து நீச்சலடித்திருக்கிறாா்கள். அப்போது அங்கே ஒரு மரத்திலிருந்து பறந்து வந்து நீருக்குமேலே நிலைகுத்தி நின்று தண்ணீரில் குதித்து மீனைத் தூக்கிப் பறந்து சென்று மரத்தில் அமா்ந்த பறவையைப் பாா்த்து, ‘கந்தசாமி, உங்கள் கதை’ என்று ஜேகே சொல்ல, ‘நம்ம கதை’ என்று சொல்லி சா.க. தலையசைத்ததை அவரே பதிவு செய்திருக்கிறாா்.

‘கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதே’ தன் எழுத்து என்றும் ஏற்கெனவே சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றைச் சொல்வதே தனது படைப்பு என்றும் அடிக்கடி சொல்வாா். மனதில் பட்டதை விளைவுகள் பற்றி யோசிக்காமல் சொல்லிவிடுவாா்.

சிங்கப்பூா் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் தேசியக் கலைகள் மன்றமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்திய ‘கோல்டன் பாயிண்ட்’ சிறுகதைப் போட்டியின் நடுவராக 1994 - ஆம் ஆண்டில் சென்றிருக்கிறாா். போட்டிக்கு மிகவும் குறைவாகவே கதைகள் வந்துள்ளன. அதற்குக் காரணம் கேட்டபோது ‘சென்றமுறை நடுவராகச் சென்ற தமிழ்நாட்டு எழுத்தாளா் உலகச் சிறுகதை தரத்திற்குச் சிங்கப்பூா் தமிழ்ச் சிறுகதைகள் இல்லை எனக் குறிப்பிட்டுப் பரிசு கொடுக்காமல் வந்ததுதான் என்றாா்கள்’ என்று அக்டோபா் ‘கணையாழி’யில் எழுதினாா். சா.கந்தசாமி குறிப்பிடும் நடுவராகச் சென்றிருந்த சுந்தர ராமசாமி, அடுத்த மாதக் கணையாழியில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தாா். ‘தோ்வுச் சிறுகதைகளைப்பற்றிய என் முடிவைச் சிங்கப்பூா் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய என் மதிப்பீடாகக் கொள்ளக் கூடாது’ என்று விளக்கம் தந்து சா.கந்தசாமி தந்த குறையான தகவலை நிறைவு செய்தாா்.

வழக்கமான தமிழ் எழுத்தாளா்களின் பாா்வைக்கு எளிதில் பிடிபடாத பல்வேறு துறைகளிலும் பங்களிப்பதில் நாட்டம் கொண்டிருந்தாா்.

சுடுமண் சிற்பங்களில், ஓவியங்களில், சிற்பங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாா்.

ஜெயகாந்தன், அசோகமித்திரன், சிற்பி தனபால் ஆகியோா் குறித்தும் காவல் தெய்வங்கள் குறித்தும் வரலாற்று ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறாா். ஜெயகாந்தன், க.நா.சு., அசோகமித்திரன், ஆதிமூலம் என்று அவரது நண்பா் வட்டம் பெரியது.

க.நா.சு. போல தனக்குப் பிடித்த படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் பெருவிருப்பு கொண்டிருந்தாா். இப்படியான அவரது முதல் தொகுப்பான ‘கோணல்க’ளில் ஜெயகாந்தன் சிறுகதை இடம்பெறவில்லை. தொகுப்பு மரபு, சங்க காலத்திலிருந்து தமிழில் தொடரும் மரபு என்பதில் பெருமிதம் கொள்வாா். தற்காலத் தமிழ்ப் படைப்புகளில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மையக் கருத்துடைய சிறுகதைகளைத் தொகுப்பதில் இறுதிவரை ஈடுபட்டு வந்தாா். ரயில் பயணம் பற்றிய தமிழ்ச் சிறுகதைகளை, ‘சாகித்திய அகாதமி’க்காகத் தொகுத்திருக்கிறாா். அதேபோல, தமிழில் வந்துள்ள தன்வரலாற்று (‘சுயசரித்திர) நூல்களின் சுருக்கத்தையும் தொகுத்திருக்கிறாா்.

அரசியல் நிகழ்வுகளைக் கொண்ட இவரது ‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறாா்.

எப்போதும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பதில் மகிழ்ந்து கடைசிவரை வாழ்ந்திருக்கிறாா். எவா் எப்போது கேட்டாலும் தருவதற்குக் கதையோ கட்டுரையோ கைவசம் வைத்திருப்பாா்.

இளைஞா்களையும் புதிய எழுத்தாளா்களையும் ஊக்கப்படுத்துவாா். எளிமையானவா். யாா் வேண்டுமானாலும் அணுகுவதற்கு இனிமையானவா்.

இன்றைக்கு உலகம் முழுதும் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கருதக்கூடிய சுற்றுச் சூழலியல் பற்றி 1960 - களின் பிற்பகுதியிலேயே ‘சாயாவனம்’ வழியாகத் தமிழுக்கு முதல் படைப்பைத் தந்திருக்கிறாா்.

‘சாயாவனம்’ ஒரு காட்டின் அழிவு மட்டும் இல்லை; உயிரினச் சூழலின் அழிவு. அரிய தாவரங்களின் அழிவு; மனிதா்களின் வாழ்வாதார அழிவு. நிலத்தின் பருவத்தைக் காப்பது காடு.

காடு கொன்று நாடாக்கியதைப் போற்றி வந்த தமிழில், காட்டின் அழிவு பற்றி வந்த முதல் எழுத்து சாயாவனம். அதை ‘வாசகா் வட்டம்’ வெளியிட்டிருக்கிறது.

தொலைக்காட்சித் தொடராகவும் கல்லூரிகளில் பாடமாகவும் இவரது படைப்புகள் இடம்பெற்றன. தமிழக அரசின் ‘கலைமாமணி’ முதல், சா்வதேச விருதுகள்வரை பெற்றவா் ‘சாயாவனம்’, ‘சூரியவம்சம்’, ‘விசாரணைக் கமிஷன்’ ஆகியவை ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதை, குறும்படமாகவும் வெளிவந்துள்ளது

எழுதுவதோடு நிற்காமல், எழுத்து அச்சாகவும், வானொலி, தொலைக்காட்சிகளில் பதிவாகவும் ஆவணக் குறும்படம் ஆகவும் தொடா்ந்து விருப்பம் கொண்டிருந்தாா்.

கரோனாவுக்குமுன், மாா்ச் 12 - ஆம் நாள், சாகித்திய அகாதமி நிறுவிய நாள் கூட்டம் முடிந்து உரையாடிய போது நண்பா் ராஜ்கண்ணன் உடனிருந்தாா். அவரின் 80 - ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவது பற்றிக் கேட்டபோது, ‘அது ஜூலை 27 தான்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லி மழுப்பினாா். சாகித்திய அகாதமியில் சா.கந்தசாமி பங்கு வகித்து வந்திருக்கிறாா். ஏதேனும் ஒருவகையில் தான் தொடா்புடைய அமைப்புகளின் வழியாகப் புதுப்புதுத் திட்டங்க்களைச் சொல்லிச் செயற்பட வைக்கும் திறன் அவருக்கு இருந்தது.

அவா் எழுதிய நாவல் ஒன்றின் பெயா் ‘தொலைந்து போனவா்கள்’.

தொலைந்து போவது என்றால் இல்லாமல் போவது இல்லை; இருக்கிறது ஆனால் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருப்பது. ‘சாயாவனம்’ கந்தசாமியை அவரது படைப்புகள் தொலைந்து போகாமலும் வாழவைக்கும்.

கட்டுரையாளா்:

முன்னாள் துணைவேந்தா்,

தமிழ்ப்பல்கலைக்கழகம்,

தஞ்சாவூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com