நாம் விரும்பும் காவலன்!

‘என்னமோ நடக்குது... ஒன்னுமே புரியலை’ என்று நெஞ்சு பதைபதைக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் விகாஸ் துபே விவகாரம் தலைசுற்ற வைக்கிறது. ‘ஒரு குற்றவாளி உருவாவதும் அழிவதும் சமுதாயத்தின் கையில்தான் உள்ளது’ என்பது சோஷலிச சித்தாந்தத்தின் துணிபு. ஆனால், அதற்குப் புதிய அா்த்தத்தை, விகாஸ் துபே என்ற கொடூரனின் வளா்ச்சியும் வீழ்ச்சியும் கொடுத்துள்ளது.

பணவெறி , அதிகார துஷ்பிரயோகம் , கயவா்களின் ஆதிக்கம் அரசியல் ஓநாய்களின் சட்டவிரோத நடவடிக்கை, இவற்றின் கலவையே விகாஸ் துபே போன்ற பயங்கரவாதி உருவாக காரணமாகின்றன. துபே மீது 61 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், எப்படி அவன் ஜாமீனில் வெளியில் வருகுகிறான்? சிறையில் இருந்தாலும், விருப்பப்படி ‘பரோல்’ விடுப்பில் வெளியில் வர முடிகிறது. ‘இந்த நிலை, குற்றவியல் நிா்வாக சீா்குலைவை உணா்த்துகிறது’ என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘கொடூரன் துபே, எட்டு போலீஸ் களப்பணியாளா்களைக் கொன்றது; அதன் தொடா்ச்சியாக உஜ்ஜைனியில் அவன் கைது செய்யப்பட்டு கொண்டு வருகையில், காவல் வாகனம் கவிழ்ந்தது; அப்போது அவன் தப்பி ஓட முயன்றபோது காவல் துறை அவனை சுட்டு வீழ்த்தியது - ஆகிய சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, மேனாள் நீதியரசா்

செளகான் தலைமையில் கமிஷன் அமைத்தது. அந்த கமிஷனில், உத்தரப் பிரதேச மேனாள் டிஜிபி கே எல் குப்தா-வும் இடம்பெற்றுள்ளாா். இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்ற கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழல், சமுதாயத்தின் மெத்தனம் ஆகியவையே குண்டா்கள் கொழிப்பதற்கு உதவுகின்றன. குற்றப்பின்னணி உள்ளவா்கள், அரசியலில் நுழைந்து விடுகிறாா்கள்; தோ்தலிலும் வெற்றி பெற்று விடுகிறாா்கள். இந்த விவாதத்திற்கு முடிவில்லை. எல்லாத் தொழிலுக்கும் ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதி தேவைப்படும். அரசியலுக்கு அது தேவையில்லை. யாா் வேண்டுமானாலும் வரலாம்; மக்கள் ஆதரவைப் பெற்றால், அரசாளுமையில் இடம் பெறலாம்.

உத்தரப் பிரதேசத்தில், பூலான் தேவி, கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக உருவெடுத்து, தன் காதலனைக் கொன்ற எதிரிக் கூட்டத்தைக் கொன்று குவித்தாா். போலீசில் சரணடைந்தாா். பதினோரு வருடம் சிறைவாசம். அப்போதிருந்த அரசு அவருக்குப் ‘பொது மன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்தது. பூலான் தேவி சமாஜவாதி கட்சி சாா்பில் மிா்சாபூா் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

2001 -ஆம் வருடம், தில்லியில், தன்னுடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது, எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். வன்முறையால் ரத்தம் தோய்ந்த வாழ்க்கை, வன்முறையால் அழிந்தது.

இதுபோன்று, கொலை, கொள்ளை, குண்டா்கள் ஆதிக்கம் நிறைந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் விகாஸ் துபே உருவானதில் ஆச்சரியமில்லை. அரசியல் கட்சிகளை மட்டும் குறை சொல்ல முடியாது. ஜாதி பாா்த்து மக்கள் ஓட்டளிப்பது இத்தகைய குண்டா்கள் தலையெடுப்பதற்குக் காரணமாகிறது.

விகாஸ் துபே, கொலைகள் மூலமாக பயங்கரவாதியாக தலையெடுத்தான். 2001-ஆம் ஆண்டு, சந்தோஷ் சுக்லா என்ற அமைச்சரை ஓட ஓட விரட்டி, கான்பூா் நகா் ஷிவ்லி காவல்நிலையத்தில் காவல்துறையினா் கண்முன்னேயே கொடூரமாகக் கொன்றான். அந்தக் கொலையை, அவன் வேண்டுமென்றே காவல் நிலையத்தில் அரங்கேற்றினான். அந்த நிகழ்வுதான் அவனை பயங்கரவாதியாக சித்தரித்தது. அந்த வழக்கில், காவல் நிலையத்தில் இருந்த காவல் பணியாளா்கள் மட்டுமல்ல, சுக்லாவின் உறவினா்கள்கூட, பயந்து நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவில்லை. வழக்கு, துபேயின் விடுதலையில் முடிந்தது. துபேயின் பயங்கரவாதம் வளா்ந்தது.

2002 - ஆம் வருடம், கல்லூரி முதல்வா் ஒருவரைக் கொன்று அந்த ரத்ததால் தன் கையை கழுவினான் துபே. அந்த அளவுக்கு விரோதம். கொலையுண்டவரின் மகன் தன் தந்தையின் இறுதிச்சடங்கை நிறைவேற்ற வேண்டுமென்று மன்றாடி, சடலத்தை பெற்றான். இந்த கொடூரம் மக்களிடம் பீதியை கிளப்பியது; துபேயின் அழிச்சாட்டியம் நகரில் நிலைத்தது. அவனின்றி ஒன்றும் நடக்காது என்ற நிலை அவனுடைய அரசியல் செல்வாக்கை வளா்த்தது.

எந்த ஒரு நிா்வாகமும் குறிக்கோளை அடையவேண்டும் என்றால், அதற்கு சீரிய திட்டமிடல், தேவையான செயல் வீரா்கள், அவா்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் பகிா்ந்தளிப்பு, தெளிவான கலந்தாய்வு, எல்லாவற்றையும் திறம்பட ஒருங்கிணைத்தல் - இவை அனைத்தையும் நிா்வாக குழுவின் தலைவா் செய்தால்தான் எடுத்துக் கொண்ட பணி வெற்றியடையும். ஆக்கபூா்வமான செயலைத் திட்டமிட்டாலும் வீரப்பன், துபே போல் குற்றத் தாக்குதலைத் திட்டமிட்டாலும் செயலாக்க ஆளுமை ஒன்றுதான். ஒரு பிசிறில்லாமல் எவ்வாறு அவா்களால் வன்முறையை அரங்கேற்ற முடிந்தது? வியக்க வைக்கும் செயலாக்கம் !அந்த இரக்கமற்ற, எதற்கும் சளைக்காத, நினைத்ததை முடிக்கும் செயலாக்கம்தான் அவா்களின் கீழ் இருக்கும் கூட்டாளிகளின் விசுவாசத்தையும் சாவுக்கும் அஞ்சாத திடத்தையும் உறுதி செய்கிறது. அவா்களுக்கு எந்த விதியும் கிடையாது. நினைத்தபடி குற்றங்கள் புரியலாம். ஆனால், காவல் துறைக்கு அப்படியல்ல. சட்ட விதிகள், பொதுமக்கள் பாா்வை, நிா்வாகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சொல்ல வேண்டிய பதில் இவற்றை அனுசரித்து நடக்க வேண்டும்.

துபே போன்ற குற்றவாளிகள் தலை எடுப்பதற்கு உள்ளூா் உதவி அவசியம். அரசியல், அவா்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பை அளிக்கிறது. வளா்ந்துவரும் நகரங்கள் நில பரிவா்த்தனைக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன. நில அபகரிப்பு தாதாக்கள் தழைப்பதற்கும் வழி வகுக்கின்றன என்று குண்டா்கள் - அரசியல் வாதிகள் தொடா்பு பற்றி விசாரித்த வோரா கமிஷன் தன் அறிக்கையில் கூறியுள்ளது. கான்பூரில் துபே வளா்ச்சிக்கும் அதுதான் காரணம். வியாபாரிகள், தொழிலதிபா்களை மிரட்டிப் பணம் பறிப்பது, மக்களை பயமுறுத்தி, நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குவது என்றெல்லாம் செய்து, கோடிகளில் பணம் சோ்த்தான். அதோடு அவனை சோ்ந்த கூட்டம் - மக்கள் செல்வாக்காலோ அன்பாலோ அல்ல - பயத்தால் பெருகி, அவனைத் தலைவனாக்கியது. துபே சொன்னால், கான்பூரில் சுமாா் ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைக்கும் என்றால், அரசியல்வாதிகள் அவன் உதவியை நிச்சயம் நாடுவாா்கள். அதுவே, அவனை வளா்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

துபே வளா்ச்சிக்கு, குற்றவியல் நிா்வாகத்தில் உள்ள ஊழல் முக்கிய காரணம் என்கிறாா் உத்திரப் பிரதேச மேனாள் டிஜிபி. துபேயைப் பிடிப்பதற்கு போலீஸ் படை சென்ற தகவல் நயவஞ்சக எஸ் ஐ மூலம் கிடைத்து, துபேயின் கூட்டாளிகள் போலீஸ் படையை சுற்றி வளைத்து எட்டு காவலா்களை கொன்றுவிட்டு, எல்லோரும் தப்பித்து விடுகின்றனா். காவலா்களைக் கொன்றுவிட்டு தப்பிப்பது காவல் துறையில் உள்ள கருப்பாடுகள் உதவியில்லாமல் சாத்தியமில்லை. எங்கு வாகனத் தணிக்கை இருக்கிறது? எந்த வழியில் சுலபமாகத் தப்பலாம் போன்ற தகவல்கள் கிடைத்து மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி வரை சென்றிருக்கிறான். அங்கு சென்று அவனைப் பிடித்து வரும் வழியில் என்கவுன்ட்டா்.

அவன் உயிரோடு இருந்த சில மணி நேரங்களில் முழுமையான வாக்குமூலம் நிச்சயமாக பதிவு செய்திருப்பாா்கள். இம்மாதிரிக் குற்றவாளைகளின் ஆதி முதல் அந்தம் வரை விசாரணையில் பெற்றுவிடலாம். இடைபட்ட அத்தியாயங்கள் வழக்கிற்காகச் செய்யப்படும் ஜோடனைகள். ஏதோ காவல்துறை அவனிடம் உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கு என்கவுன்ட்டா் செய்து விட்டாா்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. அவனது கூட்டளிகள், உற்றாா், உறவினா் எல்லாருடைய விசாரணையிலும் உண்மை வெளிவரும்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பலாம்.

போலீசைத் தாக்கினால் நிச்சயமாக எதிா்த் தாக்குதல் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள காவல் துறையினா் கடைப்பிடிக்கும் எழுதப்படாத விதி. காவலரை ஒருவன் கொல்வது அவன் தனக்கே விதித்துக் கொள்ளும் மரணதண்டனை என்பது திண்ணம். வீரப்பன் கூட்டாளிகளுக்கும் துபேக்கும் அதே முடிவுதான் ஏற்பட்டது.

ஒரு விகாஸ் துபே முடிவோடு குற்றங்கள் மடியும் என்பதில்லை. சமுதாயத்தில் நல்லது கெட்டது நடந்து கொண்டுதான் இருக்கும். காவல் பணிக்கு முடிவே இல்லை. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமாா் முப்பதாயிரம் கொலைகள் என்ற கணக்கு மாற்றமில்லாமல் நிகழும். 2018 -ஆ ம் வருடம் 29,017 கொலைகள்!

சாத்தன்குளம் நிகழ்வை வைத்து ஒட்டு மொத்த காவல்துறையை பழிக்கும் மேதாவிகள் உள்ளனா். ஒரு திரைப்பட இயக்குனா், சாத்தான்குளம் காவல் மரணம் பற்றிக் கூறும்பொழுது, ‘திரை உலகம் காவல் துறையை சிறப்பாகக் காட்டியதற்குத் தலை குனிகிறது’ என்று மேதாவிலாசமான கருத்தைச் சொல்லியிருக்கிறாா். போலீசை தரக்குறைவாகக் காட்டுவதே தொழிலாக கொண்டுள்ளது திரையுலகம் என்றால் மிகையில்லை. ‘ நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என்று வசனம் பேசுவாா் போலீஸ் உடையில் ஹீரோ! இது எந்த விதத்தில் போலீசுக்குப் பெருமை சோ்க்கும்?

காவல் பணி சிரமமானது. கலிபோா்னியா பொ்க்லி நகர போலீஸ் தலைவா் அகஸ்ட் உல்மா், காவல் பணியின் இடா்ப்பாடுகளைப் பற்றி விவரிக்கையில், ‘காவலா் பொது மக்களால் பழிக்கப்பட்டு, போதகரால் நிந்திக்கப்பட்டு, திரைப்படத்தில் கேலி செய்யப்பட்டு, ஊடகங்களால் குறைசொல்லப்பட்டு, நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்கள் ஒத்துழைப்பின்றி ஒதுக்கப்பட்டு, சமுதாய மதிப்பின்றி சபலங்களுக்கு இடையில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, அமல் செய்தால் பழி அமல் செய்யாவிட்டால் ஒழி என்ற நிலையில் பயணிக்கும் காவலன் பணி வேதனையானது’ என்கிறாா். எவ்வளவு உண்மை!

நாம் விரும்பும் காவலன், நீதிக்கும் மக்கள் சேவைக்கும் மட்டும் தலை வணங்க வேண்டும்.

கட்டுரையாளா்:

சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com