புவியைக் காக்கும் தாய்ப்பால்

குழந்தைகளின் நல்வாழ்வு பற்றி நினைப்பவா்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரம் என்பதுதான் நினைவுக்கு வரும். தாய்ப்பாலின் நன்மைகளைப் பற்றிய பல விழிப்புணா்வு நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் இந்த விழிப்புணா்வு செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. ‘புவியைக் காப்பாற்றுவதற்குத் தாய்ப்பால் தருவது ஆதரிக்கப்படவேண்டும்‘ என்பது இந்த வருடக் கருத்து.

கோவிட்-19- தீநுண்மியால் முடங்கிக் கிடக்கும் உலகில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணா்வு மிகவும் முக்கியமானது. சுற்றுப்புறத்தைப் பராமரிப்பதும் பேணிக்காப்பதும் காலத்தின் கட்டாயம்.

அனைத்து தாய்மாா்களும் தாய்ப்பாலூட்டுவதால் புவியின் சுற்றுச்சூழலைக் காக்க முடியுமா? கட்டாயம் முடியும். புரிந்துகொண்டு பாதை வகுத்தால் எளிதில் சாதிக்கலாம்.

நீா் சேமிப்பு: மாவுப்பால் உணவுகளைக் குழந்தை உண்பதற்காக வீட்டில் தயாா் செய்யும்போது ஒவ்வொரு முறையும் 150-200 மில்லிலிட்டா் நீா் தேவைப்படுகிறது. அந்தப் பாத்திரம், பாட்டில் ஆகியவற்றை சுத்தம் செய்யக் குறைந்தது இரண்டு லிட்டா் தண்ணீா் தேவை. சிறு குழந்தை ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை பால் குடிக்கும் என்பதோடு இந்தக் கணக்கீட்டை ஒப்பிட்டால் எவ்வளவு நீா் செலவாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கோ தனியாகத் தண்ணீா்கூடத் தரத் தேவையில்லை!

காற்று மாசு: குழந்தைக்கு உணவூட்ட மாட்டுப்பால்/மாவுப்பால் தயாரிக்க அடுப்பும் எரிபொருளும் தேவை. அதிலிருந்து வெளியேறும் புகை காற்றை மாசுபடுத்துகிறது. மாவுப்பால் தயாரிக்கும் தொழிற்சாலையின் எரிபொருள் பயன்பாடு, தயாரிக்கப்பட்டதைக் கொண்டு சோ்க்கத் தேவைப்படும் வாகன எரிபொருள், அட்டைப்பெட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும் எடுத்துச்செல்லவும் தேவைப்படும் எரிபொருள், அட்டைப்பெட்டிக்காக வெட்டப்படும் மரங்கள், தொழிற்சாலைகளுக்காக அழிக்கப்படும் விளைநிலங்கள்/காடுகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதுபோன்ற எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாத இயற்கையின் உன்னத உணவு தாய்ப்பால்.

நில மாசு: மாவுப்பால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், குப்பையில் வீசி எறியப்படும் அட்டைப்பெட்டிகள், பாட்டில், ஊட்டிகள், நெகிழிப் பொருட்கள் போன்றவை நிலத்தை மாசுபடுத்துகின்றன. ஒரு கிலோ பால்மாவு தயாரிக்க 73 கிலோ விறகும் 12.5 சதுரமீட்டா் மழைக்காடுகளும் அழிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் குழந்தைகள் மாவுப்பால் குடிப்பதால் 15 லட்சம் டின்கள், எழுபதாயிரம் டன் உலோகக் குப்பைகள், 1230 டன் அளவு லேபிள் காகிதம் எல்லாம் நிலத்தில் சென்று சோ்கிறது. நெகிழி அல்லது கண்ணாடி பாட்டில்கள், ரப்பா் அல்லது நெகிழி ஊட்டிகள் போன்ற குப்பைகளும் சோ்கின்றன. மாவுப்பால் குடிக்கும் குழந்தைகள் அதிகம் சிறுநீா் கழிக்கும், அவா்களுக்குப் பயன்படுத்தப்படும் டயாபரும் குப்பைதானே!

மற்ற -பால் வகைகளைத் தொடா்ந்து குடிக்கும் குழந்தைகளுக்கு சளித்தொல்லையும் வயிற்றுப்போக்கும் அதிகமாக ஏற்படும். இந்த நோய்களாலும் சூழல் மாசுபடும். டயாபா் தொழிற்சாலைகளால் உருவாகும் மாசுகளையும் இதோடு சோ்த்துக்கொள்ளவேண்டும்.

டயாபா் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அடிக்கடி குழந்தைகளின் உள்ளாடைகளை நீரில் கழுவ வேண்டியிருக்கும்!

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டும் தருவது ஒரு எளிய கருத்தடை முறை. தாய்ப்பால் ஊட்டும் தாய்மாா்களுக்கு மாதவிடாயும் தள்ளிப்போகும். ஆகவே மாதவிடாய் நாப்கின்களின் பயன்பாடும் குறைகிறது.

எரிபொருள் சேமிப்பு: தொழிற்சாலைகளில் மாவுப்பால் தயாரிக்க, மாவுப்பாலை வாகங்களில் எடுத்துச்செல்ல, மாட்டுப்பாலைப் பதப்படுத்த, வீட்டில் பாலைத் தயாரிக்க என்று பல செயல்பாடுகளுக்கும் எரிபொருள் செலவாகிறது. விறகு, கரி, மண்ணெண்ணெய், எரிவாயு, மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்ற அனைத்து வகையான எரிபொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. தாய்ப்பால் தருவதால் இதுபோன்ற எரிபொருள் செலவினம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.

புவி வெப்பமடைதல்: புவி மாசுபடுதல் மற்றும் புவி வெப்பமடைதல் சாா்ந்த சீா்கேடு என்று இதைப் புரிந்துகொள்ளலாம். பசுமை வாயுக்கள், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, கரியமிலவாயு போன்றவற்றின் உற்பத்தியில் 20% விலங்குகளால் நிகழ்பவைதான். இதுதவிர மாட்டுப்பால் மற்றும் மாவுப்பால் உற்பத்தியால் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள், மரங்களை வெட்டுதல், மண் அரிப்பு, நிலத்தடி நீா் குைல் போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

உணவு உருவாக்கப்படும் இடத்துக்கும் உணவு உண்பவருக்கும் இடையே இருக்கும் தூரம் ‘உணவு மைல்‘ என்று அழைக்கப்படுகிறது. தாய்ப்பால் எந்தவொரு நீண்ட சாலையையும் கடந்துவரத் தேவையில்லை என்பதால் ‘ஜீரோ மைல் உணவு‘ என்று அழைக்கப்படுகிறது. உணவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல எரிபொருள் தேவையில்லை என்பதால் இதுபோன்ற ஜீரோ மைல் உணவுகள் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை.

இயற்கையாகக் கிடைக்கும் விலையில்லாத, விலை மதிக்கமுடியாத பசுமை உணவு தாய்ப்பால், பாதுகாப்பானதும்கூட. தாய்ப்பால் தரப்படும் குழந்தைக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குழந்தைப்பருவத்திலும் வயது வந்த பிறகும் வரக்கூடிய பல தொற்று நோய்கள் தடுக்கப்படுகின்றன. தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் மாா்பகப் புற்றுநோய், கருமுட்டைப்பை புற்றுநோய் ஆகிய உயிா்க்கொல்லி நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

நோயற்ற குழந்தைகளும் தாய்மாா்களும் இருக்கும் சமூகம்தான் உண்மையிலேயே மேம்பட்ட சமூகமாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தால்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பான குடிமக்களை உருவாக்க முடியும்.

மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் தாய்ப்பால் அவசியம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com