வாய்விட்டு சிரிச்சா...

உலகம் முழுவதும், ஆபத்தான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்வது மரபாகியிருக்கிறது.



உலகம் முழுவதும், ஆபத்தான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்வது மரபாகியிருக்கிறது. சிரிப்பும் ஒரு சிறப்பு மருத்துவர் என்கிற உண்மை நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இன்று பலரும் "உம்'மென்று காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். காரணம், எங்கும், எதிலும், எப்பொழுதும் கரோனா பற்றிய பயம்தான். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்பு சராசரியாக ஒரு நாளைக்கு நூறு தும்மலுக்கு குறையாமல் போட்டவர்கள்கூட, இன்று ஒரு தும்மலுக்கே, "ஐயோ..இது கரோனாவின் அறிகுறியோ' என்று குழம்புகிறார்கள்.

கரோனா பரிசோதனை முடிவு "நெகட்டிவ்' என்று வந்தாலும் ஒருவருக்கு கரோனா இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறது ஒரு வல்லுனர் குழு. இந்தக் கரோனா மானிட சமூகத்தைக் கேலி செய்கிறது என்பதே உண்மை.

முகக்கவசங்கள், மனிதர்களை முகமற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. வீதியில் நம்மைப் பார்த்து வணக்கம் சொல்பவரை, சிறிது நேரம் காத்திருந்து அவர் வேஷம் கலைத்தப்பிறகே அடையாளம்கண்டு நாம் பதிலுக்கு வணக்கம் சொல்ல முடிகிறது. இந்த அடையாள குழப்பங்களே தொடர்கதையாகிவிட்டதால், முகக்கவசத்தோடு நமது வீதியில் எதிரில் வருபவர் நமக்கு தெரிந்தவராகத்தான் இருக்க முடியுமென்று குத்துமதிப்பாக வணக்கம் சொல்லிவைக்க வேண்டியிருக்கிறது. 

எடுப்பான மூக்கு, கத்திபோன்ற மூக்கு என்று சொல்லும்படியாக யாரும் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு இந்த முகக்கவச அழுத்தங்கள் பலரது மூக்கின் செருக்கைக் குறைத்திருக்கிறது. நோய்த்தொற்று முதன்முதலில் சீனாவிலிருந்து பரவியதால், நாமெல்லாம் நிறத்தால் இந்தியராக இருந்துகொண்டே மூக்கால் சீனர்களாக மாறுகின்ற அபாயமிருக்கிறது. கருப்பு அல்லது மாநிற சீனர்கள் என்று ஒரு புதிய இனத்தை உருவாக்காமல் இந்த முகக்கவசம் அடங்காது போலிருக்கிறது.  

மதுரையில் பிரபல உணவு விடுதி ஒன்று புதுவடிவ முகக்கவச பரோட்டாவை தயாரித்து கல்லாவை நிறைத்துக்கொண்டது. ஏற்கனவே கரோனா ரொட்டியை, சப்பாத்தியை வெற்றிபெறச் செய்தவர்கள், இந்த முகக்கவச பரோட்டாவையும் ஒரு பிடி பிடித்துவிட்டு கடையிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் முகத்தில்  இறுமாப்புத் தெரிகிறது.  

ஏதோ வெந்ததை தின்று நொந்து சாகத்தான் வேண்டும்போல என்று நாம் காலாற நடந்தால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் நம் முன் வந்து நிற்கும் ஒரு குடிமகன், "ஏண்ணே... கோயிலைத் திறந்தா, பள்ளிக்கூடத்த திறந்தா கரோனா பரவும்னு சொல்லிட்டு, டாஸ்மாக்க இப்படி திறந்து விட்டிருக்காங்களே, அங்கேயிருந்து கரோனா பரவாதா' என்று கேள்வி கேட்டு அவனே சிரித்துவிட்டு போகிறான்.  

என்.எஸ்.கிருஷ்ணன் கூறியது போல, "சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்குச் சொந்தமானது சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே  நமது பொறுப்பு' என்று தொடங்கும் பாடலில், "இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு' என்ற வரிகளின் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 

அகில உலகத்துக்கும் பொதுவான மொழி சிரிப்பு. கைக்குழந்தையாக இருக்கும்போது நாம் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சிரித்துக்கொண்டிருந்தோமா, அதில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே நாம் வளர்ந்து பொறுப்பானவர்கள் ஆகியபிறகு சிரிக்கிறோமாம். அப்புறம் கரோனா ஏன் நம்மைப் பார்த்து கேலியாய் சிரிக்காது?

இந்த வாழ்க்கை முறையின் காரணமாக நம்மில் பலரும் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்பட்டு, "ரோபோ'க்களாக மாறிவிட்டதால், வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்கிற பழமொழியை நாம் மறந்துவிட்டோம். 

சிரிப்பு, வெறும் வாய் சார்ந்த செயல் மட்டுமல்ல. அது உணர்வுபூர்வமான ஓர் உடல்மொழி; உயிரோட்டமானது; உன்னதமானது; தெய்வீகமானது.நோயாளியின் மனத்தில் மலர்ச்சியை உண்டாக்குவதே மருத்துவத்தின் முதல் நோக்கம் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்க மருத்துவர் பாட்ச் ஆடம்ஸ், அதற்காக கோமாளி முகமூடி அணிந்துகொண்டு கோணங்கி சேட்டைகளைக்கூட செய்வாராம்.  

இவர் எழுதிய ஒரு நாவலில் ஊசி, மருந்துகளைத் தாண்டி நலம்தரும் முக்கியமான விஷயங்கள் சிரிப்பும் மகிழ்ச்சியுமே என்பதை பல உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.  

ஒரு நிமிடம் சிரித்தால், அது  47 நிமிட ஓய்வுக்கு சமம் என்று கூறப்படுகிறது. 5 நிமிடம் சிரித்தால் 135 வியாதிகள் வராமல் தடுக்கப்படும் என்று சிரிப்பின் நன்மைகள் குறித்து விளக்கும் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். டி-செல்கள் நமது உடலில் இருக்கும் சிறப்பு நோயெதிர்ப்பு அமைப்பு செல்களாகும். அவை நம் உடலில் செயல்படுவதற்காக எப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றன. நாம் சிரிப்பதால், டி-செல்கள் நன்றாகச் செயல்படுகின்றன. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை நம்முள் அதிகப்படுத்த உணவோடு  கூட்டாக சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுவதே முறை.

கணவனிடம் மனைவி கேட்கிறாள், "குழந்தை ஏன் அழறான்? டாக்டர் ஊசி போட்டாரா ? அதற்கு கணவன் சொல்கிறான், "இல்லே, அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே. இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்' -  இப்படிப் பேசும் கணவனின் மனநிலையில் உள்ள மனிதர்களை நோய் அண்டாது. 

"வயிறுவலிக்க சிரிப்பவர்கள் மனிதஜாதி; பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி', என்றொரு திரைப்படப் பாடலை நாம் கேட்டிருப்போம். அதன்படி, இரண்டாம் வகைச் சிரிப்பைத் தவிர்த்து, எல்லாச் சூழ்நிலைகளிலும் முதல்வகைச் சிரிப்பையே சிரிக்கப் பழகுவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com