குழப்பத்தில் பொறியியல் மாணவர்கள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர்களுக்கு, குறிப்பாக, கணினிப் பொறியாளர்களுக்கு தனி மரியாதை இருந்தது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர்களுக்கு, குறிப்பாக, கணினிப் பொறியாளர்களுக்கு தனி மரியாதை இருந்தது. இத்துறையில் உலகம் முழுவதும் இந்தியர்கள், குறிப்பாக, தென்னிந்தியர்கள் கோலோச்சியதால் கணினிப் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
இதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் பலரும் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினர். மாட்டுக் கொட்டகைகள் வகுப்பறைகளாக மாறின. விளைநிலங்கள் வானுயர்ந்த கான்கிரீட் கட்டடங்களாக  உருமாறி நின்றன.
ஒவ்வோராண்டும் தேவை அதிகரித்ததால் மாணவர் சேர்க்கைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றால் போதும் பொறியாளராக முடியும். ஆனால் பொறியியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இதனால் பொறியியல் படிப்பை ஆண்டுதோறும் நிறைவு செய்யும் சுமார் 15 லட்சம் மாணவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. தரமில்லாத பொறியியல் கல்வியே அதற்குக் காரணம். பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை.
பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.   இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்ச்சி அறிக்கையில், இரு கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இதனால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து போனதால் பல கல்லூரிகள் மூடப்பட்டன; தொடர்ந்து மூடப்பட்டும் வருகின்றன. கலைக்கல்லூரிகளாகவும் மாற்றப்படுகின்றன.
பள்ளிகளைப் பொருத்தவரையில் எழுதாமலே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். பொறியியல் கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர, பிற மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 
முதலில், இறுதி பருவத் தேர்வு வைக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (ஏஐசிடிஇ), பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தெரிவித்திருந்தன. ஆனால், இப்போது அந்த  நிலையில் மாற்றம் தெரிகிறது. 
இறுதிப் பருவத் தேர்வு வைக்காவிட்டால் அவர்களுக்கு மதிப்பிருக்காது. அதனால் கண்டிப்பாகத் தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் என்ன செய்வது என்கிற குழப்பத்தால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இறுதிப் பருவத் தேர்வு எழுதாதவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளன.
வழக்கமாக, மாணவர்களுக்கு இறுதிப் பருவத் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் தேர்வு முடித்து ஜூலை மாதத்துக்குள் தேர்ச்சி அறிவிக்கப்படும். பல மாணவர்கள் வேலைக்கோ அல்லது உயர்கல்விக்கோ செல்வார்கள். இதற்கு  அவர்களுக்கு டிகிரி சான்றிதழ் அல்லது புரொவிஷனல் சான்றிதழ் தேவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து ஒவ்வோராண்டும் பல ஆயிரம் மாணவர்கள் செல்வார்கள். தேர்வு நடைபெறாததால் அவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்துத் தவிக்கின்றனர்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு பலமுறை "தேர்வுக்குத் தயாராகுங்கள்' என்று மாணவர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எப்போது தேர்வு என்பது குறித்து யாருமே தெளிவுபடுத்தவில்லை. இறுதிப் பருவத் தேர்வுகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்  தெரிவித்திருந்தார். இப்போது ஜூலை முடிந்து ஆகஸ்ட்டும் தொடங்கிவிட்டது.
பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 2, 3-ஆவது ஆண்டு மாணவர்கள், "கோர் சப்ஜெக்ட்' எனப்படும் முக்கியப் பாடங்களைப் படிப்பார்கள். அவர்களுக்கு மொத்தம் ஆறு தேர்வுகள். ஆனால் இம்முறை தேர்வு எழுதாமலே அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இறுதியாண்டில் இறுதிப் பருவ மாணவர்கள் பெரும்பாலும் விருப்பப் பாடத்தையே அதிகபட்சமாக மூன்று தேர்வாக எழுதுகின்றனர். சில கல்லூரிகளில் இறுதியாண்டில் படிப்போருக்கு, தேர்வே நடத்தப்படுவதில்லை. முன்கூட்டியே அனைத்துத் தேர்வுகளையும் எழுதியதால்  புராஜக்ட் மட்டுமே. 
தமிழகத்தைப் பொருத்தவரையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இந்தப் பிரச்னை. பல தன்னாட்சிக் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை அறிவித்து விட்டன. பல நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் தேர்வின் மூலம் தங்கள் இறுதிப் பருவ  மாணவர்களின் திறனைச் சோதித்து தேர்வு முடிவுகளை அறிவித்துவிட்டன. 
முக்கியமான பாடங்களை எழுதுவோருக்குத் தேர்வு ரத்து. ஆனால் விருப்பப் பாடங்களை மட்டும் எழுதுவோருக்கும் புராஜக்ட்  மட்டும் உள்ளோருக்கும் கண்டிப்பாகத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும். இறுதியாண்டு மாணவர்களுக்கு, நாளை ஒரு போட்டி என வரும்போது தேர்வு எழுதியிருந்தால்தான் மதிப்பு என்பதால் தேர்வு வைக்க வேண்டும் என்று கல்வித்துறையினர் சொல்கின்றனர். 
செப்டம்பர் மாதத்தில்  வெளிநாடுகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளே தொடங்கிவிடும். ஆன்லைன் தேர்வுக்கு அண்ணா பல்கலைக் கழகம் வரும் 13-ஆம்  தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது.  
பொது முடக்கத்தின்போது அவரவர் வீட்டில் இருந்தபோது தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அப்போதே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தினர். அவர்கள் எப்போது தேர்வு நடைபெறும் என்று தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com