தனியார் துறையும் வேலைவாய்ப்பும்

கரோனா பொது முடக்க காலத்தில் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதாக மத்திய அரசு செப்டம்பர் 14 அன்று மக்களவையில்


கரோனா பொது முடக்க காலத்தில் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதாக மத்திய அரசு செப்டம்பர் 14 அன்று மக்களவையில் தெரிவித்திருந்தது. இதில், 14.3 % தொழிலாளர்கள் அதாவது 15 லட்சம் தொழிலாளர்கள் பிகாரை சேர்ந்தவர்கள். 

இதனால்,  நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வேலைவாய்ப்பு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. 

தேர்தல் பிரசாரத்தின்போது இப்பிரச்னையை முதலில் கையில் எடுத்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தான் ஆட்சிக்கு வந்ததும், தனது அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான கோப்பில் கையெழுத்திடுவதாக சூளுரைத்தார். இதற்கு பதிலடி கொடுத்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்தது.
2019 மக்களவைத் தேர்தல் வரை ராமர் கோயில் விவகாரத்தையும், தேசிய பிரச்னைகளையும் மையமாக வைத்து இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பிய மத்திய அரசோ, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியாகும் வரை வேலைவாய்ப்பு பற்றிய தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) அறிக்கையை வெளியிடாமல் மௌனம் காத்தது. 

இவ்வாறு வேலைவாய்ப்பு குறித்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. 

நாட்டில் விவசாயம் சாரா தொழில்களின் வாயிலாக ஆண்டுக்கு 75 லட்சம் என்ற வீதத்தில் வேலைவாய்ப்பு பெருகினாலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீதம் அதிகரித்து வருவதன் விளைவாக, ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மட்டுமே கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதிலும் பிகார், உத்தர பிரதேச மாநிலத்தவர்களே கணிசமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

நாட்டில் சுமார் பத்து ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சராசரியாக 7 %-க்கும் அதிகமாகப் பதிவானது. ஆயினும், கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக ஒன்பது காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ச்சியாக சுணக்கம் ஏற்பட்டது. இதற்கு மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணமாகும்.

2013-ஆம் ஆண்டுக்குப் பின்னர் விவசாயம் சார்ந்த தொழில்களைக் கைவிட்டு ஏராளமானோர் கிராமப்புறத்திலிருந்து நகர்ப் பகுதிக்கு இடம் பெயரத் தொடங்கினர். ஆயினும், மக்கள்தொகைக்கு ஏற்ப விவசாயம் சாரா தொழில்களில் வேலைவாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு பெருகிவிடவில்லை. இந்த ஆண்டு கொவைட் 19 அச்சுறுத்தலால் பெரும்பாலானோர் வேலையை இழக்க நேர்ந்தது.

வேலையில்லா பிரச்னை பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் வரை தேசிய அளவில் விவாதப் பொருளாகவில்லை. ஆயினும், வேலைவாய்ப்பை மையமாக வைத்தே பிகார் தேர்தல் நடந்தது. அரசியல் கட்சிகளின் மிதமிஞ்சிய வாக்குறுதிகள் வேலைவாய்ப்பு தொடர்பான அரசின் கொள்கைகளை வகுப்பதில் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.  

முதலாவதாக, நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளில், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வெறும் 7.31%  மட்டுமே அரசுகளால் உருவாக்கப்படுவதாக தேசிய மாதிரி ஆய்வு 2017-18 தெரிவிக்கிறது. 

அதேபோல், நாட்டில் மொத்தம் உள்ள 46.5 கோடி வேலைவாய்ப்புகளில், சுமார் 26 கோடி வேலைவாய்ப்புகள் விவசாயம் சாரா பிரிவுகளிலேயே (தொழிற்சாலை, சேவைப் பிரிவுகள்) உருவாக்கப்படுகின்றன.

மேலும் அரசுத்துறை வேலைவாய்ப்பைக் கணக்கிட்டால், அதில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு வருவதை உணரலாம். உதாரணமாக, கடந்த 2005 முதல் ஏழாண்டு காலகட்டத்தில் ஆண்டுக்கு 13 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு, 2012-18 காலகட்டத்தில் நான்கு லட்சமாக சரிந்தது.

இதைக் கருத்தில் கொண்டு சுயதொழில் மூலம் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதன்படி, விவசாயம் சாரா சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.10 லட்சம் வரை கடனுதவியை வழங்கும் "முத்ரா'  போன்ற திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினாலும், அத்திட்டம் போதிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை.

கடந்த 2005-இல் 8.10 கோடியாக இருந்த சுயதொழில் புரியும் இளைஞர்களின் எண்ணிக்கை 2012-இல் 6.30 கோடியாக குறைந்தது. இதுவே 2012-18 காலகட்டத்தில் மேலும் பின்னடைவை சந்தித்து 4.90 கோடியானது. 

"முத்ரா' கடனுதவி திட்டங்களில் 95 %,  ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை எளிய முறையில் விடுவிக்கும் பிரிவில் உள்ள போதிலும், அத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. இத்தகவலை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் முத்ரா ஆய்வறிக்கை தெளிவுபடுத்திவிட்டது.

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட நம் நாட்டில் 99 %-க்கும் அதிகமாக குறு நிறுவனங்களே (முதலீடு, வேலைவாய்ப்பின் அடிப்படையில்) உள்ளன. இதில் தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பிகாரில் மட்டுமே 22 தொழில் பேட்டைகளும், 45 கைத்தறி மண்டலங்களும் உள்ளன. 

ஆகையால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பொருத்தமட்டில் அரசின் பங்கு வரையறைக்கு உட்பட்டது என்பதையும் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும் உணரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com