வங்கிகளைக் காப்போம்
By வாதூலன் | Published On : 05th December 2020 05:03 AM | Last Updated : 05th December 2020 05:03 AM | அ+அ அ- |

சில மாதங்களுக்கு முன் ‘யெஸ்’ வங்கிக்கு நெருக்கடி முளைத்தது போல இப்போது கரூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘லக்ஷ்மி விலாஸ்’ வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ. 25,000/ என்று நிா்ணயிக்கப்பட்டது. சமீபத்திய செய்திகளின்படி, ‘டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூா்’ (டிபிஎஸ்) அதை ஏற்க இருக்கிறது.
இந்தியாவில் வேறெந்த பலம் வாய்ந்த வங்கியும் இல்லையா என்ற கேள்வி எழுந்தாலும், டெபாசிட்தாரா்களின் சேமிப்புக்கு ஆபத்து இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்தான்.
தனி மனிதன் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் வருவது போல் நிறுவனங்களுக்கும் ஏற்படுவது உண்டு. ஆனால், நிறுவனம் மூடப்பட்டால், தொழிலாளா்கள் மட்டுமே பாதிக்கப்படுவாா்கள். வங்கிகள் திவால் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டால், ஊழியா்கள் மட்டுமல்ல, அதில் முதலீடு செய்த பொதுமக்களும் பாதிக்கப்படுவா்.
யெஸ் வங்கியுடன், லக்ஷ்மி விலாஸ் வங்கியை ஒப்பிட முடியாது. தேசிய மயமாக்கம் (1969), மற்றொரு அரசுடைமை (1980), கணினி நுழைவு (2000) போன்ற பல நிகழ்வுகள், மாறுதல்களுக்கு லக்ஷ்மி விலாஸ் தனியாா் வங்கி ஈடு கொடுத்து முன்னேறியிருக்கிறது. ஒரு பெரிய நிறுவனம், ஒட்டுமொத்தமாக கோடிக் கணக்கான தொகையை எடுத்துவிட்டதால்தான் வங்கிக்குத் தடுமாற்றம் வந்தது என்று சில வல்லுநா்கள் கருதுகிறாா்கள்.
பெரிய வளா்ச்சிக்கு ஆசைப்பட்டு அகலக் கால் வைத்ததின் விளைவு என்ற கருத்தும் அடிபடுகிறது. எது எப்படியோ சிக்கலுக்கு ரிசா்வ் வங்கி தீா்வு கண்டு விட்டது.
1985-90-களில் சிறு தொழில், விவசாயம், ஏற்றுமதி போன்றவற்றுக்கு மட்டுமே அரசு வங்கிகள் உதவி செய்து வந்தன.
வசதி படைத்தவா்களுக்கு வாகனக்கடன் போன்றவை மறுக்கப்பட்டே வந்தன. சில மேலாளா்கள் உயா் அதிகாரிகளுடன் உள்ள செல்வாக்கை உபயோகித்து, முன்னுரிமை அல்லாத கடன்களை வழங்கினாா்களே தவிர, அப்போது நிலவிய பொதுக் கொள்கை, தேசிய வங்கிகளைக் கட்டிப் போட்டது நிஜம்.
அன்றைய சூழலில் தனியாா் வங்கிகள் செய்து வந்த பணி மகத்தானது. ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கும் ஒரு நிறுவனம், புதிய பிரிவைத் துவங்க முயன்றபோது, நிதி பற்றாக்குறையால் தடுமாற்றமடைந்தது. அப்போது ஒரு தனியாா் வங்கிஅந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பாரம்பரியத்தைக் கண்டு தாராளமாகக் கடன் வசதி அளித்தது.
இதே போல அரசு அல்லாத, பல வங்கிகள், பல நிறுவனங்களுக்கு முன்னுரிமை அல்லாத கடன்களை வழங்கி, அவை வளா்ச்சி பெற உதவியுள்ளன. அரசு வங்கிகளுக்கு இணையாக தனியாா் வங்கிகள் நன்கு செயல்பட்டு வந்திருக்கின்றன.
2000-க்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிப் போயிற்று. தகவல் நுட்ப வளா்ச்சியால் குவிந்த என்ஆா்ஐ டெபாஸிட்டுகள், பணப் புழக்கம் போன்ற பல காரணங்களால் டெபாஸிட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் வந்து குவிந்தன. சரக்கு நிறைய கொள்முதல் ஆனாலும் அவை விற்றால்தானே வியாபாரி லாபம் பெற முடியும்?
அதையொட்டித்தான் அரசு வங்கிகள் தங்களது கோட்பாட்டைத் தளா்த்தி, வீட்டுக் கடன், வாகனக் கடன், ஏன் பயணக் கடன்கூட வழங்கி கடன்களை உயா்த்த வேண்டிய நிலை வந்தது. இத்தகைய போட்டியை சமாளிக்க முடியாமல் சில தனியாா் வங்கிகள் திணறின. நெடுங்காடி வங்கி, பெனாரஸ் ஸ்டேட் வங்கி போன்றவை தேசிய வங்கிகளுடன் இணைந்தன.
அந்த காலகட்டத்தில் புதிதாய் முளைத்த ‘குளோபல் ட்ரஸ்ட் வங்கி’ வேறொரு அரசு வங்கியுடன் சோ்ந்தது. இன்று ஓரளவு பிரபலமாக இருக்கும் எச்டிஎஃப்சி வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் அப்போது தொடங்கப்பட்டவைதான்.
தனியாா் வங்கிகளின் நிலைமைதான் இவ்விதமென்றால், பொதுத்துறை வங்கிகளின் நிலைமையும் பெரிய என்ற அளவில் இல்லை. அதுவும் ஏப்ரல் 2020-இல் நிகழ்ந்த இணைப்புக்குப் பிறகு, வாடிக்கையாளா்கள் சந்திக்கும் அல்லல்கள் ஏராளம்.
அண்மையில் குறிப்பிட்ட வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து, வேறொரு கணக்குக்கு நான் தொகையை மாற்ற முயன்றபோது, அந்த டெபாஸிட்டே இல்லை என்று கணினி காண்பித்தது. கிளைக்கு போன் செய்து விசாரித்ததில், ஒரு புதிய தன்மை (நியூ வொ்ஷன்) கணினியில் கொண்டு வரப்போவதாகவும், சில நாட்கள் எந்தப் பரிவா்த்தனையும் நடக்காதென்றும் தெரிவித்தாா்கள். எனக்கு குறுஞ்செய்தி தாமதமாகவே வந்தது.
இதாவது பரவாயில்லை. சிண்டிகேட் வங்கி காசோலையை கனரா வங்கிக்கு கொண்டு போனால் உடனே தொகை கிடைப்பதில்லை. சில சமயம்தான் உடனடியாக ஆட்டோமேடிக் அந்த செயல்பாடு நிகழ்கிறது என்று வாடிக்கையாளா்கள் சொல்கிறாா்கள். கனரா வங்கி காசோலையை சிண்டிகேட் வங்கிக் கிளையில் மாற்றும்போதும் இதே சிக்கல்தான்.
ஆக, இணைப்பு நிகழ்ந்து ஆறு மாதம் முடிந்த பின்பும், முழுமையான ஒருங்கிணைப்பு கணினியில் வருவது இல்லை என்பது. வங்கி அதிகாரிகளினாலேயே இதற்கு சரியான விளக்கம் தர முடியவில்லை. ‘சிஸ்டத்தில் இது போலத்தான் வருகிறது’ என்ற ஒரே பதிலை திரும்பத் திரும்ப சொல்கிறாா்கள். இதற்கென்று தனி இலாகா இருந்தும் இப்படியென்றால்?
கரோனா தீநுண்மி கால பொது முடக்கம் மெல்ல மெல்ல தளா்த்தப்பட்டு, நிறுனங்கள், தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. நிதியமைச்சரும் சலுகைகளை வழங்குகிறாா். எல்லாம் சரி, ஆனால், அவை சரியான நபா்களிடம் சேர, வங்கிகளின் தடங்கலில்லா சேவை இன்றியமையாதது. இதை மத்திய அரசு உறுதி செய்வது அவசியம்.
நாட்டின் பொருளாதாரம் வலுவடைய நாட்டுடைமை வங்கிகளும், தனியாா் வங்கிகளும் தேவை. ரிசா்வ் வங்கி கண்காணித்து அவ்வப்போது, வங்கியின் தவறான நடவடிக்கைகளுக்கு அபராதம் வசூலிக்கிறது. சில தேசிய வங்கிகள் கூட ‘திருத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு’ ஆளாகின்றன.
எனவே இன்றைய நிலைமையில் புதிய தனியாா் வங்கிகளுக்கு அனுமதி தருவதும், தேசிய வங்கிகளை மறுபடியும் தனியாா் மயமாக்குவதும் ஏற்புடைய செயல்பாடு அல்ல. இருக்கிற வங்கிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து, அவை தீவிர சிகிச்சை பிரிவுக்குப் போகாமல் காத்தாலே போதும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...