பாலினத்தில் பாகுபாடு வேண்டாமே!

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் அறிமுகப்படுத்தப்பட்ட  சமூகநலத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று, பெண் குழந்தைகளைப்

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் அறிமுகப்படுத்தப்பட்ட  சமூகநலத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சுமார் ஐந்தாண்டுகளாக அமலில் இருக்கும் "பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' எனும் திட்டம்.

நாட்டின் மக்கள்தொகையில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்ற புள்ளிவிவரம் பலரும் அறிந்ததே. ஆனால், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 0 - 6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1961-ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் என்றிருந்த பாலின விகிதம், 1991-ஆம் ஆண்டில் 945, 2001-இல் 927 என்று படிப்படியாகக் குறைந்து, 2011-ஆம் ஆண்டில் 918 என்ற குறைந்தபட்ச விகிதத்தைத் தொட்டது.

அது மட்டுமல்லாமல் ஹரியாணா (834), பஞ்சாப் (846), தில்லி (871), சண்டீகர் (880) போன்ற வட மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் மிக மோசமான பாலின விகிதம் அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிக் குறைந்துவரும் பாலின விகிதம் மிகப் பெரிய சமூகப் பிரச்னையாக உருவெடுப்பதற்குள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது அரசு.
குழந்தைகளிடையே உள்ள பாலின விகிதம் இப்படிக் குறைந்துகொண்டே போவதற்கு நம் மக்களிடையே உள்ள ஆண் குழந்தை மோகம்தான் முக்கியக் காரணம். ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவதும், பெண் குழந்தை பிறந்தால் துக்கம் அனுசரிக்கப்படுவதும் பல குடும்பங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வுகள்.

கருவிலிருந்து கல்லறை வரையில் உதாசீனப்படுத்தப்படுகிறாள் பெண். பிறக்கப் போவது பெண் குழந்தை என்று ஸ்கேன் மூலம் அறிந்து கருவிலேயே அழிக்கும் நிலை உள்ளது. அதுவும் ஏற்கெனவே ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், அடுத்தும்  பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை அழிக்கத் தயங்குவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படுவதில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.  ஏன் இந்தப் பாரபட்சம்?
ஆண் குழந்தைதான் குடும்பத்தின் வாரிசு, முதுமையில் ஆண்தான் தங்களுக்குப் பாதுகாப்பு, தங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய ஓர் ஆண்  வேண்டும் என்று பெற்றோர் பலர் நினைப்பதே ஆண் குழந்தைகளுக்காக அவர்கள் ஏங்குவதற்கான காரணங்கள்.

பெண் குழந்தை பிறந்தால், மகளின் திருமணத்துக்குச் செலவு செய்ய வேண்டும், மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் போன்ற காரணிகளும், என்னதான் இருந்தாலும் தன் மகள் அடுத்த வீட்டிற்குச் செல்லப்  போகிறவள்தானே என்ற அலட்சியப் போக்கும் பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்றோர்களைக் கருத வைக்கின்றன. இத்தகைய மனப்பான்மை தென் மாநிலங்களைவிட பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.
பிறப்பதற்கு முன்பிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து, அவர்களைக் கல்வி கற்க வைத்து, சமூகத்தில் அவர்களது அந்தஸ்து மேம்பட வழி செய்யும் எண்ணத்துடன் "பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' என்ற திட்டத்தை பிரதமர்  மோடி 2015-இல் ஹரியாணாவில் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளின் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத்  திட்டம்,  ஓர் ஆண்டு காலத்தில் இன்னும் 61 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 2018-19- ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நாடு முழுவதிலும் உள்ள 640 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அரசு முடிவெடுத்ததற்கான முக்கியக் காரணம், பல மாநிலங்களில் மாநில அளவில் குழந்தைகளின் பாலின விகிதம்  ஓரளவு சரியாக இருந்தாலும், மாவட்ட அளவில் இந்த விகிதம் பெண்களுக்குப் பாதகமாக இருக்கிறது என்பதே. எடுத்துக்காட்டாக, தமிழகத்தைப் பொருத்தவரை  பாலின விகிதம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகள் என்று இருந்தாலும், அரியலூர் (892), கூடலூர் (895), தர்மபுரி (911), பெரம்பலூர் (913), நாமக்கல் (913) ஆகிய மாவட்டங்களில் பாலின விகிதம் நாட்டின் சராசரிக்குக் கீழே இருந்தது.  

"பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித் துறை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது.  இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் உடல் நலம், சுகாதாரம், கல்வி குறித்து நாடு தழுவிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள், போன்ற ஊடகங்களும் முக்கியமான இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் போன்றவையும் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சுகாதாரத் துறையின் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் முதலானோரும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றனர்.  கர்ப்பிணிப் பெண்களை ஆரம்ப நிலையிலிருந்தே கண்காணித்து, அவர்கள் மருத்துவமனையில் அல்லது மருத்துவ வசதியுடன் பிரசவிக்க ஊக்குவித்து பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க உதவுகிறார்கள் இந்த ஊழியர்கள்.
பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் அறிந்து, குழந்தையைக் கருவிலேயே அழிக்கும் கொடுமையைத் தடுக்கும் வகையில், கரு நிலையில்  ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில்நுட்பத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு 1994 ஆம் ஆண்டு பிறப்பித்தது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தும் ஹரியாணா, பஞ்சாப், தில்லி போன்ற மாநிலங்களில் திருட்டுத்தனமாக இந்தச் "சேவையை' மக்களுக்கு மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

"பெண்குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது  தீவிரப்படுத்தப்பட்டு, திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் கல்வித் துறையின் உதவியுடன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான முயற்சியும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.  

இந்தத் திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன , எத்தனை கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார வசதிகளில் பதிவு செய்துள்ளனர், பள்ளி இறுதி வரையில் படிப்பைத் தொடராமல் இடைநிற்றல் மாணவிகளின் விவரங்கள், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் போன்ற புள்ளிவிவரங்கள் மாவட்ட ரீதியாகச் சேகரிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முயற்சிகளையும்  அவற்றின் பலன்களையும் அமைச்சகத்தின் கண்காணிப்பு - மதிப்பீடு பிரிவு தொடர்ந்து கண்காணித்து  சிறப்பாகச் செயலாற்றிய மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த விழாவில் இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக  நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கும், ஐந்து மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தபின் பல மாவட்டங்களில் பாலின விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குழந்தைகளின் பிறப்பு பதிவேட்டின் அடிப்படையில் வெளியிடப்படும் அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹரியாணா மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் பாலின விகிதம் 924-ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ஒருசில மாவட்டங்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிர்சா (884), பிவானி (895), ஜஜ்ஜார் (897), தில்லிக்கு மிக அருகில் உள்ள குருகிராம் (897) போன்ற மாவட்டங்களில் இந்த விகிதம் இப்போதும் குறைவாகவே உள்ளது.

இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு மக்களிடையே இருந்தாலும், திட்டத்தின் நோக்கம் குறித்த தெளிவான புரிதல் மக்களிடையே இல்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, ஹரியாணா  மாநிலத்தின் குர்கிராமின் நவ நாகரிகமான "சைபர் ஹப்'பிலிருந்து  11.5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், எந்தெந்த வீடுகளில் ஆண் குழந்தை உள்ளார்களோ, அந்த வீடுகளின் முகப்பில் சிவப்பு - மஞ்சள் நிறங்களில் கைகளின் முத்திரையைப் பதித்துக் கொண்டாடுகிறார்கள் என வெளிவரும் செய்திகள் நம்மை விரக்தி அடையச் செய்கின்றன.

இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை, பெண் குழந்தைகளின் நிலைமையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், பெண் குழந்தைகள் குறித்த மக்களின்  மனப்போக்கை மாற்றுவது. ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாகத்  தோன்றவில்லை.   
  
 கட்டுரையாளர்: 
சமூக ஆர்வலர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com