வாழ்வியல் பாடல்களுக்கு வழி பிறக்குமா?

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி, "திரைப்படப் பாடல்கள் அந்தந்தக் கதைகளின் தேவைகளுக்கு



ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி, "திரைப்படப் பாடல்கள் அந்தந்தக் கதைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு எழுதப்படுகின்றன. எனவே, அதைக் கடந்து நமது வாழ்வின் தேவைகளுக்காக பல்வேறு வகையான கருப்பொருள்களில் ஏராளமான பாடல்கள் எழுதப்பட்டு, அவை பொது வெளிகளில் மக்களிடம் பாடப்பட வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையே என்கிற மனக்குறையும் எனக்கு உண்டு' என்று தனது  ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

90 ஆண்டுகளின் வரலாற்றையும், சற்றேறக் குறைய 14,000 திரைப்படங்களையும், 45,000 பாடல்களையும் கொண்டது நமது தமிழ்த் திரையுலகம். தமிழ்த் திரைப்படங்களுக்கான உயிர்க் காற்றாக இன்று வரை விளங்கி வருபவை அவற்றில் இடம்பெறுகின்ற பாடல்கள்தான். 1932-ஆம் ஆண்டில் வெளிவந்த "காளிதாஸ்' என்னும் திரைப்படத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் மொத்தம் 32 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர், காலப்போக்கில் பாடல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு படத்திற்குச் சராசரியாக 6 பாடல்கள் என்ற நிலை ஏற்பட்டு அந்நிலை இன்றுவரை நீடித்து வருகிறது.

தொன்மையான நமது தமிழ் மரபில் அகம், புறம், அறம், இறை, இயற்கை என்னும் ஐந்து கோட்பாடுகளுக்குள் பல நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் படைத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வைந்து வகையான இலக்கியங்களிலும் உலக மானுட வாழ்வியலுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் அடங்கியிருந்தன.
இந்த நிலையில், கடந்த 90 ஆண்டுகளுக்கு முன்னர் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் எடுத்துத் தனக்குள் அடக்கிக் கொண்டு, பெருந்திரள் மக்களின் வியப்புக்குரிய பொழுதுபோக்குப் பேரறிவியலாக தமிழ்த் திரைப்படங்கள் விளங்கின. மரங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு நிற்கின்ற மாமதயானை போல மற்ற அனைத்துக் கலைகளையும் தமிழ்த் திரையுலகம் மறைத்தது.

அதன் முகம் மட்டுமே அவசியமான முகம் என்று கருதப்பட்டதால், ஏனைய முகங்கள் எதுவும் எவருக்கும் தெரியாமல் போயிற்று. அதன் பிளிறல்கள் மட்டுமே பாடல்கள் என்றாகிப் போனதால் ஏனைய பாடல்கள் எதுவும் எவருக்கும் கேட்காமல் போயின. இவ்வாறாக தமிழ்ச் சமூகம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப் பெருமையானதொரு பேறாக உணர்ந்த தமிழ்த் திரையுலகம்,  "இது தனக்கு நேர்ந்திருக்கின்ற பெரும் பொறுப்பு' என்பதைப் போதுமான அளவுக்கு உணரவில்லை. அது மட்டுமல்ல, திரைப்படங்களின் தரம் எப்படியாவது இருக்கட்டும், பதிவு செய்து வெளியிட்டவுடன் எட்டுத் திசைகளுக்கும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து சென்று வெகுமக்களிடம் போய்ச் சேருகின்ற பாடல்களின் மீதாவது அதீத சமூக அக்கறையுடன் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அது முனையவில்லை.

தொடக்க காலத்தில் அதிக அளவில் இறையுணர்வுகளாக வெளிப்பட்ட அதன் பாடல்கள், இரண்டாம் கட்டத்தில் இந்திய விடுதலையின் குரல்களாகவும், தீவிரமான சமூகச் சீர்த்திருத்தங்களின் குரல்களாகவும் ஒலித்தன. மூன்றாம் கட்டத்தில் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிரானவையாகவும், ஏழை மக்களுக்கான தோழமையாகவும் அவை வெடித்தபோது, அவற்றுடன் காதலும் வீரமும் கலந்து பெருகியிருந்தன. நான்காம் கட்டமான கடந்த 45 ஆண்டுகளில், விதம் விதமான காதல் களங்களிலேயே அவை காலூன்றி நின்று நிலைபெற்று விட்டன.
இந்த நான்காம் காலகட்டமானது, ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வளர்ச்சி, இசையமைப்பில் இனிமை, பாடகர்களின் பாடும் திறன் ஆகியவற்றில் வியக்கத்தக்க பல பெருந்தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்ற காலகட்டமாக இருந்தாலும், பாடல்களின் உள்ளடக்கங்களில் சமூக நோக்கில் மனம் மகிழும்படியான எத்தகைய மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை. விருப்பு - வெறுப்பின்றிக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது ஒரு அரை நூற்றாண்டுத் தேக்க நிலைதான் என்பதைத் தயக்கமின்றி உறுதி செய்வர். அதே வேளையில் இந்த நான்காம் கட்டப் பாடல்களில்கூட, கருத்துகளின் உள்ளடக்கங்களிலும், இசையும், குரலும் அவற்றுடன் சேர்ந்த உருவாக்க நேர்த்தியிலும், சிறந்து விளங்குகின்ற சில ஆயிரம் பாடல்கள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
உடுமலை நாராயணகவி, மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் முதலிய பாடலாசிரியர்கள் சிலரின் பெரும்பாலான பாடல்கள், திரைகளில் அந்தந்த கதைகளுக்கு உரியனவாகி ஒலித்தன. அதே வேளையில், தெருக்களில் தமிழ்ச்  சமூக மக்களுக்கான வாழ்வியல் விழிப்புணர்வுப் பாடல்களாகவும் அவை ஒலித்தன. அப்படிப்பட்ட பாடல்களின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் இன்றைய நான்காம் காலகட்டத்தின் திரையிசைப் பாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போதைய தமிழ்த் திரையுலகின் கிடங்கில் மொத்தமுள்ள 45,000 பாடல்களில் ஏறக்குறைய 35,000 பாடல்கள் காதல் பாடல்கள்தான். காதல் கோரிக்கை, காதல் ஏக்கம், காதல் தோல்வி, காதல் வெற்றி, காதல் வர்ணனை போன்ற காதலின் பல்வேறு உட்பிரிவுகளில் இப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 10,000 பாடல்களைத்தான் சமூகம், தத்துவம், தன்னம்பிக்கை, இறை பக்தி, அறநெறி, ஆதிக்க எதிர்ப்பு முதலிய பிற வாழ்வியல் கூறுகளில் நாம் வகைப்படுத்த முடியும்.

காதல் பாடல்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த 35,000 பாடல்கள், எத்தனைமுறை கேட்டாலும் பல்லவிகளைத் தாண்டி எவராலும் முழுமையாகப் பாட முடியாத சரணங்களைக் கொண்ட பாடல்களாகவே உள்ளன. "ஆறு மனமே ஆறு' என்று தொடங்கி ஆண்டவனின் ஆறு கட்டளைகளையும் சரசரவென்று தெளிவாக பாடி முடிக்கின்ற வசதி தற்காலத் திரைப்பாடல் ரசிகர்களுக்கு வழங்கப்படவில்லை. மெட்டுக்கு இட்டு நிரப்புகின்ற கலாசாரம் மேலோங்கியதன் விளைவாக, பாடல் வரிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றும் தொடர்ச்சியற்றும் போனதால் மனப்பாட வசதிக்குப் பெரும் இடையூறு எற்பட்டிருக்கிறது.

கேட்கும்போது மட்டுமே இதுபோன்ற பாடல்களின் இனிய இசைக்குத் தலையாட்ட முடியும் என்றாலும்கூட, எத்தனைமுறை கேட்டாலும் எடுத்துச் செல்லவோ, எடுத்துச் சொல்லவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாத பாடல்களை எவ்வகை இலக்கியத்தில் சேர்க்க முடியும்?
மிகவும் சாதாரணமான, வினா-விடை பாணியில் அமைந்த, இருபொருள் ஆபாசங்களைக் கூச்சமின்றி முன் வைக்கின்ற, வரிந்து கட்டிக் கொண்டு பெண்ணுடலின் அங்க அழகுகளையும், அசைவுகளையும் வர்ணித்துக் குவிக்கின்ற பாடல் வரிகளை, இசையமைப்பாளரின் இனிய இசையும், பாடகர்களின் பேரழகான குரலும், ஒலிப்பதிவு தொழில்நுட்ப வளர்ச்சிகளும் சேர்ந்து தூக்கிக் கொண்டு போவதை, பாடல் இலக்கியங்களுக்குக் கிடைக்கின்ற வெற்றியாகக் கருத முடியுமா? முடியாது. என்றாலும்கூட, பெருமளவில் இதுபோன்ற பாடல்களைத்தான் கடந்த 45 ஆண்டு காலமாக நமது தமிழ்த் திரையுலகம் பெரும் பொருட் செலவில் ஒலிப்பதிவு செய்து உலவ விட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும், மாற்று வழி தேட வேண்டும் எனில் பாடகி எஸ்.ஜானகி குறிப்பிட்டதைப்போல, திரையுலகிற்கு வெளியே சமூகத்தின் பல நூற்றுக்கணக்கான தேவைகளையும், சிக்கல்களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும், அறவுணர்வுகளையும் கருப்பொருளாகக் கொண்டு மொழிச்  செறிவும், இலக்கியத் தரமும் நிறைந்த ஆயிரக்கணக்கான வாழ்வியல் பாடல்கள் எழுதி இசையமைக்கப்பட்டு அவற்றை மக்களின் கலாசார, பண்பாட்டுக் குரல் ஒலிகளாக மாற்ற வேண்டும்.
அவ்வகையில் நமது தமிழ்ச் சூழலில் ஏற்கெனவே மகாகவி பாரதி உள்ளிட்ட பல்வேறு கவிஞர்களால் நூற்றுக்கணக்கான வாழ்வியல் பாடல்கள் எழுதப்பட்டு அவை இசை வடிவில் ஓரளவுதான் மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பாடல்கள் ஒரு பெரும் கலாசாரமாகவோ, பெரும் இயக்கங்களாகவோ பரவலாக முனைப்புடன் முன்னெடுக்கப்படவில்லை.

தங்கள் நாட்டின் திரைப்படங்களில் கதைகளுக்கு வேண்டிய பாடல்களைச் சேர்க்கின்ற வழக்கமில்லாத பல நாடுகள், தங்களுக்குத் தேவையான வாழ்வியல் பாடல்களை முறையாக எழுதி, இசையமைத்து, பாடிப் பயன்படுத்துவதிலும், பின்பற்றுவதிலும் பெருமளவில் முனைப்புக் காட்டுகின்றன.
போர் எதிர்ப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு, அரசியல் அதிகார அடக்குமுறைகள் போன்றவற்றை எல்லாம் வாழ்வியல் பாடல்களாக எழுதி மக்களிடையே எழுச்சிகரமாகப் பாடி விழிப்புணர்வூட்டியதால்தான், நோபல் பரிசு வரலாற்றில் பாடலுக்கென்று முதல்முறையாக அமெரிக்கப் பாடகர் பாப் டிலனுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்திய நாட்டின் மிகப் பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) வீரதீரத் தியாகங்களைப் போற்றி பாடல் ஒன்றை எழுத விரும்புவதாக தானே வலிய சென்று அந்த ராணுவத்தின் உயரதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார் புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் ஜாவெத் அக்தர். அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பாடல் 5 நிமிஷ இசையில் பதிவாகி, சிஆர்பிஎஃப் ராணுவப் படையின் கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றொரு துணை ராணுவப் படையான மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கும் (சிஐஎஸ்எஃப்) ஜாவெத் அக்தர் ஏற்கெனவே ஒரு பாடலை எழுதி அளித்து அப்பாடல் அப்படையின் பயன்பாட்டில் இருக்கிறது என்பதும்தான்.

தமிழ்ச் சூழலில் இதுபோன்ற வேறுபட்ட முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அவ்வகையில் எழுதுவதற்கு நம்மிடையே ஏராளமான வரலாற்றுச் சான்றுகளும், பல்வேறு வகையான தியாக வரலாறுகளும் நிறையவே உள்ளன. இனிவரும் காலங்களிலாவது நமது புதிய இளம் கவிஞர்களின் கவனம் மானுட வாழ்வியல் பாடல்களை நோக்கித் திரும்பும் என்று மட்டும் உறுதியாக நம்புவோம்.
ஒன்றை மட்டுமல்ல, ஒவ்வொன்றையும் எழுதியாக வேண்டும்!

கட்டுரையாளர்:
கவிஞர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com