சர்க்கரை நோய் - விழிப்புணர்வே தீர்வு!

எனது உறவினர் ஒருவருக்கு இடது கால் பெருவிரலில் சிறு காயம் ஏற்பட்டு, மருந்து போட்டுக்கொண்டே வந்தார். ஆனால், காயம் ஆறவில்லை.



எனது உறவினர் ஒருவருக்கு இடது கால் பெருவிரலில் சிறு காயம் ஏற்பட்டு, மருந்து போட்டுக்கொண்டே வந்தார். ஆனால், காயம் ஆறவில்லை. மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டபோது, ரத்தப் பரிசோதனை செய்து வருமாறு பரிந்துரைத்தார். பரிசோதனை முடிவு அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

"உங்களுக்கு சர்க்கரை நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கவனிக்காமல் இருந்திருக்கிறீர்கள். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த  முடியாது. ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் மருந்துகளைத் தவறாமல் சாப்பிடுவதுடன், தினமும் நடைப்பயிற்சியும் செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்  மருத்துவர்.
"எனக்கே தெரியாமல் எப்படி சர்க்கரை நோய் வந்தது' என்று மருத்துவரிடம் கேட்டார்  உறவினர். அதற்கு அந்த மருத்துவர், "இந்த நோய் நம்மையும் அறியாமல் நம் உடலுக்குள் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தாத்தா, பாட்டி, தந்தை, தாய் போன்ற ரத்தவழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால் நமக்கும் வரலாம். 

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களாலும் சர்க்கரை நோய் இப்போது இந்தியா முழுவதும் வியாபித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் உடலளவிலும், மனதளவிலும் இந்த நோய் மனிதர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர்க் கசிவு,  உடல் சோர்வு, உடல் எடை குறைவு முதலானவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள். எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. அறுசுவை உணவில் கசப்பும், துவர்ப்பும் இல்லாத உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியது, உணவுக் கட்டுப்பாடு இல்லாதது, மருத்துவப் பரிசோதனைகள் செய்யாமலிருப்பது,  தினசரி உடற்பயிற்சி செய்யாதது ஆகியவை இந்த நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன.
ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் திடீரென இதயம், கண்கள், சிறுநீரகம் ஆகியவற்றையும் பாதித்து விடும். எனவே, "நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்' என்று அந்த மருத்துவர்  ஆலோசனை வழங்கினார்.

இந்தச் சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகின்றன. அன்று முதல் இன்று வரை என் உறவினர் மாத்திரைகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஊருக்குப் போனாலும் அவருடன் மாத்திரைகளும் பயணிக்கின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் இருப்பது போல எந்த வீடாக இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்குதல் இல்லாத நபரைப் பார்ப்பது அரிதாகி விட்டது. எந்த நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் தெரிந்து மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று குணமடைய முடியும்; ஆனால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால்,  அவருக்கு ஆயுள் முழுவதும் மருத்துவ சிகிச்சை தேவை.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகங்கள், இதயம், கண்கள், கால் நரம்புகளைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கவனமில்லாமல் இருந்தால் கால்களையோ அல்லது விரல்களையோ அகற்றும் நிலையும் ஏற்படலாம். 
குறிப்பாக, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்துகொள்வோரின் கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதனால்தான் சர்க்கரை நோயின் பின் விளைவுகளைத் தவிர்க்க சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 

40 வயதை அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் சாதாரணமாகி விட்டது என்று சொன்ன மருத்துவர்கள், இப்போது இந்த நோய் பிறந்த குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.
வசதியானவர்களையும், நகரவாசிகளையும் பதம் பார்த்த சர்க்கரை நோய், இப்போது கிராமப்புற மக்களையும், ஏழைகளையும்கூட விட்டு வைக்கவில்லை. அடிக்கடி பசி ஏற்பட்டு எதையாவது சாப்பிட்டு விடுவது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்து கிடப்பது, குடும்ப உறுப்பினர்களுக்கு பாரமாக இருக்கிறோமே என்ற மன உளைச்சலில் சிக்கிக் கொள்வது, வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை மருந்துகள் வாங்குவதற்காகவே ஒதுக்க வேண்டிய கட்டாயம், மரண பயம் முதலானவையும் சர்க்கரை நோயால் ஏற்படும் விளைவுகள்.

கனவுகளைச் சீர்குலைத்து, வாழ்க்கையே முடிந்து விட்டதாக, விரக்தி 
மனநிலைக்கு மனிதர்களை மாற்றிவிடும் சர்க்கரை நோயைத் தடுக்க அரசும் இதுவரை விழித்துக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது. இந்த நோயின் தாக்குதலில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்தும் இந்த நோய்க்கு முடிவு கட்ட அரசுகளோ, சமூக ஆர்வலர்களோ, ஆராய்ச்சியாளர்களோ போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் 16 ஆண்டுகளாக போலியோ நோய் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லை என்று தெரிந்தும் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.  மீண்டும் போலியோ தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 
ஆனால், சர்க்கரை நோயைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய தேசத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயைத் தடுக்க அனைவரும்  கரம் கோத்து உடனடியாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. 
பெரும்பாலான மக்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இது ஓர் எச்சரிக்கை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com