தவமாய் தவமிருந்து...

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்பது



"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்பது புலமைப்பித்தன் பாடல். மாறிவரும் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்ப நம் பிள்ளைகளும் வளர்கிறார்கள்.

அவர்களை நாம் எவ்வாறு அணுகினால் சிறப்பாக இருக்கும்? முழு ஆண்டுத் தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன. 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு இப்போதே வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கியிருக்கும்.

நம் பிள்ளைகள் எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற பதற்றம், பிள்ளைகளைக் காட்டிலும் பெருவாரியான பெற்றோருக்கு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கெனவே ஒருவித பதற்றத்தில் உழலும் பிள்ளைகளைச் சரியாக வழி நடத்த வேண்டிய பொறுப்பை பெற்றோர் சரிவரக் கையாள வேண்டும். 
இதைத்தான் படிக்க வேண்டும், அதைத்தான் படிக்க வேண்டும், இந்தக் கல்லூரியில்தான் சேர வேண்டும், நான் படிக்க ஏங்கிய அந்தக் கல்லூரியில்தான் சேர வேண்டும் எனப் பிள்ளைகளை உருட்டி, மிரட்டுவோர் அதிகரித்து வருகின்றனர். இந்த அதீத தலையிடுதலே பிள்ளைகளுக்கு வெறுப்பை தேடித் தரவும் வழிவகுக்கிறது.  

இந்தியா முழுவதும் 4,926 ஐஏஎஸ் அதிகாரிகளும் 3,894 ஐபிஎஸ் அதிகாரிகளும்தான் உள்ளனர். அதுபோல தமிழகத்திலும் 378 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் 273 ஐ.பி.எஸ். அதிகாரிகளும்தான் உள்ளனர். எத்தனையோ கோடி நபர்களில் சிலரால் மட்டுமே இப்படி உருமாற முடிகிறது. ஆனால், தங்கள் பிள்ளைகள் எல்லோரும் இத்தகைய அதிகாரிகள் ஆக வேண்டும் என்று பெற்றோர்  கனவு காண்கிறார்கள். இல்லையேல், இவர்களுக்கு கானல் நீராகி படிக்க முடியாமல் போன  படிப்பை படிக்க வைக்க பரிதவிக்கிறார்கள்.  தங்கள் பார்வைகளை பெற்றோர் விசாலமாக்க வேண்டிய நேரம் இது.  தன் முனைப்போடு ஈடுபட்டால் எந்தப் படிப்பிலும் ஜொலிக்க முடியும். எந்தப் படிப்பும் இன்றைய தேதியில் தாழ்வு இல்லை.

மருத்துவம் படித்துவிட்டு மாதம் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்வோரும் உண்டு. ஓரிரு பட்டங்கள் பெற்று விட்டு, தன் திறனால் லட்சங்களை மாதச் சம்பளமாகப் பெறுவோரும் உண்டு. தனித்திறனும் தன்னார்வ முயற்சியும் மிகமிக அவசியம். பெற்றோராகிய நாம் இந்த உணர்வைத்தான் அவர்களுக்கு ஊட்ட வேண்டும். ஒரு வழிகாட்டியாக இருந்து உதவ வேண்டும்.  
ராபர்ட் ப்ராஸ்ட் எனும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய 

'THE ROAD NOT TAKEN' என்ற அருமையான கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler long I stood
And looked down one as far as I could....

எனத் தொடங்கும் அந்தப் பாடலின் 20 வரிகளில் வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவங்களைப் போகிற போக்கில் மிக எளிமையாகப் புகுத்தியிருப்பார் கவிஞர்.

காட்டு வழியில் செல்லும்போது எதிர்பட்ட இரண்டு வழிகளிலிருந்து தொடங்குகிறது கவிதை. இவ்விரு பாதைகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பாதை மனிதர்கள் அதிகம் பயணித்திருக்கும் பாதை. குறைந்த அளவு மனிதர்களே மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது அந்தப் பாதையின் வழிதடங்களிலேயே தெரிகிறது.   இரு பாதைகளும் அவரைக் கவர்ந்தன.  ஆனால், எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்ற பெருங்குழப்பம்.  

வாழ்க்கையில் ஏதேனும் ஒருகட்டத்தில் இப்படி முடிவெடுக்க வேண்டி வரலாம். இரண்டு பாதைகளும் சிறந்த பாதைகளே.  இரண்டுமே ஓர் இடத்தை அடைய உதவும். அது எந்த இடம் என்பது வாழ்க்கையின் ரகசியம்.  ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறிவிட்டால் பிறகு பின்வாங்கக் கூடாது.  

கவிஞர் தேர்ந்தெடுத்த பாதையில் நிறைய புதர்கள் மண்டிக் கிடந்தன. அது அதிக நபர்கள் தேர்ந்தெடுக்காத பாதை. அதைத் தேர்ந்தெடுத்தால் அதன் சாதக - பாதகங்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும்.  இடையில் மனம் மாறினால் சில நேரங்களில் திரும்பி வரவும் முடியாது. அப்படியே வந்தாலும் அது பொருளற்றதாகிவிடும் எனச் சொல்லும் அவர், இறுதியாக எதிர்காலத்தில் ஒரு விஷயம் சொல்வேன்.  இறந்த காலத்தில் நான் எடுத்த முடிவு சரியே  என முடிக்கிறார்.

இது போன்றே பிள்ளைகளுக்கு பெற்றோர் ஒரு வழிகாட்டியாக இருந்து, "இந்தப் பாதையில் சென்றால் இப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் வரும். அந்த வழியில் சென்றால் உலகத்தை இவ்வாறாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என்ற சூட்சுமத்தை விளக்கிச் சொல்லலாம். எடுக்கும் சில முடிவுகள் துரதிர்ஷ்டவசமாகப் பிசகினாலும் தவறுகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். அப்படி பாடம் கற்றுக் கொண்டு வந்தவர்கள்தான் நாம்.
பெற்றோரின் வற்புறுத்தலால் ஒரு படிப்பில் சென்று சேர்ந்து விட்ட மாணவர்கள், பின் அது பிடிக்காது போய் காலம் கடந்த காரணத்தால் வெளியேறவும் முடியாமல் படிப்பிலும் மனம் ஒன்றிப் படிக்க முடியாமலும் அல்லல்படுகின்றனர். இந்தத் தன்மை இன்று பல இல்லங்களில் பெருகி வருகிறது. தான் படிக்க ஆசைப்பட்டதை எல்லாம் தன் பிள்ளைகள் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம்?

அவர்களுக்கு என்று ஒரு கனவு இருக்கும், ஒரு லட்சியம் இருக்கும். அதைக் காது கொடுத்து கேட்டு  விட்டு, பிறகு நம் கனவுகள் குறித்து யோசிக்கலாம். பிள்ளைகளுக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதால், அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். இது அவர்களின் மன நலனைப் பாதிக்கும்.  மிகச்  சிறிய வயதிலேயே அவர்கள் மன அழுத்தம் நீங்க மாத்திரை எடுக்கிறார்கள். பள்ளி செல்லும் பிள்ளைகள்கூட மனநல மருத்துவரிடம் காத்திருக்கிறார்கள்.  

இந்தச் சமூகம் அந்த நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றது என்றாலும், அதை இன்னும் அதிகப்படுத்தாமல் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதில் பெற்றோருக்குப் பெரும் பங்கு உண்டு. தோழி ஒருவரின் சகோதரர், இப்படித்தான் தன் தந்தை கூற்றின் பொருட்டு தன் மனதுக்குப் பிடிக்காத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்துவிட்டு பின் அது ஏற்படுத்திய மனவாட்டத்தில் பிற்காலத்தில் "உன்னாலேயே என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது' என்று தன் தந்தையை எதற்கெடுத்தாலும் காரணமே இல்லாமல் வார்த்தைகளால் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.

"பிள்ளை அழ அழ
பள்ளி விடுதிக்குள்
தள்ளி விட்டு வந்தேன்.
மனது வலிக்க வலிக்க
முதியோர் இல்லத்துள்
கொண்டு வந்து சேர்த்தான்.
அவனைச் சொல்லிக் குற்றமில்லை!'
என்ற கவிதை வரிகள், பிள்ளை வளர்ப்பு குறித்து நமக்கு ஏராளமானவற்றை உணர்த்துகின்றன.

பிள்ளைகள் நம் வழியே இந்த பூமிக்கு வந்தவர்கள். நம்முடைய அடிமைகள் அல்லர். பலதரப்பட்ட தகவல்களை அவர்களுக்காகத் திரட்டித் தாருங்கள். பல்வேறு நபர்களின் ஆலோசனைகளை தேவைப்படின் வழங்குங்கள். ஆனால், பூட்டைத் திறக்கும் சாவியை மட்டும் அவர்களிடமே கொடுத்து விடுங்கள். அவர்களே திறக்கட்டும். உலக வெளிக்குள் தனித்து நுழைய நுழைய இன்னும் எண்ணற்ற அனுபவங்களை பெற்றுக் கொள்வார்கள்.

ஒருபுறம் இப்படி அதிகப்படியான  பராமரிப்பு என்ற பெயரில் நிர்ப்பந்திப்பது என்றால், மற்றொருபுறம் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், அடுத்து அவர்களை எங்கு சேர்ப்பது, நம்முடைய பங்களிப்பு என்ன என்று கொஞ்சம்கூட மெனக்கெடாத பெற்றோரும் இருக்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் இப்படி எண்ணற்ற பெற்றோரையும் கண்டு வருகிறேன்.

தன் பிள்ளைகள் குறித்து எந்தக் கனவையும் அவர்கள் காண்பதில்லை என்பதுடன், எந்தவொரு கவலையும் அவர்களுக்கு இல்லை. "மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற மனோபாவத்திலேயே காலம் தள்ளுகிறார்கள். இதனால், அந்தக் குழந்தைகள் தத்தளித்து, தவித்து மேலே எழும்பி வருவதற்குள் முடங்கிப் போகிறார்கள். அதீத தலையீடுகளும் அதிக பொறுப்பின்மையும் மாணவச் செல்வங்களின் வாழ்க்கையில் விளையாடி விடுவது வேதனை. 

தவமாய் தவமிருந்து பெற்றெடுக்கும் பிள்ளைகளை பெற்றோர் சரியாய் வழி நடத்தினாலே போதும். அதில் தவறுகள்  ஏற்படும் நிலையில், வெளி உலகின் வேஷத்தை எண்ணி இளம் வயதில் பெரிதும் ஏமாறுகிறார்கள். 
வாழ்க்கையில் எதை அடைய விரும்பினாலும் மிகச் சிறந்த செயல்பாட்டைக் காட்டவேண்டும் என்பதை மட்டும் அவர்களின் மனதில் பதிய வையுங்கள். சச்சின் டெண்டுல்கரின் தந்தை ஒரு பேராசிரியர். ஆனாலும், தன் மகனின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்டு அவர் போக்கிலேயே செல்ல அனுமதித்தார்.  
பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக பெற்றோர் இருக்க வேண்டும். எப்போதும் அவர்களை உற்சாகப்படுத்துவோம். "உன்னால் அதிசயத்தை நிகழ்த்த முடியும்' என்ற மந்திரத்தை மனதில் பதியச் செய்வோம். மதிப்பெண் குறைந்தாலோ தோல்வியுற்றாலோ கடிந்து கொள்ளாமல் அரவணைத்து ஆறுதல்படுத்துவோம்.  பெற்றோரின் அரவணைப்பு மட்டும் இருந்து விட்டால் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வெல்லக் கூடிய வல்லமை வாரிசுகளுக்குப் பிறக்கும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com