ஆன்மாவின் குரல்!

ஐ.நா. சபையில் கிரேட்டா துன்பர்க் என்ற 16 வயது ஸ்வீடன் பெண் நான்கு மாதங்களுக்கு முன்பு நிகழ்த்திய ஐந்து நிமிஷ உரை உலகை அதிர வைத்தது.



ஐ.நா. சபையில் கிரேட்டா துன்பர்க் என்ற 16 வயது ஸ்வீடன் பெண் நான்கு மாதங்களுக்கு முன்பு நிகழ்த்திய ஐந்து நிமிஷ உரை உலகை அதிர வைத்தது. உலகப் பெரும் தலைவர்களைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி, 150 நாடுகளிலிருந்து 60 லட்சத்துக்கும் மேலானவர்கள் அவரைப் பின் தொடர ஆரம்பித்து உலகத்தையே தன்வசமாக்கிக் கொண்டுள்ளார்.

ஒரு சூழலியல் போராளியாக, அதற்குமுன் அந்தப் பெண் ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்துக்கு முன் ஒரு போராட்டத்தை தன்னந்தனியாக நடத்தி, ஒட்டுமொத்த ஐரோப்பாவை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால், அவருடைய போராட்டங்களுக்கும் பேச்சுகளுக்கும் சந்தைப் பொருளாதாரத்தை கட்டமைக்கும் பணிகளில் உள்ளோரிடமிருந்து எதிர்க் கருத்துகள் வந்தபோதும், அவர் எழுப்பிய கேள்வி ஓர் ஆன்மாவின் குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவர் கேள்வியின் நியாயத்தை யாரும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. ""எங்கள் கனவுகளை, வாழ்க்கையை பொருளாதார வளர்ச்சி என்ற வெற்று வார்த்தையைக் கூறி திருடிவிட்டீர்கள், அழித்துவிட்டீர்கள். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் சமநிலையற்ற தன்மைக்கு வந்து அழிந்து கொண்டுள்ளது. உலகம் இன்று அழிவின் தொடக்கத்திலிருக்கிறது. ஆனால், நீங்கள் பொருளாதார வளர்ச்சி குறித்தே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி முரண்பாடாகப் பேச முடியும்'' என்று அந்த அரங்கில் அவர் பேசி, சத்திய வாக்கினை உலகுக்கு இறக்கி வைத்தார்.

கிரேட்டா துன்பர்க்கின் உள்ளத்தில் ஓயாது எரிந்து கொண்டிருந்த கருத்தின் வெளிப்பாடுதான் அந்த ஐந்து நிமிஷ உரை. அவர் வைத்த பிரதான கேள்வி, இன்றைய வளர்ச்சிப் போக்கின் அடிப்படை குறித்ததாகும்.
இன்றைய புதிய பொருளாதாரக் கொள்கைகளால் விழைந்த தாக்கத்தை அடிப்படையாக வைத்து அந்தக் கேள்விகளைக் கேட்டார். இந்தக் கேள்விகள் மானுடத்தை மட்டும் காப்பாற்ற மட்டுமல்லாது, உலகின் அத்தனை உயிர்களும் அமைதியாய் வாழ புவியைப் பாதுகாக்க எழுப்பப்பட்ட குரல். இதில் உள்ள அடிப்படைக் கேள்விக்கு எதிர்வினை ஆற்ற இரு பெரும் சக்திகளான முதலாளித்துவ (டிரம்ப்), கம்யூனிச (புதின்) தலைவர்கள் முனைந்து பதிலளித்தது, அவர்கள் எங்கோ சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதை உணர்த்துகிறது.

கிரேட்டா துன்பர்க் வைத்த அதே விவாதத்தைத்தான், 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்கோமில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் முன்வைத்தார்:  ""உலகில் சக மனிதரை மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களையும் தனது உறவாகப் பார்க்க முடியாமல் போனால் நமது நாகரிகம் என்பது பொருளற்றதாகி விடும். 2,000 ஆண்டுகளுக்கு முன் அசோகர் கால கல்வெட்டில் ஓர் அரசின் கடமை என்ன என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களைக் காப்பதும், நீதி பரிபாலனம் செய்வதும் மட்டும் அரசின் கடமைகள் அல்ல. கானகங்களையும், கானுயிர்களையும் காப்பதும் அரசின் கடமை என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே, எங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து யாரும் சொல்லித் தரவேண்டியது கிடையாது. இன்றைய வளர்ந்த நாடுகளாக மார்தட்டிக் கொள்ளும் நாடுகள் அனைத்தும் எங்களைப் போன்ற நாடுகளின் இயற்கையைச் சுரண்டி பெற்ற வளர்ச்சிதான். இவ்வளவு தெரிந்த நாங்களும் ஏன் இந்தச் சுரண்டல் முறை பொருளாதாரத்துக்குள் வந்துள்ளோம் என்றால், இயற்கையைச் சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்த அல்ல; அதற்கு மாறாக, எங்கள் நாட்டில் உள்ள ஏழ்மையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதால்தான். அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது, ஏழைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகும் என்ற அடிப்படை உண்மையை பின்புலத்தில் வைத்துத்தான் எங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துச் செயல்பட்டு வருகிறோம்'' என்ற கருத்தாக்க உரையை நிகழ்த்தி  உலகத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார் இந்திரா காந்தி.

இதனைத் தொடர்ந்து 1980-இல் பிரண்ட்லேண்ட் கமிஷன் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழல் குறித்து ஓர் ஆய்வறிக்கையைத் தயார் செய்யப் பணித்தது ஐ.நா. சபை. அந்தக் குழு தங்கள் ஆய்வின் அடிப்படையில் "நம் அனைவரின் பொது எதிர்காலம்' என்ற தலைப்பில் 1987-இல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், "ரோம் பிரகடனம்' என்ற வேண்டுகோளை அந்த ஆராய்ச்சி அறிஞர்கள் உலக நாடுகளுக்கு வைத்தனர். "வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்' என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர். உலகில் குன்றா வளத்துடன் நிலைத்த மேம்பாட்டை அடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தி நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்க "நம் பொது எதிர்கால மையம்' என்ற ஒன்றை ஐ.நா சபை உதவியுடன் ஏற்படுத்தினர்.

அதன் பிறகு, முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான அனைத்துத் திட்டங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுடன் இணைத்துப் பார்த்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற பார்வையை உலக நாடுகளில் உருவாக்கியது இந்த ஆராய்ச்சி மையம். இந்தியா உள்பட பல நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக புதிய அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 
இந்தச் சூழல் ஒருபுறமிருக்க உலகத்தில் முன்னேறிய நாடுகள் தங்களிடம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களையும், உபரி மூலதனத்தையும் பயன்படுத்த ஒரு புதிய பொருளாதார முறையை உருவாக்கி அதற்கான கட்டமைப்புகளை நிறுவின. அதுதான் உலகமயப் பொருளாதாரம். இந்தப் பொருளாதாரம்தான் தனியார்மயம், தாராளமயம் என அனைத்தையும் சந்தைப்படுத்தி இயற்கையின் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.
இயற்கையின் மீது நடத்திய இந்தப் போர்தான் உலகை இயற்கைச் சீற்றத்துக்கு உள்ளாக்கி, நம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தை அனைவர் மனதிலும் இன்று வரவழைத்து விட்டது. இதன் விளைவு, பருவநிலை அவசரகாலப் பிரகடனம் செய்ய வேண்டிய சூழலுக்கு உலகம் இன்று வந்து நிற்கிறது. பருவநிலை அவசரகாலப் பிரகடனம் என்ற கருத்தாக்கத்தைத் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதன் அடிப்படையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதாகக் கூறி மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று உலக நாடுகளின் பல தலைவர்கள் கூக்குரலிடுகின்றனர்.

உலகம் இந்த நிலைக்கு உள்ளாகிவிடும் என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி, 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்கி, அதற்கான பொருளாதாரத்தை வடிவமைத்தார். அதுதான் நிலைத்த பொருளாதாரம்; அதுதான் பசுமைப் பொருளாதாரம்; அதுதான் தாய்மைப் பொருளாதாரம். அந்தப் பொருளாதாரத்தை ஏன் கொண்டுவரவேண்டும் என்பதற்கான விளக்கத்தை 110 ஆண்டுகளுக்கு முன்பு, தான் எழுதிய "ஹிந்த் சுயராஜ்யம்' என்ற புத்தகத்தில் அளித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் தன் நண்பர் ஹென்றி போலக்கிடம்  தன் உள்ளக்கிடக்கையை விவரிக்கிறார். "என் உள்உணர்வு என்னை எதோ செய்கிறது, ஒரு சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது, அதனை வெளியில் கொண்டு வரவேண்டும்' என்று கூறினார்.

அதன் வெளிப்பாடுதான், 1909-இல் லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வரும்போது கப்பலில் எழுதிய அந்த கருத்துக்கோவை. அந்தச் சிறிய புத்தகம்தான் "ஹிந்த் சுயராஜ்யம்'. அதில் ஒட்டுமொத்தமாக மேற்கத்திய நாகரிகம், மேம்பாடு, வாழ்க்கை முறை அனைத்துக்கும் மாற்று ஒன்றைக் கோடிட்டுக் காட்டினார். அதற்குக் காரணம், மேற்கத்திய வாழ்க்கை முறையும், வளர்ச்சிப் பாதையும் ஒரு சுரண்டல் முறைத்தன்மை கொண்டது என விளக்கினார்.
இன்றைய உலகில் இந்தப் புதிய பொருளாதார முறை நம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ஒன்று. எனவேதான், அதற்கு மாற்றாக மாற்றுப் பொருளாதாரத்தைத் தந்தார் மகாத்மா காந்தி. அதை நாம் நடைமுறைப்படுத்தி உலகத்துக்கு வழிகாட்டியிருக்க வேண்டும்; ஆனால், நிராகரித்து விட்டோம்.

அதன் விளைவு, இன்று நம் வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கி வாழ்ந்து வருகிறோம். இனி ஒரு நாடோ அல்லது அரசாங்கமோ தனித்து இயங்கி உலகைப் பாதுகாக்க முடியாது. இன்றைய தேவை என்பது உலக நாடுகளின், உலக மக்களின் ஒன்றிணைந்த சூழல் பாதுகாப்புச் செயல்பாடுகள்தான்.
அரசாங்கத்தைச் செயல்பட வைக்க நாம் தயாராக வேண்டும். குறிப்பாக, காந்திய வாழ்க்கை முறை என்பது மக்களை அரசு நெறிப்படுத்துவது அல்ல, மக்கள் தங்களை நெறிப்படுத்துவதன் மூலம் அரசை நெறிப்படுத்துவது. மக்களாகிய நாம் நம் வாழ்க்கைச் செயல்பாடுகளில் மகாத்மா காந்தியைப் பின்பற்ற ஆரம்பித்தால், அரசு நம் வழி நடக்க ஆரம்பிக்கும். தொடங்க வேண்டியது நம்மிடமிருந்துதான்.

எளிய - சிக்கன வாழ்க்கைக்கு நாம் தயாராகிவிட்டால், இயற்கைச் சூழலுக்கு பாதிப்பற்ற வாழ்க்கையை வாழ நாம் ஆரம்பித்து விட்டால் சந்தையும் அரசும் மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு உட்பட்டுவிடும். எனவே, நம்மை நாம் மாற்றிக்கொள்ள முனைய வேண்டும். கிரேட்டா துன்பர்க்கின் உரை நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, குடிமக்களுக்கும்தான். அதைத்தான் அவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறார், காந்திய வழியில்...


கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com