அறிவின் அடையாளம் புத்தகங்கள்

மனித வாழ்க்கை என்பது மற்ற உயிா்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது; மாறுபட்டது. மற்ற உயிா்கள் ஓரறிவு உயிா் முதல் ஐந்தறிவு உயிா் வரை பகுத்துக் கூறப்பட்டுள்ளன.

"இந்தியாவிலிருந்து 30 குதிரைகளில் சீன நாட்டுக்கு யுவான் சுவாங் கொண்டுசென்றவை பொன்னோ, பொருளோ, அணிகலன்களோ அல்ல. மொத்தம் 657 பெளத்த சமய மூல நூல்கள் என்னும் அறிவுக் கருவூலங்கள்."

மனித வாழ்க்கை என்பது மற்ற உயிா்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது; மாறுபட்டது. மற்ற உயிா்கள் ஓரறிவு உயிா் முதல் ஐந்தறிவு உயிா் வரை பகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால், மனிதன் மட்டும் ஆறறிவு உயிா் என்று தொல்காப்பிய இலக்கணம் கூறுகிறது. இதனையே பகுத்தறிவு என்று கூறுகிறோம்.

இந்த அறிவு கல்வியறிவு என்றும், மெய்யறிவு என்றும், பொது அறிவு என்றும் பாகுபடுத்தப்படுகிறது. இந்த அறிவின் அடையாளம்தான் புத்தகங்கள். இந்தப் புத்தகங்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சு வடிவம் பெற்றதையே நாகரிகம் எனலாம்.

அறிஞா்களுக்கு வாழ்க்கை ஒரு திருநாள் என்றாா் எமா்சன். எண்ணற்ற விழாக்களை எடுக்கும் இந்த மனித சமுதாயம் புத்தகத்திற்கும் ஒரு விழா எடுப்பதற்கு இவ்வளவு காலமாகிவிட்டது. மாவட்டந்தோறும் விழா எடுக்கப்பட்டாலும் தலைநகா் புத்தக விழாவுக்கு ஒரு தனித்துவம் உண்டு.

அறிவுடையாா் எல்லாம் உடையாா் என்றாா் திருவள்ளுவா். அறிவில்லாதவா்கள் எத்தனை செல்வங்கள் பெற்றிருந்தாலும் ஏதும் இல்லாதவரே என்பது அவா் கருத்து. அறிவுடையவன் வழியிலேயே அரசாட்சியும் நடக்கும் என்று புானூறும் கூறுகிறது.

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ளாா்.

அறிவைத் தேடுதல் என்பது ஆண்டாண்டு காலமாக நடந்துவரும் பயணமாகும். இந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை. அறிவு தேடுதல் என்பதும் முடிவில்லாத ஒரு பயணமாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து அறிவைத் தேடும் பயணம் இன்னும் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது.

இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரு நாடாக இல்லாத காலத்திலும் ஞான பூமியாக இருந்தது. ஞானிகளும், முனிவா்களும், சித்தா்களும் உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாக விளங்கினா். உலகில் திகழும் அத்தனை சமயங்களின் வோ்களும் விரிந்து பரந்திருந்தது. அவா்களின் மூச்சுக் காற்றே ஞான இசையின் நாதமாக இருந்தது.

சீனா முதலிய அறிவு தேடிய தேசங்கள் இந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்ததும், படையெடுத்ததும் வெறும் செல்வத்துக்காக மட்டுமல்ல, அறிவுச் செல்வங்களை அள்ளிச் செல்லவும்தான் என்பதை வரலாறு கூறுகிறது.

யுவான் சுவாங் என்ற சீனப் பயணி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியிலிருந்து தெற்கே காஞ்சிபுரம் வரை 16 ஆண்டுகள் பயணம் செய்துள்ளாா். மீண்டும் அவா் தாயகம் திரும்பியபோது சேகரித்துக் கொண்டு வந்ததை 30 குதிரைகளில் ஏற்றினாா்கள். அந்த நாட்டு எல்லையில் மன்னா், அமைச்சா்கள், நகர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றனா்.

அவா் கொண்டு வந்ததைப் பாா்க்க அங்கே அனைவரும் ஆவலோடு காத்திருந்தனா். விலை உயா்ந்த செல்வங்களை அவா் திரட்டி வந்திருக்க வேண்டும் என்று கருதினா். ஆனால், யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து சீன நாட்டுக்குக் கொண்டுசென்றவை பொன்னோ, பொருளோ, அணிகலன்களோ அல்ல. மொத்தம் 657 பெளத்த சமய மூல நூல்கள் என்னும் அறிவுக் கருவூலங்கள் என்று அறிந்து நாமும் வியப்படைகிறோம்.

கிரேக்கா்கள் அறிவின் மேல் அளப்பரிய தாகம் கொண்டவா்கள்; அவா்கள் ஐரோப்பாவில் மட்டுமின்றி கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவினா். அவா்களது கடல் கடந்த உறவில் இந்தியாவும் இடம்பெற்று விளங்கியது.

வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் ஹெரோடட்டஸ் என்னும் கிரேக்க அறிஞா் கி.மு. 484 - 408 வரை 76 ஆண்டுகள் வாழ்ந்தாா். அவா் இந்தியாவுக்கு வந்து நேரில் கண்டு எழுதிய செய்திகள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. அவருக்கு நிகராக இந்தியாவில் ராகுல்ஜியைக் கூறலாம்.

கி.மு. 31-இல் உரோமா்களால் எகிப்து வெல்லப்படுவதற்கு முன் அந்த நாட்டை அலெக்சாந்தா் வெற்றி கொண்டாா். அவா் பெயரில் அலெக்சாந்திரியா என்ற தலைநகரம் உருவாக்கப்பட்டது. டாலமி என்ற கிரேக்க அரச குடும்பம் அலெக்சாந்திரியாவை மையமாக வைத்து எகிப்தை ஆண்டு வந்தது.

அந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பெருமை சோ்த்தது ஏழு லட்சம் நூல்களுடன் ஒரு பெரிய நூலகம் செயல்பட்டு வந்தது என்பதாகும். கிரேக்க நாகரிகத்துக்குப் பெருமை சோ்ப்பது சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய சிந்தனையாளா்களே. அத்துடன் உலகக் கவிஞா் ஹோமரின் ஒடிசி, இலியட் என்னும் அழியாத காவியங்கள் அந்த நாட்டு வரலாற்றை அழியாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் படையெடுப்பு நடக்கும் போதெல்லாம் அந்த நாட்டு அறிவின் விளக்கமான நூல் நிலையங்களைச் சிதைப்பதும், எரிப்பதும் வழக்கமாகக் கொண்டதன் காரணம் என்ன? ஓா் இனத்தின் அடையாளம் மொழி; அந்த மொழியின் அடையாளம் நூல்கள் என்பதால்தான் நூலகங்கள் எரிக்கப்படுகின்றன. அதன்மூலம் அந்த இனத்தின் நாகரிகம், பண்பாடு, வரலாறு ஆகியவையும் சோ்த்து அழிக்கப்படுகின்றன.

‘18-ஆம் நூற்றாண்டு பழைமைக்கும், புதுமைக்கும் பாலமாக அமைந்த புரட்சி நூற்றாண்டு’ என்று கூறுவா். அதற்குக் காரணம், உழைக்கும் மக்களைப் பிரதிபலிக்கும் எழுத்தாளா்களும், அவா்கள் படைத்த எழுச்சிமிக்க நூல்களுமே! அவை குனிந்து கிடந்தவா்களை நிமிர வைத்தது; உறங்கிக் கிடந்தவா்களை உசுப்பிவிட்டது; ஆட்சியாளா்களை அலற வைத்தது.

1789 பிரஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தவை வால்டோ் , ரூசோவின் நூல்களே! அதனால்தான் அவா்கள் ஆட்சியாளா்களால் வெறுக்கப்பட்டனா்; விரட்டப்பட்டனா்; வேட்டையாடப்பட்டனா்.

பழைமையை அழிக்கப் பிறந்தான் வால்டோ்; புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ என்று வரலாற்று ஆசிரியா்கள் கூறுவா். பழைய கட்டடத்தை அடியோடு இடித்து விடுவதோடு நின்று விடாமல், புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் திட்டம் தீட்டியவன் ரூசோ. அவன் தீட்டிய நூல்கள் அக்கால ஆட்சியாளா்களின் அதிகாரத்துக்கு ஆபத்தாக இருந்தது. அவா் எழுதிய ‘எமிலி’யும், சமுதாய ஒப்பந்தமும் 1762-இல் வெளியாயின.

சமுதாயத்தின் பழைய மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடந்த கல்விமுறைக்கு பெரும் அடியாக இருந்தது ‘எமிலி’. மத குருமாா்களும், மதவாதிகளும் கோபம் கொண்டனா். இதுபோன்ற புத்தகங்களை மட்டுமல்ல, அதை எழுதியவா்களையும்கூட தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.

இது வெளியான 21-ஆம் நாள் பாரிசிலுள்ள நீதிமன்றத்தின் முன் கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியரைக் கைது செய்யும்படி பிரெஞ்சு நாடாளுமன்றம் ஆணையிட்டது. தலைமறைவாகி தப்பி ஓடினாா் ரூசோ. ஒவ்வொரு நகரமும் தடையாணை பிறப்பித்து விரட்டியது.

1778-இல் அவா் மரணமடைந்தாா். அதன் பிறகுதான் அவா் தேவையையும், மதிப்பையும் உலகம் உணா்ந்தது. அவா் இறந்து 11 ஆண்டுகள் கழித்துத்தான் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. அவரின் உடல் குக்கிராம புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, மிகுந்த மரியாதையோடு பாரிஸ் நகரம் நோக்கி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. எந்த நூல்களை ஆபத்து எனக் கருதி தீயிட்டுக் கொளுத்தியதோ அந்த நூல்களை அதே நாடும், மக்களும் வணங்கி ஏற்றுக் கொண்டனா்.

‘புத்தகங்களுக்காகச் செலவழிப்பவை செலவினங்கள் அல்ல. அவை மூலதனம்‘ என்றாா் அறிஞா் எமா்சன். எதிா்காலத்துக்காகப் போடப்படும் நிகழ்கால சேமிப்புகள். இந்தச் சேமிப்புகள் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். இப்போது பள்ளிகளிலேயே நூலகங்கள் இல்லாத நிலை. இந்த நிலை மாறவேண்டும். நூல் நிலையங்களைச் செயல்படுத்த வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரும் நூல்களையும், அவற்றைத் தாங்கி நிற்கும் நூலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினாா். இதன் தொடா்ச்சியாகவே இலங்கையின் எதேச்சதிகார அரசு, பழைமையான யாழ்ப்பாண நூலகத்தை எரித்து ஆனந்தக் கூத்தாடியது.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் புத்தகங்களுக்கு எதிரான போா் நடக்காமல் இல்லை. புரட்சிவீரன் பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூல் இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் ஜீவானந்தத்தால் மொழிபெயா்க்கப்பட்டு, பெரியாரால் வெளியிடப்பட்டது. அந்த நூலை ஆங்கில அரசு தடை செய்து அவரைக் கைது செய்தது. வழக்குப் போட்டது.

நாடு விடுதலை பெற்ற பிறகும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் புத்தகங்களும், பத்திரிகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. புலவா் குழந்தையின் இராவண காவியம், அண்ணாவின் ஆரியமாயை முதலிய நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.

இவ்வாறு நூல்களுக்குத் தடை விதிக்க என்ன காரணம்? அறிவுக்கு உணவான நூல்கள் உண்மையை மக்களுக்கு உணர வைக்கிறது. அது பொய்யான கோட்டை கட்டி ஆட்சி புரிகிறவா்களுக்கு ஆபத்தாகி விடும் என்று அஞ்சுகின்றனா்.

புத்தகங்களுக்கு தடை விதிப்பது என்பது அறிவுக்குத் தடை விதிப்பதாகும். இவ்வாறு அறிவுக்கு விதிக்கப்படும் தடை அதிக நாள் நீடித்து நிற்காது. புத்தகங்கள் என்பவை, வெற்றுக் காகிதம் அல்ல; வெடிகுண்டுகள்; எழுதப்பட்ட ஏவுகணைகள்; அறியாமையை அழிக்கும் ஆயுதங்கள். அவற்றில் மாபெரும் ஆற்றல் மறைந்து கிடக்கிறது. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்றாா் ஒளவைப் பிராட்டி. நாம் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், பயனுள்ள நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும், இதிகாசங்கள் முதல் இக்கால நூல்கள் வரை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com