காவல் துறையினருக்கு இருப்பதும் உயிர்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் வில்சன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். களியக்காவிளை சந்தை


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் வில்சன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். களியக்காவிளை சந்தை பகுதியில் இஞ்சிவிளை செல்லும் அணுகுசாலையில் உள்ள சோதனைச் சாவடியில்  பணியில் இருந்தபோது சமூக விரோதிகளால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின் தாக்கம் ஒரு நிலைக்கு வருவதற்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் கலவரக்காரர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு கையில் காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார். இதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த இரு உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு நடந்தும், பொதுவாக காவலர்களின் மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகள் யாரும் காவலர்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு எதிராக தங்களது நியாயக் குரலை உரக்க எழுப்பவில்லை.

வில்சனின் கொடிய மரணத்தின் தாக்கம் எந்த அளவுக்கு நீண்டிருக்கிறது என்றால், கொலை செய்யப்பட்ட வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரணமாக ரூ.1 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் தமிழக முதல்வர். இதற்கு முன்னர் ஓசூர் காவலர் முனுசாமி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ஆகியோர் பணியின்போது கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அவர்களது குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
காவலர்களையும், காவலர்களது குடும்பத்தையும் சோர்வடைந்துவிடாமல் தூக்கி நிறுத்திட நிவாரணங்கள்  உதவுமே தவிர, காவலர்களுக்கு பணியின்போது கிடைக்கும் பாதுகாப்பைவிட நிவாரணங்கள் பெரிய தீர்வல்ல. இதை மனதில் கொண்டே, கொலைச் சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸா ருக்கு துப்பாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் -11-ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளின்போது ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தின் போதும், 2018–ஆம் ஆண்டு, மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக  நடந்த போராட்டம் கலவரமாக மாறி அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது 13 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போதும்கூட, காவலர்களுக்குக் காயம் ஏற்பட்டதே ஒழிய ஒரு காவலர்கூட உயிரிழக்கவில்லை.

ஆனால், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவேதம்புத்தூரில் நடந்த குருபூஜை பணியில் இருந்த காவல் அதிகாரி ஆல்வின் சுதன் சமூகவிரோதிகளால் குத்திக் கொல்லப்பட்டார். அப்போது அரசு அறிவித்த நிவாரணத் தொகை போக, தமிழ்நாட்டு காவல் துறையினர் அனைவரும் தன்னெழுச்சியாக அவர்களாவே நிதி திரட்டி ஏறக்குறைய ரூ.40 லட்சத்தை நிவாரணமாக ஆல்வினின் குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.
பொதுமக்கள், சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் அரசுக்கு எதிராக அவர்களின் நியாயமான கோரிக்கைகளை  வலியுறுத்தி செய்யும் போராட்டங்களின்போதும், எதிர்பாராதவிதமாகத் தோன்றும் வன்முறைச் சம்பவங்களின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சுட்டிக்காட்டப்படும் காவல் துறையினரின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல் சம்பவங்களின்போதும்கூட இதுவரை தமிழகத்தில் காவலர்கள் காயம்பட்ட சம்பவங்கள் நடந்தேறியிருக்கிறதே தவிர காவலர்கள் கொல்லப்பட்டதில்லை. 

பணி நேரத்தின்போது சட்டத்திற்குட்பட்டு அவர்களது கடமையை கண்ணும் கருத்துமாக செய்துகொண்டிருக்கும்போது மட்டுமே இதுபோன்ற கொடிய செயல்கள் காவல் துறையினருக்கு எதிராக நடந்தேறியிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோன்று, கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் அமுதசெல்வி, 2011-ஆம் ஆண்டு மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர், திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா என்று காவலர்கள் பலர், பல்வேறு காலகட்டங்களில் தற்கொலை செய்திருக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோல், மகாராஷ்டிரத்தில் 161 காவலர்களும், கேரளத்தில் 61 காவலர்களும் உயிரிழந்துள்ளனர்.   தமிழக காவல் துறையில் ஆண்டுக்கு சராசரியாக 27  போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப் பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ரோந்துப் பணியில் ஈடுபடுபவர்கள், நீதிமன்றப் பணிகள், முக்கிய நபர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு வகையில் சுழற்சி  முறையில் பணிபுரிபவர்களும், விடுமுறை மறுப்பு, மேலதிகாரிகளின் நெருக்குதலினால் மன உளைச்சலுக்கு உள்ளாவோரும், குறிப்பாகப் பெண் காவலர்கள் பலர், கடும் பணிச்சுமை, ஓய்வின்மை, குடும்பத்தினருடன் சரியாக நேரம் செலவிட முடியாத நிலை இருப்பதாலும், இவர்களின் பணி நேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால் சரியான நேரத்தில் உணவருந்த முடியாமலும், அதேபோல், பாதுகாப்பிற்காகப் பலர் வெளியிடங்களில் தங்க வைக்கப்படுவதாலும், இதனால் சுற்றுச்சூழல் மாற்றம், உணவுப் பழக்க மாற்றம் என்று பல்வேறு காரணங்களால் வலிமையானவர்கள் என்று கருதப்படுகிற காவலர்களும்  மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். காவலர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே.

காவல் துறையில் தொடர்ச்சியாக நடக்கும் பணி விலகல், தற்கொலைகளுக்கு  துறை சார்ந்த பல்வேறு காரணங்கள்  கூறப்பட்டாலும், சொந்தக் காரணங்களும், குடும்பப் பிரச்னைகளும்கூட பல நேரங்களில் முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது. 
பொதுவாக காவலர்களின் இதுபோன்ற தற்கொலைகளும், மரணங்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத சாதாரண  செய்தியாகிவிட்ட சூழ்நிலையில், பணி நேரத்தின்போது அவர்தம் கடமையைச் செய்துகொண்டிருக்கும்போது சமூகவிரோதிகளால் கொலை செய்யப்படும் வில்சன் போன்றவர்களின் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.
அண்மைக்காலங்களில் குற்றவாளிகள் கழிவறைகளில் வழுக்கி விழுந்து காயம்படுவதும், காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் பெருகிவரும் காலகட்டத்தில்கூட, கொலைக்கான காரணம், கொலையாளிகளின் உண்மையான நோக்கம் எதுவுமே பொது உலகுக்கு பகிரங்கமாகத் தெரியாத நிலையிலும்கூட, இந்தப் படுபாதகச் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகவேண்டும் என்பதோடு, தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்கும் உட்படுத்தப்படவேண்டும் என்பதும் அவசியமாகிறது.

காவல் துறையினர் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் இளம் உதவிஆய்வாளர் ஒருவர், "வழிபாட்டுத்தலங்கள்கூட ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் பூட்டப்படுகிறது. ஆனால், மக்கள் சேவைக்காக எப்போதும் திறந்தே இருக்கும் ஒரே இடம் காவல் நிலையங்கள் மட்டுமே' என்று ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதில் உண்மையில்லாமல் இல்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் இளைய மகள் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர். வரும் மே மாதத்துடன் பணி ஓய்வுபெறவிருந்த வில்சன், அவரின் மனைவி, மூத்த மகளைவிட வினிதாவிடம் அதிக பாசம் வைத்திருந்தாராம். குழித்துறை பகுதியிலுள்ள மனநலம் குன்றியோர் பள்ளியில் படித்துவந்த வினிதாவுக்காவே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று வந்திருக்கிறார் வில்சன்.
இந்த நிலையில் சமூகவிரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் சடலமாக அவரின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டபோது, "வேலைக்குப்போன எங்கப்பா, எப்ப வீட்டுக்கு வருவாரு?'”என்று கேட்டு வினிதா கதறியது எந்தவொரு கல் நெஞ்சையும் கரையச் செய்துவிடும்.  

ஆம். நண்பர்களே, காவல் துறையினருக்கும் குடும்பம் உண்டு. வாழ்க்கை உண்டு. ஆசாபாசங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கும் உயிர் உண்டு என்பதை பொது சமூகமாக நாமும் அனைத்துக் காவலர்களும் நெஞ்சில் நிறுத்துவது ஓர் அமைதியான சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும். வினிதாக்களின்  கதறல்கள் இனியும் தொடரக் கூடாது.

 கட்டுரையாளர்:
பதிப்பாளர், உயிரோசை மாத இதழ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com