ஊழல், திறமையின்மையின் ஊற்றுக்கண்!

நம் நாட்டின் மத்திய, மாநில அரசுகளின் பணியாளர்களின் தேர்வு மத்திய - மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் நடைபெறுகின்றன.


நம் நாட்டின் மத்திய, மாநில அரசுகளின் பணியாளர்களின் தேர்வு மத்திய - மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.)  தேர்வுகளில் நிறைய குறைபாடுகளும் தவறுகளும் நடந்தேறுகின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலங்களில் எழுந்துள்ளன.
2019-ஆம் ஆண்டு அரசுப் பணிகளுக்கான குரூப் 4 டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் 5,575 தேர்வு மையங்களில் நடந்தன.  இவற்றில் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை, அந்தப் பகுதியைச் சாராத பிற பகுதிகளின் மாணவர்கள் தேர்ந்தெடுத்து தேர்வெழுதி வெற்றி பெற்றனர் என ஏராளமான மாணவர்கள் புகார் அளித்தனர். 

இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் இடைத்தரகர்களின்ஆலோசனையின் அடிப்படையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தேர்வுப் பணியில் ஈடுபட்ட நபர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் செயல்பட்டு, 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்தது, 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வருவதற்கு உதவியுள்ளது ஆகியவையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் தேர்வு மையங்கள் நேர்மையாகச் செயல்படாமலிப்பது நம் நாட்டின் பழைய கதை என்று நினைத்து வந்த பலருக்கும் இந்த நிகழ்வு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, பணியாளர்களிள் தேர்வு மையங்கள் முற்காலங்களில் செய்த தில்லுமுல்லுகளைக் கூர்ந்து நோக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியுள்ளது.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது  மத்திய அரசின் இந்திய அரசுச் சட்டம், 1935”-இன்அடிப்படையில்தான்.  சுதந்திரம் அடைந்தபின், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  315-ஆவது விதிகளின்படி மத்திய, மாநில அரசு தேர்வாணையங்கள் உருவாக்கப்பட்டன.  ஆரம்பகாலம் முதலே இவற்றின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

ரவி இண்டர்பால் சிங் சித்து என்பவரின் தலைமையில் பஞ்சாப் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டபோது பணம் பெற்றுக் கொண்டு பல ஊழல்கள் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் நிகழ்வுகளை பின்நோக்கிப் பார்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் எப்படி உருவாகி சீரழிந்தன என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும்.

1949-ஆம் ஆண்டில், அரசியல் சட்டத்தின் உருவாக்குதல் மையத்தில் அன்றைய நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையங்கள், ஜெனரல் ஆகிய அனைத்துமே தனித்த சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்து முன்நிறுத்தப்பட்டது. அவ்வாறு இருந்தால்தான் அவர்களது பணிகளை நிர்வாகத் துறையின் தலையீடு இல்லாமல் நடுநிலையுடன் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் செய்யமுடியும் என்று அரசியல் சாசன சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.

அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மீது தேவைப்பட்டால் உச்சநீதிமன்ற  நீதிபதிதான் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.  தேர்வாணைய உறுப்பினர் ஒருவர் தவறு ஏதும் செய்தால் உடனடியாக பணிவிலக்கம் செய்யப்படுவது மட்டுமின்றி, அதுமுதல் வேறு எந்த அரசுப் பணியிலும் அவர் அமர முடியாது என்ற நிலைமையும் இருந்தது.

பல மாநில தேர்வாணையங்களில் தவறுகள் நடந்தேறிய நிலையில், முழு தேசத்தையும் கவர்ந்திழுத்த வகையில் பஞ்சாப் மாநில தேர்வாணையத்தின் தலைவர் சித்துவின் நடவடிக்கைகள் முதன்மையான களங்கத்தை உருவாக்கின. 1996 முதல் 2002-ஆம் ஆண்டு வரையிலும் தலைமை ஆணையராக பணியமர்த்தப்பட்ட சித்துவை அவரது பணியின் கடைசிக் காலத்தில் பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு திட்டமிட்டு, கையும் களவுமாக ரூ.5 லட்சத்தை லஞ்சமாக அவர் பெற்றபோது பிடித்தது.  அவரின் வீட்டிலிருந்து ரூ.8 கோடியே 16 லட்சம் கைப்பற்றப்பட்டது.

ஒரு பத்திரிகையின் நிருபராகப் பணியிலிருந்த சித்து, அன்றைய பஞ்சாப் முதல்வர் ஹர்சரண் சிங் பிரார் என்பவரால் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக பணியமர்த்தப்பட்டார்.  பிற்காலத்தில் பஞ்சாப் முதல்வராக வந்த கேப்டன் அமரீந்தர் சிங்,  "நமது மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஊழல் நடவடிக்கைகளின் கூடாரமாகி விட்டது.  எனது முதல் பணி அந்த ஆணையத்தை சரிசெய்வதே' எனக் கூறினார்; கூறியபடி, பஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது அவர் தொடர் நடவடிக்கைகளை எடுத்தார்.
சித்து மீது குற்ற வழக்கு பதியப்பட்டு, ரோபர் நகரின் சீஃப் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு வந்தது. அது சமயம் சித்துவின் கூட்டாளியின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த வேளையில், அவர் பொதுநலம் கருதி அரசு சாட்சியாக மாறி எல்லா உண்மைகளையும் தெரிவிக்க ஒப்புக்கொண்டார். முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு தேர்வாணைய ஊழல் விவகாரங்களில் பங்கு உண்டு எனக் கூறியுள்ளார்.

அவரின் சாட்சிப்படி தேர்வாணையம் நடத்திய  தேர்விற்கான கேள்வித்தாள்களை சண்டிகர் நகரின், செக்டர் 24 பகுதியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கொடுத்தார். கோடிக்கணக்கான பணத்தைத் திரட்டிய சித்து மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையை உறுப்பினராக வருவதற்கும் முயற்சி செய்தார்.  பின் அது நடந்தேறவில்லை. இதுபோன்ற கீழ்த்தரமான பல நடவடிக்கைகள் வேறுபல மாநில பணியாளர் தேர்வாணையங்களிலும் நடந்தேறியுள்ளது.

அப்படியே தமிழகத்துக்கு வருவோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்லமுத்து  இருந்தபோது, அவரின் வீட்டிலும், அன்றைய ஆணைய உறுப்பினர்கள் 13 பேரின் வீட்டிலும் காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனையில் ஈடுபட்டது. இவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொண்டு, பல் டாக்டர்கள் வேலைக்குப் பலரைத் தேர்ந்தெடுத்தது அம்பலமாகியது.

2006 - 2008 - ஆம் ஆண்டுகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதவிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு, பலரைத் தேர்வு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் உருவாகின.  இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் பலமுறை தமிழக தேர்வாணையம் குறித்தும் உருவாகியது.  ஓர் உறுப்பினரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது ரூ.26 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.  

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதன் பிறகு குறைந்தன. இந்த நிலையில்தான் தமிழகத்தின் தேர்வாணையம் குறித்த குற்றச்சாட்டுகள் மறுபடியும் உருவாகியுள்ளன. அவற்றை முழுமையாக விசாரணை செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முயற்சியில் ஆணைத்தின் உயர்நிலை அதிகாரிகளும் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற செயல்கள், இழைக்கப்பட்ட தவறு அடிமட்டத்து அதிகாரிகளினால்தான் நடந்தேறியிருக்க வேண்டும் என்ற தகவலை நமக்கு அளிக்கின்றன.  அது பரவாயில்லை.முற்காலத்தில் ஆணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் தவறு செய்தது வெளியாகி, மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தபோது, உதயசந்திரன் எனும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆணையத்தின் செயலராக இருந்தார்.  பல ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.  அதனால், அன்றைய உறுப்பினர்களும், தலைவரும் அவருக்கு எந்தக் கோப்புகளும் செல்ல வேண்டியதில்லை என்ற சுற்றாணையைப் பிறப்பித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதை விவரமாகப் பட்டியலிட்டு அன்றைய தலைமைச் செயலருக்கு உதயசந்திரன் புகார் அளித்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.  டி.என்.பி.எஸ்.சி.-யின் அலுவலகம், உறுப்பினர்களின் வீடுகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் மாநிலமே அதிர்ந்து போனது.

ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை தொடர்ந்த நிலையிலும் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் குறையவில்லை என்பது, ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களின் முறைகேடுகள் நிரூபிக்கின்றன.  

குறைபட்ட தேர்வினால் தேர்தெடுக்கப்படும் தரம் குறைந்த பணியாளர்கள் அரசுப் பணியில் சேர்ந்தால் நிர்வாகம் சீரழியும் என்பது, உலகின் அனைத்து நாடுகளிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை.  அது நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது என்பது அனைவருமே அறிந்த உண்மை. இதனால்தான், அரசு நிர்வாகத்தில் ஊழலும், தாமதமும், செயல்பாட்டின்மையும், முறைகேடுகளும் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

தலைமை சரியாக இருந்தால் மட்டும் போதாது. நிர்வாகம் சீர்குலைந்து இருக்கும்போது தலைமையால் என்ன செய்துவிட முடியும்?  இதற்கான முடிவு என்ன என்பதை வருங்காலம்தான் தீர்மானிக்கும்!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com