சாத்தான்குளம் எழுப்பும் எச்சரிக்கை மணி!

உலகம் முழுவதும் கரோனாவால் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வரும் செய்தி இரண்டு மாதங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கரோனா காலகட்டத்தில் பொதுமுடக்க நேரத்தையும்

உலகம் முழுவதும் கரோனாவால் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வரும் செய்தி இரண்டு மாதங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கரோனா காலகட்டத்தில் பொதுமுடக்க நேரத்தையும் மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் (60), அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 சமூக ஊடகங்கள் மூலம் வெளிமாநிலம் மட்டுமின்றி சர்வதேச அளவில் இருந்தும் அரசியல்வாதிகளும், திரைப் பிரபலங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
 காவல் துறையினரின் அதிகார அகங்காரத்தால் விலை மதிக்க முடியாத இரண்டு மனித உயிர் பறிக்கப்பட்டிருப்பது மனதில் ஈரம் உள்ள யாராலும் மன்னிக்க முடியாத குற்றமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்து, நோய் பரப்பும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு இறந்த தந்தை-மகன் மீது குற்றஞ்சாட்டுகிறது சாத்தான்குளம் காவல்துறை.
 முறையான விசாரணைக்குப் பின்னர்தான் இதில் உண்மை வெளிச்சத்துக்கு வரும். கரோனா காலகட்டத்தில் சிறு வழக்குகளில் யாரையும் கைது செய்து சிறைகளில் அடைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் எதிரிகளை காவல்துறை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
 உச்ச நீதிமன்றத்தின் இந்த விதிமுறைகள் சாத்தான்குளம் வியாபாரிகள் வழக்கில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது இருவரின் இறப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காவல்துறையினர்தான் முதல் காரணமாக இருந்திருக்கின்றனர். கைது நடவடிக்கையின்போது காவல் துறையினர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அது வெட்ட வெளிச்சமாகிறது.
 ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சட்டப்பிரிவுகள் 188, 269, 294, பி, 353, 506 பிரிவு 2 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால் அதிகபட்சம் 6 மாத சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும். காவல் நிலை ஆணைகள்-722 இன்படி அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
 மேலும், 1994-இல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜோகிந்தர்குமார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலை, கொள்ளை, வழிப்பறி, மானபங்கம் ஆகிய வழக்குகளில் மட்டுமே எதிரிகளை கைது செய்யலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு பிகாரை சேர்ந்த அமேஷ்குமார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் மட்டுமே எதிரியை கைது செய்யலாம் என்பதை உறுதி செய்துள்ளது.
 சாத்தான்குளம் சம்பவத்தை முழுமையாக ஆய்வு செய்தால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை காவல் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, சிறைத் துறை ஆகியவை முழுமையாக மீறியுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகிறது.
 தந்தை, மகன் மீது பதியப்பட்ட வழக்குகளில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றதே முதல் விதிமீறல். வழக்குப் பதிவுக்குப்பின் காவல் நிலைய பிணையில் இருவரையும் விடுவிக்காமல் ஜூன் 19 இரவு முதல் ஜூன் 20 காலை வரை காவல்துறையில் கட்டுப்பாட்டின் வைத்திருந்தது மிகப்பெரிய விதிமீறல்.
 அடுத்து, காவல்துறையின் மிரட்டலுக்குப் பயந்து சாத்தான்குளம் அரசு மருத்துவர் இருவரையும் பரிசோதனை செய்து மருத்துவ பரிசோதனை அறிக்கை கொடுத்திருந்தால் அதுவும் விதிமீறல்தான். அதையும் மீறி மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் முன்பு தந்தை, மகனை போலீஸார் ஆஜர்படுத்தும்போது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி 6 மாதம் சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்கில் இருவரையும் கோவில்பட்டி சிறைக்கு அனுப்பியதும், சிறையில் இருவரையும் உடல் முழுவதும் ஆய்வு செய்யாமல் சிறைக்குள் நீதிமன்றக் காவலில் வைக்க ஒப்புக்கொண்ட சிறைத்துறை அதிகாரியின் செயலும் முற்றிலும் விதிமீறல்களே.
 காவல்துறையினரின் அதிகார அகங்காரத்தால் இரு மனித உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமை. இந்தக் கொடுமையை, மனதில் ஈரம் இருந்திருந்தால் மருத்துவர், மாஜிஸ்திரேட், சிறைத்துறை அதிகாரி ஆகியோர் நிச்சயமாகத் தடுத்திருந்திருக்கலாம். இவற்றை எல்லாம் மீறி, உளவுத்துறை மீதும் மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கிறது.
 ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் டிஜிபி அலுவலகத்துக்கு உளவு சொல்லக்கூடிய எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ்காரர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உளவு சொல்லக்கூடிய சிறப்புப் பிரிவு போலீஸ்காரர் ஆகியோர் உளவு பார்த்து வருவது வழக்கமான நடைமுறை.
 சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குள் ஏற்கெனவே 20 நாள்களுக்கு முன்பு இதைப்போல போலீஸாரின் அடக்குமுறையால் ஒருவர் இறந்துள்ளார் என்ற செய்தி இப்போது உலாவுகிறது. இந்த காவல் நிலையத்தில் "பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்னும் காவல் நண்பர்கள் குழு இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 சாத்தான்குளத்தில் காவல் துணை கண்காணிப்பாளரும் பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் எல்லாம் இத்தனை நாள்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என மக்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
 இவ்வழக்கை தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு உள்படுத்தியதும், இவ்வழக்கில் அப்பகுதி மக்கள், எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்துக்குப் பிறகு மாநில அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இவ்வழக்கில் எப்படியாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது.
 இப்போது இவ்வழக்கில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம், காவல் ஆய்வாளர் இடமாற்றப்பட்டு, புதிய ஆய்வாளர் நியமனம், காவல் நிலைய காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் உள்ளிட்ட மாநில அரசின் நடவடிக்கைகள் மெச்சத்தகுந்ததாக இருக்கிறது.
 அரசும், எதிர்க்கட்சிகளும் நிவாரணமாகக் கொடுக்கும் சில, பல லட்சங்கள் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாகாது. எந்தெந்த வழக்குகளில் எதிரிகள் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையின் கீழ்நிலை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை காவல்துறை தலைமை அதிகாரிகள் ஏற்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற கோர மரணங்களைத் தவிர்க்க முடியும்.
 காவல்துறைக்கு ஓர் எச்சரிக்கை மணியாக மாறியுள்ளது சாத்தான்குளம் சம்பவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com