நனவாக வேண்டும் லூதர் கிங்கின் கனவு!

அமெரிக்க அதிபரின் அழகுமிகு வெள்ளை மாளிகையின் அனைத்து ஒளிவிளக்குகளும் கடந்த மே 31-ஆம் தேதியன்று திடீரென்று அணைந்தன. இருளில் மூழ்கியது எழில்மிகு மாளிகை. 

அமெரிக்க அதிபரின் அழகுமிகு வெள்ளை மாளிகையின் அனைத்து ஒளிவிளக்குகளும் கடந்த மே 31-ஆம் தேதியன்று திடீரென்று அணைந்தன. இருளில் மூழ்கியது எழில்மிகு மாளிகை.
 அதிபர் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா, மகன் பரோன் ஆகிய மூவரும் அரண்மனையின் அடித்தளத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பதுங்கு அரண்களில் தங்கினர். மாளிகையைச் சுற்றி ராணுவ வீரர்கள் குவிந்தனர். எதிரே பெருந்திரளாகக் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர்ப் புகையையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு தாக்கினர். கூட்டம் கலையவில்லை, கோஷம் குறையவில்லை. அதிபருக்கே இந்த அவல நிலையா? அமெரிக்கர்கள் அதிர்ந்தார்கள். உலகமோ திகைப்புக்குள்ளானது.
 வெள்ளை மாளிகையில் இன்று வரை 43 அதிபர்கள் வசித்திருக்கிறார்கள். இதற்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று, நியூயார்க்கின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டபோது, அதிபரும் அவரின் குடும்பத்தினரும் வெள்ளை மாளிகையின் பதுங்கு குழிக்குள் பாதுகாப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்குக் காரணம் அயலகத் தீவிரவாதிகள். ஆனால், அதிபருக்கு எதிரான இன்றைய போராட்டத்துக்குக் காரணம், அரசுக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம்.
 அமெரிக்காவில் அண்மையில் நடந்த கொடூர நிகழ்வு ஒன்றுதான் இதற்குக் காரணம். சுமார் 46 வயதுடைய ஒரு கருப்பு இன மனிதரை, வெள்ளை அமெரிக்கக் காவல் அதிகாரி அடிக்கிறார். அடிபட்டவர் தரையில் விழுகிறார். விழுந்தவரின் கழுத்தில் காவல் அதிகாரி தன் முழங்காலால் அழுத்தி மிதிக்கிறார். "ஐயோ! ஐயோ! மூச்சுத் திணறுகிறதே, என்னைக் கொல்லாதே' எனக் கதறுகிறார். கருப்பரின் அழுகுரல் வெள்ளையர் காதில் விழாது போலும்! மரணத்தைத் தழுவுகிறார் அந்தக் கருப்பு அமெரிக்கர். அவர் பெயர் ஜார்ஜ் ஃபிளாய்ட்.
 இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு அமெரிக்க மக்கள் வெள்ளையரும், கருப்பினத் தவரும் - கொதித்தெழுகிறார்கள். அமெரிக்காவின் 50 முக்கிய நகரங்களிலும் இந்தப் போராட்டத் தீ பரவுகிறது. அமெரிக்காவே போர்க்களமாகக் காட்சி அளிக்கிறது.
 உலகையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட நாடு அது. ஆனால், அதற்கு இன்று போதாத காலம். கொடிய கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் கடும் தாக்கம் ஒருபுறம். மறுபுறம் இனவெறிக்கு எதிரான உள்நாட்டுக் கலவரம். இதற்கு அடுத்தவர் எவரும் காரணம் அல்ல. ஆளும் அதிபரின் கொள்கையும் அணுகுமுறையுமே காரணம் என்கிறார்கள்.
 அமெரிக்காவில் வெள்ளை அமெரிக்கர்கள் இன்று வாழ்வது 60.4 சதவீதம். வெளிநாட்டினர் உள்ளே வரும் இன்றைய கொள்கை தொடர்ந்தால், 2045-இல் வெள்ளையர்கள் சிறுபான்மை இனத்தவராக மாறும் வாய்ப்பு உருவாகும் என்பது ஓர் ஆய்வுக் கணிப்பு. அதன் அடிப்படையில் "வெள்ளையருக்கே முதலிடம் வெளிநாட்டினரே வெளியேறுங்கள்' என்ற புதுவிதமான தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தித்தான் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆனால், வெள்ளையர்கள் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள்!
 அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்தபின், நிறவெறித் தாக்குதல்கள் 17% கூடியிருக்கிறதாம். அவர்களில் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் கருப்பு அமெரிக்கர்கள். அவர்களுடன் ஹிந்து, சீக்கியர், முஸ்லிம், பெளத்தர்களும் ஓரளவு அடங்குவார்கள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. நிறவெறித் தாக்குதல் நாளும் நடைபெறுகிறது. அது இல்லாத நாளே இல்லை என்கிறது இன்னொரு அறிக்கை.
 2018-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் 26.5 லட்சம் பேர். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர்களாக (செனட்டர்) இருப்பவர்களில் 16 பேர் இந்தியர்கள் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது. அவர்களில் மூத்த - பிரபல இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ், "சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் '' என்று டிரம்ப் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியுள்ளார்.
 ஜாதி பேதம் இந்தியாவின் சாபக்கேடு என்றால், நிறவெறி அமெரிக்காவின் சாபக்கேடு, ஜாதிய அணுகுமுறை இந்தியத் தேர்தலைத் தீர்மானிக்கிறது. இன வெறியும், நிற வெறியும் அமெரிக்கத் தேர்தலின் திசையை மாற்றுகின்றன. இது ஓர் ஆய்வின் வெளிப்பாடு. இது உண்மையல்ல என்று நிரூபிக்கப்படும் காலம் உருவாக வேண்டும்.
 1965 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான அதிபர் அயூப் கானும் அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கான திட்டம் ஒன்று இருந்தது. இரண்டு கருப்பு நிறத் தலைவர்களுக்கு சிறப்பு அளித்தால், தோற்றுப் போவோம் என்ற பயத்தால் அந்தப் பயணத் திட்டத்தையே ரத்து செய்து விட்டாராம் லிண்டன் பி. ஜான்சன்.
 இனவெறிக் கொள்கை அமெரிக்காவில் 1619-ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. "அமெரிக்கர்களுக்குக் கண்கள் உண்டு. அவர்களுக்கு நிற வேறுபாடு நன்றாகவே தெரியும். நிற அடிப்படையில், இன அடிப்படையில் மக்களைப் பிரிப்பது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதே' என்பது அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 1896-ஆம் ஆண்டு தீர்ப்பு. அது மாற்றப்பட்டு விட்டது.
 கடந்த பிப்ரவரி மாதம் நடைப் பயிற்சியின்போது ஒரு வெள்ளையரை இடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டில் காவல் கண்காணிப்பாளர் அந்தக் கருப்பு இளைஞரை விசாரணை ஏதுமின்றி சுட்டுக் கொன்றார்.
 26 வயது நிரம்பிய கருப்பின பெண் பிரியோனா டெய்லர். மூன்று காவலர்கள் சேர்ந்து அவரது இல்லத்திலேயே கைத் துப்பாக்கியால் அவரைச் சுட்டிருக்கிறார்கள். காரணம் என்ன என்று தெரியவில்லை.
 அதிபருக்கு எதிரான போராட்டம் கடந்த வாரம் மினியாபோலிஸ் நகரில் நடந்தபோது, ஆத்திரமடைந்த வெள்ளை அமெரிக்கர் ஒருவர் தன் மோட்டார் வாகனத்தை போராட்டக்காரர்கள் மீதே ஓட்டினார், பலர் மடிந்தார்கள். விசாரணை ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார் அந்த வெள்ளைக் கொலைகாரக் குற்றவாளி.
 கருப்பர்கள் மீதான தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கின்றன, கருப்பர்கள் வாழ்வது எங்கள் வாழ்வைப் பாதிக்கிறது எனக் கோஷமிடுகிறார்கள் வெள்ளை அமெரிக்கர்கள்.
 இதுதான் அமெரிக்காவா என எண்ணிக் கலங்க வேண்டாம். அங்கும் நியாயமும் இரக்கமும் நிரம்பிய நல் இதயம் கொண்டவர்கள் நிறையவே வாழ்கிறார்கள். ஹூஸ்டன் நகரின் தலைமைக் காவல் அதிகாரி போராட்டக்காரர்கள் முன் போகிறார். அவர்களைக் கட்டித் தழுவுகிறார். காலில் விழுகிறார். அத்துடன் "அதிபர் டிரம்ப் அவர்களே, நல்லதைச் செய்யுங்கள் அல்லது குறைந்தது வாயையாவது மூடுங்கள்" என்று அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
 நியூயார்க் நகரின் புகழ்மிக்க டைம் ஸ்கொயர் பகுதியில் காவலரால் மரணத்தைத் தழுவிய ஜார்ஜ் ஃபிளாயிட்-ன் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று, மண்டியிட்டு வணங்கி தன் இறுதி மரியாதையைச் செலுத்துகிறார் நியூயார்க் நகரின் தலைமைக் காவல் அதிகாரி. "இணைந்து வாழ்வோம்' என்ற விளம்பர அட்டையை ஏந்திக் கொண்டு ஓர் அமைதிப் பேரணியை முன்னின்று நடத்துகிறார் இன்னொரு மூத்த காவல் அதிகாரி.
 "ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது' என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். "இந்தப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறி விட்டார் அதிபர் டிரம்ப். அவரின் பெரும் தோல்வி இது' எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
 முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 55% அமெரிக்க மக்கள் அதிபரின் செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அதிபரின் இன்றைய அணுகுமுறை அவரின் தேர்தல் வெற்றியைப் பெரிதும் பாதிக்கும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
 வாஷிங்டன் நகரில் மகாத்மா காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அது நமக்கு கவலை தரும் செய்திதான். ஆனால், அண்ணலோ, "என் சிலை சேதமடையலாம். என் சித்தாந்தம் சேதம் அடையலாமா? நிற வெறியும், மத வெறியும், ஜாதி வெறியும் நீங்கவேண்டும். நிறத்தில் என்ன இருக்கிறது. மனத்தில்தானே தூய்மையும் உண்மையும் வேண்டும். எண்ணிப் பாருங்கள். சகோதரர்களாக இணைந்து செயல்படுங்கள்' என்று போதித்தார்.
 ஆபிரகாம் லிங்கனும், ஜான் எஃப். கென்னடியும் அதிபர்களாகத் தடம் பதித்த மண் அமெரிக்கா. அண்ணல் காந்தியடிகளை ஆராதித்த ஐன்ஸ்டீன் வாழ்ந்த புண்ணிய பூமி அது.
 அண்ணல் காந்தியடிகளைத் தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட மார்ட்டின் லூதர் கிங், "எனக்கும் ஒரு கனவு உண்டு. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அனைத்து உரிமைகளும் வாய்ப்புகளும் பெற வேண்டும். பேதங்கள் மறைய வேண்டும். எல்லோரும் இணைந்து சமமாக வாழவேண்டும்" என்றார். அவரின் கனவு நனவாக வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com