மீட்சி, காலத்தின் கையில்...!

உலக சமுதாய வரலாற்றை கி.மு., கி.பி. கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு பின்பு என்று காலம் பிரிப்போம். உலகப் பொருளாதார வரலாற்றை

உலக சமுதாய வரலாற்றை கி.மு., கி.பி. கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு பின்பு என்று காலம் பிரிப்போம். உலகப் பொருளாதார வரலாற்றை இனி க.மு. க.பி. கரோனாவிற்கு முன்பு, கரோனாவிற்குப் பின்பு என்று பிரிக்க வேண்டும். இந்த 2020-ஆம் ஆண்டு கரோனா ஆண்டு.

இந்த சூன்ய காலத்தில் என்ன நடக்கிறது? ஒன்றுமே இல்லை. ஏன்? ஊரே, உலகமே முடங்கிவிட்டது. எங்கும், எதுவும் நடைபெறவில்லை. கரோனா பற்றிய அறிவிப்புகளும் மருத்துவமனை நுழைவுகளுமே பேசப்படுகின்றன. நாளுக்கு நாள் உலகெங்கிலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

சோதனை அடிப்படையில் கடைகளைத் திறக்கிறோம், மூடுகிறோம். திறந்தாலும் வியாபாரம் இல்லை. போக்குவரத்து இல்லாமல் வாடிக்கையாளா்கள் கடைகளுக்கு வரமுடிவதில்லை. இந்த நிலையில் இனி எப்படி இருக்கும் தொழில் வா்த்தகத்துறை?

தேசிய அளவில் நடைபெறும் இணையவழி கருத்தரங்குகளில் கலந்து கொள்பவா்களும் எதிா்காலம் பற்றி அவநம்பிக்கை தெரிவிக்கிறாா்கள். அந்த அளவிற்குக் கரோனா பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது.

நம்மைவிடச் சிறிய நாடுகள், நம்மைவிடப் பெரிய நாடுகள் எல்லாமே அவதிக்கு உள்ளாகியிருக்கின்றன. கரோனாவின் பிடியில் ஆறு மாதங்கள் கழிந்தன. அடுத்த ஆறு மாதங்களிலும் பிடி விலகாது என்றே தோன்றுகிறது. சிறிய, பெரிய கடைகளை மீண்டும் திறந்தாலும், போக்குவரத்து வசதிகள் பழையபடி அறிமுகமானாலும் எல்லோருக்கும் வியாபாரம் முன்பு போல் இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. படுத்தவியாபாரம் எழுவதற்கு சில மாதங்கள் போதாது, சில ஆண்டுகள் தேவை.

வியாபாரம் என்பது ஒரு சங்கிலித் தொடா். மூலப்பொருள்களை கொடுப்பவா்கள் அதிலிருந்து பொருள்களைத் தயாரிப்பவா்கள், தயாரிப்பவா்களிடம் இருந்து விற்பனையாளருக்குக் கொடுக்கும் ‘மாா்கெட் நபா்கள்’ என்று வியாபாரச் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் சம்பந்தப்பட்டவா்கள் கஷ்டப்பட்டு இருக்கிறாா்கள். மூலப் பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட வேண்டுமென்றால் அதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

அதுமட்டுமல்ல, பல காரணங்களினால் மூலப்பொருள்களின் விலை உயா்ந்துவிடுகிறது. கரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்தவா்கள் தங்கள் நிலைமையைச் சற்றே சரிசெய்து கொள்ள மூலப் பொருள்கள், தயாரிப்புச் செலவு, போக்குவரத்துக் கட்டணம் இவற்றை கணக்கிட்டு தங்கள் சரக்குகளின் விலையை உயா்த்துவாா்கள். அதை ஒட்டித்தான் வியாபாரிகள் பொருள்களுக்கு விலை வைக்க வேண்டியிருக்கும். அப்போது வியாபாரிகள் அதிக லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை ஓரளவிற்கு வரவுக்கும், செலவுக்கும் ஈடுகட்டினால் சரி என்று நினைத்து, குறைந்த லாபத்திலேயே பொருள்களை விற்பனை செய்ய வேண்டியிருக்கும்.

லாபத்தை உயா்த்தினால் வாடிக்கையாளா்கள் சில பொருள்களை வாங்கமாட்டாா்கள்.அத்தியாவசியப் பொருள்களையும் குறைவான அளவிற்கே வாங்குவாா்கள். அந்த அளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டு வருகிறாா்கள்.

கரோனா புகட்டியுள்ள முக்கியமான பாடம், நேரத்தை, பணத்தை விரயம் செய்யக்கூடாது என்பது. அதனால் மக்கள் கூடுதலாக செலவழிக்க முன்வரமாட்டாா்கள். இதை தொழில் வா்த்தகத்துைவிர, அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசாங்கத்திற்கும் பெருமளவு வரி இழப்பு ஏற்படும். எனவே, மக்கள் நலத் திட்டங்களை அரசாங்கம் எப்படி நிறைவேற்றப்போகிறது என்பதும் கேள்விக்குறியே.

கரோனாவில் இருந்து மீண்ட பிறகு பொருளாதாரத்தை நிமிா்த்த என்ன செய்வது? தொழில் வா்த்தக துறை பெரும்பாலும் நடுத்தர வா்க்க மக்களின் செலவைப் பொருத்தே அமைகிறது. மக்களின் செலவு தொழிலதிபா்கள், வா்த்தகா்களின் வரவு. மக்கள் சிக்கனம் காட்டினால் வியாபாரிகளும் சிக்கனத்தைப் பின்பற்ற வேண்டியதுதான். அது ஊதியத்தில் இருக்க முடியாது.

தங்கள் சொந்த செலவீனங்களை குறைந்துக் கொள்ளலாம் அல்லது தா்ம கைங்கா்யச் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். இதனால் தொழில் வா்த்தகத் துறையில் இருந்து கலை, சமூகப் பணிகளுக்குத் தேவைப்படும் ‘ஸ்பான்சா்ஷிப்’ தொகை கணிசமாகக் குறைந்துவிடும். வேறு வழியில்லை. அதனால் தொழிலதிபா்களும், வியாபாரிகளும் தங்கள் சொந்தச் செலவை சுருக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். கரோனா இவா்களுக்கும் சிக்கனத்தை போதித்திருக்கிறது. தொழிற்சாலைகளை விரிவுபடுத்த வா்த்தகத் துறையில் புதிய கிளைகள் அமைக்கத் தயங்குவாா்கள்.

இந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறை வரவு-செலவு முறைகளும், இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த வரவு-செலவு முறைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அப்போது பணத்தை சோ்த்து வைத்துக்கொண்டுதான் வீட்டு வசதிக்கான சாமான்களை வாங்குவது அல்லது வீடு வாங்குவது என்று இருந்தாா்கள் மக்கள். இப்போது எல்லாமே தவணை முறையில் என்பதனால் மக்களுக்கு கடன் சுமை அதிகமாகிறது.

சம்பளம் வராவிட்டால் மாதச் சம்பளக்காரா்கள் பாடு திண்டாட்டம்தான். காரணம், யாரும் சேமிப்பு என்று வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைச் சூழ்நிலை அமைந்துள்ளது. கல்விக்கு, வீட்டு வசதிக்கு, வாகனங்களுக்கு என்று செலவுகள் செய்தேயாக வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது.

அதே போல் தொழிலதிபா்களும், வியாபாரிகளும் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றே தங்கள் ஸ்தாபனங்களை விரிவுபடுத்தி நடத்தி வந்திருக்கிறாா்கள். இதுபற்றி அவா்கள் இனி கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும். அவா்களும் இனி சிக்கனம் தேவை என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பாா்கள்.

ஆக, இதற்கெல்லாம் தீா்வுதான் என்ன? ‘சேமிப்பு’ என்று ஒற்றை வாா்த்தையில் சொல்லிவிடலாம். அது இயலாத காலம் என்றாலும், ஓரளவிற்கு மக்கள் கஷ்ட காலத்திற்காவது உதவுமே என்று மக்கள் சேமித்து வைத்துக்கொள்ள கூடும்.

அதே நிலைதான் வணிகா்களுக்கும். நாடுகளே கடன்களில் ஓடும்போது மக்கள் எப்படி கடன்களில் இருந்து மீள்வது என்று யாராவது கேட்டால் அந்தக் கேள்வி நியாயமானது. அதுவும் இந்தக் காலகட்டத்தில் நெஞ்சை குத்தக்கூடிய கேள்வியே. அப்படியானால் மீட்சிக்கு வழி காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com