நான் யார் தெரியுமா?

தாழ்வு மனப்பான்மை (இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அது அவனை மட்டும் பாதிக்கும். ஆனால், உயர்வு மனப்பான்மை (சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால், அதனால்


இந்தியாவின் அதிகார கேந்திரங்களில் ஒன்றான தில்லியின்  வடக்கு வளாகக் கட்டடத்தில் (நார்த் ப்ளாக்) சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.

அதிகாரமுள்ள பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். எப்போதும் நின்று கொண்டே பணியாற்றுகிற மின்தூக்கி இயக்கும் ஊழியர் அன்று உட்கார்ந்து கொண்டே இயக்கினார். அந்த ஓய்வு பெற்ற அதிகாரி, அந்த ஊழியரிடம் "நீ நலமா?' என்று கேட்டதற்கு எந்தச் சலனமும் இல்லாமல் "ஆம்' என்று மட்டும் பதிலளித்தார்.

 அவரை வழியனுப்பிவிட்டு திரும்பி வந்து மின்தூக்கி மூலம் மேல்தளத்துக்குச்  செல்லும்போது அந்த ஊழியர் சொன்னார், "ஐயா நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்; உங்களோடு வந்தவர் மூன்று ஆண்டுகளாக இங்கே பதவியில் இருந்தபோது தினமும் அவருக்கு "வணக்கம்' சொல்வேன்; ஒருநாள்கூட என்னை அவர் ஒரு பொருட்டாக நினைத்துப் பதிலுக்குப் புன்னகைத்ததுகூட கிடையாது; ஆனாலும், நான் வணக்கம் சொல்வதை நிறுத்தியதில்லை. அது அவர் வகித்த பதவிக்காக நான் கொடுத்த மரியாதை; இன்று ஒரு தனி மனிதராக அவருக்கு மரியாதை செய்யத் தோன்றவில்லை; அதனால் நான் நிற்காமல் அமர்ந்து கொண்டேன்' என்றார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்பித்துவிட்டுச் செல்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்வும் ஒரு பாடத்தை உணர்த்தியிருக்கிறது. எந்த நிலையில் இருந்தாலும், ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் "கர்வம்' (ஈகோ) ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதும், வாய்ப்பு கிடைக்கும்போது அது வெளிப்பட்டு விடுகிறது என்பதும்தான் நிதர்சனம்.

பரந்து விரிந்த இந்த அண்ட சராசரத்தில் நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டிருக்கும் இடம் (ஆக்குப்பைடு ஸ்பேஸ்) என்பது மிகச் சிறியது.  அதுவும்கூட நமக்கு நிரந்தரமானது அல்ல. ஆனாலும், "நான் பெரியவன்' என்று ஒவ்வொருவர் மனதிலும் புதைந்து கிடைக்கும் கர்வம்தான் பல பிரச்னைகளுக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.  

இந்தியாவில் பொது முடக்கம் தொடங்கிய பிறகு மார்ச் 23 முதல் ஏப்ரல் 16 வரையிலான 25 நாள்களில் குடும்ப வன்முறை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் 239  குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும்; இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 25 நாள்களில் பதிவான 123 குற்றங்களோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ இரண்டு மடங்காகப் பெருகியிருப்பதாகவும் "தேசிய மகளிர் ஆணையம்' வெளியிட்ட செய்தி, குடும்பங்களில் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

சர்வேதேச அளவிலும் பொது முடக்க காலத்தில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றாக அமர்ந்து பேசினால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்றிருந்த நிலை மாறி, பேசினால் பிரச்னைகள் அதிகரிக்கும் என்ற நிலை உருவாக என்ன காரணம்? சகிப்புத் தன்மை குறைந்து "நான்' என்ற கர்வம் பெருகி விட்டதுதானே!

குடும்பத்துக்கு அப்பாற்பட்டு, சமுதாயத்தில் நிலவும் "கர்வம்' பல மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. மாறுபட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதலிக்கும்போது தலைதூக்கும் கர்வத்தால் இந்தச் சமுதாயம் தொடர்ந்து சந்தித்து வரும் அவலங்கள் சொல்லி மாளாது. "நான் பெரியவன்', "என் ஜாதி பெரியது' என்ற எண்ணங்களால் விலைமதிப்பில்லா உயிர்கள் பலியாகிற  கொடுமையைத் தொலைகாட்சிகளில் பார்க்கும்போது, இதயம் நொறுங்குகிறது.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் முதல் சாத்தான்குளம் வரை சாமானியர்களின் உயிர்களைத் துச்சமென நினைக்கின்ற சில காவலர்களின் மனதில் புதைந்திருக்கின்ற "என்னிடம் அதிகாரம் இருக்கிறது' என்ற கர்வம் எந்த வகையில் நியாயம்?

தாழ்வு மனப்பான்மை (இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அது அவனை மட்டும் பாதிக்கும். ஆனால், உயர்வு மனப்பான்மை (சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால், அதனால் ஏற்படும் அகந்தை ஒரு சமுதாயத்தையே பாதித்து விடும்.    

அரசு இயந்திரம் சுமுகமாக இயங்க வேண்டுமானால், மக்கள் பிரதிநிதிகளாகப் பதவி வகிக்கிற அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியம். "யார் பெரியவர்?' என்ற கர்வம் தலைதூக்குகிறபோதுதான் முட்டல்களும், மோதல்களும் உருவாகின்றன.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியில் தொடங்கி, பல ஆயிரம் பதவிகள் நாடு முழுவதும் இருக்கின்றன. அந்தப் பதவிகளில் இருப்பவர்கள் பொது இடங்களிலும், விழாக்களிலும்  தாங்கள் சிறப்புக் கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு பலமுறை சச்சரவுகளுக்கு வழி வகுத்து விடுகிறது.  

அதுபோல, ஒரு மாவட்டத்தின் நிர்வாகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால், அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவரான இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரியும், மாவட்டக் கண்காணிப்பாளரான இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரியும் "ஈகோ'வைத் துறந்து, பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

எந்தவோர் அலுவலகத்திலும் அலுவலக உதவியாளர் (ஆபீஸ் அசிஸ்டன்ட்) முதல் உயர் நிலை அதிகாரி வரை ஒவ்வொருவருமே அவரவர் நிலையில் முக்கியமானவர்தான் என்ற புரிதல் வேண்டும்.  

ஒருமுறை மிகக் குறைவான அளவில் தமிழர்கள் வாழ்கின்ற ஒரு குட்டித் தீவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். அவசரமாக மேடைக்கு வந்த அந்த அமைப்பின் தலைவர், "எங்களில் யாருடைய பெயரையும் மேடையில் சொல்ல வேண்டாம்' என்று அன்புக் கட்டளையிட்டார். காரணம் கேட்டபோது, "முக்கியமான யார் பெயராவது விடுபட்டுப்போனால், அது பெரிய "ஈகோ' பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் அமைப்பின் பெயரை மட்டும் சொல்லுங்கள்' என்று அவர் விளக்கியபோது எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் அம்புகளால் பலமாகத் தாக்கப்பட்டு, தேர்ச் சக்கரத்தில் கர்ணன் சாய்ந்திருக்கிறான்; செய்திருக்கிற புண்ணியத்தால் உடலை விட்டு உயிர் அகலாமல் ஊசலாடுகிறது; கிருஷ்ண பரமாத்மா அந்தப் புண்ணியத்தைத் தாரை வாங்கிக் கொண்டு, கர்ணனிடம், "உனக்கு என்ன வேண்டும் கேள்?' என்று கேட்க, எதிரே நிற்பது அண்ட சராசரத்தையும் ஆளும் பரந்தாமன் என்பதை அறியாத கர்ணன் "நான் கொடுத்துதான் பழக்கப்பட்டவன்; வாங்கிப் பழக்கப்பட்டவன் அல்ல' என்று சொன்னதும்கூட ஒரு வகையில் கர்வம்தானே!

தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக காமராஜர் இருந்தபோது, அவர் வீட்டில் இருக்கும் நேரத்தில் யார் வந்தாலும் சந்திக்க முடியுமாம். தவிர, மாலை நேரங்களில் ஓய்வாக இருந்தால் காலணாவுக்குக் கடலை வாங்கிக் கொண்டு, கனாட் பிளேஸ் பூங்காவுக்கு நண்பர்களோடு நடந்தே செல்வாராம். தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர் என்ற எண்ணம் அவரின் (காமராஜர்) தலையில் ஏறாத காரணத்தால்தான், அவர் முதலமைச்சராக இருந்தபோது, தனது கட்சிக்காரரின் வேண்டுகோளுக்கு அடிபணியாமல் தனது கடமையைச் செய்த ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரை (திருநெல்வேலியில்) அவரது வீடு தேடிச் சென்று பாராட்ட முடிந்தது.

தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா ஒரு முறை சில பாதுகாவலர்களுடன் ஓர்உணவகத்துக்கு உணவருந்தச் சென்றார். அங்கே ஒரு மேஜையில் தனியாக ஒருவர் அமர்ந்திருக்க, "அவரை நம்மோடு வந்து அமர்ந்து உணவருந்தச் சொல்லுங்கள்' என்கிறார் மண்டேலா. அவரும் வந்து இவர்களோடு அமர்ந்து உணவருந்தி விட்டுச் சென்று விட்டார்.

பாதுகாவலர் ஒருவர் மண்டேலாவிடம், "அந்த மனிதர் பாவம்; அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன; உடல் நிலை சரியில்லாதவர் போலும்' என்று சொல்ல, மண்டேலா சிரித்துக்கொண்டே, "அவர் உடல் நலத்தோடுதான் இருக்கிறார். நான் சிறைச்சாலையில் இருந்தபோது என்னை அதிகமாகச் சித்திரவதை செய்தவர் இவர்தான். எனவே, நான் இப்போது குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால், தனக்கு ஏதும் ஆபத்து வருமோ என்ற பயத்தில் அவரது கைகள் நடுங்குகின்றன; ஆனால், பழி வாங்கும் உணர்வு என்னிடம் கிடையாது. சகிப்புத்தன்மைதான் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் என்று நம்புகிறவன் நான்' என்று சொல்லி முடிக்க, உடன் வந்தவர்கள் உறைந்து போனார்களாம். 

எளிமையில் மகாத்மா காந்தியடிகளின் உண்மையான வாரிசாக இருந்த நெல்சன் மண்டேலாவிடம்  கர்வம் என்பது எள்ளளவும் இருந்ததில்லை.

எந்தப் பதவியும் யாருக்கும் நிரந்தரமானதல்ல. வாழ்க்கையே நிரந்தரம் இல்லை என்கிறபோது, பதவிகள் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? எனவே, பதவிகளில் இருக்கும்போது கிடைக்கிற மரியாதைகளையும், சலுகைகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால், பதவி விலகிய பிறகு மனதில் சஞ்சலமோ, மன அழுத்தமோ ஏற்படாது.  

ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும், "நான் யார் தெரியுமா?' என்ற மன நிலையிலிருந்து மாறி, "நானும் மற்றவர்களைப் போலத்தான்' என்ற எதார்த்த நிலைக்கு வந்துவிட்டால்... உலகத்தில் பல துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

கட்டுரையாளர்: மத்திய அரசு உயர் அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com