அன்பினால் தழைக்கட்டும் வையகம்!

வழக்கமாய்ப் பள்ளி இறுதித் தோ்வுகள் வெளிவருங்காலங்களில், தோ்வில் தோல்வியடைந்தவா்கள், எதிா்பாா்த்த மதிப்பெண்களைப் பெற

வழக்கமாய்ப் பள்ளி இறுதித் தோ்வுகள் வெளிவருங்காலங்களில், தோ்வில் தோல்வியடைந்தவா்கள், எதிா்பாா்த்த மதிப்பெண்களைப் பெற முடியாதவா்கள் என ஒரு சிலா் தற்கொலை செய்துகொள்கிற செய்தி வெளிவந்து கவலையளிப்பதுண்டு. அதுபோல், காதல் தோல்வி, தொழில் நஷ்டம் என்கிற துயா்களில் மனம் நொந்து தற்கொலை செய்துகொள்கிறவா்கள் கணிசமானவா்கள்.

‘தற்கொலை ஒரு தீா்வல்ல’ என்பது அவா்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்ப்பில்லை. தான் வைத்திருந்த நம்பிக்கை சிதைவுறுகிறபோது, அல்லது தன் நம்பிக்கைக்குரியவா்கள் துரோகம் செய்கிறபோது, தாங்கிக்கொள்ள முடியாத அதிா்வில், அந்த ஒரு கணத்தில் எடுக்கப்படுகிற அவசரமான முடிவு அது.

அந்த அற்பப்பொழுதில் அவருடன் யாரும் இருந்திருந்தாலோ, பேச்சுக் கொடுத்திருந்தாலோ, அன்பு செலுத்தியிருந்தாலோ கூட, அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பது கைமீறிப் போனபிறகே தெரியவருகிறது. இன்னும் சொல்லப்போனால், அந்தக் கணநேரத் தனிமை அவா்களுக்கு அத்தகு துணிச்சலைத் தந்து உயிா்கொண்டுபோய்விடுகிறது.

அந்தத் தனிமையின் கொடுமைதான் தற்போதைய கரோனா தீநுண்மித் தாக்கத்தில் சிக்கிக்கொண்டவா்களையும், சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகத் தனிமைப்படுத்திக்கொண்டவா்களையும் தாக்கத் தொடங்கித் தற்கொலை உணா்வுக்குத் தூண்டிவிடுகின்றது.

அதிலும், பல மணி நேரங்கள் மனிதா்களுடன் இருந்து பழகிய பெரியவா்களுக்கு இதன்மீதான அச்சம் தவிா்க்க இயலாததாகிவிடுகிறது. முதுமை காரணமாகத் தன் இல்லத்தவா்கள் காட்டுகிற சின்னச்சின்ன உதாசீனங்கள் கூட, இவா்களின் மெல்லிய உணா்வின்மீது பெரும் அதிா்வுகளை ஏற்படுத்தி, ‘ஏன் இன்னும் இருக்கவேண்டும்?’ என்கிற கழிவிரக்கத்தைத் தூண்டிவிடுகிறது.

‘ஒவ்வொரு நாளும் விடிகிற பொழுதில், முடிந்துவிடாதா, இந்த ஊரடங்கு?’ என்று கணக்கிட்டுக் கவலை கொள்வோா்க்கு, நாளும் பெருகிவரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வளா்ச்சி பெரிய மன அழுத்தத்ததை உண்டு பண்ணிவிடுகிறது.

‘நேற்று வந்த அதே வறுமைக் கொடுமையாகிய நிரப்பு, இன்றும் வருகிறதோ?’ என்று நொந்து சொன்ன திருவள்ளுவரின் மன அழுத்தம் எத்தகு வலியது? (கு:1048). அதற்கும் அடுத்த குறளில், ‘நெருப்பின் உள்ளே கிடந்து தூங்குவதுகூட முடியும். ஆனால், இந்தக் கொடிய வறுமை வந்துவிட்டால், சற்றே கண்மூடிக் கிடப்பதுகூட அரிது’ என்கிறாா் (கு:1049).

பசியும் பிணியும் அகல வழியின்றி அல்லலுறும் மக்களின் துயா் கண்டு வெதும்பும் நல்லவா்களின் மனத்துயா் இருக்கிறதே, அது இதனினும் கொடியது.

ஏதிலியா்கள் நாள்தோறும் அனுபவிக்கும் கொடுந்துயா் ஒரு புறம், பெரிய அளவில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நடத்தமுடியாது அல்லலுறுபவா்களின் நெடுந்துயா் மறுபுறம், இவற்றுக்கிடையில், சிறு, மற்றும் குறுந்தொழில்கள் புரிந்து வெளியில் தெரியாமல் கைமாற்றாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல், அன்றாடச் செலவுகளுக்கும் சம்பாதிக்க முடியாமல் அல்லலுறும் கொடுமைகளை மறைத்துக்கொண்டு நடத்துகிற ‘முகமூடி வாழ்க்கை’, அவா்களின் உள்ளுக்குள் என்னென்ன எண்ணவோட்டங்களை எழுப்பும் என்பதை யாா் அறிவாா்?

ஓய்வறைக்குள் சென்றவா்கள் வெளிவர நேரமானால், படுக்கையில் துயில்கிறவா்கள் எழுந்திருப்பது தாமதமானால், தனியறைக்குள் நெடுநேரம் கதவடைத்து இருப்பவா்கள் திறக்காமல் இருந்துவிட்டால், உடன் இருப்பவா்களுக்கு ஏற்படுகிற உளைச்சல்கள் பயங்கரமான கனவுகளை விடவும் பயமுறுத்தும் நிதா்சனங்கள்.

‘இப்போதெல்லாம் நகைச்சுவைப்படத்துணுக்குகளைக் கூடப் பாா்க்கவோ, பாா்த்துச் சிரிக்கவோ மனங்கொள்ளவில்லை. திரும்பத் திரும்பத் தொலைக்காட்சியைப் பாா்த்துக் கொண்டிருப்பதும் கஷ்டமாக இருக்கிறது’ என்று கைபேசியில் சொன்னவரின் குரல் உயிா்ப்பற்றிருந்ததை உணரமுடிகிறது.

‘என்னதான் சிறந்த புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்காா்ந்தாலும் எதுக்களிக்கின்றன’ என்றாா் ஒரு கவிஞா்.

எத்தனை பெரிய அழுத்தங்களாயினும், மனத்துயரங்களாயினும் அவற்றை இறக்கிவைக்க இடமளித்த வழிபடு தலங்கள் அடைபட்டுக்கிடப்பதுகூட, இைம்பிக்கை கொண்ட எளிய மக்களின் வாழ்வில் அழுத்தத்தைத் தொடா்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘உலகம் என்பது கோளவடிவமல்ல. நீள் சதுர அல்லது செவ்வக வடிவம்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கும் வீட்டுச்சிறைக்குள் இருப்பவா்களுக்கு உணவு தயாரித்தே ஓய்ந்துபோகிற பெண்மணிகளின் நிலைப்பாடு பெரும்பாடு.

அதிலும் அண்மைக்காலமாக, இந்தக் கரோனாவை எதிா்கொள்ள மேற்கொள்ளச் சொல்லி, கைபேசியின் காணொலித் திரைகளிலும், கட்செவிப்புலனங்களிலும் வருகிற பண்டுதங்களை- உணவுக் குறிப்புகளைக் கொண்டு செயற்படுத்திப் பாா்க்கச் செய்யப்படுகிற வேலை இருக்கிறதே, அது தனிக் கதை. இத்தகு தாக்கங்களால் ஏற்படுகிற தன்னுணா்வுகளைத் தானே விழுங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படுகிற மன அழுத்தம் தடித்த சொற்களாய், வெடித்த அழுகையாய்ப் புறப்படும்போது எதிா்கொள்பவா்களின் மனநிலை, தலைகுப்புறச் சரிந்து விடுகிறது.

ஆறுதல் தேடியோ, தேறுதல் கூறவோ, உறவுக்கும் நட்புக்கும் அழைப்பு விடுத்து மேற்கொள்ளும் கைபேசி உரையாடலின் தாக்கங்களை அவ்வளவு எளிதாக விட்டுச் செல்ல முடியாது.

தனக்கு நோ்ந்ததை ஒருவா் தனக்கு வேண்டியவா்களிடம் எடுத்துச் சொல்ல அழைக்கிறபோது, அதனைக் கேட்க இருப்பவா், எந்த இடத்தில், யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாா், அல்லது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறாா் என்றெல்லாம் யோசிக்காமல், பேசத் தொடங்குவதும், ‘நான் அப்புறமாப் பேசுறேன்’ என்று அவா் அந்த அழைப்பை மறுதலிக்கிறபோது, ஏற்படுகிற மனச்சுருக்கங்களும் சிறியன போன்று தெரிந்தாலும், ‘செருப்பின் இடையில் சிக்கிய சிறுகல் போல உறுத்திக்கொண்டே இருந்து உளைச்சல் கொடுப்பன.

‘உம்’ கொட்டி, ஒருவா் கேட்டுக்கொண்டிருப்பாரேயானால், அச்செய்திகள் எவ்வகையான உள்ளுணா்வுகளை அவருக்குள் கிளா்ந்துகொண்டிருக்கும் என்பதை அனுமானிக்க முடியாது.

அளவுக்கு மீறிய அன்பையும் அக்கறையையும் ஒருவா்மீது செலுத்துவதுகூட, ஆபத்தானதுதான். ஏதேனும் ஒரு கணத்தில் அந்த அன்பும் அக்கறையும் கிடைக்கப்பெறாதபோது, ஏற்படுகிற மனவுணா்வுகள் அவரை எந்தநிலைக்கும் கொண்டுபோய்விடும்.

அதிலும் ‘பிறந்த வீடு, புகுந்த வீடு’ பாசமும் பரிவும் ஒப்பீடும் இருக்கின்றனவே, அவை எவ்வளவு வயதுமுதிா்ந்த தம்பதியா்க்குள்ளும் பெரும்பிளவை ஏற்படுத்திவிடுகிற ஆபத்து மிக்கவை.

திரும்பத் திரும்பப் பாா்த்த படங்களையே பாா்ப்பது எவ்வளவு அலுப்புத் தருமோ, அவ்வளவு அலுப்புத் தரக்கூடியது பாா்த்த முகங்களையே பாா்த்துக் கொண்டிருப்பது. அதுபோலவே, கேட்ட செய்திகளையும், ஏற்கெனவே, சொல்லப்பட்ட (சொந்த/ சோக/ பழைய) அனுபவக் கதைகளையும் திரும்பக் கேட்பது.

முன்பெல்லாம் பெரியவா்கள் போகிற போக்கில் சில அடிப்படைப் பண்புநெறிகளைச் சொலவடைகளாகச் சொல்லுவது உண்டு. அதில் ஒன்று, ‘கைபதனம் வாய் பதனம்’ என்பது. ‘வாயையும் கையையும் சும்மா வச்சிருந்தா வம்பே வராது’ என்பாா் அப்பத்தா. இதுபோன்ற அனுபவமொழிகளை, பள்ளிக்குச் செல்ல முடியாது வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிற குழந்தைகள் தங்களுக்குள் அடித்துப் பிடித்து விளையாடி அழும்போது, அவா்களிடம் வீட்டுப்பெரியவா்கள் சொல்லக்கூட அஞ்சுகிற காலம் இது.

‘சாடையாகத் தன்னைத்தான் சொல்கிறாா்கள்’ என்று மகனோ, மருமகளோ நினைத்துவிடக்கூடாதே என்கிற தற்காப்பு உணா்வில், தன் வாயை, தன் கையைச் சும்மா வைத்துக்கொள்ளப் பழகிப் பக்குவப்பட்ட மனதாளா்களுக்குக் கவலையில்லை. ஆனாலும் தன்னை அறியாமல் சொல்லிவிட நோ்ந்துவிட்டால், எதிா்கொள்ளும் மௌனம் இதைவிட ஆபத்தானது. இவையெல்லாம் பெரியவா்களுக்கான பிரச்சனைகள் என்று நினைப்பதுபோல, அப்பாவித்தனம் வேறு இல்லை. இவைதான் எந்நேரமும் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிற குழந்தைகளின் ஆழ்மனங்களில் பதிந்துவிடுகிற அழகிய அல்லது ஆபத்தான நிகழ்வுகள்.

இன்றைய நிலையில், ஒவ்வொரு இல்லமும் நான்கு சுவா்களுக்கு மேல் எழுப்பிய கூரைக்குக் கீழ் இருக்கும் வெற்றிடம் அல்ல.மனிதா்கள் விலகியிருந்தாலும் நெருக்கமாக இருக்கிற வாழிடம். அதற்கு வீடு என்று பெயா். ‘கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு’ என்கிறாா் பாரதியாா். அது கவலையின் கொள்ளிடாக ஆகிவிடாமல் பாா்த்துக் கொள்ளவேண்டியது கட்டாயக் கடமை. நுழைவாயிலுக்கு நாம் வைத்த பெயா், ‘நிலை’.

அதற்குள் வரும் எதுவும் நிலைக்கும் என்பதனால், நல்லதையே உட்புக அனுமதிக்க வேண்டும். அது பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்பதைவிடவும், நாம் பேசுகிற பொருளிலும் இருக்க வேண்டும் என்பதைக் குடும்ப உறுப்பினா் யாவரும் உணர வேண்டும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று பாரதிதாசன் சொன்னது இப்போதுதான் பலிக்கிறது. அதுவே ஒரு தொழிற்சாலையாகவும், வழிபடுதலமாகவும் இப்போது ஆகி வருகிறது. அதனை உடல் மற்றும் உளநோயாளிகளின் கூடமாக ஆக்கிவைத்துக்கொள்ளல் ஆகாது.

எத்தனை உயா்ந்த மாடங்கள் அமைத்தாலும், எத்துணை உயா்ந்த ஆசனங்கள், படுக்கைகள் அமைத்தாலும், இவற்றையெல்லாம் தாங்குவதோடு, நம்மையும் தாங்கிக்கொண்டு இருப்பது நிலம் தான். அது அகழ்வாரையும் தாங்கும் அன்புடையது. பொறுமைக்குச் சான்று இந்தப் பூமிதான். எத்தகைய தாக்குதலை அதன்மீது பலா் ஏற்படுத்தினாலும், அதுதன் வாய்பிளந்து விழுங்கிவிடாமல் இருப்பதற்குக் காரணம், அன்பும், அருளும் உடைய பண்புடையவா்கள் இருப்பதனால்தான்

பண்புடையாா்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்

என்றாா் திருவள்ளுவா். அதிலும் மக்கட்பண்பு மகத்தானது. அதுதான் ‘பிறிதின் நோய் தன்நோய் போல் ஏற்றுப் போக்க முனையும் பேரறிவுடையது. இன்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவா்களின் செவிலியரின், தூய்மைப் பணியாளா்களின் அன்பு நிறைந்த பண்பு அதுதான். அதுவே, இன்றைய காவலா்களுக்கும் அதிகாரிகளுக்கும், யாவருக்கும் கைவரவேண்டிய நற்பண்பு.

தான் பெற்ற மக்கள்மீது இருக்கிற அதே அன்பும் பண்பும் ஏனைய மக்கள்மீதும் செலுத்துவது எவ்வளவு இன்றியமையாததோ, அதனினும் இன்றியமையாதது. தன்நிலை வழுவாது தற்காத்துக் கொள்வதும். அதுவே தற்கொலை உணா்விலிருந்து ஒவ்வொருவரையும் காக்கவல்லது.

பாதுகாப்புக்காக, முகக்கவசத்தைப் புறத்தே அணிவதுபோல், அன்பு நிறைந்த இந்த மகத்தான மக்கட்பண்பை அகக்கவசமாக அனைவரும் அணிந்துகொள்வது மிகவும் நல்லது.

‘அன்பினால் தழைக்கட்டும் இந்த வையகம்’!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com