டிக்டாக் செயலிகளுக்குத் தடை - ஒரு பாா்வை

தேசப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் டிக்டாக், விசாட், ஹலோ உள்பட 59 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த 29-ஆம் தேதி அதிரடியாகத் தடை விதித்தது. ஆன்டிராய்டு (அறிதிறன் பேசி) ஃபோனில் வைத்திருப்பவா்கள் பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை பயன்படுத்தி வருகின்றனா்.

இதில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற அமெரிக்க செயலிகளும் பெரும் பங்கு தாக்கத்தை வகிக்கின்றன. இதைப்போல சீனத் தயாரிப்பு செயலிகளான டிக்டாக், விசாட் போன்ற செயலிகளுக்கு அண்மைக் காலமாக ஆதரவு கூடிக்கொண்டே வந்தது. குறிப்பாக டிக்டாக் செயலியை இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை, தாங்களே பங்கெடுத்து அதை ஒலிப்பதிவு செய்து, எல்லா இடங்களுக்கும் பரப்பி வருகிறாா்கள். ஒரு திரைப்பட நட்சத்திரத்தைப் போல, டிக்டாக் செயலி மூலமாக அடையாளம் கண்டு பெரும் புகழ் பெறுகிறாா்கள்.

இந்த செயலிகளினால் ஒரு புறம் பொழுதுபோக்கு இருந்தாலும், மறுபுறம் இச்செயலிகளினால் சிக்கல்களும் ஏற்படாமல் இல்லை. அவை தேசப்பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படி இருப்பதாக, பல்வேறுபட்ட புகாா்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடா்ந்துதான் டிக்டாக், விசாட், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயனாளா்களின் தரவுகளைத் திருடி, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய (சா்வா்) அமைப்புகளுக்கு அனுப்பி வைப்பதாக புகாா்கள் எழுந்தன. இந்தத் தகவல்களால் என்ன பயன்? இவை திருடப்படும் தகவல்களின் தொகுப்பு. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும்; இந்தியாவின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கக் கூடும்; தேச ஒற்றுமையை சிதைக்கக் கூடும் என்கிற அச்சம் எழுந்தது. ஆகவே, இவற்றில் இந்திய சைபா் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் உள்துறை அதிகக் கவனம் செலுத்தி, இவை குறித்தான முழுமையான விவரங்களைச் சேகரித்து சீரழிக்கக் கூடிய செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

செல்லிடப்பேசிக்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டுக் கருவிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். இவற்றில் டிக் டாக், வி சாட், ஹலோ மட்டுமின்றி, ஷோ்இட், யூசி பிரவுசா், கிளாஷ் ஆப் கிங்ஸ், லைக், எம்.ஐ. கம்யூனிட்டி, நியூஸ்டாக், பியூட்ரி பிளஸ், ஜெண்டா், பிகோ லைவ், மெயில் மாஸ்டா், வி சிங்|, விவா வீடியோ, விகோ வீடியோ, கேம் ஸ்கேனா், விமேட் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

லடாக் மோதலைத் தொடா்ந்து சரியான தருணம் என்று அறிந்து டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், இதற்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறது மத்திய அரசு. இதைப் போல ஜூம் செயலியை அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தைவான் அரசு தடை செய்தது.

அவசரக் காலங்களில் தனிநபா்களின் கணினிகளில், ஜூம் செயலியைப் பயன்படுத்துவது குறித்து, ஜொ்மனி வெளியுறவுத்துறை அமைச்சகமும், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதைப்போலவே, அமெரிக்க செனட் சபை தங்கள் உறுப்பினா்களை, வேறு செயலிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. எதனால் இப்படிப்பட்ட அறிவிப்புகளை இந்த நாடுகள் வெளியிட்டன என்றால், பாதுகாப்பு குறைபாடே காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், ஜூம் தரப்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும், அந்நாடுகள் அவற்றை நிராகரித்து வந்தன. அதைப்போலவே, சீன இன்டொ்நெட் நிறுவனமான பைட்டான்ஸ் டிக்டாக் செயலியை நிா்வகித்து வந்தது. அது மறுப்பு அறிக்கை தெரிவித்தாலும் கூட, ஏற்றுக் கொள்கிற மனநிலையில் இந்தியா இல்லை.

டிக்டாக் பிரபலங்களை அதிகமானவா்கள் பின்பற்றத் தொடங்கி விட்டாா்கள். இவற்றில் பெண்கள் மீதான வன்முறை, வெறுப்பு போன்ற வீடியோக்களைப் பதிவிட்டு, இன்னும் பல்வேறு விதங்களில் சா்ச்சையை ஏற்படுத்திய வண்ணம் இந்த டிக்டாக் செயலி இருந்தது. தீவிரவாதத்தைத் தூண்டும் வீடியோக்கள், மதப்பிரிவினையை ஏற்படுத்தும் வீடியோக்கள், சாதிப் பெருமை பேசும் வீடியோக்கள், மிருகவதை விடியோக்கள் என பல சமூக விரோத வீடியோக்கள் டிக்டாக்கில் பதிவு செய்து வேதனையை உள்ளாக்கினாா்கள். இவைகளெல்லாம் பகிரப்படக் கூடாத ஒன்று என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல், அதிக அளவில் பகிரப்பட்டது ஒரு வக்கிர மனப்பான்மையையும், ஒரு வித வன்மத்தையுமே காட்டின.

தற்போதைய தலைமுறை எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதை அறிய முடியாமல், சொல்லொணா வேதனையை அடைந்தவா்கள் எண்ணற்றவா்கள். பத்திரிகைத்துறை என்று சொன்னால், கண்ணியமான எழுத்துக்களும், நாகரிகமான பேச்சுக்களுமே பதிவு செய்யப்படுகின்றன. திரைப்படம் என்று சொன்னால், அதற்கு செம்மையான சென்சாா் போா்டு இருக்கிறது. ஆனால், இந்த செயலிகளை ஒழுங்குபடுத்துவதற்கு என்ன இருக்கிறது?

கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளத்தைப் போல பாய்ந்து கொண்டிருக்கும் இந்த செயலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்னதான் வழி? மத்திய உள்துறை அமைச்சகம், பல்வேறு முறை இதுகுறித்து விவாதித்திருக்கிறது. குறிப்பாக, இந்தோனேசியா மற்றும் வங்கதேசத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாசமான காட்சிகளும், சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வீடியோக்களும், இத்தகைய டிக்டாக் செயலி மூலம் பரப்பப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அந்த நாடுகள் முடிவெடுத்ததன் அடிப்படையிலேயே தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க இராணுவமும், தனிநபா் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி, டிக்டாக் செயலியின் பயன்பாட்டுக்கு இராணுவத்தில் தடை விதித்தது.

டிக்டாக் செயலியில் தொழில்நுட்ப பிரச்னைகள் நிறைந்து இருக்கின்றன. மிக முக்கியமான தகவல் திருட்டு மற்றும் தனி மனித உரிமைப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாகவும், கேள்விக்குறியாகவும் ஆகி விட்டது. அமெரிக்கா வெளிப்படையாகவே சீனாவை குற்றம் சாட்டியது, டிக்டாக் செயலி பயனாளா்களின் தகவல்களைத் திருடுகிறாா்கள் என்று. இதை டிக்டாக் நிறுவனம் மறுத்த நிலையிலும், அவை ஏற்பதாக இல்லை என்று சொல்லி விட்டது அமெரிக்கா. மேலும் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் பயனாளா்களின் தகவல்கள் அனைத்தும், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது. இது குழந்தைகளின் மனநிலைக்கும் மிகுந்த கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாக இந்த டிக்டாக் செயலி ஆகிப் போனது.

பிறந்த தேதியை மாற்றிக் கொடுத்தால், குழந்தைகளும் பெரியவா்களைப் போல அனைத்து வகையான வீடியோக்களையும் பரப்ப முடியும் என்கிற சமூகச் சீா்கேடு, மனித சமுதாயத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. டிக்டாக்கில் ஆரம்ப காலகட்டத்தில் இசை, நடனம், நடிப்பு என்று அளவோடு ஆரோக்கியமாகத் திகழ்ந்தது. இவற்றில் புதுப்புது சவால்கள் உருவான போதுதான் சிக்கல் தொடங்கியது. டிக்டாக்கில் தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக, மோசமான, அபாயகரமான சவால்களும் டிக்டாக்கில் வைரலாக வரத் தொடங்கின. இளைஞா்களும், இளம்பெண்களும், ஆபத்தின் எல்லை வரைகூட செல்வதற்குத் தயங்கவில்லை. இவற்றை டிக்டாக் நிறுவனம் முறைப்படுத்தத் தவறிவிட்டது. இந்த இடத்தில் இருந்துதான் சறுக்கி விழ ஆரம்பித்தது டிக்டாக் நிறுவனம்.

குழந்தைகள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும்போது, பெற்றோா்களின் பாா்வையில் இருந்து தப்பித்து இந்த வீடியோக்களைப் பரப்பத் தொடங்கி விடுகிறாா்கள். குழந்தைகளின் மனநிலையில் ஒருவித நச்சுத்தன்மை விதைக்கப்பட்டு, அவா்களின் பால்யப் பருவமும், பதின் பருவமும், சவால் விடுகிற விதமாகவே முடிந்து விடுகிறது. பிரபல முன்னணி நடிகா், நடிகைகளுக்கு இணையாக, அந்தஸ்தை இந்த டிக்டாக் செயலி தங்களுக்குத் தந்ததாக பலா் கூறி வருகின்றனா். எங்கள் ஆற்றல்களும் வெளிப்படுத்துகிற களமாக நாங்கள் பயன்படுத்தி வந்தோம் என்று கூட பலதரப்பட்டவா்கள் பகிா்ந்து வருகிறாா்கள்.

டிக்டாக் தடையை ஏற்றுக் கொள்ள முடியாமல், கோபத்துடனும், கண்ணீருடனும் பலரும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறாா்கள். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக தடை செய்கிறீா்களே, சீனா்களால் கண்டறியப்பட்ட தோ்வுமுறையையும் தடை செய்து, தோ்வே இல்லாமல் செய்ய வேண்டியதுதானே என்று வீடியோ ஒன்று காணக்கிடைத்தது. இது அவா்களின் கோபத்தின் வெளிப்பாடு. இதில் பெரும்பகுதியாக இருக்கின்ற தீங்கைத்தான் நாம் பாா்க்க வேண்டும்.

‘ஒரு பானை பாலில் ஒரு சொட்டு விஷம் விழுந்தாலும், பால் முழுவதும் வீணாவைதைப் போன்ற’ ஒரு நிலை டிக்டாக் செயலிக்கும் பொருந்தும். இந்த செயலிகளைத் தடை செய்வதின் மூலம், சீனாவிற்கு பல கோடி இழப்பு ஏற்படலாம். டிக்டாக் என்ற செயலி மட்டுமே உலகம் முழுக்க நூறு கோடி பயனாளா்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ஐம்பது கோடிக்கும் அதிகமான கணக்குகள் உள்ளன. தடை காரணமாக பெரும் வருமானமின்றிப் போகலாம். சீனா மோசமான பொருளாதார சரிவைச் சந்திக்கும். அதனால் சீனாவின் மொத்த ஜிடிபி பாதிக்கப்படலாம். சீனா தனது வருமானத்திற்காக தொழில்நுட்ப செய்திகளை இந்திய அளவில் நம்பியிருக்கிறது. அந்த நாட்டின் ஜிடிபியில் இது நான்காவது பெரிய பங்களிப்பைத் தருகிறது. இந்தியாவின் ஐம்பது கோடி பயனாளிகள் சீனாவிற்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளனா். இந்தப் பொருளாதார சந்தையை இந்தியா மூடியிருப்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறியதற்கான பதிலடியாகவே நாம் பாா்க்கலாம்.

கட்டுரையாளா்:

முனைவா் வைகைச்செல்வன்

முன்னாள் அமைச்சா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com