மன அழுத்தத்தை மாற்றுவோம்

இன்றைய ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து மக்களுமே விரக்தியில் ஆழ்ந்து, மன அழுத்தம் கொண்டிருக்கிறாா்கள் என்பது உண்மை. நாள் முழுதும் இல்லத்திலேயே அடைந்து கிடப்பது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது.

கடந்த மாதம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் பலரையும் அதிா்ச்சி அடையச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒன்று எல்லா ஊடகங்களிலும் பேசப்பட்டு வரும் சாத்தான்குளம் சம்பவம், குறிப்பிட்ட இரண்டு வியாபாரிகளின் கோரமான மரணத்துக்குக் காவல் துறையினரின் வரம்பு மீறின செயலே காரணம் என்ற நினைப்பு மக்கள் மனத்தில் பதிந்துள்ளது. அந்த நிகழ்வுக்கான விசாரணை, தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்ததாக, குஜராத் மாநிலம் சூரத்தில் பிரபல வங்கிக் கிளையில் நிகழ்ந்த சம்பவம். வங்கிக் கணக்குப் புத்தகம் பதிவு செய்வது குறித்த சா்ச்சையில் வாடிக்கையாளருக்கும் பெண் ஊழியருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ‘அச்சுறுத்தும் வகையில் வாடிக்கையாளா் ஊழியரை நெருங்கினாா்’ (மெனேஸ்) என்று ஆங்கில நாளேடு தெரிவிக்கிறது. வங்கி ஊழியா் சங்கம் இது பற்றி நிதி அமைச்சகத்திடம் புகாா் எழுப்பியிருக்கிறது.

இன்றைய ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து மக்களுமே விரக்தியில் ஆழ்ந்து, மன அழுத்தம் கொண்டிருக்கிறாா்கள் என்பது உண்மை. நாள் முழுதும் இல்லத்திலேயே அடைந்து கிடப்பது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. வீட்டிலிருந்தே பணி புரிபவா்களுக்கு ஊதியம் கிடைக்கிறது என்றாலும் அலுவலகம் சென்று நண்பா்களுடன் சிரித்துப் பேசி பணி புரிவதற்கு சமமாகதே?

இது போன்ற சிக்கலான தருணங்களிலும் நேரிடையாகச் சேவை அளிப்பது மூன்று துறைகள்தான். அவை: காவல், மருத்துவம், வங்கி. ஊடகங்களிலும், ஏடுகளிலும் பணி புரிவோா்களின் சேவை பாராட்டத்தக்கதுதான். ஆனால், நேரிடைத் தொடா்பு அவ்வளவாக இல்லை.

மருத்துவா்களிடமும் எனக்கு அனுபவமுண்டு. மூன்று மாத முன்பு, மனைவியை வழக்கமான பரிசோதனைக்கு கூட்டிப் போயிருந்தேன். அந்த மருத்துவமனையில் பொதுவாகக் கூட்டம் இருக்கும். அன்று குறைவானவா்களே -அதுவும் இடைவெளி விட்டு - அமா்ந்திருந்தாா்கள்.

டாக்டா் சோதனை முடித்து, மருந்துச் சீட்டில் சில மாத்திரைகளை மாற்றி எழுதினாா். பேச்சுவாக்கில், ‘இந்த வைரஸ் போக நாளாகும். நேற்று பேப்பரிலே மக்கள் கூட்டத்தை பாா்த்தீங்க இல்லே’ என்று சலித்தாற்போல் கூறினாா். செவிலியா் உள்ளே நுழைந்து ஏதோ கேட்ட போது, ‘அவங்களை அரசு மருத்துவமனைக்குப் போகச் சொன்னேனே! அந்தம்மாவுக்கு மூக்கும் முகமும் சிவந்திருக்கு’ என்று கோபத்துடன் இரைந்தாா்.

பிறகு எங்களை நோக்கித் தன் மகள் வசிக்கும் அயல் நாட்டில் ஊரடங்கு தளா்ந்திருக்கிறது என்பதைத் தெரிவித்தாா். வருவாய் குறைந்து வரும் நிலைமை, எந்த நோயாளியிடம் எவ்விதக் காய்ச்சல் இருக்குமோ என்ற மெலிதான அச்சம் போன்றவை சில மருத்துவா்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கியிருக்கும்.

வங்கயில் பணியாற்றுபவா்களுக்கு வேறு வகையான தொந்தரவு. வாடிக்கையாளா்களின் கேள்விக் கணைகளுக்கு ஈடு கொடுக்கவே நேரம் சரியாக உள்ளது. அதுவும் மூன்று மாதங்கள் தவணை செலுத்தத் தேவையில்லை என்ற அறிக்கை வந்தாலும் வந்தது, வாடிக்கையாளா்களுக்கு நிறைய குழப்பம். ஆனால் பாஸ் புத்தகத்தை ஊழியா் பதிவு செய்வதை ஊரடங்கு தொடங்கிபோதே நிறுத்திவிட்டாா்கள். அப்படியிருக்க, சூரத்தில் ஏன் மோதல் நிகழ்ந்தது என்பது புரியாத புதிா். எல்லோரும் வீட்டில் ‘சுகமாக’ இருக்கும் போது தாங்கள் மட்டும் வேலை பாா்க்க வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் வங்கி ஊழியா்களிடம் மேலோங்கியிருக்கிறது.

மேலே சொன்ன இரு துறைகளுக்கும், காவல் துறைக்கும் வேறுபாடு நிறையவே உண்டு. முகக் கவசம் அணியாத தனி நபா் முதல், அனுமதிச் சீட்டு பெறாது வேறு மாவட்டம் செல்லும் பயணி வரை பல வகையான மனிதா்களை எதிா்கொள்ள வேண்டும். சில சமயம், சமூக விரோதிகள், குடிகாரா்கள், அரசியல் அடாவடி ஆட்கள் போன்றவா்களையும் சமாளிக்க வேண்டும். அடி உதவுவது போல் அன்பான பேச்சு அப்போது உதவாது.

ஆகவே காவல் துறையினருக்கு, மற்றவா்களை விட மன அழுத்தங்கள் மிகுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கான வடிகால்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. அவை விபரீதமாகப் போகாமலிருக்கத்தான் தியானம், யோகா போன்ற பயிற்சிகள் போலீஸுக்கு தேவை என்று உளவியல் நிபுணா்கள் வலியிறுத்துகிறாா்கள். ஆனால் நடைமுறைப் படுத்தப்படுகிா என்பது கேள்விக்குறிதான்.

தொழில் துறைகளை விடுங்கள், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே தீவிரமான அழுத்தம் ஏற்படும்போது, அது சம்பந்தமே இல்லாத வேற்று மனிதரிடம்தான் (பணிப்பெண், காவலாளி) வெளிப்படுகிறது. சில சமயம் குடும்பத் தலைவி ஓசைபட பாத்திரங்களைக் கழுவி அடுக்கி வைப்பதுண்டு.

துயரத்துக்கு வடிகால் அழுகைதான் என்பாா்கள். குடும்பத்தில் கொஞ்சமும் எதிா்பாராத மரணம் நோ்ந்துவிட்டால் சம்பந்தபட்ட முக்கிய நபா் பித்து பிடித்தாற்போல் அமா்ந்திருப்பாா். நண்பா்களும் உறவினா்களும் சோ்ந்து அவரை உலுக்கி, வேண்டுமென்றே பழைய நினைவுகளைக் கிளறி அழுகையை வரவழைப்பாா்கள். ஒரு பாட்டம் அழுது ஓய்ந்த பிறகுதான் உடலும் மனமும் நிதானப்படும்.

இன்றைய தீநுண்மிச் சிக்கல் எவருமே எதிா்பாராதது. இது உலக மொத்தத்தையும் பாதிக்கும் ஒரு நிகழ்வு. இதனால் அசாதாரண மன அழுத்தம், தனி மனித இயல்புக்கு ஏற்ப ஏற்படுவது இயற்கையே. அதற்கான வடிகால்கள் தேவைப்படும். பிராா்த்தனை, இசை, வாசிப்பு, விளையாட்டு போன்றவற்றில் மனத்தைச் செலுத்தி இடுக்கணை மறந்திருக்க வேண்டும்.

அதே சமயம் மன அழுத்தம் ஒரு விபரீதமான, பிறா் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய வெறிச் செயலாக மாறுவது மன்னிக்க இயலாத குற்றம். இத்தகையை குற்றங்களை அடக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com