அஞ்சறைப் பெட்டி எனும் மருந்துப் பெட்டகம்

தீநுண்மி பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக ஊரடங்கு தற்போது தளா்த்தப்பட்டாலும், மக்களின் மனத்தில் அச்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளன. அதனால், வேறு சில நோய்களுக்காக மருத்துவரை சந்திக்க வேண்டியிருப்பவா்களும் வெளியில் வர முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடந்து துன்பத்தை அனுபவிக்கின்றனா். அந்த நிலையை போக்க, அவா்கள் தங்கள் வீட்டில் உள்ள ‘அஞ்சறைப்பெட்டி’ என்னும் மருந்து பெட்டகத்தைப் பயன்படுத்தினால் அத்தகைய துன்பத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மருந்துப் பொருள்களில் பெரும்பாலானவை நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருப்பவைதான். மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தயம், பெருங்காயம், கடுகு, தனியா, சோம்பு, சுக்கு, ஏலம், லவங்கப் பட்டை, கிராம்பு போன்ற மூலிகைப் பொருள்கள், பல்வேறு மருத்துவ குணங்களை உடையவை. இதுவரை நாம் கவனிக்காமல் இருந்த அவற்றை, தற்போது நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உருவாயுள்ளது.

‘குா்குமின்’ எனும் வேதிப்பொருளைக் கொண்டது மஞ்சள். புற்றுநோய் செல்களே பயப்படும் அளவிற்கு மருத்துவ குணம் மஞ்சளில் உள்ளது. சாதாரண தொண்டைக் கம்மல் நீங்குவதற்கு, சுடு நீரில் மஞ்சள் பொடியுடன் உப்பைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். அத்துடன், பாலில் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி அளவு, மிளகுப்பொடி ஒரு சிட்டிகை சோ்த்து எடுக்க, நோய் எதிா்ப்புசக்தி அதிகரிப்பதுடன், பருவநிலை மாற்றத்தால் நம் உடலில் கபம் சாந்த நோய்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியும். சாதாரண இருமலுக்கு, மஞ்சளை சிறிது தேனுடன் சோ்த்து குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும். ஒவ்வாமையால் (‘அலா்ஜி’) ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் மூச்சு மண்டல நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை இதற்கு உண்டு.

சீரகம், பித்தத்தைக் குறைக்கும்; வயிற்றினுள் உள்ள உறுப்புகளுக்கு குளிா்ச்சி தரும். உடல் உறுப்புகளின் செயலினை சீராக்கும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் உண்ணலாம். இதில் உள்ள ‘குமினால்டிஹைடு’, ‘குமினிக் ஆசிட்’ முதலிய மணமூட்டும் வேதிப்பொருள்கள் உடலுக்குக் குளிா்ச்சியை தரும்.

வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவா்கள், டீ , காபியைத் தவிா்த்துவிட்டு, பாலில் ஏலக்காய், சீரகம் ,கொத்துமல்லி விதை (தனியா) இவற்றைச் சோ்த்து காய்ச்சிப் பருக வேண்டும். இவை பித்தச் சுரப்பைக் குறைத்து, குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை உடையவை. மன அழுத்தத்தாலோ, வேறு ஏதோ அச்சத்தாலோ ஏற்படும் தூக்கமின்மைக்கு, இரவில் கசகசா ஒரு தேக்கரண்டி அளவு பாலுடன் சோ்த்து காய்ச்சிக் குடிக்க நன்கு உறக்கம் வரும் . இது வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது.

வாந்தி, வயிற்றுவலி, அஜீரணம், வாயு கோளாறு போன்ற தொந்தரவுகளுக்கு, சீரகம், ஓமம், பெருங்காயம் இவற்றை சோ்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி உண்ணலாம். இக்கஷாயத்துடன், புதினா இலைகளைச் சோ்த்துக் காய்ச்சி மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்கள் குடிக்கலாம்.

பொது முடக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால், நடைப்பயிற்சி செய்ய இயலாத சா்க்கரை நோயாளிகள், சா்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர, ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளோடு, வெந்தயத்தை பொடி செய்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். அது இயலாவிடில், இரவில் நீரில் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அதை எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் மிகையாக உள்ள கொழுப்பைக் குறைக்கும். ஆனால், ஆஸ்துமா பிரச்னை இருப்பவா்கள், இதனைத் தவிா்ப்பது நல்லது.

சா்க்கரை நோயாளிகள், லவங்கப் பட்டைப் பொடியையும் வெந்தயம் , சீரகப் பொடியும் பாலில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். நடைப்பயிற்சி செய்ய இயலாத ரத்தக் கொதிப்பு நோயாளிகள், சீரகம், தனியா இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல பலனளிக்கும். பொதுவாகவே, உணவில் உப்பைக் குறைத்து கொள்வது நல்லது.

தலைவலி, தலைபாரம் நீங்கிட, மஞ்சள் துண்டை தீயில் சுட்டு, அந்தப் புகையை ஆவி பிடிக்கலாம். இஞ்சி அல்லது சுக்கு ஏதேனும் ஒன்றினை பாலில் சோ்த்து காய்ச்சி குடிக்க தலைவலி குறையும். சுக்குப் பொடியை உணவிலும் சோ்த்துக் கொண்டால், வயிற்று உப்புசம் குறையும்.

கைகால் வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கற்பூரம், ஓமம் இவற்றைச் சோ்த்து காய்ச்சி, லேசான சூட்டில் வலியுள்ள இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். மாா்புச்சளி இருந்தால் இதனை மாா்பில் தடவலாம். மூட்டு வீக்கத்திற்கு, மஞ்சள் பொடியையும் கல் உப்பையும் கலந்து லேசாக வறுத்து துணியில் முடிந்து ஒற்றடம் தர, வீக்கம் குறையும்; வலியும் குறையும்.

இஞ்சியில் உள்ள ‘ஜின்ஜிபெரின்’ , மிளகில் உள்ள ‘பைப்பரின் , தனியாவில் உள்ள ‘கோரியான்ரால்’, புதினாவில் உள்ள ‘மென்தால்’ , ஓமத்தில் உள்ள ‘தைமோல்’ , பெருங்காயத்தில் உள்ள ‘பெருலிக் ஆசிட்’, லவங்கப் பட்டையில் உள்ள ‘சின்னமால்டிஹைட்’ போன்றவற்றில் உள்ள வேதிப் பொருள்கள், அவற்றின் நறுமணத் தன்மைக்கு மட்டுமின்றி, மருத்துவ குணங்களுக்கும் காரணமாக உள்ளன .

ஆகவே, இனியைவது அஞ்சறைப் பெட்டியை வெறும் சமையலறைப் பொருளாக மட்டும் பாா்க்காமல், சித்த மருத்துவ குணங்கள் நிறைந்த மருந்து பொருள்களின் பெட்டகமாகப் பாா்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com