திமுகவின் பரிணாம வளர்ச்சி! 

"மாநில சுயாட்சி' பேசிக் கொண்டு, மாநிலத்தில் அதிகாரத்துக்கு வருவதற்காக, எல்லா அரசியல் கட்சிகளையும் போலவே, தமிழ் மாநில உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பேசி வந்த தி.மு.க., "இனி நமது களம்,



"தமிழகத்தில் தி.மு.க. ஒரு மாபெரும் கட்சி. இந்திய துணைக் கண்டத்திலேயே, மேலிருந்து கீழ் வரை, கட்டமைப்புடன் இருக்கும் ஒரு கட்சி' - அதை பிரசாந்த் கிஷோர் கூறினார் என்பதை மகிழ்ச்சியுடன் தனது மாவட்டச் செயலாளர்களுடனான இணையவழி உரையாடலில், திமுகவின் இன்றைய தலைவர் ஸ்டாலின் அண்மையில் கூறியதாகச் செய்தி வெளிவந்தது.

கீழிருந்து மேல் வரை, அதாவது கிளைக் கழகத்திலிருந்து, ஒன்றியம் அல்லது நகர்ப்புறங்களில் பகுதி என்று வட்டம், மாவட்டம் கடந்து பொதுக்குழு, செயற்குழு என்று அமைப்பு ரீதியாகச் செயல்படும் கட்சி. பின்னர் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை, உறுப்பினர்களே, அதாவது உடன்பிறப்புகளே தேர்ந்தெடுக்கும் ஓர் அருமையான கட்டமைப்பு கொண்ட கட்சி.  

கருணாநிதி காலத்தில்தான், அந்தக் கட்சிக்கு இத்தகைய மாபெரும் "கட்டமைப்பு பலம்' வலுப் பெற்றது. அதன் ஆளுமையாக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பின் அல்லது மறைவுக்கு முன், அந்தக் கட்சியின் கட்டமைப்பு, சிறிது, சிறிதாக சிதறலை அல்லது உயிர்ப்பு இழத்தலை சந்திக்கத் தொடங்கிவிட்டது. 

ஆட்சியில் திமுக அமரும் போதெல்லாம், "அதிகாரம், பணம், ஜாதி' ஆகிய கழகத்தின் தொடக்க கால வரலாற்றுக்குப் பொருந்தாத "பண்புகளை' உட்கொள்ளத் தொடங்கியது. அதாவது, வளர்ந்த பாணி, வளர்க்கப்பட்ட பாணி என்பதை மறந்து, "லாப நோக்கம்' கொண்ட "மாசுபடுத்தப்பட்ட சூழலில்' சிக்கித் தனது குணத்தை வேறொன்றாக மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டது. அது கருணாநிதியின் இறுதிக் காலமான பத்து ஆண்டுகளிலேயே நடக்கத் தொடங்கி விட்டது. 

குறிப்பாகச் சொல்லப் போனால், எப்போது, தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிப்பதில் குறியாக இருந்ததோ, எப்போது மத்திய அதிகாரத்தில் கணிசமான பங்கைப் பெறுவதில் கவனமாகச் செயல்படத் தொடங்கியதோ அப்போதே மேலிருந்து கீழ் வரை, "அதிகாரத் தாகம் , லாப வெறி' ஆகியவற்றை ஒட்டிய "சிந்தனைகளையும், செயல்பாட்டையும்" கழகத் தலைவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளத் தலைப்பட்டனர்.

"மாநில சுயாட்சி' பேசிக் கொண்டு, மாநிலத்தில் அதிகாரத்துக்கு வருவதற்காக, எல்லா அரசியல் கட்சிகளையும் போலவே, தமிழ் மாநில உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பேசி வந்த தி.மு.க., "இனி நமது களம், தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் நமது ஆடு களம்' என்பதாக உணரத் தொடங்கியது.

அப்படி உணரும்போதே, "நேற்று வரை பேசிவந்த மாநில சுயாட்சி' குறித்து இனி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற "புதிய பரிமாணத்துக்கு' சென்றுவிட்டனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 1999 லிருந்து 2014  வரை - பிரதமர் வாஜ்பாய் அரசிலும், அடுத்த பத்து ஆண்டுகள் பிரதமர் மன்மோகன் சிங் அரசிலும் - மத்திய ஆட்சியில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் கட்சியாக தி.மு.க.-வால் பரிணமிக்க முடிந்தது.

அது என்ன "புதிய பரிமாணம்' என்று கேட்கலாம். அந்த நேரத்தில்தான் முரசொலி மாறனுக்கு மத்திய அரசில், "வர்த்தக - தொழில் துறை' அமைச்சர் பதவி கிடைத்தது. 1991-இல் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி தொடங்கி, உலகமயமாக்கலுக்கு முழுமையாக "இடம் கொடுத்த' ஒரு நாடாக இந்தியா மாறிவிட்டது. அதாவது, 1991-இல் "டங்கல், காட்' ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டு "சந்தைப் பொருளாதாரம்' சார்ந்த நாடாக மாற்றப்பட்டது.

"தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்பதாக "கொள்கை' விளக்கத்தை இந்தியா கூறிக் கொண்டது. நேற்றுவரை வழக்கமாக அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் பெற்றுவந்த, "தரகு பணம்' அல்லது "கமிஷன்' என்பதுடன், "பெரு முதலைகளிடம் வணிக உறவு கொள்வதில்' திருப்தி அடையாமல், இனி "பங்கு, பங்குதாரர்' என்ற புதிய வடிவத்துக்கு அல்லது "புதிய பரிமாணத்துக்கு' இழுத்துச் செல்லப்பட்டனர்.

மத்திய "தொழில் - வர்த்தகத் துறை' என்கிற முக்கிய அரசுத் துறை "கைக்கு' வந்தவுடன், "எளிதான முறையில்' திமுகவினர் அத்தகைய லட்சியத்தை அடையத் தொடங்கினர். இத்தகைய "புதிய பரிமாணத்தை', "பரிணாம வளர்ச்சி' எனக் கருதிக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லாமல், "ஒரு மாநில சுயாட்சி பேசிவந்த கட்சி, இந்திய ஏகபோக' அடையாளத்துக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டது.  

அதை வெளிப்படையாக , உள்வாங்கி வெளிப்படுத்த சிறிது காலம் பிடித்தது. 2008-ஆம் ஆண்டில்தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி, "ஏக இந்தியா' என்ற கருத்துக் கோப்பை எழுதத்  தொடங்கினார். அதேநேரத்தில்தான், "தொப்புள்கொடி உறவுகள்' என அழைக்கப்பட்ட, ஈழத் தமிழர்களின் "அபயக் குரல்', சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நடத்தப்பட்ட "இனவாதப் போர்', பெரும் "அபாயக் குரலாக'  தமிழ்நாடெங்கும், ஏன், உலகத் தமிழர்கள் மத்தியில் எங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அதனால்தான் அது, "இன அழிப்புப் போராக' அடையாளம் காணப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழர்களின்  நலன் குறித்தும், ஈழத் தமிழர்களின் உரிமை குறித்தும் பேசி, பேசி அதிகாரத்துக்கு வந்திருந்த தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும், தங்கள் "காதுகளை அடைத்துக் கொண்டு', இந்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதாவது, சோனியா காந்தியின் "ஏக இந்தியா' கோட்பாட்டில் திளைத்து விட்டார்கள். அதுவே முரசொலியில், "ஏக இந்தியா' என தலைவராக இருந்த கருணாநிதி எழுதத் தொடங்கக்  காரணமாக அமைந்தது. 

இதுவரை அதிகாரத்துக்கு வருவதற்கு, கட்டமைக்கப்பட்ட தி.மு.க. தேவைப்பட்டது. இந்தியாவின் உச்ச அதிகாரத்துக்கு வந்த பிறகு, அப்படிப்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கட்சி எதற்காக? பதினேழு ஆண்டுகள், உச்சகட்ட இந்திய அதிகாரத்தை சுவைத்துப் பார்த்த ஒரு கூட்டம் அல்லது ஒரு குழு அல்லது ஒரு சில தனி நபர்கள், அவர்கள் சார்ந்த குடும்பம் அல்லது கட்சி, இனியும், அப்படிப்பட்ட கட்டமைப்பு கழகத்துக்குத் தேவை எனக் கருத முடியுமா? 

ஆகவேதான், திமுக தனது "ஜனநாயக முறையிலான தேர்தல்கள்' மூலம், கிளைக் கழகம் முதல் தலைமை வரை நடத்தி வந்த தேர்தல் முறையை கடந்த 20 ஆண்டுகளாக மெல்ல, மெல்ல கைவிட்டு, "நியமனங்களில்' மூழ்கத் தொடங்கியது. "கிளைச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்' என எல்லோருமே, தலைமை நிலையமான அறிவாலயத்திலிருந்து எப்போது "தங்களை அறிவிக்கும் அறிவிப்பு வரும்' என்ற எதிர்பார்ப்பில் ஏங்கத் தொடங்கினர். 

எடுத்துக்காட்டாக, தி.மு.க. நன்கு வளர்ந்திருந்த விழுப்புரம் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே முடிசூடா மன்னராக வளைய வந்தவர் பொன்முடி. இப்போது தி.மு.க.வில் விழுப்புரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு மஸ்தான் செயலாளராக இருக்கிறார். விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொன்முடி செயலாளர். விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு அங்கயற்கண்ணி செயலாளர்.

விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் நிற்க முடியாமல், திருக்கோவிலூர் தொகுதியில், சமூக வாக்குகளை நம்பிப் பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் போட்டியிட்டு தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு பாரிவேந்தர் உறுதி வாங்கியிருந்தார். அதற்குள் உதயநிதி ஸ்டாலின் தனது கோட்டாவில், பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியை ஒதுக்கி விட்டார். பாரிவேந்தர் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார். இதையெல்லாம் அரை நூற்றாண்டுக்கு முந்தைய திமுகவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் வசந்தம் கார்த்திகேயன் செய்துவரும் மக்களுக்கான உதவிகள் குறித்த விளம்பரங்களில், பொன்முடி படமோ, மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி படமோ, தொகுதி மக்களவை உறுப்பினர் கௌதம சிகாமணி  படமோ போடாமல், தி.மு.க. தலைவர் படமும், தனது படமும் போட்டு வெளியிடுவது முதற்கொண்டு ஒரு கூர்மையான முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று இருக்கும் உள்கட்சி பலவீனத்தை அறிந்ததால்தான், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு பிரசாந்த் கிஷோர் தேவைப்பட்டிருக்கிறார். அவர் பொருத்தமானவரா, இல்லையா என்பதைக் காலம் சொல்லப் போகிறது.

கட்சியின் கட்டமைப்பை நம்பி இருந்த திமுக, வெளியாள் ஒருவரின் "நிரூபிக்கப்படாத சாதுர்யத்தை' நம்பி இறங்குகிறதா எனக் கேட்காதீர்கள். இதுவும்கூடப் பரிணாம வளர்ச்சிதான்!

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com