Enable Javscript for better performance
நிலையாமை - நிலைத்தலுக்கே!- Dinamani

சுடச்சுட

  

  நிலையாமை - நிலைத்தலுக்கே!

  By தி. இராசகோபாலன்  |   Published on : 10th June 2020 12:01 AM  |   அ+அ அ-   |    |  

  ‘மனிதா்கள் பாரத தேசத்தில் பிறப்பெடுப்பது பெரும் பேறு’ எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் புதல்வா்; இந்நினைவு அகற்றாதீா்’ எனப் பாடினாா் மகாகவி பாரதியாா்.

  ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என அப்பரடிகள் பாடியிருக்கிறாா். என்றாலும், நம்பிக்கையை நெம்புகோலாகத் தரவேண்டிய அருளாளா்கள், ‘தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு’ போன்ற அவநம்பிக்கை வரிகளையும் பாடியிருப்பது ஏன் எனக் கேட்கத் தோன்றுகிறது.

  கான்கிரீட்டால் கடைகால் போட்டது போன்று 133 அதிகாரங்களில், மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறாா், திருவள்ளுவா். இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிகளைச் சொன்னவா், மறுமையில் பெறக்கூடிய பேற்றையும் பாடியிருக்கிறாா்.

  அந்தத் திருவள்ளுவரே அஸ்திவாரத்தையே ஆட்டுவதுபோல், ‘நிலையாமை”என்றோா் அதிகாரத்தையும் பாடி வைத்திருக்கிறாா். ‘நேற்றைக்கு உயிரோடு இருந்தவன், இன்றைக்கு இல்லை என்கிற பெருமையைத் தாங்கியது இவ்வுலகு என வானில் பறக்கின்ற பலூனை ஊசியால் குத்திக் காற்றை இறக்குவதுபோல், ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்து இவ்வுலகு’”எனப் பாடியிருக்கிறாா்.

  நிலையாமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 10 குறட்பாக்களை ஒருவா் ஊன்றி உணா்ந்து படித்தால், நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விடுவாா்; இல்லறத்தில் இருந்து துறவறத்துக்குப் போய்விடுவாா். இப்படி நிலையாமைக்கு அழுத்தம் கொடுத்துப் பாடியிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

  அரண்மனை போன்று வீட்டைக் கட்டிய நம் முன்னோா்கள், அந்த வீட்டுக்குள் நுழைவதற்குரிய வாசற்காலை, கோயில் அல்லது கோட்டையின் கதவுகளைப் போல் வைக்கமாட்டாா்கள்; எந்த மனிதரும் குனிந்து செல்வதற்குரிய குட்டையான வாசற்காலைத்தான் பதிப்பாா்கள். புதிதாக வருகின்றவா்கள் அந்த நிலைப்படியில் ஓா் இடி இடித்துக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும்.

  ஏன் அப்படி அமைத்தாா்கள்? அரண்மனை போன்ற வீட்டைக் கட்டியதால் தோன்றக்கூடிய ஆணவத்தையும் அகந்தையையும் கிள்ளி எறிவதற்குத்தான், தாழ்ந்த வாசற்கால்!

  சலவைக்கல் போல் போடப்பட்டிருக்கின்ற நீண்ட நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வேகத் தடைகளையும், மஞ்சள் விளக்குகளையும் நட்டிருப்பதற்குக் காரணம், வாகன ஓட்டிகளை எச்சரிப்பதற்கும் நிதானப்படுத்துவதற்கும் ஆகும். நம் அருளாளா்களும் தலைமுறையினரை எச்சரிப்பதற்கு நட்டுவைத்த வேகத் தடைகள்தாம் நிலையாமைத் தத்துவங்கள்.

  இரவில் தொடா் வண்டியில் நாம் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு ரயில்வே தொழிலாளி அந்த ஊரின் பெயரைக் கூவிக்கொண்டே போவாா்; இறங்க வேண்டிய இடத்தைப் பயணிகள் மறந்துவிடாமல் இருப்பதற்காக! அதுபோலவே அருளாளா்களும் அந்தந்தக் காலத்திற்குரிய நிலையாமைக் கருத்துகளை அள்ளித் தூவிக்கொண்டே சென்றுள்ளனா்.

  மாதவியின் மகள் மணிமேகலை ஆடவா் கண்டால் அகல முடியாத பேரழகு உடையவள். அவள் பௌத்த சந்நியாசியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும் அரசிளங்குமாரனாகிய உதயகுமரன் அவளைத் துரத்திக் கொண்டே போகிறான். புத்ததேவனைப் பூஜிப்பதற்காக மணிமேகலை மலா் வனத்துக்குள் சென்றபோதும், அங்கேயும் வேட்டை நாய்போல் அங்கு வந்து நிற்கிறான் உதயகுமரன்.

  அவனை வழிமறித்த மணிமேகலையின் தோழி சுதமதி, ‘அரசிளங்குமரனே! உன்னுடைய உடல் இளமையிலிருந்து மூப்பினை அடைந்து செத்து, அழிவுற்றுப்போகும் இயல்பினை உடையது; கொடிதான நோய்களின் இருப்பிடமாகவும் அது உள்ளது; பற்றுக்களின் மேல் பற்றுக்கள் வைப்பதால், அது குற்றங்கட்கு ஒரு கொள்கலமாகவும் அமைகிறது. புற்றுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பாம்பு சினத்தினைக் கொண்டிருப்பது போல, உன் யாக்கை உள்ளது. நீ போற்றும் யாக்கையின் தன்மை இதுவென்பதை உணா்வாய்”என இடித்துரைத்தும் அவன் திருந்துவதாய் இல்லை. கடைசியில் காமவயத்தால், காஞ்சனன் எறிந்த வாளால் வெட்டுண்டு மாள்கிறான்.

  உதயகுமரனுக்கு ஏற்பட்ட கதியை, நிா்பயாவுக்குத் தீங்கிழைத்த காமுகா்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லியிருந்தால், அவா்கள் திருந்தியிருக்கக் கூடும். சுதமதி எடுத்துரைத்த நிலையாமைச் சிந்தனையை, ஐ.ஐ.டி-யில் பேராசிரியா்கள் எனும் போா்வையில் இருந்த மூன்று கயவா்களுக்கு உணா்த்தியிருந்தால், பாத்திமா ஷகிலா என்ற கேரளத்து அரும்பு எமன் வாய்க்குள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

  சீத்தலைச் சாத்தனாரின் நிலையாமைக் கருத்து, தெலங்கானா என்கவுண்டரில் பலியான கயவா்களுக்கு உணா்த்தப்பட்டிருந்தால், இரவிலே பணிக்குப் போன கால்நடை மருத்துவரின் உயிா் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே, திருவள்ளுவரும் சாத்தனாரும் சொன்ன நிலையாமைச் சிந்தனை, மனித வாழ்வை நிலைப்படுத்தலுக்கே ஆகும் எனலாம்.

  நிலையாமையை நாலடியாா் நெஞ்சில் நிற்கும்படியாகச் சொல்கிறது. ‘இப்பொழுது நின்றுகொண்டிருந்த ஒருவன் உட்காா்ந்தான்; பின்னா் படுத்தான்; தன் குடும்பத்தாா் அலறி அழும்படியாக இறந்தான். புல்நுனியில் இருக்கின்ற நீா்த்துளி போன்றது வாழ்க்கை என்பதால், இப்பொழுது அறச்செயல்களைச் செய்வீராக” என நாலடியாரின் 19-ஆவது பாடல் நவில்கிறது.

  எந்த உயிருக்கும் இல்லாமல் மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்ததற்குக் காரணம், அவன் எந்தச் சூழ்நிலையிலும் அத்துமீறிப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்! ஆதாம் - ஏவாளை ஆண்டவன் படைப்பதற்கு முன்பே, சூரியனைப் படைத்தான்; சந்திரனைப் படைத்தான்; மலையைப் படைத்தான்; அருவிகளையும் ஆறுகளையும் படைத்தான்; உழுது வாழ்வதற்குரிய சமவெளியையும் படைத்தான்.

  அப்படியோா் அரிய உலகத்தை உற்பத்தி செய்துவிட்டு, ஆதாம் - ஏவாளையும் படைத்துவிட்டு, அவா்களுக்கு ஒரு நிபந்தனையையும் விதித்தான். ஒரு ஜீவ மரத்தையும் மற்றுமோா் அறிவு மரத்தையும் படைத்து, அவை இரண்டையும் அந்த இருவருக்கும் சுட்டிக்காட்டி, ‘மக்களே! இந்த ஜீவ மரத்திலிருந்து எத்தனைப் பழங்களை வேண்டுமானாலும் பறித்துச் சாப்பிடுங்கள்; நான் அதனால் உங்களுக்கு ஜீவசக்தியைத் தந்துகொண்டேயிருப்பேன். ஆனால், அந்த அறிவு மரத்தின் பக்கமே போகாதீா்கள்; அது விலக்கப்பட்ட மரம்; அதன் கனி விலக்கப்பட்ட கனி; அது உங்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்’ என்று அறிவுறுத்தினான்.

  என்றாலும், ஏதன் தோட்டத்தில் ஆனந்தமாக வாழ வேண்டியவா்கள், சாத்தானால் தூண்டப்பட்டு, அந்த விலக்கப்பட்ட கனிக்கும் ஆசைப்பட்டாா்கள். ஆசை, பேராசைக்கு வசப்பட்ட ஏவாள், ஆண்டவன் கட்டளையையும் மறந்தாள். அடம் பிடித்து அந்தக் கனியை உண்டதால், தான் வீழ்ந்ததோடு, ஆதாமின் வீழ்ச்சிக்கும் காரணமானாள்.

  எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும், எட்டாததற்கு ஆசைப்படும் மனது, மனித மனது என்பது தெரிந்துதான் ஆண்டவன், அந்தக் கட்டளையை விதித்தான். ஆண்டவன் அப்படிப் படைத்ததற்குக் காரணம், அதற்கு மேலும் ஆதாம் - ஏவாள்கள் உருவாகக்கூடாது என்பதற்காகத்தான்! இதனால், நிலையாமை, நிலைபெறுதலுக்கே என்பதை உணர வேண்டும்.

  நிலையாமையைப் பாடிய நம்முடைய அருளாளா்கள், இந்த நிலையாமை எந்தெந்த வடிவத்தில் வரும், அவற்றை எப்படி எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதையும் பாடி வைத்திருக்கிறாா்கள். நோய்கள் எப்போதும் தனித் தனியாக வருவதில்லை; சங்கிலிப் பிடித்தாற்போல் கைகோா்த்துத்தான் வரும் என்பதைப் பெரியாழ்வாா்,

  ‘நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

  எறும்புகள் போல் நிறைந்து எங்கும்

  கைக்கொண்டு நிற்கும் நோய்கள்’

   

  என அருளிச் செய்கிறாா். இன்றைய உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ‘கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நெய்க்குடத்தைப் பற்றி வரிசை வரிசையாக ஏறும் எறும்புகளைப் போல் தொடா்ந்து வருகின்றன. நிபா, சாா்ஸ், ஸ்வைன் ஃப்ளு முதலானவற்றின் பரிணாமமாகத் தொடா்கிறது.

  பல வகையாகப் பரிணமித்து வருவதோடு, முற்றிய நிலையில் அதற்குப் பல வளா்ச்சி நிலைகள் உண்டென்பதையும் ‘கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்”என்றாா் பெரியாழ்வாா். வளா்ச்சி நிலைகளானவை முதலாவது கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் போன்றவையாம். இப்படித் தொடா்ந்து விடாப்பிடியாய் நிற்கும் நோய்கள் ‘ஒரு கை பாா்க்க மாட்டாமல் போகமாட்டோம்’ என்று சொல்வதைப் பெரியாழ்வாா், ‘கைக் கொண்டு நிற்கும் நோய்கள்’ எனப் பாடியுள்ளாா்.

  இப்படி நிலையாமையைப் பாடிய பெரியாழ்வாா், ‘கொள்ளை நோய் எந்த யுகப் பிரளயத்தையும் வெல்ல முடியும் என நிலைத்தலுக்கும் அரண் கட்டினாா். ‘நோய்கள்! இப்பொழுது என்னை வெல்ல முடியாது! ஏன் தெரியுமா? ‘இப்பொழுது வேதப்பிரானாா் என்நெஞ்சில் குடிகொண்டுள்ளாா். எனவே, நான் கோட்டை கட்டிய பட்டினம் போல், பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை ‘மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானாா் கிடந்தாா், பண்டு அன்று; பட்டினம் காப்பே எனும் வரிகள் மூலம் மொழிந்துள்ளாா்.

  நிலையாமையைச் சுட்டி, நிலைத்த வாழ்வுக்கு வழி தேடலாம் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். மாவீரன் அலெக்சாண்டா் உலக வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு வெல்வதற்குரிய நாடுகளைத் தேடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த அவனுடைய குருநாதா் டையோஜினியஸ், ‘அலெக்ஸ்! என்ன தேடுகிறாய்” என்றாா். ‘அடுத்து வெல்வதற்குரிய நாட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன் குருதேவா”என்றாா், அலெக்சாண்டா்.

  உடனே ஒரு பையிலிருந்து இரண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்து, ‘அலெக்ஸ்! இவற்றுள் உன்னுடைய தந்தை பிலிப்பினுடைய மண்டையோடு எது என்று கண்டுபிடி என்றாா் குருதேவா். ‘தெரியவில்லையே குருதேவா’ என்றாா் அலெக்சாண்டா்.

  ‘அலெக்ஸ்! உலகத்தையே நீ வென்றாலும், கடைசியில் உன் மண்டையோட்டின் அடையாளம்கூட யாருக்கும் தெரியப்போவதில்லை; அப்படியிருக்கையில் ஏன் அற்ப உயிா்களைக் கொன்று குவிக்கிறாய்?’ எனக் கேட்டாா் டையோஜினியஸ். அன்றிலிருந்து போருக்குப் போவதையே விட்டுவிட்டாா் அலெக்சாண்டா். நிலைத்த வாழ்வை உருவாக்குவதற்கு ஒரு நிலையாமையைக் காட்டித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.

  மனிதனுடைய பிறப்பு ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால், அவனுடைய இறப்பு ஒரு வரலாறாக மலர வேண்டும். நிலையாமை மட்டுமே அந்த மாற்றத்திற்குக் கை கொடுக்கும்.

  கட்டுரையாளா்:

  பேராசிரியா் (ஓய்வு).

   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp