காட்சி ஊடகப் பிழைகள்!

ஒருகாலத்தில் மக்கள்  வானொலியைக் கேட்டும் செய்தித்தாள்களைப் படித்தும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.



ஒருகாலத்தில் மக்கள்  வானொலியைக் கேட்டும் செய்தித்தாள்களைப் படித்தும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.

மத்திய அரசின் அகில இந்திய வானொலி ("ஆல் இந்தியா ரேடியோ') நெருக்கடிநிலை காலத்தில் வழங்கிய செய்திகளில் (அப்போதைய மத்திய அரசின் உத்தரவுப்படி) சற்றே பிரசார நெடி இருந்தது என்பதைத் தவிர, தகவல் வழங்கலில் ஒரு பிழையற்ற தன்மை இருந்தது. தூர்தர்ஷன் செய்திகளும் அப்படியே.

செய்திப் பத்திரிகைகளும் தங்களது அரசியல் சார்பு நிலைகளுக்கு ஏற்றவாறு தலையங்கம் முதலானவற்றை வழங்கினாலும் அவற்றின் மூலம் கிடைத்த உள்ளூர், உலகச் செய்திகள் வாசகர்களின் பொது அறிவையும் மொழியறிவையும் வளர்க்கவே செய்தன.

தினமணி முதலான பாரம்பரியம் மிக்க நாளேடுகள் தங்களின் நிருபர்கள், தமக்குச் செய்தி வழங்கும் முகமை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட ஊர்ஜிதமான செய்திகளை மட்டுமே வழங்கி வந்தன, வழங்கி வருகின்றன.
துக்ளக் பத்திரிகையைத் தொடங்கிய சோ, செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தினால் நீண்ட காலத்துக்கு மாதமிருமுறை இதழாகவே வெளியிட்டு வந்தார். வார இதழாக மாற்றுவதற்குத் தயங்கினார்.

தற்போது காட்சி ஊடகங்களின் காலம் நடக்கிறது. 1970-களில் தூர்தர்ஷனிலும், பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் காலையிலும் மாலையிலும் செய்தி ஒளிபரப்பைப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. இருபத்து நான்கு மணிநேரமும் செய்திகளையே வெளியிடும் சானல்கள் பெருகிவிட்டன.

செய்தி வாசிப்பவர், செய்தியை வழங்கும் நிருபர், புகைப்படக்காரர், செய்தி ஆசிரியர் குழுவினர் முதலான பலரின் ஒருங்கிணைப்பும் சேர்ந்து ஒருசெய்தியை வழங்கும்போதுதான் காண்பவர் மனதில் அது இடம்பிடிக்கும்.

மேலும், குறைந்தபட்ச மொழியறிவு - பொது அறிவு கொண்டவர்களாக செய்தி ஆசிரியர்கள், செய்தி வாசிப்பவர்கள் இருந்தால் மட்டுமே சரியான செய்தி மக்களைச் சென்றடையும். தமிழ்ச் செய்தி ஊடகவியலாளர்களைப் பொருத்தவரை, தமிழ் - ஆங்கிலத்தில் தெளிவும், உலக நடப்புகள் குறித்த பொது அறிவையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம். செய்தி வாசிப்பாளர்களுக்கு மொழி அறிவுடன் கூடுதலாக உச்சரிப்புத் திறனும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

ஆனால், ஓரிரு தமிழ்ச் செய்தி ஊடகங்களைத் தவிர மற்றவை இது குறித்துக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.  மாறாக, ஒரு செய்தியை மற்ற எல்லோருக்கும் முன்னதாக வழங்குபவர் யார் என்ற போட்டியும், அவசரமுமே வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தச் செய்தியை நாங்கள்தான் முதன்முதலில் வெளிக்கொணர்ந்தோம் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்வதும் நடக்கிறது. விசாகப்பட்டினம் ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒற்றைப்படையாகவும், இரட்டைப்படையாகவும் பல்வேறு ஊடகங்கள் காண்பித்தன.

தமிழ் உச்சரிப்பு குறித்துப் பல செய்தியாளர்களும் செய்தி வாசிப்பாளர்களும் கவலைப்படுவதில்லை என்பதற்கு அவர்களது "ழ'கர, "ள'கர உச்சரிப்புகளே சாட்சியாகும். நேரலையாகச் செய்தியை வழங்கும் செய்தியாளர்கள் செய்வினை - செயப்பாட்டுவினை குறித்த தெளிவுகூட இல்லாமல் செய்திகளைக் கூறுவதை கேட்டால்,  அவர்களுக்குத் தாய்மொழியே தகராறு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தொடர்பான பொது முடக்கத்தைக் குறிப்பிடும்போது இரவு ஏழு மணி முதல் மறுநாள் காலை ஐந்து மணிவரை மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்பதை அப்படியே மாற்றி, காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை  என்று ஒரு செய்தியாளர் கூறியதும் நடந்தது.

அதே போன்று, தொலைக்காட்சிப் பெட்டியின் கீழ்ப்புறத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் "ஸ்க்ரோல்' எனப்படும் குறுஞ்செய்தியில் ஓர் எண்ணிக்கை காட்டப்படும்போது, அதே செய்தியைத் திரையில் வாசிப்பவர் கூறுவது வேறோர் எண்ணிக்கையாக இருப்பதும் நிகழத்தான் செய்கின்றது.

அகில இந்தியச் செய்திகளையும் வழங்குகின்ற காரணத்தினால், ஒரு செய்தி ஊடகத்தில் பணிபுரிவோருக்கு ஹிந்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.

பழைய திட்டக் குழு கலைக்கப்பட்டு,  நீதி ஆயோக் (கொள்கைவகுப்பு ஆணையம்) என்ற புதிய அமைப்பு உருவாகிப் பல ஆண்டுகள் கழித்தும் நிதி ஆயோக்  என்றே ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வாசிப்பவர்களும் அப்படியே கூறுகிறார்கள்.

அதே  போன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கின்ற "ஷ்ரமிக் எக்ஸ்பிரஸ்' (தொழிலாளர் விரைவு வண்டி) ரயில்களை நமது செய்தி ஊடகங்களில் சில "செராமிக் எக்ஸ்பிரஸ்' (பீங்கான் விரைவு வண்டி) என்று கூறிய அவலத்தை என்னவென்பது?

இது போலவே சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, அவரது பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை, வட இந்தியச் செய்தி வாசிப்பாளர் ஒருவர் ரோமன் எழுத்துக்களில் காணப்படும் "பதினொன்று' என்று தவறாகப் புரிந்துகொண்டு, "பதினொன்றாவது ஜின்பிங்'   என்று படித்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

நம் தமிழ்ச் செய்தி ஊடகச் செய்தியாளர்களும் வாசிப்பாளர்களும் நாள்தோறும் அரங்கேற்றுகின்ற பிழைகளையெல்லாம் கணக்கில் கொண்டால் அந்தச் செய்தி நிறுவனங்களையே மூட வேண்டியதில்தான் போய் முடியும்.

அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் செய்திகளிலும் விவாதங்களிலும் காணப்படும் நடுநிலையற்ற தன்மையையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

எது எப்படியாயினும், இலக்கணச் சுத்தமான மொழியில், சார்புகளற்ற உண்மைச் செய்திகளை, தரமான உச்சரிப்புடன் வழங்கும் செய்திகளே மக்களின் மனதைக் கவர்வதுடன் பண்படுத்தவும் செய்யும் என்பதைச் செய்தி ஊடகங்கள் உணர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com