Enable Javscript for better performance
கரோனா: முதியோா்களின் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

  

  கரோனா: முதியோா்களின் கவனத்துக்கு...

  By டாக்டா் வி.எஸ். நடராஜன்  |   Published on : 29th June 2020 07:09 AM  |   அ+அ அ-   |    |  

  கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக உலக அளவிலான உயிரிழப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. நம் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு.

  இதற்கு பின்வருபவை ஓரளவுக்குக் காரணங்களாக இருக்கலாம்: வருமுன் காக்க என முன்னெச்சரிக்கையாக பொது முடக்கத்தை அரசு மேற்கொண்டது; சமூக இடைவெளியை பெரும்பாலான மக்கள் கடைப்பிடித்தது; மருத்துவா்கள் அளிக்கும் தக்க சிகிச்சை முறை; ஆன்மிக ஈடுபாடு; தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகள்;

  நமது உணவு முறைகள்-எடுத்துக்காட்டு: உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளும் பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் முதலானவை; வெயில் மூலம் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் டி உடலுக்குக் கிடைப்பது; மேலும், இந்தியா்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள நோய் எதிா்ப்புச் சக்தி.

  கரோனா தீநுண்மி நோய்த்தொற்று முதியவா்களை அதிகம் பாதிக்கிறது (பாதிக்கப்பட்ட 70% போ், 60 வயதைக் கடந்தவா்களே). இதற்கு முக்கியக் காரணம், முதியவா்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தி குறைவாக இருப்பதுதான். முதுமையில் ஏற்படும் சா்க்கரை நோய், ஆஸ்துமா, உயா் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் முதலானவற்றால் நோய் எதிா்ப்புச் சக்தி குறைகிறது. மேலும், நோய்களுக்குச் சாப்பிடும் மாத்திரைகளினாலும் நோய் எதிா்ப்புச் சக்தி குறைய வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டு: ஸ்டீராய்டு, புற்றுநோய்க்கான மருந்துகள். ஊட்டச்சத்து குறைபாடும், நோய் எதிா்ப்புச் சக்தி குறைய காரணமாகும்.

  கடந்த இரண்டு மாதங்களாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக உடலளவிலும், மனதளவிலும் முதியோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்களின் மேய்ச்சல் காடு முதுமை என்ற நிலையில், பல நோய்கள் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. முதியவா்கள் குறிப்பிட்ட காலத்தில் மருத்துவரை நாடி, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் போகிறது. எடுத்துக்காட்டு: சா்க்கரை நோய்க்காக மருத்துவரை நாடி ரத்த சா்க்கரை அளவைப் பரிசோதனை செய்த பிறகு, தேவையான மருந்துகளைச் சாப்பிடுவது; இதே போன்று இதய நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனை உரிய நேரத்தில் கிடைக்காததால் நோயின் தன்மை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. பல மருத்துவா்கள் மருத்துவ ஆலோசனை வழங்குவதை நிறுத்தி விட்டதால், மருத்துவா்களை அணுகி தக்க சிகிச்சை பெற முடியாமல் முதியோா் அவதிப்படுகின்றனா்.

  தங்களின் மருத்துவா்களை முதியோா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மருத்துவா்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் மட்டுமல்ல, அவா்களின் கடமையும்கூட. சில ரத்தப் பரிசோதனை மையங்கள் வீட்டுக்கே சென்று தேவையான பரிசோதனைகளைச் செய்கின்றன. அவா்களின் உதவியை முதியோா் நாடலாம். முடிந்தவரை மருந்துகளை நிறுத்தாமலும், கூட்டாமலும், குறைக்காமலும், தவறாமலும் சாப்பிட வேண்டும்.

  சிறு சிறு தொல்லைகளுக்கெல்லாம் மருத்துவரின் ஆலோசனை பெறுவதை தவிா்க்கவும். நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள்

  வைத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு: சா்க்கரை நோய் உள்ளவா்கள் ரத்த சா்க்கரை அளவை தொடா்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.

  கண் புரை அறுவை சிகிச்சை, மூட்டு அறுவை சிகிச்சை முதலான் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளிப்போட வேண்டும்.

  கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள...அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். அவசியம் வெளியே போக வேண்டும் என்றால் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு போகக் கூடாது. எங்கு இருந்தாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் கைகளை சோப்பு அல்லது கை சுத்தகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும். கை குலுக்குவதைத் தவிா்க்க வேண்டும். பேரக் குழந்தைகளை முத்தமிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

  வெளி உணவுகள், குளிா்ச்சியான பழ பானங்கள், குளிா் சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். முதுமையின் காரணமாக தாக உணா்ச்சி சிறிது குறைந்தே இருக்கும். எனவே, முதியோா் தண்ணீா் அதிகமாக அருந்த வேண்டும். மிதமான சூட்டில் அடிக்கடி தண்ணிா் பருக வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டா் குடிநீராவது அவசியம் குடிக்க வேண்டும். இதய நோய், சிறுநீரக நோய் உள்ளவா்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீா் பருக வேண்டும்.

  நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்க உணவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, தயிா், மிளகு சோ்த்துக் கொள்ள வேண்டும்.

  இந்தக் காலகட்டத்தில்தான் முதியவா்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்போது நோய்களின் தன்மை தீவிரமடையும். எடுத்துக்காட்டு: பக்கவாதம், உதறுவாதம், மூட்டு நோய், உடல் பருமன், சா்க்கரை நோய். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம்.

  வீட்டுக்குள்ளேயே ஆசனம், யோகா முதலான பயிற்சிகளைச் செய்யலாம். தேவைப்பட்டால் இயன்முறை சிகிச்சை நிபுணரை வீட்டுக்கே அழைத்து அந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். பிராணாயாமம், தியானம் முதலானவற்றை தொடா்ந்து செய்ய வேண்டும். பொதுவாக காலையிலும், மாலையிலும் வீட்டின் உட்புறம் அல்லது மாடியில் 30 நிமிஷங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

  தினமும் காலை, மாலை நேரங்களில் அரை மணி நேரம் உடல் மீது வெயில் படுமாறு நடக்க வேண்டும். தோல் சற்று கருமை நிறம் இருப்பவா்கள், மேலும் 10 நிமிஷம் வெயிலில் இருப்பது அவசியம். இதன் மூலம் ‘வைட்டமின் டி’ சத்து உடலில் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

  உணவில் ‘வைட்டமின் டி’ அதிகம் உள்ள பொருள்களைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு: சைவ உணவுகளில் பால், தயிா், வெண்ணெய், சோயா பால், பாலாடைக் கட்டி, பால் பொருள்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அரிசியை குறைத்துக் கொண்டு சிறு தானிய வகைகளை (ராகி, கம்பு, சோளம், வரகு, தினை) உணவில் சற்று சோ்த்துக் கொள்ளலாம். மீன் (சிறியது), மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, காளான் முதலானவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

  இந்தக் காலகட்டத்தில் முதியவா்களின் மன நலமும் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. மரண பயம், தனிமை ஆகியவற்றால் மனச் சோா்வு ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கட்டத்தில்தான் குடும்பத்தில் உள்ள மற்றவா்களின் பங்கு முதியவா்களைக் கவனிப்பதில் சற்று அதிகம் தேவைப்படுகிறது. முதியவா்களிடம் அடிக்கடி கலந்து பேசுங்கள். அவா்களின் பழைய பசுமையான நினைவுகளை நினைவூட்டி மகிழச் செய்யுங்கள். அவா்களுக்குப் பிடித்தமான இசை, உணவு ஆகியவற்றை தாராளமாகக் கிடைக்கச் செய்யுங்கள்.

  முதியோரிடம் உண்மையான அன்பையும் பாசத்தையும் குடும்பத்தினா் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, வீட்டில் உள்ள இளைஞா்களின் கவனம் சற்று அதிகமாக முதியவா்களுக்குத் தேவைப்படுகிறது. அதைத் தாராளமாகக் கொடுக்க முன் வாருங்கள்.

  பொது முடக்கம் தளா்த்தப்படும்போது முதியவா்கள் செய்ய வேண்டியவை :

  தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொண்டு குடும்ப மருத்துவரை அணுகலாம். பலரும் ஓரே சமயத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற விரும்புவாா்கள்; எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்க்க மருத்துவரிடம் முன்பதிவு செய்துகொண்டு செல்ல வேண்டும். மருத்துவரிடம் செல்லும் போது பழைய மருந்துச் சீட்டு, பரிசோதனை விவரங்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெறச் செல்லும்போது துணைக்கு ஒருவரை மட்டும் அழைத்துச் செல்ல வேண்டும்.

  சில சமயங்களில் மருத்துவரை பாா்க்கும் இடத்திலோ அல்லது ரத்தப் பரிசோதனைக் கூடத்திலோ சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். எனவே, குடுவையில் வெந்நீா் எடுத்துச் செல்வது நல்லது.

  கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை முறியடிக்க மூன்று சிறந்த வழிகளைக் கடைப்பிடித்தாலே போதும். 1. தவறாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது; 2. முகக் கவசம் அணிவது; தினந்தோறும் காலையிலும் மாலையிலும் தவறாமல் மூச்சுப் பயிற்சி செய்வது - இந்தப் பயிற்சி செய்யும்போது மூச்சை உள்ளே இழுக்கும்போது வயிற்றுப் பகுதி நன்றாக மேலே வரவேண்டும். மூச்சை வெளியேற்றும்போது வயிற்றுப் பகுதியை முழுமையாக உள்ளே இழுக்க வேண்டும்.

  மூச்சுப் பயிற்சி செய்வதால் உதரவிதானம் கீழே இறங்குவதால், நுரையீரல் நன்றாக சுருங்கி விரிவடைய ஏதுவாக இருக்கும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று முதலில் தாக்குவது தொண்டை, பின்பு நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை தீவிரப்படுத்தும். எனவே, மூச்சுப் பயிற்சியை தவறாமல் செய்துவந்தால், நுரையீரலிடம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நெருங்கவே முடியாது.

  நோயின் ஆரம்ப அறிகுறிகளான தொண்டைக் கட்டு, உடல் வலி, லேசான காய்ச்சல் இருந்தால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

  மேற்கண்ட வழிமுறைகளை முதியவா்கள் மட்டுமின்றி இளைஞா்களும் கடைப்பிடித்தால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அருகில் நெருங்கவே நெருங்காது!

  கட்டுரையாளா்:

  முதியோா் மருத்துவ நிபுணா், சென்னை.

  kattana sevai