நிரந்தர அதிபர்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நாட்டின் நிரந்தர அதிபராக இருப்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நாட்டின் நிரந்தர அதிபராக இருப்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். அவர் மேலும் இருமுறை அதாவது 2036-ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதிலிருந்து அத்திட்டம் பாதியளவு வெற்றி பெற்றிருக்கிறது.
 தொடர்ந்து 2-ஆவது முறையாகவும், மொத்தத்தில் 4-ஆவது முறையாகவும் அதிபராக இருக்கும் புதினின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது என்பதால், 2024-க்குப் பின்னர் அதிபர் தேர்தலில் புதின் போட்டியிட முடியாத நிலை உருவானது. ஆதலால், அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்த நிலையில்தான், கடந்த ஜனவரி மாதம் "அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்' என்கிற பெயரில் தனது திட்டத்தை முன்வைத்தார் புதின். அதன்படி, பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி அதிபருக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு மாற்றப்படும்; மாகாண கவுன்சில் எனப்படும் அமைப்பு, கூடுதல் அதிகாரங்களுடன் வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் புதினின் திட்டத்தில் இடம்பெற்றன. மேலும் பல அம்சங்களை அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் சேர்ப்பதற்காக ஒரு குழுவையும் புதின் அமைத்தார்.
 இதைத் தொடர்ந்து, பிரதமர் மெத்வதேவ் ராஜிநாமா செய்ததும், புதிய பிரதமராக மிகயீல் மிஷுஸ்டின் நியமிக்கப்பட்டதும் மிகப் பெரிய திட்டம் புதினின் மனதில் இருப்பதை உறுதி செய்தன. அதிபராக முடியாத சூழலில், நாட்டின் அதிகாரத்தை மாகாண கவுன்சிலுக்கு கொடுத்து அதற்கு தலைவராவார் அல்லது அதிபரின் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் மாற்றி, 2024-இல் மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதிபர் பதவியிலேயே தொடர்வதற்கான திட்டத்தைத்தான் புதின் மனதில் வைத்திருந்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
 அதன்படி, 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிட வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 450 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 383 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. 43 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். 24 பேர் அவைக்கு வரவில்லை. இதேபோல் 160 உறுப்பினர்கள் கொண்ட மேலவையும் இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. அடுத்ததாக புதினின் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பதுபோல இந்த சட்டத் திருத்தத்துக்கு அரசியல் சாசன நீதிமன்றமும் அங்கீகாரம் அளிக்கும் என்றே தெரிகிறது. அதன் பிறகு இந்த சட்டத் திருத்தம் மீது நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.
 இவையெல்லாம் புதினின் திட்டப்படி நடந்தால் 2024 மற்றும் 2030-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று 2036 வரை அதிபர் பதவியில் நீடிக்க முடியும். தற்போது 67 வயதாகும் புதின், தனது 83-ஆவது வயது வரை நிரந்தர அதிபராக பதவி வகிக்கலாம்.
 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான காலவரம்பு மாற்றம்தான் என்பதுபோல இந்தச் சட்டத் திருத்தம் பொதுவாகக் கூறப்பட்டாலும், அதிபர் புதினுக்காகத்தான் இந்த திருத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. "அதிபர் புதின் ரஷியாவை முழங்கால்களிலிருந்து உயர்த்தியவர். மேலும், உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்' என மேலவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது அவைத் தலைவர் வாலன்டினா மெத்வியெங்கோ கூறியதிலிருந்து இதை அறியலாம்.
 1999-ஆம் ஆண்டு பிரதமரான புதின், பிரதமர், அதிபர் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியாவின் அதிகார சக்தியாக வலம் வருகிறார். முதல் இருமுறை அதிபர் பதவியிலிருந்த பின்னர், அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காததால் 3-ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட இயலாமல் பிரதமர் பதவியைக் கைப்பற்றினார். அப்போது அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படாமலேயே புதினின் கைக்கு வந்தன. இடையில் பிரதமராக 4 ஆண்டுகள் இருந்தவர், அதன் பிறகு மீண்டும் தொடர்ந்து இருமுறை அதிபராக இருந்து வருகிறார். இம்முறை சட்டத் திருத்தத்தின் மூலம் தனது அதிபர் பதவியை தொடரும் முயற்சியை வலுப்படுத்தியுள்ளார்.
 இந்த மாற்றங்கள் அனைத்தும் புதினுக்காக என்பதையும் தாண்டி, நாட்டின் முன்னேற்றத்துக்காக, மேலை நாடுகளின் பல்வேறு தந்திரங்களையும் முறியடித்து நாட்டின் நிலைத்தன்மைக்காக என்கிற பிம்பத்தை புதினின் ஆதரவாளர்கள் கட்டமைத்து வருகின்றனர். "அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால வரம்பை இப்போது விலக்கிக்கொண்டாலும், ரஷியாவில் அரசியல் முதிர்ச்சி ஏற்படும்போது, இந்தக் கால வரம்புக்கு ஆதரவளிப்பேன்' என்கிறார் புதின்.
 மோசமான பொருளாதாரம், அரசின் ஊழல் மீதான மக்களின் நீண்டநாள் கோபம் போன்ற காரணங்கள் இருந்தாலும் புதின் இன்றும் ரஷியாவின் மதிப்புமிக்க தலைவராகவே தொடர்கிறார். அவரைத் தாண்டி புதிய அதிபரை நினைத்துக்கூடப் பார்க்க இயலாத நிலைதான் மக்கள் மனதில் இருக்கிறது. அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கான காலவரம்பை விலக்கும் சட்டத் திருத்தம் தொடர்பான ஏப்ரல் 22-ஆம் தேதி மக்கள் வாக்கெடுப்பும் அதேநிலையைத்தான் பிரதிபலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com