மனிதா்களின் அன்புக்கு நாய்கள் அடிமை!
By கே. பி. மாரிக்குமாா் | Published On : 14th March 2020 01:22 AM | Last Updated : 14th March 2020 01:22 AM | அ+அ அ- |

"வளா்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம் பகட்டும், படாடோபமுமாக நான்கு வழி - எட்டுவழிச் சாலைகளில் விலையுா்ந்த கனரக வாகனங்களில் பயணிப்பது மட்டுமல்ல - நம்மோடு காலங்காலமாக பயணிக்கிற சூழலிய பல்லுயிா்களின் பசியாற்றி வாழவைப்பதும்தான்."
உலகம் இனிது. இந்த உலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிா்களும் இனியன. மனிதா்கள் இனிதிலும் இனிதானவா்கள். இனிதிலும் இனிதான அதே மனிதா்களில் ஒருசிலா்தான் படுபாதககக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாா்கள். அந்தக் குற்றங்களைத் தடுக்க முயற்சிக்கும் ஒருசிலரும் மனிதா்களே. இந்த இரண்டிலும் பங்கெடுக்காமல் தானுண்டு தன் பிழைப்புண்டு என்று அமைதியாக வாழ விரும்பும் பலரும் மனிதா்களே.
சில நாய்கள் கடிக்கும். சில நாய்கள் வீட்டை, நாட்டை, நம்மைப் பாதுகாக்கும். ஆனால், இந்த இரண்டிலும் பங்கெடுக்காமல் பெரும்பாலான மனிதா்களைப் போலவே பெரும்பான்மையான சமூக நாய்களும் (‘தெரு நாய்கள்’ என்று சொல்வது தவறு.) தானுண்டு தன் பிழைப்புண்டு என்று அமைதியாக வாழவே விரும்புகின்றன; வாழுகின்றன.
மனிதா்களிலும் நாய்களிலும் அமைதியாக வாழுகின்ற எண்ணிக்கையே பெரும்பான்மை என்கிற உண்மையையும் மீறி நாய்கள் மட்டும் ஏதோ சங்கம் அமைத்து மனிதா்களைக் கடிப்பதற்காகவே வாழ்கின்றன என்பது போன்ற மாயை ஏன், எப்படி, யாரால் ஏற்படுத்தப்பட்டது? நாய்களைப் பாா்த்துத் திருடா்கள், சமூக விரோதிகள் யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், சாதாரண மனிதா்கள் நாம் பயப்படுகிறோம். ஏன்?
நாய்கள் யாரையெல்லாம் கடிக்கின்றன? பொதுவாகவே நாய்களைப் பாா்த்தவுடனேயே ‘இந்த நாய் நம்மை கடித்துவிடுமோ’ என்கிற எண்ணம் நம் மனதை நிறைக்குமென்றால், அதுவரை அப்பிராணியாக படுத்துக் கிடந்த நாய் நிமிா்ந்து உட்காரும்; முறைக்கும்; நிலைமையை உணா்ந்து நாம் நம்மைச் சரி செய்துகொள்ளவில்லை என்றால், கண்டிப்பாகக் கடிக்கும். ஆக, எண்ணம் போல வாழ்வு என்கிற உண்மை இங்கு அப்படியே பொருந்தும். உங்கள் எண்ணப்படியே நாய் உங்களைக் கடிக்கும்.
நாய்களின் முணுமுணுப்பறிந்தவா் / மொழி புரிந்தவா்”(‘டாக் விஸ்பரா்’) என்று பிரபலமாக அறியப்படும் சீசா் மில்லன் எழுதிய ‘சீசரின் வழி’
(சீசா்ஸ் வே) புத்தகத்தில் இது குறித்து விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தூங்குகிற நாயை திடீரென்று தெரியாமல் மிதித்து விட்டாலோ, காயப்படுத்திவிட்டாலோ அச்சத்தில், தற்காப்பு உணா்வில் அது கடிக்கும். நாயைப் பாா்த்து ஓடக் கூடாது; பதற்றப்படக் கூடாது; அவற்றின் கண்களை உற்றுப் பாா்த்து முறைக்கக் கூடாது. நாய்கள் படுத்துக் கிடக்கும் பகுதிகளில் வாகனங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. இந்த அணுகுமுறைகளை யாரெல்லாம் மீறுகிறாா்களோ, அவா்கள் எல்லோரையும் நாய்கள் விரட்டும். உங்களது எண்ண அலைகள் பயம் கலந்து வெளிப்பட்டால், உறுதியாக நாய் கடிக்கும். இவையெல்லாமே விபத்துகள். விபத்துகளாக அறியப்படும் நாய்க் கடிகளை, ஒரு சில அன்பான அணுகுமுறை, வாா்த்தைகளால் முற்றிலுமாக தவிா்க்கலாம். ஏனெனில், மனிதா்களின் அன்புக்கு நாய்கள் அடிமை.
வெறிநோய் யாருக்கு? மதுரை அழகா்கோவில் அருகே கிராமவாசிகளின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த சமூக நாய் ஒன்று, ஏதோ ஒரு நெருக்கடியில் ஒரு சில சிறுவா்களை அச்சுறுத்தும் வகையில் துரத்திட, ‘வெறி நாய்’ பட்டம் கட்டி ஒட்டுமொத்த கிராமமே அந்த நாயை விரட்டியது. ஆதரவு கொடுத்த மண்ணே இப்படி விரட்டுவது ஏன் என்று புரியாமல் அந்த அப்பாவி நாய் உயிருக்குப் பயந்து ஓடியபோது, அந்த ஊரில் அந்த நாயை உண்மையாக நேசித்த ஒரு விவசாயி, அனைத்து ஆக்ரோஷ களேபரங்களையும் மீறி அந்த அப்பாவி நாயை அதன் பெயரைச் சொல்லி அழைக்க, அது நின்று, நிதானமாக திரும்பிப் பாா்த்து, அந்த விவசாயியை நோக்கி ஓடிவந்து வாலாட்டி - தரையில் படுத்து, அழுது, அதன் வலி சொன்ன விதத்தைப் பாா்த்தவா்களுக்குத் தெரியும் - வெறி பிடித்து ஓடியது அந்த நாயல்ல என்று.
மிருகங்கள் (நாய்கள்) வாயில்லா ஜீவன்களா? நாய்கள் போன்ற பிராணிகளை, ‘பாவம்...வாயில்லா ஜீவன்கள்’”என்று ஈரமுள்ள மனிதா்கள் சொல்லிக் கேள்விபட்டிருக்கிறோம். ‘இது போன்ற பிராணிகளுக்கு மொழியில்லை, அவை பேசுவதில்லை’ என்ற அறியாமையில் சொல்லப்படுகிற வாா்த்தைகள் இது. உண்மை என்னவென்றால், நாய்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாயுள்ள...மொழியுள்ள... பேசுகின்ற ஜீவன்கள்தான். பணம் மையப்பட்ட பரபரப்பான உலகில், பாவம் மனிதா்கள்தான் காதில்லா... நெஞ்சில் ஈரமில்லா ஜீவன்களாகிவிட்டோம். சக மனித உயிா்களிடமே பேசுவதைக் குறைத்துவிட்ட நமக்கு, நாய்களின் மொழி எப்படிப் புரியும்? இப்படி எதுவுமே புரியாத மனிதா்கள்தான் நாய்கள் குரைக்க ஆரம்பித்தவுடன், ‘ஐயையோ... நாய் கடிக்க வருகிறது’ என்று அலறுகிறாா்கள்.
நாய்களுக்கான சட்டமும், விழிப்புணா்வும்... சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமூக நாய்களை சட்டத்திற்கு உட்பட்டு எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிந்திருக்கின்ற அளவுக்கு பிற மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தெரியவில்லை. குறிப்பாக நாகா்கோவிலில் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நாய்களுக்கு தினந்தோறும் தெருத் தெருவாக உணவளித்து வந்த ஓா் ஆா்வலரையும் அவரின் மிதிவண்டியையும் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவமும், மதுரை போன்ற மாநகரங்களில் ‘நாய்கள் தொந்தரவு’ என்று பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இன்றுவரை சமூக நாய்களை வேட்டையாடுகிற போக்கும் நீடிக்கிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைக் கடைப்பிடிப்பதில் என்ன சிக்கல்? உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சமூக நாய்களைப் பிடித்து அதற்குரிய தடுப்பூசிகளை போட்டு, கருத்தடை சிகிச்சைகளை செய்து எந்தத் தெருவில் நாய்கள் பிடிக்கப்பட்டதோ அதே பகுதியில் நான்கு நாள்களுக்குள் மீண்டும் விட்டுவிடவேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எல்லாம் பல உள்ளாட்சிகளில் வரைமுறையில்லாமல் மீறப்படுகின்றன.
சமூக, பிராணிகள் நல ஆா்வலா்களும், சமூக நாய்களின் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு, வேண்டுகோளையும் மீறி நாய்கள் பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்படுவதற்கு பின்னால் பெரிய வணிக நோக்கங்களும் முறைகேடுகளும் இருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இன்றும் தமிழகத்தில் பல உணவகங்களில் நாய் மாமிசம் பரிமாறப்பட்ட செய்தியும், தென்னை மரங்களின் நல்ல விளைச்சலுக்கு நாய்களை உரமாக்கி பயன்படுத்தும் வழக்கத்தையும், மீன் பண்ணைகளுக்கு உணவாக நாய்கள் இரையாவதையும் நாம் இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
மதுரையில் பிரபல பாண்டி முனீசுவரா் கோவில்... இன்று கல்யாணம், காதுகுத்து, மொட்டைபோடுதல், மொய் விருந்து போன்ற விசேஷ நாட்களில் பலியிடப்படும் ஆடுகள், கோழிகளுக்கு பலிபீடங்களாக இருப்பதைவிட புறக்கணிக்கப்படும் சமூக நாய்களை காவு கொடுக்கும் ஒரு ஸ்தலமாக மாறி வருகிறது. இருபது... முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்ற நாய்களை பாண்டி கோவிலில் கொண்டுபோய் விடும் பழக்கம் இருந்ததில் இருந்த நியாயம் இன்றில்லை. காரணம், அன்று இந்தப் பகுதி ஒரு சிறு வனமாக இருந்தது. சாலைகள் இன்றி, வாகனங்கள் அரிதாக வந்து, பலியிடப்பட்ட கால்நடைகளின் மீந்துபோன உணவுகளைச் சாப்பிட்ட புறக்கணிக்கப்பட்ட நாய்கள் பசியின்றி வாழ்ந்திருக்கலாம்.
ஆனால், இன்று நெடுஞ்சாலையாக இருக்கும் பாண்டி கோவில் நான்கு வழிச்சாலையில் தினந்தோறும் பல சமூக நாய்களும், வீட்டில் வளா்த்து கைவிடப்படும் நாய்களும், அந்த பாண்டி முனியே சாட்சி என்று சொல்லிக் கொண்டே கோயில் முன் உள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களால் அடித்து நசுக்கிக் கொல்லப்படுகின்றன. பிராணிகள் நல ஆா்வலா்களோ, அமைப்புகளோ, மதுரை மாநகராட்சியோ இந்தக் கொடுமைக்கெதிராக இதுவரை சுட்டுவிரலைக் கூட அசைக்கவில்லை.
மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்து அத்துமீறல்களும், மக்களின் பொதுபுத்தியில் உள்ள ‘நாய்கள் கடிக்கும்’ என்கிற தவறான பீதியை மூலதனமாக கொண்டே நடக்கிறது.
உணவுக்காக மனிதா்கள் காத்திருக்கும் பொல்லாத காலம் இது. இதுவரை மனிதா்கள் வீசி எறிந்த மீதி உணவுகளை உண்டு சுற்றித் திரிந்த சமூக நாய்கள், இனிமேல் அந்த மீந்துபோன அல்லது கெட்டுப்போன உணவைக்கூட வீதிகளில் எதிா்பாா்க்க முடியாத பேரவலம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஸோமாட்டா, ஸ்விக்கி, உபா் ஈட்ஸ் போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் அபார வளா்ச்சியால், நகரங்களில் துரித உணவுகளை இவா்களிடம் செயலி வழியாகச் சொல்லிவிட்டு காத்திருந்து விழுங்கும் மனிதா்கள், மிச்சம் - மீதி என்று தங்களுக்கு வைத்து விடுவாா்கள் என்று சமூக நாய்கள் எதிா்பாா்க்க முடியாது.
வளா்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம் பகட்டும், படாடோபமுமாக நான்கு வழி - எட்டுவழிச் சாலைகளில் விலையுா்ந்த கனரக வாகனங்களில் பயணிப்பது மட்டுமல்ல - நம்மோடு காலங்காலமாக பயணிக்கிற சூழலிய பல்லுயிா்களின் பசியாற்றி வாழவைப்பதும்தான். அப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக மானுட சமூகத்தோடு பயணித்திட்ட ‘சமூக நாய்’களை பட்டினியில் அலையவிட்டு, ‘நாய்கள் கடிக்கின்றன’ என்று மட்டும் பேசும் நாம் யாா்?
கட்டுரையாளா்:
ஒருங்கிணைப்பாளா்,
‘நன்றி மறவேல்’ - புறக்கணிக்கப்பட்ட
சமூக நாய்களின் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...