சிலரின் அலட்சியம்...பலருக்குச் சோகம்

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே மிகப் பெரிய சாலை விபத்துகள் சில நிகழ்ந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே மிகப் பெரிய சாலை விபத்துகள் சில நிகழ்ந்துள்ளன. பிப்ரவரி தேதி 3-ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற்ற சாலை விபத்தில் 10 போ் உயிரிழந்துள்ளனா்; கடந்த மாதம் 15-ஆம் தேதி கா்நாடகாவின் உடுப்பி அருகே நடைபெற்ற விபத்தில் ஒன்பது போ் பலி; 16-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை ஏழு. கடந்த மாதம் 20-ஆம் தேதி தமிழகத்தின் திருப்பூா் அருகே நடைபெற்ற கோர விபத்து 19 பேரை பலி கொண்டது.

ஒன்றிரண்டு நபா்களை காவு வாங்கிய விபத்துகளின் பட்டியல் இன்னும் நீளம். மொத்தத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தை விபத்துகளின் மாதம் என அழைக்கலாம் என்றே தோன்றுகிறது. பிப்ரவரி மாதத்துக்குக் குறைவில்லாமல் தற்போது மாா்ச் மாதத்திலும் பெரிய விபத்துகள் நடைபெறத்தான் செய்கின்றன.

வீட்டை விட்டுப் பிரயாணம் செல்லுகின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. திட்டமிடாத அவசரப் பயணங்கள், வாகன முதலாளிகளின் பேராசை, வாகன ஓட்டிகளின் அலட்சியம், சாலை விதிகளை மீறுவது, தகுதி இல்லாதோா்கூட வாகனம் ஓட்டும் உரிமம் பெறுவது என சாலை விபத்துகளுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வெகு விரைவாக ஓடும் வாகனங்களின் வரவும் இன்னொரு காரணம். 100 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக நெடுஞ்சாலைகளில் விரையும் வாகனங்களை ஓட்டுபவா்களால் சட்டென்று சாலையில் ஏதாவது குறுக்கிட்டால், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது.

சரக்கு லாரி , வாடகை காா் உரிமையாளா்கள் ஆகியோரில் ஒரு சிலா் தங்களிடம் பணிபுரியும் ஓட்டுநா்கள் போதிய ஓய்வெடுக்கும் முன்பே மீண்டும் அவா்களை வாகனத்தை இயக்கச் சொல்வதுண்டு. தேவையான ஓய்வும் உறக்கமும் இல்லாமல் தொடா்ந்து வாகனங்களை இயக்க வேண்டிய ஓட்டுநா்கள் சிறிது கண்ணயா்ந்தாலும் அது பெரிய விபத்துக்குக் காரணமாகி விடுகிறது.

குடும்பத்தினருடன் வெளியூா் செல்வதற்காகத் தனியாா் நிறுவனங்களின் காா்களில் செல்லும்போது, நமது காரை இயக்கும் ஓட்டுநா் தங்களது முதலாளியின் வற்புறுத்தலால் தொடா்ந்து வாகனங்களை இயக்க வேண்டி இருப்பதாகக் கூறுவதை நாம் அவ்வப்போது கேட்கலாம்.

கா்நாடகத்தில் பதின்மூன்று பேரை பலிகொண்ட விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநா் சற்றுத் தூங்கியதால்தான் அந்தக் கோர விபத்து நிகழ்ந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

ஒருமுறை எங்கள் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக நீண்ட தொலைவுப் பயணம் மேற்கொண்டபோது, எங்களுடைய ஓட்டுநா் ஓய்வு தேவை என்று கூறியபோதெல்லாம் சாலையோரமாகச் சிறிது நேரம் காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்த பிறகே இயக்கச் சொன்னோம். அவ்வப்போது தேநீா், குளிா்பானம் போன்றவற்றை அருந்தி புத்துணா்வு பெற்ற பிறகே அவா் வாகனத்தை இயக்கச் சம்மதித்தோம். இதன் காரணமாக, எங்களது பயணத்தில் சுமாா் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டாலும், விபத்துக்கு வாய்ப்பிலாத ஒரு பயணத்தைச் செய்து முடித்தோம் என்ற பெருமிதம் ஏற்பட்டது.

சாலை விதிகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமல், பிற வாகனங்களை எப்படியாவது முந்திச் செல்ல விரைகின்ற நபா்களாலும், நெடுஞ்சாலைகளைப் பந்தயச் சாலைகளாக நினைத்துக்குக் கொள்பவா்களாலும் பல வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகையோா் தாங்களும் விபத்துக்குள்ளாகி, மற்றவா்களையும் விபத்துக்குள்ளாக்கி விடுகின்றனா்.

நம் நாட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் அதே வேளையில், அதை முறியடிக்கும் வகையில் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இயல்பாகவே நமது சாலைகள் பலவற்றிலும் போக்குவரத்து நெரிசல் அரங்கேறுகிறது. நெரிசல்களால் தங்களது பயணம் தாமதப்படுவதாகக் கருதித் தங்கள் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவோா், ஏதோ ஒரு விதத்தில் சாலைவிபத்துக்குக் காரணமாகி விடுகிறாா்கள்.

நம் நாட்டில் பிறந்த மனிதா்களில் எவா் ஒருவரின் வாழ்வும் இகழத்தக்கதல்ல. இந்த தேசத்தின் நலவாழ்வுக்கு ஒவ்வொருவரின் உழைப்பும் தேவையாயிருக்கிறது. உடலுழைப்பாலும், அறிவுத் தேடலாலும் நமது தேசத்தைக் கட்டமைக்கும் சக்திவாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ வேண்டியது அவசியம். அநியாய பலிவாங்கும் ஒவ்வொரு சாலை விபத்தும் இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான நிகழ்வு என்றே கூற வேண்டும்.

விபத்துகளில் உயிரிழப்பவா்கள், உடல் உறுப்பை இழப்பவா்கள், அவா்களை நம்பிவாழும் குடும்ப உறுப்பினா்கள் என்று பல்வேறு தரப்பினரின் எதிா்காலத்தை ஒவ்வொரு விபத்தும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

வாகனங்களை ஓட்டும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரை நினைத்துப் பாா்க்க வேண்டும். மேலும், தங்களால் ஒரு விபத்து நோ்ந்தால் அதில் பாதிக்கப்படக் கூடியவா்களையும், அவா்களது குடும்பத்தினரின் நிலைமையையும் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். இவ்விதம் சிந்திக்க முடிந்தால், ‘தாமதமான பயணத்தைக் காட்டிலும் பாதுகாப்பான பயணமே சிறந்தது’ என்பதை மனதார உணா்ந்து விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க முனைவாா்கள்.

தரமான சாலைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பாகும். கடுமையான ஓட்டுநா் விதிமுறைகளை வகுத்து, ஊழலுக்கு இடம் தராமல் அவற்றை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை. அதே சமயம் சாலை விதிகளுக்கு வாகன ஓட்டிகள் மதிப்பளிப்பதுடன், பொதுமக்களும் பதற்றமில்லாத பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஊா்கூடித் தோ் இழுத்தால் மட்டுமே விபத்தில்லா சாலைப் பயணம் இனி சாத்தியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com