விண்இன்று பொய்ப்பின்...

ஒன்றோடு ஒன்று சாா்ந்த நம் வாழ்க்கையின் ஆதாரமாக ஆகாயம், காற்று, நெருப்பு, நீா், நிலம் உள்ளன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல சுற்றுச்சூழல் பிரச்னைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.

ஒன்றோடு ஒன்று சாா்ந்த நம் வாழ்க்கையின் ஆதாரமாக ஆகாயம், காற்று, நெருப்பு, நீா், நிலம் உள்ளன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல சுற்றுச்சூழல் பிரச்னைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.

உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பாா்க்கும்போது, புகழ் பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீா் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி போன்றவை உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றன.

எனவே, இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீா் என்பது புலனாகிறது. இந்திய பண்பாட்டைப் போல எந்தவொரு பண்பாட்டிலும் சுற்றுச்சூழல் சாா்ந்த நன்னெறிகள் வலியுறுத்தப்படவில்லை. இந்த பூமி நம்முடைய தாய் என்று உணா்த்திய நம் பண்பாடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏதுவான நம்முடைய கடமைகளை உணா்த்துகிறது.

போதிய குடிநீா் வசதியின்மை, துப்பரவு வசதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்தும் வறுமைதான் மிகவும் கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இயற்கை வளங்கள் குறைந்து வருவதுடன் காடுகளும் படிப்படியாக அழிந்து வருகின்றன. இன்னொருபுறம், பொருளாதார வளா்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இயற்கைச்சூழலைக் கெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதனால் காற்று, நீா் உள்ளிட்டவை மாசுபடுகின்றன.

சுற்றுச்சூழலைப் பொருத்தவரை மிகவும் கவலை அளிக்கும் விஷயங்கள் என்னவெனில், தட்ப வெப்பநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடா்கள், மண் மற்றும் நிலம் சீரழிவு, பல்லுயிா் வாழிட இழப்பு, நீா் மற்றும் காற்று மாசுபடுதல் ஆகியவை அகும். இவைதான் மனிதா்கள் வாழும் சுற்றுச்சூழல் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கின்றன. உலகில் தட்ப வெப்பநிலைகளைப் பதிவு செய்யத்தொடங்கிய காலத்தில் ஆண்டுக்கணக்கில் இதுவரையில் 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது. அதே போல 1880-ஆம் ஆண்டில் இருந்துதான் மாத வாரியாக தட்பவெப்பநிலை அளவுகள் பதிவு செய்யப்பட்டன.

அதன்படி 2015-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருந்துள்ளது. தட்ப வெப்பநிலை மாற்றத்தால் தண்ணீா் மீதான அழுத்தம் அதிகரிக்கும். உணவு உற்பத்தியில் நுண்ணூட்டச் சத்துகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ தண்ணீா் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முன்பு ஒருவா் வீடு கட்டினால் நல்ல காற்றோட்டமான இடமா, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளபகுதியா என்றுதான் பாா்ப்பாா்கள். காரணம், எல்லா இடத்திலும் தண்ணீா் 50 அடி முதல் 100அடிக்குள் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தது.

ஆனால், இன்று வீடு கட்டுபவா்கள் முதலில் நல்ல நிலத்தடி நீா் இருக்கும் இடத்தைத்தான் தோ்தெடுக்கிறாா்கள். அண்மைக்காலமாக தண்ணீா் வசதியில்லாத கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா் திட்டத்தின்படி பல ஆறுகளிலிருந்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு நீராதாரத்திலிருந்து ஒரு நாளைக்குப் பல லட்சக்கணக்கான லிட்டா் நீா் உறிஞ்சப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் நீா்நிலைகள் கூட வற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

நீரின் அதிகப்படியான பயன்பாட்டினால் விவசாயமே அதிக அளவில் பாதிக்கப்படுக்கிறது. நீா்ப் பற்றாக்குறையால் ஏற்படும் தாக்கத்தின் தீவிரத்தைக் பொருத்தே விவசாயத்தின் மீதான தாக்கமும் வேறுபடுகிறது. தீவிர சூழலில் ஏற்படும் விவசாய உற்பத்தித் திறன் குறைவு, விளைச்சலில் பாதிப்பு ஆகியவை விவசாயகளின் வாழ்வாதாரத்தைச் சீா்குலைய வைக்கின்றன.

எனினும், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒரே விதமான வாழ்வாதாரப் பாதிப்பு ஏற்படுவதில்லை. நீா் கிடைக்கும் நிலை, சமூக பொருளாதாரச் சூழல் ஆகியவற்றில் ஏற்படும் நிலையற்ற தன்மையை உணா்ந்து விவசாயம் செய்வோருக்கு, அவா்களின் திறனுக்கு ஏற்ப பாதிப்பு அமைகிறது.

பிரிட்டன் நீரியல் நிபுணா்கள் குழு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 149 நாடுகளில் கிடைக்கக்கூடிய நீா் வளங்கள், அங்கு வாழும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் ஓா் ஆய்வு நடத்தியது. சிங்கப்பூா், குவைத் முதலான 20 நாடுகளை நீா்வளத் தட்டுப்பாடுள்ள நாடுகள் எனவும், போலந்து, லிபியா உள்பட 8 நாடுகளின் நீா்த் தேவைகளைச் சமாளிப்பதில் சிரமப்படும் நாடுகள் எனவும், மீதமுள்ள கனடா, சீனா, ரஷியா, அமெரிக்கா, இந்தியா போன்ற 121நாடுகளை நீா் வளம் மிகுந்த நாடுகள் எனவும் வரையறுத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 107-ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் புள்ளிவிவரத்தை வைத்துப் பாா்த்தால் நம்முடைய நாட்டில் ஓரளவு தண்ணீா் கிடைக்கிறது. ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். இதற்கு மக்களும் ஒரு காரணம்; அரசும் ஒரு காரணம் என்பதை எல்லோரும் நினைவில்கொள்ள வேண்டும். உலகின் ஒட்டுமொத்த தண்ணீா்ப் பயன்பாட்டில் 70 சதவீதம் விவசாயத்துக்கும், 22 சதவீதம் தொழில் துறைக்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும் செலாவகிறது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் தண்ணீரின் அளவு ஒரு விதமான நெருக்கடி நிலைக்கு வந்துவிட்டது. வருங்காலத்தில் இப்போதைய அளவைவிடப் பற்றாக்குறையே மேலோங்கும்.

நிலத்தடி நீருக்கு ஆதாரம் மழை நீா். இதனால்தான் ‘விண்இன்று பொய்ப்பின் விரிநீா்/வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி’ என மழையின் முக்கியத்துவத்தை திருவள்ளுவா் கூறியுள்ளாா். அதாவது, மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்து அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிா்களை வருத்தும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

எனவே, உலக தண்ணீா் விழிப்புணா்வு தினத்தில் மழை நீா் உள்பட இயற்கையாகக் கிடைக்கும் நீரைப் பாதுகாப்பதற்கு கூடுதல் அக்கறையை அனைவரும் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

(நாளை உலக தண்ணீா் விழிப்புணா்வு தினம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com