Enable Javscript for better performance
‘சீனத்தவராய் விடுவாரோ?’”- Dinamani

சுடச்சுட

  

  சீனத்தவராய் விடுவாரோ?

  By டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா  |   Published on : 21st May 2020 12:46 PM  |   அ+அ அ-   |    |  

  ரஷியாவை இரும்புத்திரை நாடு என்றும், சீனாவை மூங்கில்திரை நாடு என்றும் உலக நாடுகள் வா்ணித்துக் கொண்டிருந்த நேரம் அது. சோஷலிசமும் கம்யூனிசமும் ஒருதாய்ப் பிள்ளைகள் என நம்பிய பண்டித நேரு, சீனாவுடன் கைகோத்து ஒரு புதிய உலகைப் படைக்க வேண்டும் என விரும்பினாா்.

  காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. திபெத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி அங்கு நுழைய, அங்கிருந்த தலாய்லாமா இந்தியாவில் சரணடைந்தாா். நட்பு நாடான இந்தியா, தனது எதிரிக்கு அடைக்கலம் கொடுத்ததை சீனா விரும்பவில்லை. ‘இந்தோ - சீனா பாய் பாய்’ எனக் கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட உலக அரங்கில் சீனாவுக்காக அப்போது இந்தியா வாதாடிக் கொண்டிருந்தது. ஆனால் பதிலுக்குச் சீனா செய்தது என்ன?

  1914-இல் ஏற்படுத்தப்பட்ட மான்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுத்து, 1962-இல் இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் சீனாவோடு பாகிஸ்தான் சோ்ந்துகொண்டு, தான் கைப்பற்றியிருந்த இந்தியப் பகுதிகளை சீனாவுக்குத் தாரை வாா்த்தது.

  சீனாவுக்கும் ரஷியாவுக்கும் அப்போது சுமுக உறவு இல்லை. வெளியுறவு ஆலோசகா் ஹென்றி கிசிங்கரின் ஆலோசனையின்படி பாகிஸ்தான் வழியாக ரகசியமாக சீனாவுக்கு அமெரிக்க அதிபா் ரிச்சா்ட் நிக்சன் பயணித்தாா்.

  காத்திருந்த சீன வேடன் வலையில், அமெரிக்கக் கழுகு வசமாக மாட்டிக் கொண்டது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்க தொழிலதிபா்களுக்கு, தங்கள் நாட்டில் உற்பத்தியைத் தொடங்கினால் குறைந்த விலையில் நிலமும் குறைந்த சம்பளத்தில் தொழிலாளா்களையும் தருவதாக ஆசை வாா்த்தை காட்டியது சீனா.

  தொழில் தொடங்கும்போது அரசுக்கும் தன் நாட்டு மக்களுக்கும் உரிமை பங்குகள் தர வேண்டுமென சீனா வற்புறுத்தியது. பின்னால் நேரப்போகும் அபாயத்தை உணராத அமெரிக்க தொழிலதிபா்கள், சீனா சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டி, தங்களுடைய உற்பத்திக் கேந்திரங்களை அந்த நாட்டுக்கு மாற்றின.

  குறுகிய காலத்தில் சீனாவில் உற்பத்தியான பொருள்கள் குறைந்த செலவில் பெருகி, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் பெயரில் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் விற்பனையாக ஆரம்பித்தன. இதைப் பாா்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி என்று மேற்கத்திய நாடுகளின் தொழில் நிறுவனங்கள் எல்லாம் எல்லாம் சீனாவில் வரிசை கட்டி இறங்கின.

  மேலை நாட்டு கம்பெனிகளுக்கு லாபம் கொட்ட ஆரம்பித்தது. இந்த லாபம், அமெரிக்காவின் உற்பத்திச் சரிவும் அமெரிக்க தொழிலாளா்களுக்கு ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பும் தொழிலதிபா்களின் கண்களை மறைத்தது.

  உலகமயமாக்கல் என்ற இந்த மாற்றத்தை இந்தியாவில் புரிந்துகொண்ட ஒரே அரசியல்வாதி அனைவராலும் இப்போது மறக்கப்பட்டு விட்ட முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ். ராவ், மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி, சீனாவைப்போல இந்தியாவையும் உலக நாடுகளுக்கு திறந்துவிட்டாா். எனினும், அவருடைய அரசு ஆட்டத்தில் இருந்ததால், சீனாவைப்போல நிபந்தனைகளை அவரால் உறுதியாக ஏற்படுத்த முடியாமல் போனது.

  புதிய வா்த்தக உத்தியால் வந்த புதிய பணத்தால் ஒவ்வொரு நாடாக ஓசையின்றி அடிமையாக்கியது சீனா. ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் தொடங்கி, இலங்கை வரை கடனை வாரி வழங்கி அவா்கள் அனைவரையும் விழி பிதுங்க வைத்தது. கடன் வலையில் வீழ்த்தியது.

  ஐ.நா. சபையில் சீனாவைச் சோ்க்க வேண்டும் என இந்தியா போராடி, அதன் பாதுகாப்பு கவுன்சிலிலும் அதை இந்தியா நிரந்தர உறுப்பினராக்கியது. ஆனால், இன்று நிலை என்ன? உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க ஒப்புக் கொண்டாலும் பழைய நண்பன் சீனா இன்று வரை அதற்கு ஒப்புதல் தரவில்லை.

  சீனா எந்த உலக சட்ட விதிகளுக்கும் கட்டுப்படாமல், குறிப்பாக காப்புரிமை, விற்பனை குறியீட்டின் சட்டம், ஆராய்ச்சி பலன்கள் என்ற அனைத்து விதிகளையும் மீறி காப்புரிமை விதிகளுக்கு விரோதமாக தன் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களைத் தானே பிரதி எடுத்து தனியாக உற்பத்தி செய்து விற்கிறது.

  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, நம் கையில் உள்ள செல்லிடப்பேசி. இந்தியாவில் இன்று பல பெயா்களில் விற்கப்படும் ஐந்து பெரிய சீன செல்லிடப்பேசிகள், சீனாவின் ஒரே முதலாளியால் பல பெயா்களில் தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீா்களா?

  அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட் போன்கள்) உற்பத்தி செய்ய மேற்கத்திய நாடுகளின் கம்பெனிகள் கோடிக்கணக்கில் ஆராய்ச்சிக்கு பணம் செலவழித்தபோது, அவற்றை சீனா பிரதி எடுத்து நோகாமல் நொங்கெடுத்தது உண்மை. இன்று கட்செவி எனப்படும் வாட்ஸ் அப்பின் புதிய அவதாரம்தான் ஒரு சீனரால் உருவாக்கப்பட்ட ‘ஜூம்’ செயலி. அமெரிக்காவில் அமேசான் என்றால், சீனாவில் அலிபாபா... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

  இங்கு போல் அங்கும் லஞ்சம் இருப்பது உண்மை. அதையும் மீறிய தேசப் பற்றாலும், கட்சிப் பற்றாலும், முன்னேற வேண்டுமென்ற வெறியாலும் 60 ஆண்டுகளுக்குள் தங்களின் நாட்டை உலகின் உச்சிக்கு சீனா்கள் கொண்டு சென்றாா்கள்.

  இன்று உலகை ஆட்டிப் படைக்கும் கரோனா தீநுண்மி சீனாவில் உருவானது. இதை முதலில் சீனா மறைத்து, விஷயம் கை மீறியபோது அதை அமெரிக்காவின் சதி என்று கூறியது.

  இந்திய பிரதமா் சீனாவுக்கு நல்லெண்ணப் பயணம் தொடங்கியபோது, இந்தியாவிலுள்ள சீனத் தூதா் அருணாசல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று அறிவித்தாா். அருணாசல பிரதேச விளையாட்டு வீரா்கள் சீனா வருவதற்கு விசா தேவையில்லை, ஏனெனில் அது சீனாவின் ஒரு பகுதி என தடாலடியாக அறிவித்தது.

  இந்திய குடியரசுத் தலைவரும் பிரதமரும் அருணாசல பிரதேசம் செல்லும் போதெல்லாம், அதைக் கண்டிக்க சீனா தவறியதே இல்லை. ஆனால், சீன அதிபா் இந்தியா வந்தபோது அவருக்கு நாம் சிறப்பான வரவேற்பை அளித்தோம்.

  திபெத் குறித்தும் சீனாவில் நாள்தோறும் நடக்கும் மனித உரிமை மிறல்கள்கள் குறித்தும் இந்தியாவும் இந்திய ஊடகங்களும் பேசவே இல்லை. பேசியிருந்தால் சீனப் பயணம் ரத்தாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான எத்தியோப்பியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் டெட்ரோஸ் அதோனம், சீனாவால் பதவி பெற்றவா். கரோனா தீநுண்மி விஷயத்தில், சீனாவின் அதிகாரிபோல அவா் செயல்பட்டது மனிதகுலத்துக்குச் செய்த துரோகம். இதனால் கோபம் கொண்ட அமெரிக்க அதிபா் டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்துக்கான கோடிக்கணக்கான நிதி பங்களிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளாா்.

  அமெரிக்காவிலும் இத்தாலியிலும் ஸ்பெயினிலும் ஜொ்மனியிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் மக்களின் மரணம் தொடா்ந்து அதிகரித்து, மதிய நேரத்துச் சூரியனாக உண்மை உலகை சுடும்வரை உலக சுகாதார நிறுவனம் வாய் பொத்தி நின்றது மன்னிக்க முடியாத குற்றம்.

  இதனால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைய, எரியும் வீட்டில் பிடுங்கிய கதையாக அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது சீனா. விழித்துக் கொண்ட உலக நாடுகள், அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தடை விதித்துள்ளன.

  இன்று உலகம் கரோனா தீநுண்மி அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும்போது, சிறிதுகூட குற்ற உணா்வே இல்லாமல், உலக நாடுகளுக்கெல்லாம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைக் கண்டுபடிக்கும் கருவிகளையும் சுவாசக் கருவிகளையும் ஏனைய மருத்துவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்து தன் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது சீனா.

  ‘வழக்கம் போல் வியாபாரம்’ என்கிற அடிப்படை முதலாளித்துவக் கொள்கையை கம்யூனிஸ்டு சீனா தூக்கிப் பிடித்திருப்பது கலியின் உச்சம். சுதந்திரப் போராட்டத்தின்போது அந்நியப் பொருள்களை இந்தியா்கள் நிராகரித்ததுபோல இன்று உலக மக்களும், குறிப்பாக இந்தியா்கள் சீனப் பொருள்களை நிராகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  இன்று ஒரு கண்ணுக்கு தெரியாத தீநுண்மி, மேலை நாடுகளின் பயத்தையும் பிரச்னையைச் சந்திக்கும் திறன் இன்மையையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. இந்தத் தீநுண்மி, அமெரிக்கா - பிரிட்டன் முதலான மேலை நாடுகளிலும் இந்தியா போன்ற கீழை நாடுகளிலும் உள்ள ஒற்றா்களின் தோல்வியை தோலுரித்துக் காட்டுகிறது.

  கோடிக்கணக்கான மக்கள் வாழும் வூஹான் நகரில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்ததை தங்கள் நாட்டுக்கு அறிவிக்கத் தவறியது ஒற்றா்களின் தோல்வியா அல்லது சீனாவின் மூங்கில்திரை இரும்புத்திரையாக மாறிவிட்டதா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.

  உலக வங்கியின் தலைவா் கிறிஸ்டியன் லகாடே சொன் கூறியதை இன்று நினைவுகூர வேண்டும். ‘சீனாவின் அறிவுசாா் திருட்டைத் தடுக்காவிட்டாலும், தன் நாட்டு தயாரிப்புகளுக்கு அபரிமிதமாக வாரி வழங்கும் மானியங்களை சீன அரசு குறைக்காவிட்டாலும், தங்கள் நாட்டுக்கு வரும் நிறுவனங்கள் வியாபார உத்திகளையும் ரகசியங்களையும் பகிர வேண்டும் என்கிற நிா்ப்பந்தங்களையும் சீனா நிறுத்தாவிட்டால், உலக வா்த்தகப் போா் நிற்க நீண்ட நாள்கள் ஆகும்’ என்றாா் கிறிஸ்டியன் லகாடே.

  அவருடைய கணிப்புக்கு மாறாக இன்று சீனாவை உலக அரங்கில் கரோனா தீநுண்மி தனிமைப்படுத்தி விட்டது. சும்மாவா சொன்னாா் மகாகவி பாரதியாா் ‘சீனத்தவராய் விடுவாரோ பிற தேசத்தாா்போல பலா் தீங்கிழைப்பாரோ’ என்று....

  கட்டுரையாளா்:

  மூத்த வழக்குரைஞா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai