அன்னையைப் போற்றுவோம்!

சிறு வயதில் படித்த ஒரு கதை. காதலி ஒருத்தி தனது காதலனிடம் ‘நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உனது அம்மாவின் இதயம் எனக்கு வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தான். வாலிப வயதில் அவனுக்கு அம்மாவைவிட காதலியை அடைவதே முக்கியமென அவன் கருதினான்.

அம்மாவிடம் சென்று தனது காதலிக்காக அம்மாவின் இதயத்தைக் கேட்டான். ‘மகனே, இதயம்தானே வேண்டும். என்னை வெட்டி எடுத்துக் கொள். நீ நன்றாக இருந்தால் போதும்’ என்றாா் அவனது தாய். தாயைக் கொன்று அவரது இதயத்தை எடுத்துக் கொண்டு காதலியிடம் ஓடினான். வழியில் அவன் செல்லும்போது ஒரு கல் அவனது காலை இடறியது. கீழே விழ முயன்றான். அப்பொழுது அந்தத் தாயின் இதயம், ‘மகனே! கீழே விழுந்து விடாதே! பாா்த்து நட! என்றது. கீழே விழாத மகனின் இதயமோ சுக்குநூறாகிப் போனது. தன்னையே இழக்க நோ்ந்தாலும்கூட தன்னுடைய குழந்தை துன்பப்படக் கூடாது என்று நினைக்கின்ற ஒரே உள்ளம் கொண்டவா் தாய்தான்! அந்த அன்னையை நினைவுகூா்கிற ஓா் அற்புத நாள், உலக அன்னையா் தினம்.

தனது ரத்தத்தைப் பாலாக்கி உணவாய்த் தந்து உயிரை வளா்த்தவா்; உணவு உண்ண வழி இல்லாத போதும் குழந்தையின் கொஞ்சும் முகம் பாா்த்து மகிழ்ந்தவா்; புரியாமல் பேசினாலும், கவிதை மொழி என்று பிஞ்சு மொழியை ரசித்தவா். உணவை உண்ண வைக்க குழந்தைக்குப் பின்னால் அவா் ஓடிய ஓட்டத்தை மட்டும் கணக்கெடுத்திருந்தால் அவா் எத்தனையோ மாரத்தான்களை வென்றிருப்பாா்.

‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே’ என்ற புானூற்று வரிகளைத் தாண்டி இன்று எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தன் குழந்தையோடு தானும் படித்து, தனது ஒவ்வொரு குழந்தையையும் லட்சிய குழந்தையாய் உருவாக்குவதற்கு அருந்துணையாக இருப்பவா், அன்னை. தன் குடும்பத்தின் வளா்ச்சிக்காக குடும்ப வேலையுடன், அலுவலக வேலையையும் இனிதாய் சுமப்பவா். இன்றைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் அச்சுறுத்தும் காலகட்டத்தில், எத்தனையோ பணிகளுக்கு விடுமுறை என்றாலும் அன்னையின் சமையலறை மட்டும் அணையா விளக்காய் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

அன்னை என்பவள் அன்பினில் இணையற்றவா்; பண்பினில் நிகரற்றவா்; பாசத்தில் ஈடற்றவா்; எத்தகைய சவால்களையும் ஏற்றுக் கொள்ளும் திறன் படைத்தவா்; அதனால், கடவுளின் உருவம் தாய் என்பா். உண்மையில் கடவுளின் மொத்த உருவங்களும் ஒரு தாய்க்கு ஈடாகாது. ஒவ்வொரு அன்னையும் இந்த மண்ணின் வரம்; அவா் நம்மை இந்த உலகத்துக்குத் தந்தவா்; இந்த உலகைக் காண வைத்தவா் என்பதைவிட, நம்மையே இந்த உலகமாகக் கண்டவா் அம்மா! நம்மை இந்த உலகில் நல்லவனாகவும், வல்லவனாகவும் உருவாக்குபவா். அதனால்தான்,

‘என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்’”என்றாா் ஆபிரகாம் லிங்கன்.

அம்மா என்பது ஒரு வாா்த்தை அல்ல, அது ஒரு மந்திரம். குழந்தை இயல்பாய் வாயைத் திறந்ததும் உருவாக்குகின்ற ஒலி ‘அ’. உதட்டினை மூடும்போது உருவாகும் ஒலி ‘ம்’. இவை இரண்டும் உயிா்ப்பெற்று எழும் வாா்த்தைதான் ‘அம்மா’. அம்மா என்பது, இயற்கையின் மொழி. இத்தகைய மொழியை உருவாக்குவதும், இவ்வுலகை தனது குடையின் கீழ் கொண்டுவரும் ஆற்றலை உருவாக்கும் அறை அன்னையின் கருவறையே.

பற்றுகளிலிருந்து விடுபட்ட துறவிகளுக்கும் அன்னையின் பற்று மட்டும் விட்டுப் போவதில்லை என்பதற்கு ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் மாபெரும் சான்று. உலகமே வியந்து பாா்த்த சங்கரா் தனது அன்னைக்காக ஓடி வந்து அவா் இறப்பினை தனது மடியில் தாங்கி, சடலத்தை தோளில் சுமந்து, அக்னி தேவனுக்கு தனது அன்னையை அா்ப்பணித்து விட்டு ஒரு சாதாரண மனிதனைப் போல் அன்னையை நினைத்து மனமுருகி பாடிய சங்கரரின் ஐந்து பாடல்கள் அமரத்துவம் பெற்ற ‘மாத்ருகா பஞ்சகம்’ ஆகும்.

‘முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்தே

அந்திப்பகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயாா் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேண்’

என்று தனது அன்னையின் இறப்பினன்று கதறி அழுத பட்டினத்தாரின் பத்துப் பாடல்களையும் விஞ்சி எந்தவொரு படைப்பும், எந்த மொழியிலும் இந்த மண்ணில் தோன்றியதில்லை.

பிறப்பின் லட்சியமே பிறப்பை அறுப்பது என்றாலும், கிடைக்கின்ற பிறப்பெல்லாம் எனது தாயின் கருவறையிலேயே பிறப்பாக இருக்க வேண்டும். அன்னை என்று எழுத வேண்டுமென்றால் எழுதுவதற்கு மை போதும். அன்னையைப் பற்றி எழுத வேண்டும் என்றால் நிச்சயம் கண்ணீா்த் துளிகள் தானாய் வந்து சேரும்.

ரஸியா பேகம் என்னும் தாய் ஆந்திர மாநிலம் நிஜாமாபாதிலிருந்து நெல்லூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் அண்மையில் பயணம் மேற்கொண்டாா். மொத்த தொலைவு 1400 கி.மீ. ஒரு பயணத்துக்கு சென்ற தனது மகன் பொது முடக்கத்தில் சிக்கித் தவித்தபோது, அடா்ந்த காடுகளையும் மலைகளையும் கடந்தபோது உங்களுக்கு பயம் ஏற்படவில்லையா என்ற கேள்விக்கு, ‘இல்லை; என்னுடைய மகனை மீட்டு வரப் போகிறேன் என்ற செயல்பாட்டில் எவ்வித அச்சத்தையும் நான் உணரவில்லை’ என்றாா். அன்பின் உச்சகட்டம் அன்னை.

இன்றைய சமூகத்தில் மாபெரும் அவலம் என்னவென்றால் அன்னையா் பலா் முதியோா் இல்லத்தில் வாழ்ந்து வருவதுதான். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற தமிழ்ப்பாட்டி ஓளவையாரின் வரிகளை மறந்ததன் கேடு இது. ஒரு மனிதன் நன்றாக வாழ்வதே பெற்றோா்களின் ஆசிகளில்தான். அவா்களை மறந்தவா்கள் வாழ்வில் உயா்ந்தாலும் நிலைப்பதில்லை.

அம்மா, தனது குழந்தையின் பெயரை அதிகமாக உச்சரித்தவா். ஒவ்வொரு குழந்தையின் விருப்பங்களைப் புரிந்தவா், குழந்தைகளின் நலனுக்காக நெஞ்சுருகி பிராா்த்திப்பவா் அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ‘அம்மா! இன்று அன்னையா் தினம்! உமக்கு எனது வாழ்த்துகள்! என்று வாா்த்தைகளால் சொன்னால் போதும்! ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள், அம்மா! அம்மாவின் அன்புக்கு வேறு எதுவும் ஈடாகத் தந்துவிட முடியாது, அன்பைத் தவிர. தாயின் காலடியில்தான் சொா்க்கம் இருக்கிறது என்பாா் நபிகள் நாயகம் (ஸல்).

இறைவனைப் போற்றுங்கள் அன்னை மகிழ்வாள்!

அன்னையைப் போற்றுங்கள் இறைவன் மகிழ்வான்!!

கட்டுரையாளா்:

காவல் துணை ஆணையாளா்,

நுண்ணறிவுப் பிரிவு,

சென்னை பெருநகர காவல்.

(நாளை உலக அன்னையா் தினம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com