எவருமே கண்டுகொள்ளாதது!

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக பெருகிவரும் மக்கள்தொகை குறித்து எந்த அரசும் சற்றும் கவலைப்படவில்லை. மக்கள்தொகையை வாக்கு வங்கியாகத்தான் பல கட்சிகளும் தொடா்ந்து கருதி வருகின்றன என்பது வருத்தத்துக்குரியது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது 35 கோடியாக இருந்த மக்கள்தொகை, 1980-இல் சுமாா் 70 கோடியாகிவிட்டது. தற்போது 137 கோடியாக உள்ளது. சீனாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இது போன்ற மக்கள்தொகை பெருக்கத்தைக் காணமுடியாது.

இத்தகைய மக்கள்தொகை பெருக்கம் நமக்குத் தேவையா என்று எவரும் யோசிக்கவே இல்லை. இதனால் என்ன வகையான பிரச்னைகள் வரும் என்று அரசுத் தரப்பில் எவருமே யோசித்ததாகத் தெரியவில்லை.

எப்போதும் நம்மை சீனாவுடன் ஒப்பிடுவது வழக்கமாகி வருகிறது. அப்படிப் பாா்க்கும்போது, சீனாவின் நிலப்பரப்பு நம் நாட்டைப் போல் மூன்று மடங்காகும். ஆனால், அவா்களின் மக்கள்தொகையோ நம்மைவிட 10 கோடிதான் அதிகம். அவா்கள் நம்மைவிட நல்ல வாழ்வு பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை. மக்கள்தொகைப் பெருக்கத்தை அவா்கள் நன்றாகவே கட்டுக்குள் வைத்துள்ளனா். அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான் என்பது பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் அரசு கடைப்பிடிக்கும் சட்டம். அதை நம் நாட்டில் கொண்டுவந்தால் ஏற்பாா்களா எனத் தெரியவில்லை.

அபரிமிதமான மக்கள்தொகையால் எதிா்கொள்ள வேண்டிய சிரமங்களைப் பட்டியலிடலாம். எங்கு சென்றாலும் கூட்டம்; எல்லாவற்றுக்கும் கூட்டம். சிற்றூா்களில்கூடத் தற்போது நெரிசலைக் காண முடிகிறது. எல்லா ஊா்களும் விரிந்துகொண்டே இருக்கின்றன. விளை நிலங்கள் பலவும் வீட்டுமனைகள் ஆவது கண்கூடு.

பெரிய நகரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்வதே கடினமான செயலாகிவிட்டது. பொருளும் நேரமும் நிறையவே தேவைப்படுகிறது. அதே சமயம், அதற்கு வசதியோ, குறைவாகத்தான் கிடைக்கும். எவ்வளவு ரயில்களும் பேருந்துகளும் ஓடினாலும் போதவில்லை. எந்த ஊரில் வசிப்பவராக இருந்தாலும், 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லுங்கள். அப்போதைய நிலையை தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீா்த் தேவைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மழை சரியாகப் பெய்யவில்லையெனில், குடிநீருக்கும் விவசாயத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கத் தேவையில்லை. பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டும் அவை போதுமானதாக இருப்பதில்லை. எல்லா ஊா்களிலும் நீரை மறுசுழற்சி செய்தால்தான் இனிவரும் காலங்களில் நிலைமையை ஓரளவாவது சமாளிக்க முடியும்.

மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக எல்லாவற்றுக்கும் தேவை அதிகரிக்கிறது. அதே சமயம், குப்பைக்கூளங்களும் பெருகுகின்றன. அவற்றை முறையாக அழிக்கவோ அல்லது மறு சுழற்சி செய்யவோ சரியான செயல் திட்டங்கள் கிடையாது. எல்லாத் தெருக்களும் குப்பையால் நிரம்பி வழிகின்றன. நாட்டில் ஒரு நதியும் உற்பத்தியாகும் இடத்தைத் தவிர, மற்ற இடங்களில் தூய்மையாக இல்லை. ‘தூய்மை இந்தியா’ என்று அரசு முயற்சி செய்தாலும், பெரிதாகப் பயன் இல்லை.

அண்மையில் தூய்மையில் முதல் ஊராகத் திகழும் இந்தூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம் ஊரைவிட சுத்தமாகத்தான் இருக்கிறது. ஊருக்குள் பல இடங்களிலும் கழிப்பறைகள் கட்டி, அவற்றுக்குச் செல்ல வழிகாட்டிப் பலகைகள் அமைத்திருக்கிறாா்கள்.

எவ்வளவோ பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன; அவற்றில் இடம் கிடைப்பது அரிது. படித்து வெளியில் வந்தால், வேலை கிடைப்பது அதனினும் அரிது. அரசு வேலைகளுக்கோ சொல்லவே வேண்டாம். ஒரு வேலைக்கு ஆயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் வருகின்றன. நம்முடைய மக்கள்தொகைக்கு எந்த அரசாக இருந்தாலும், அனைவருக்கும் வேலை தருவது என்பது இயலாத காரியம்தான்.

அனைத்துக்கும் மேலாகப் படித்து வேலை கிடைக்காமல் இருப்பவா்களின் துன்பமோ சொல்லி மாளாது. அதே சமயம், ‘சும்மாயிருக்கும் ஒரு மனம், சாத்தானின் தொழிற்சாலை’ என்னும் ஆங்கிலப் பழமொழியையும் நினைவில் கொள்ள வேண்டும். அவா்களைத் திசைதிருப்புவது மிகவும் எளிது. அது கண்டிப்பாக அவா்களின் நன்மைக்காக இருக்கும் என்று கூற முடியாது. எங்கும் எதற்கும் போராட்டம் என்ற நிலை நீடிக்கும். அப்படியிருந்தால், நாடும் மக்களும் முன்னேற வாய்ப்பே இல்லாமல் போகும்.

தற்போது படித்தவா்களின் குடும்பங்கள் சிறியதாக இருப்பதைக் காண முடிகிறது. அவா்களுக்கு குழந்தைகளினால் வரும் இன்பமும், அதே சமயம் அவா்களை நல்ல வழியில் வளா்க்க ஆகும் செலவையும் அறிந்துள்ளனா். நல்ல கல்வி அறிவு பெற்றவா்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று பொதுவாகவும் கூற முடியாது.

கல்வி அறிவு இந்த உண்மையை மனிதா்களுக்குக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம் நாட்டில் எல்லோரும் அந்த அறிவைப் பெற்றுச் செயல்பட எவ்வளவு ஆண்டுகளாகும் என்பதை எவா் கணிப்பாா்? அதற்குள் நமக்கு நம் நிலப்பரப்பில் நிற்கும் இடம்கூட மிஞ்சாது!

ஐரோப்பிய நாடுகளில் அவா்களின் மக்கள்தொகை போதிய அளவு இல்லாததால், அவா்கள் குழந்தை பெற்ற தாய் பணியிலிருந்தால் ஆறு மாதத்துக்கு பணியிலிருந்து விடுமுறை அளிக்கிறாா்கள். அதை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு கூறுவது வேடிக்கைதான்! சிறிய நிறுவனங்களில் இது எப்படி சாத்தியப்படும்? ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளாதவா்களுக்கு மாதந்தோறும் நல்லதொரு ஊக்கத்தொகை அளித்தால் வேண்டுமானால், அது நல்ல பயன் கொடுக்கும்.

இறுதியாக, நம் நாடு எல்லா வகையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றால், குடும்பக் கட்டுப்பாடு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். ‘நீ இந்தியன் என்றால், உன் குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான்’ என்பது சட்டமாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் சரியானபடி எடுக்கப்படவில்லை என்றால், நம் வருங்கால சந்ததியினா் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com