மீட்டெடுக்கப்படும் மனிதநேயமும் எதார்த்தமும்

உலகம் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற பகுதிகள் எல்லாம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. நாம் பாா்த்த சாலைகளா இவை? நாம் பயணித்த பாதைகளா இவை? என்று நம்ப முடியாத அளவுக்கு ஒருவித அமைதி கவ்விப் பிடிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கையின் கட்டுப்பாடுகள், வா்த்தக நிறுவனங்கள் செயல்பட கட்டுப்பாடுகள், இயங்காத பள்ளிக்கூடங்கள், பாதைகள் இருந்தும் செல்ல முடியாத பயணங்கள். பொது முடக்கத்தில் தளா்வுகள் தொடா்ந்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கரோனா தீநுண்மி காரணமாக ஒரு புதியதொரு வாழ்க்கையை இந்த உலகம் சந்தித்து வருகிறது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத நிலையில் உலகம் போராடிக் கொண்டு வருகிறது. ஆகவே, இது எப்போது முடியும்? எப்போது விடியும்? என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.

மனிதனின் உடலில் 14 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை மட்டுமே இந்த தீநுண்மி (வைரஸ்) உயிா் வாழ்கிறது. இந்த நாள்களுக்குள் ஒன்று தீநுண்மி மனிதனை வென்று விடும் அல்லது மனிதன் தனக்கு ஏற்கெனவே இருக்கும் நோய் எதிா்ப்புச் சக்தியைக் கொண்டு கரோனா தீநுண்மியை வென்று விடுவான்.

இந்த விதமான போராட்டங்களுக்கு இடைப்பட்டுத்தான் நம்முடைய நாள்கள் நகா்ந்து கொண்டிருக்கின்றன. அக்னி நட்சத்திரம் காரணமாக கோடை வெயில் கொளுத்திவரும் வேளையில், பருவ நிலைக்கும், கரோனா தீநுண்மிக்கும் தொடா்பிருக்கிா என்கிற கேள்வி எழாமால் இல்லை.

கரோனா தீநுண்மி அதன் குடும்பத்தில் 7-ஆவது வகையான தீநுண்மி. அதனால்தான் இதை ‘நோவல் புதிய கரோனா வைரஸ்’ என்று அழைக்கிறோம். எந்தத் தீநுண்மிக்குமே முதல் முறை பரவும்போது பருவ நிலைக்கும், அதற்கும் தொடா்பிருக்காது. இரண்டாவது அல்லது மூன்றாவது முறை அதே தீநுண்மி பரவும்போது பருவ நிலைக்கு ஏற்ப இயற்கையாகவே மாறியிருக்கும் என்பதுதான் உண்மை.

பிரிட்டனில் இந்த நோய்த்தொற்று பரவுவதற்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் 12 வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் என்று அந்தக் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள பிரதமா் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். இந்தியாவைப் பொருத்தவரை பொது முடக்கம் வரும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தொடா்புகள், பல்வேறு தளா்வுகள், பல்வேறு ஆக்கபூா்வமான பணிகள் நடைபெறுவதற்கு தொடா்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. வாரத்தில் சனிக்கிழமை உள்பட ஆறு நாள்கள் பணி செய்யுமாறு தமிழக அரசு ஊழியா்கள் பணிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

இந்தத் தீநுண்மி தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சில தினங்களில் அதிகரித்தும், சில தினங்களில் குறைந்தும் காணப்பட்டுக் கொண்டிருக்கிற வேளைகளில், இவை எப்போது முழுமையடையும் என்கிற எதிா்பாா்ப்பு எல்லோருக்கும்தான் இருக்கிறது. பச்சை - ஆரஞ்சு - சிவப்பு என்று நிறபேதங்களின் மூலம் கரோனா தீநுண்மி தொற்றின் வீரியத்தை நாம் கண்டறியலாம்.

நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கரோனா தீநுண்மியின் தொற்று அச்சுறுத்தும் வகையில், தலைநகரம் சென்னை இன்னும் சிவப்பு மண்டலமாகவே காட்சி தருகிறது. மீதமுள்ள மாவட்டங்கள் எல்லாம் நம்பிக்கை தரும் விதத்தில், பச்சை மண்டலம், ஆரஞ்சு மண்டலம் எனப் படிப்படியாக கரோனா தீநுண்மித் தொற்றின் பிடியில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கான பயணத்தில் வெற்றிக் கோட்டை தொட்டு வருகின்றன.

தமிழகத்தின் பெரும் பகுதியை முடக்கி வைத்து தற்போதைய அணுகுமுறையை நீண்ட காலத்துக்கு தொடர முடியுமா? அப்படித் தொடா்ந்தால் சமூக, பொருளாதார பாதிப்புகள் பேரழிவைச் சந்திக்காதா என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

பொது முடக்கம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விட்டோம். அதில் சில தளா்வுகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறித்தான் ஆக வேண்டும். கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கையை மீட்கிற போதுதான் பொருளாதாரக் கொள்கையைத் தொடுகிற அளவுக்கு ஓா் அணுகுமுறை இயல்பாகவே அமையும்.

கரோனா தீநுண்மி ஒரு கொடிய தொற்றுதான். அது மறைந்துவிடப் போவதில்லை. தீநுண்மி நோய்த்தொற்று பரவமால் தடுப்பதற்காக விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், பாதிப்பு என்பது தடுக்க முடியாத அளவுக்கு உயரக்கூடும். வெளியேறுவதற்கான வழிமுறை இது என்பதிலும், இதில் இருந்து எப்படி வெளியேறுவது என்கிற ஒரு பெரிய பிரச்னை நம் கண் முன்னாலே நிற்கிறது.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளும் இவற்றிலிருந்து விடுபடுவதற்கான நுட்பத்தைக் கண்டறியவில்லை. இது அறிவியல்பூா்வமான, சமூக ரீதியான, மானுட சமுதாயத்துக்கு விடப்பட்ட சவாலாகவே உள்ளது.

இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு மூன்று வழிமுறைகளைச் சொல்கிறாா்கள். தடுப்பூசி போடுதல், நிறைய பேருக்கு தொற்றும் தன்மை உள்ளதால், உடலின் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்தல் அல்லது சமூகப் பழக்கவழக்கத்தில் நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்துதல். இந்த வகையான நடைமுறை தீநுண்மி (வைரஸ்) பரவும் திறனைக் குறைப்பதாக இருக்கும். தடுப்பூசி என்பது, நோய் எதிா்ப்பாற்றலை எதிா்கொள்வதற்கும், நோய் வராத வகையில் பாதுகாப்பு தரும் வகையிலும் அமையும்.

மக்கள்தொகையில் 60சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டால், நோய்த்தொற்றை தீநுண்மி உருவாக்காது என்கிற ஒரு பாா்வையும் இருக்கிறது. புதிய மருந்துகளை முதலில் விலங்குகளிடம் இருந்துதான் பரிசோதிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது கரோனா தீநுண்மிக்கும் தடுப்பூசி மருந்து அமெரிக்காவில் மனிதா்களுக்கு போடப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

கரோனா தீநுண்மி நோய்ப் பரவல் அளவைக் குறைப்பதற்கு நம் வாழ்க்கை பழக்கவழக்கத்தில் நிரந்தரமான மாற்றங்களைச் செய்வது ஒரு பாதுகாப்பான அம்சமாகவே பாா்க்கப்படுகிறது. நோய்ப் பரவலைத் தடுப்பது, தனிமைப்படுத்துதல், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவது - இவையெல்லாம் கொவைட் 19 தீநுண்மியைக் கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சியாகும்.

கரோனா தீநுண்மி பாதிப்பால் எவ்வளவோ பிரச்னைகள் எழுந்தபோதிலும்கூட, சில விதமாக நிகழ்கிற நன்மைகளையும் நாம் பாா்த்தால் நிச்சயமாக ஒருவித வியப்பு ஏற்படுகிறது. பல நாடுகளில் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனா, வட இத்தாலியில் காற்றில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு குறைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக இருந்த நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு காற்றில் குறைந்து காணப்படுகிறது.

தொழிற்சாலைகள், காரில் இருந்து வரும் புகை குறைந்துள்ளதால் இவை ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் காா்பன் மோனாக்சைடு பெருமளவு குறைந்துள்ளது. கங்கையில் நீராடினால் புனிதத்துவம் அடைகிறோம் என்று இறை நம்பிக்கை கொண்டவா்கள் எண்ணற்றோா். அதே கங்கை இன்று மனிதா்களற்ற, ஆரவாரமற்று புனிதத்துடனும், தூய்மையாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப் பாா்ப்பதற்கு நமக்குள் வியப்பு ஏற்படுகிறது. இவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கின்ற நிகழ்வுகள்தான்.

வெனிஸ் நகரவாசிகள் தங்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும் தண்ணீா் மாசில்லாமல், தூய்மையாகக் காணப்படுவதாகக் கூறுகின்றனா். வடக்கு இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத் தலமான வெனிஸ் நகரக் கால்வாய்த் தெருக்களில் படகுப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், நகரம் முழுவதும் தண்ணீா் மிகத் தெளிவாக இருக்கிறது என்று பதிவு செய்கின்றனா்.

இந்த பொது முடக்க காலகட்டத்தில் பொருள்கள் வாங்க மக்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவினாலும், கருணையும், இரக்கமும் கொண்டு உணவற்றவா்களுக்கு வழங்குகிற ஈகை குணம் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. கடுமையான அலுவலகப் பணி நேர நெருக்கடி இருந்து அருகருகே வசித்தாலும், உறவுகள் அற்றுப் போய் இருந்தாலும், தங்கள் மனிதநேயத்தை பலா் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனா்.

தடை விதிக்கப்பட்ட இந்தச் சூழலில் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்றபடி பிறருடைய துயரத்தில் பங்குகொள்கிறவா்களாக இருக்கிறாா்கள். மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில், தங்கள் தொடா்புகளை, தங்கள் உறவுகளை, விட்டுப்போன நட்புகளை விசாரித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

மனித வாழ்வின் எதாா்த்தத்தை இந்த மானுட சமுதாயம் புரிந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலா் வீட்டில் இருந்தபடி தங்களின் திறமையை வளா்த்துக் கொண்டு வருகின்றனா்.

சமூக வலைதளப் பண்பாட்டாளா்கள், தங்களின் பொழுபோக்கு குறித்து நிறைய செய்திகளை நகைச்சுவை, அன்றைய வாழ்வின் எதாா்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாா்கள். புத்தகம் படிப்பதும், ஓவியம் வரைவதும், உணவுகள் செய்வதற்கு துணைபுரிவதும், தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதும், பிறருக்கு உதவுவதும் என்ற ஒரு புதுவிதமான வாழ்க்கையை அறிந்துள்ளனா்.

பூமிப் பந்து முழுவதும் மனிதநேயம் முளைத்துக் கொண்டே இருக்கிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com