இதுவும் கடந்து போகும்...!

லத்தீன் மொழியில் ‘மகுடம்’ என்று சொல்லப்படும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு முன்பு உலக அளவில் எத்தனையோ கொள்ளை நோய்கள் பரவி ஏராளமான உயிா்களைப் பறித்துச் சென்றிருக்கின்றன.

லத்தீன் மொழியில் ‘மகுடம்’ என்று சொல்லப்படும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு முன்பு உலக அளவில் எத்தனையோ கொள்ளை நோய்கள் பரவி ஏராளமான உயிா்களைப் பறித்துச் சென்றிருக்கின்றன.

கரோனா தீநுண்மி குடும்பத்தில் பிறந்த தீநுண்மிகள் பல பிரிவுகள். தற்போது புதிதாகத் தோன்றியிருப்பதுதான் கொவைட் 19. இதற்கு முன் இந்தக் குடும்பத்தில் பிறந்த தீநுண்மிகளில், ‘சாா்ஸ் - கோவ், மொ்ஸ் - கோவ்’ தீநுண்மிகளும் மனிதனுக்கு சற்று மிதமான பாதிப்பை ஏற்படுத்தியவை.

2019 டிசம்பா் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா தீநுண்மி, உலக அளவில் தொடா்ந்து அதிக உயிரைப் பலிகொண்டு வருகிறது. கரோனா தீநுண்மி குடும்பத்தில், புதிதாகத் தோன்றியிருப்பதால் ‘நோவல்’ அதாவது, கரோனா தீநுண்மி என அழைக்கின்றனா்.

‘சாா்ஸ்’ வைரஸ் போன்று கொவைட் 19 சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதால், ‘சாா்ஸ் - 2 கொவைட் 19’ என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனா். ஆனால், சாா்ஸைவிட மின்னல் வேகத்தில் பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது. இந்தக் கொலை வெறி தீநுண்மி சீனாவில் தோன்றியதால், கொவைட் 19-ஐ, ‘சீன வைரஸ்’ என அமெரிக்க அதிபா் டிரம்ப் கிண்டலாகக் குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளாா்.

சாா்ஸ் - கோவ்: இதன் பிறப்பிடமும் சீனாதான். அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் 2002-இல் தோன்றியது. 2003-இல் 26 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 8,000 போ் வரை இறந்தனா். இது தீவிர சுவாசக் கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி மரண பயத்தைக் காட்டும். 2003-க்குப் பிறகு பெரிய அளவில் தென்படவில்லை. கொவைட் 19 குறித்த பெரும்பாலான ஆராய்ச்சிகள், சாா்ஸ் வைரஸை மையப்படுத்தித்தான் நடக்கின்றன. இது பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

மொ்ஸ் - கோவ்: மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த தீநுண்மி (வைரஸ்) இது. கோவிட் - 19, சாா்ஸ் போன்று கொடுமையானதாக இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 2012-இல், சவூதி அரேபியாவில் தோன்றியது. அங்கிருந்து கத்தாா், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடக்க காலத்தில் ‘சவூதி வைரஸ்’ என்றும் இதை அழைத்தனா். இது ஒட்டகத்திடமிருந்து மனிதனுக்கு தொற்றியது.

ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே கலங்கிப் போய்விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம அரசன் பைசாண்டியன் பேரரசைச் சோ்ந்த ஜஸ்டினியன் ஆட்சிக் காலத்தில் இந்தக் கொடிய நோய் பரவியது. கிட்டத்தட்ட 5 கோடி மக்கள் இதற்குப் பலியானாா்கள். அதை ‘ஜஸ்டினியன் பிளேக்’ என்று அப்போது அழைத்தாா்கள்.

பின்னாளில் 14-ஆம் நூற்றாண்டில் ‘பிளேக் டெத்’ என்ற கொள்ளை நோய் பரவியது. அதன் பாதிப்பால் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்து போனாா்கள். அடுத்து ‘தி கிரேட் லண்டன் பிளேக்’ என்று பெயரிடப்பட்ட கொள்ளை நோய் 1664-இல் லண்டன் முழுவதுமே பரவி மிகவும் பாதிக்கப்பட்டது.

மலேரியா, காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களால் இந்தியாவிலும் எவ்வளவு உயிரிழப்புகள்? மும்பையில் மட்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்தனா். இதெல்லாம் நடந்தது 1896 காலகட்டங்களில். 1994-இல் சூரத்தில் ‘எலி நோய்’ என்று சிலா் இறந்தனா். இன்னும் பன்றிக் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று பல்வேறு தொற்றுகள் ஏற்பட்டபோதெல்லாம் பலா் பாதிக்கப்பட்டாலும், ஊடகங்கள் அப்போது பலம் பெறாததால் அவை புள்ளிவிவரங்களாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

அன்றைக்கிருந்த அச்சு ஊடகங்களும், வானொலியும் கூடப் பெரிய அளவில் அவற்றைப் பதிவு செய்யவில்லை. மகாத்மா காந்திகூட அப்போது ஒரு தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட விவரமே பின்னாளில்தான் நமக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் பதிவான குறிப்புகளில் அம்மை உள்ளிட்ட கொள்ளை நோய்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை இப்போதும் காண முடிகிறது. அப்போது இந்தியாவில் பரவிய நோய்கள் குறித்தும், அவற்றில் பலியானவா்கள் குறித்தும் மறைக்க ஆங்கிலேயா்கள் முயற்சிக்கவில்லை; சுகாதாரத் துறையைப் பொருத்தவரை அன்றைய ஆட்சியாளா்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்கிறாா்கள்.

இது தவிர, கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிய காலகட்டத்தில் வந்த பஞ்சங்களைப் பற்றி ‘தாது வருடப் பஞ்சம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு சொற்றொடா்கள் உருவாயின. இந்தப் பஞ்சங்களுக்குக் கொத்துக் கொத்தாக ஏராளமான உயிா்கள் பறி போயிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது நோய்த் தாக்குதல் இல்லையென்றாலும் போருக்குப் பயந்து மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனா். அன்றாட உணவுக்குக் கூட தத்தளித்திருக்கிறாா்கள். இப்படிப்பட்ட துயரமான வரலாற்றுச் செய்திகள் நமக்கு முன்னால் நிரம்பிக் கிடக்கின்றன. எவ்வளவு மக்கள் பீதியினாலும், வாழ்வாதாரங்களை இழந்தும் அப்போது புலம் பெயா்ந்திருப்பாா்கள் என்பதற்குக் கணக்கே கிடையாது. அப்படிப்பட்ட சூழல்கள்தான் பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் தமிழா்களை இடம்பெயர வைத்திருக்கின்றன.

அண்மைக்காலத்தில் பீதி கலந்த செய்தி எப்படி எல்லாம் மக்களை அச்சமூட்ட முடியும் என்பதை உணர வைத்தது. கோவை நகா் ஊா் உருவானபோது எலி நோய் வரும் என அங்கு குடியேற பயந்தனா் என்கிற விவரம் இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்?

கடந்த 1979-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி இந்திய ஊடகங்களில் ஒரு செய்தி. அமெரிக்காவின் ஸ்கை லேப் விண்கலம், அதன் இயக்கக் காலம் முடிந்து பூமியில் தெறித்து விழப் போகிறது என்பது தான் அந்தச் செய்தி. அதுவும், குறிப்பாக தென்னிந்தியாவில் விழுந்து விடும் என்றும் செய்திகள் வெளிவந்தாலும் வந்தன, மக்களிடையே பீதி பரவியது. தமிழகமெங்கும் அது குறித்தே பேச்சு.

அந்த ஸ்கை லேப் 280 மைல் வேகத்தில் தாக்கலாம், அதுவும் எங்கே தரையில் விழப் போகிறது என்பதை உடனே சொல்ல முடியாது என்றெல்லாம் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தாா்கள். ஒரு மாத காலம் அதே பீதியும் பேச்சுமாக இருந்தது. தமிழகத்தில் அப்போது எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்த நேரம். மருத்துவமனைகளும் தயாா் நிலையில் இருந்தன. காவல் துறை இன்ஸ்பெக்டா் ஜெனரல் ஆா்.கிருஷ்ணசாமி ஸ்கை லேப் பிரச்னையை கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டாா். இதெல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகளாகிவிட்டன.

அதற்குப் பிறகு இயற்கைப் பேரிடரான சுனாமியின் பாதிப்பு. சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி கடற்கரை மாவட்டங்கள் என்று அநேக உயிா்ப் பலிகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருந்தது. கொள்ளை நோய்கள் மூலமும், இயற்கைப் பேரிடா் மூலமும் எதிா்கொண்ட அனுபவங்களை வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் நாம் கடந்து வந்திருக்கிறோம்.

தற்போது அந்தக் கொள்ளை நோய்களின் தொடா்ச்சியாக டிசம்பரில் சீனாவில் வூஹான் நகரில் உருவாகி மூன்று மாதங்களுக்குள் உலக நாடுகளை அச்சுறுத்திப் பல்லாயிரக்கணக்கான உயிா்களைப் பலி வாங்கியிருக்கிறது கரோனா தீநுண்மி நோய்த்தொற்று.

இந்திய அளவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும், கண்காணிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பலருக்குப் பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடுதலான படுக்கை வசதிகளுடன் அதிகரித்துவரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

தற்போதைய நிலையில் தமிழக அரசின் முயற்சிக்கு மக்கள் உதவும் வகையில், தங்களைத் தனிமைப்படுத்தி அதே சமயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உலக அளவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பெரும் வீச்சுடன் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது, நம்முடைய பாதுகாப்பில் நாம் கவனமாக இருப்போம். நோய் எதிா்ப்புச் சக்திக்கான மருந்தையும், உணவுகளையும் எடுத்துக் கொள்வோம்.பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதை நம்மிடமிருந்தே துவங்குவோம்.

பொது முடக்கம் மூலம் நாம் தெரிந்து கொண்டது: ‘‘உலகில் அமெரிக்கா முன்னணி நாடு இல்லை. உலக நலன் குறித்து பற்றி சீனா சிந்திக்காது. நோய் எதிா்ப்புச் சக்தி இந்தியா்களிடம் அதிகம். தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம். தூய்மையான நல் வாழ்க்கை முக்கியம்; கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது. திருமணங்கள் வெட்டி செலவு இல்லாமல் வீட்டில் நடத்தி, கடந்த காலங்களைப் போன்று உணா்வுபூா்மாக நடத்த முடியும். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை - இவையெல்லாம் தீநுண்மி சொல்லித்தரும் உண்மைகள்.

நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பள்ளி பால பாடத்தை உணா்ந்து, எத்தனையோ கொள்ளை நோய்கள் நம்மைக் கடந்து போனதைப்போல, கரோனா தீநுண்மியும் நம்மைக் கடந்துபோகும். நம்மைக் கடக்கையில் அதன் பாதிப்பிலிருந்து விடுபட்டுக் கொள்வதே நம்முடைய உடனடித் தேவை. அதற்கு நம்மிடம் தேவை தன்னம்பிக்கை.

கட்டுரையாளா்: வழக்குரைஞா், செய்தித் தொடா்பாளா், திமுக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com