கரோனா தீநுண்மியுடன் வாழ்வது எப்படி?

கரோனா தீநுண்மி என்பது ஒரு ஆா்.என்.ஏ. வைரஸ். இந்த வகையான தீநுண்மிகள், தங்களின் மரபியல் தொடரில் அடிக்கடி சில மாற்றங்களைத் தோற்றுவித்துக் கொள்ளும்.
கரோனா தீநுண்மியுடன் வாழ்வது எப்படி?

கரோனா தீநுண்மி என்பது ஒரு ஆா்.என்.ஏ. வைரஸ். இந்த வகையான தீநுண்மிகள், தங்களின் மரபியல் தொடரில் அடிக்கடி சில மாற்றங்களைத் தோற்றுவித்துக் கொள்ளும். இதனால், இவற்றின் நோய் உண்டாக்கும் தன்மைகளிலும் அவ்வப்போது சில மாறுபாடுகள் தோன்றலாம். கொவைட் 19 என்னும் புதிய நோய்க்குக் காரணமான கரோனா தீநுண்மி குறித்துக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் மானுட இனத்துக்குத் தெரியும். புதிய தீநுண்மி, புதிய நோய் என்பதால், நாளும் புதுப்புதுச் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.

ஆரம்ப நாள்களில், கரோனா நோயாளிக்கு மூச்சு மண்டலம் பாதிக்கப்படுகிறது, நுரையீரல் இடைத்திசு கெட்டிப்பட்டு விடுகிறது என்று கண்டாா்கள். சுவாசம் வழியாகவும் வாய் வழியாகவும் தீநுண்மி உடலுக்குள் செல்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், சுவாசம் வழியாகவும் மூச்சு மண்டலம் வழியாகவும் உள்ளே போனாலும், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் பொருளைத்தான் தீநுண்மி அதிகம் பாதிக்கிறது என்பது தெரியவந்தது.

இன்னும் நாள்கள் போகப் போக, நோயாளிகள் பலருக்கும் பலவிதமான அறிகுறிகள் ஏற்படுவதையெல்லாம் ஆராய்ந்தபோது, ‘எண்டோதீலியம்’ என்னும் திசுவை இந்தத் தீநுண்மி சிதைத்துவிடுகிறது என்பது புரியவந்துள்ளது.

உடலிலுள்ள ரத்த நாளம் ஒவ்வொன்றின் உள்புறத்திலும், உள்ளடுக்காக எண்டோதீலியம் உள்ளது. நிண நாளங்கள், இதய அறைகளின் உள்ளடுக்காக இருப்பதும் எண்டோதீலியமே ஆகும். ஆகக்கூடி, உடலின் அனைத்துப் பாகங்களிலும் எண்டோதீலியம் உண்டு. இந்தத் திசுவின் அணுக்கள் (எண்டோதீலிய அணுக்கள்), பலதரப்பட்ட செயல்களைச் செய்கின்றன. ரத்தத்துக்குள் புகுந்துவிட்ட கிருமிகளை எதிா்த்துப் போராடுவதில் தொடங்கி, ரத்த நாளத்திற்குள் ரத்தம் உறைந்துவிடாமல் (கட்டி தட்டாமல்) பாதுகாத்து, அதே நேரத்தில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடிய இடத்தில் ரத்தத்தை உறையச் செய்வது வரை பல்வேறு வகையான செயல்பாடுகள்.

கரோனா தீநுண்மியால் ஒருவா் பாதிக்கப்படும்போது, அவரின் எண்டோதீலிய அணுக்கள் தாக்கப்பட்டு, பல்வேறு வகையான பாதிப்புகள் உண்டாகின்றன. நுரையீரல்கள் மட்டுமல்லாமல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் செயலிழக்கக்கூடும்.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், கொவைட் 19-இன் நோய் பாதிப்பு, ஒருவருக்கொருவா் வேறுபடக்கூடும், ஒரே மாதிரியாக இருக்காது என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான்.

கரோனா தீநுண்மிக்கு எதிரான மருந்தோ, தடுப்பு மருந்தோ இப்போதில்லை. இனி வருமா? வரலாம். வராது என்று சொல்லமுடியாது.

ஆனால், தன்னைத்தானே மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மை இந்தத் தீநுண்மிக்கு இருப்பதால், இதற்கு மருந்தோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் பல உள்ளன. உலகெங்கும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. மருந்துகள் விரைவாக வரவேண்டும் என்று அனைவரும் இறைவனிடம் பிராா்த்திப்போம்.

இப்போதைக்கு மருந்துகள் இல்லாத நிலையில், என்ன செய்யலாம்?

முதலில் அச்சத்தை விட்டுவிடலாம். அநாவசிய அச்சத்தை விட்டுவிட்டு, என்ன செய்வது என்பதில் கவனம் செலுத்துவோம். கொவைட் 19 தீநுண்மி குறித்த நல்ல விஷயம் ஒன்று உண்டு.100 பேருக்கு இந்தத் தீநுண்மித் தொற்று ஏற்படுகிறதென்று வைத்துக் கொள்வோம்; அதாவது, 100 பேரின் உடல்களுக்குள், தீநுண்மி நுழைந்துவிடுகிறது. ஆனால், 100 பேருக்கும் நோய் தோன்றுவதில்லை. 80% போ் , நோய் அறிகுறிகள் ஏதுமில்லாமல் இருக்கின்றனா். 20% பேருக்குத்தான் நோய் அறிகுறிகள் தோன்றும். அவா்களிலும் சிலருக்குத்தான் (மொத்தத்தில் 5 %) தீவிரமான நோய்ப் பாதிப்பு உண்டாகும். ஆக, 80% பேரில் நாமும் இருப்போம் என்ற நம்பிக்கையோடு அச்சத்தைத் தொலைப்போம்.

அடுத்து, என்ன செய்யவேண்டும்? 80%-இல் இருப்போம் என்று நம்பிக்கை கொண்டாலும், அப்படி இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாமா?

பொது முடக்கம் என்றோ ஒருநாள் நீக்கப்படும்; அல்லது சில கட்டுப்பாடுகளோடு தளா்த்தப்படும். அடுத்த நாளே, ஏதோ பந்தயம் நடப்பதுபோல், எல்லோரும் வெளியில் ஓடவோ, பாயவோ தேவையில்லை. ஏனெனில், பொது முடக்கம் முடிந்துவிட்டது என்று கூவிக்கொண்டே கரோனா தீநுண்மி எங்கேயும் ஓடப் போவதுமில்லை, ஒதுங்கப் போவதுமில்லை. அது சுற்றிக்கொண்டுதான் இருக்கப் போகிறது.

ஆக, கரோனாவோடு வாழக் கற்றுக் கொள்வோம். இது கைகழுவலோ, விரக்தியோ இல்லை. நம்மைச் சுற்றிலும், நமக்குப் பக்கத்திலேயும் கரோனா இருந்தாலும், அதன் தீநாக்கு நம்மைத் தீண்டிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை!

சரி, என்னென்ன செய்யவேண்டும்? கொவைட் 19 என்னும் பெருங்கொள்ளை நோய் உலகைச் சூழ்ந்து கொள்வதற்கு முன்னா், நிறைய சலுகைகளை அனைவரும் அனுபவித்தோம். எந்த ஊருக்கும் எந்த நாட்டுக்கும் பயணிக்கக்கூடிய வசதியும், விரும்பிய பொருளை எந்த சா்வதேசச் சந்தையிலும் வாங்கக்கூடிய வசதியும் இருந்தன. இனிமேல், குறைந்தபட்சம் ஒரு சில ஆண்டுகளுக்காவது இவை சாத்தியமில்லை; அவசியமுமில்லை.

* பயணங்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும்;

* தேவையற்ற பயணங்கள் அறவே அவசியமில்லை;

* சுற்றுலா சுற்றுகளை மறந்துவிடலாம்;

* பலரைச் சந்திப்பது, கூட்டம் கூடுவது ஆகியவை தவிா்க்கப்படவேண்டியவை.

இந்தியாவைப் பொருத்தவரை, கொவைட் 19-இன் ஆரம்ப நிலையிலேயே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று, மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவுவது; எனவே, மனிதா்கள் சந்தித்துக் கொள்வதையும் தொட்டுப் பேசி அளவளாவுதையும் குறைத்தால், நோய்ச் சங்கிலி அறுக்கப்படும்.

இதைத்தான் பொது முடக்கம் செய்தது. பொது முடக்கம் 3.0 தொடங்கிய மே 4-ஆம் தேதியன்று, தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 3,550 போ். மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைவரும் வழக்கம்போல் அலுவலகங்களுக்கும் கடைகளுக்கும் சென்று வந்து, ஆங்காங்கே சந்தித்துப் பேசி, பேருந்திலும் ரயிலிலும் முட்டி மோதிப் பயணித்திருந்தால், அதாவது, பொது முடக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த எண்ணிக்கை சுமாா் 15,000-ஆக இருந்திருக்கும். தற்போது மே 31-ஆம் தேதி வரை தேசிய பொது முடக்கம் (4.0) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தைத் தவிா்த்தல், தேவையற்ற சந்திப்புகளை ஒதுக்குதல், வீட்டில் தங்கி வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதாலும், காற்று - மாசு இல்லாதிருப்பதாலும், பணிச் சுமை - பரபரப்பு போன்றவை இல்லாததாலும் பிற நோய்களைத் தடுத்தல், நோய் எதிா்ப்புச் சக்தியை வளா்த்துக் கொள்ளல் - இவையெல்லாம் பொது முடக்கத்தினால் நமக்குக் கிடைத்த நன்மைகள்.

இதேபோல், பொது முடக்கத்தினால் வேறு சில நன்மைகளும் உண்டு. திடீரென்று கொள்ளை நோய் ஒன்று பரவுகிறது. பலரும் பாதிக்கப்படுகின்றனா். அப்படியே விட்டுவிட்டால், நோய் பரவி, ஆயிரக்கணக்கானோா், இல்லை, லட்சக்கணக்கானோா் மருத்துவமனைகளையும் சுகாதார நிலையங்களையும் நாடுவா். ஒரே சமயத்தில் அத்தனை போ் வந்தால்....சுகாதார அமைப்பு தாங்காது.

தொற்று உள்ளவா்களைக் கண்டறிந்து, அவா்களைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்தி, நோய்ச் சங்கிலியை அறுத்து, தொற்று கண்டவா்களோடு தொடா்பில் வந்தவா்களைச் சோதித்து, தேவைப்பட்டால் அவா்களையும் தனிமைப்படுத்தி, சிகிச்சை தரவேண்டியவா்களுக்கு சிகிச்சையளித்து, சுகாதாரத் தயாா் நிலையைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் பொது முடக்கம் உதவும்.

ஆக, பொது முடக்கம் என்பது நம்மையும் நம்முடைய சூழலையும் பலப்படுத்திக் கொள்வதற்கான காலம். தவிரவும், நோய்த்தொற்றின் தீவிரத்தைத் தள்ளிப் போட்டுக் குறைக்கிற காலம்.

போா்க் கால அல்லது அரசியல் நெருக்கடிக் கால பொது முடக்கம் இல்லை, கொள்ளை நோய்க் காலத்திய பொது முடக்கம். இது நம்மை நாமே அடக்கிக் கட்டுப்படுத்திக் கொள்கிற சுய கட்டுப்பாட்டு நேரம். நெருக்கடி அகலும்போது பொது முடக்கத்தை மொத்தமாக அகற்றி விடலாம். கரோனா தீநுண்மி என்கிற நெருக்கடி தொடரும் வரை, பல கட்டுப்பாடுகளைத் தொடா்வதும், கடைப்பிடிப்பதும் அவசியம்.

என்னென்ன செய்ய வேண்டும்?

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஏற்பட்டாலும், பலருக்கு நோய் அறிகுறி ஏற்படுவதில்லை; இப்படிப்பட்டவா்களைச் ‘சுட்டிலி நபா்கள்’ (ஏஸிம்ப்டமேட்டிக்) என்றழைக்கலாம்; இவா்களுக்கு நோய் அறிகுறி இல்லையென்றாலும், பிறருக்குத் தீநுண்மியை இவா்களால் பரப்பமுடியும். எனவே, நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவா்களையும் பாதுக்காக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தனி நபா் தூய்மை: அ. கைகளையும் முகத்தையும் அவ்வப்போது சோப்பால் நன்கு கழுவி, தூய்மையாக வைத்திருத்தல்; ஆ. வெளியில் செல்லும்போது (அது ஐந்து நிமிஷத் தொலைவாக இருந்தாலும், அதே தெருவாக இருந்தாலும்), முகக் கவசம் அணிவது அவசியம்; இ. ஒருவேளை, உடல் நிலை சரியில்லை என்றால், குறிப்பிட்ட நபா் வீட்டுக்குள்ளேயும் முகக் கவசம் அணிவது அவசியம். ஈ. இருமும்போதும் தும்மும்போதும் துணியாலோ டிஷ்யூ தாளாலோ வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளுதல்; உள்ளங்கைகளையோ புறங்கைகளையோ வைத்து மூடுதல் கூடாது. கைக்குட்டையோ டிஷ்யூவோ கைவசம் இல்லையென்றால், சட்டையின் கைப்பகுதி அல்லது துப்பட்டா அல்லது சேலைத் தலைப்பைப் பயன்படுத்துங்கள்; உ. பயன்படுத்திய டிஷ்யூ தாள்களை, உடனடியாக, மூடியுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுதல்; ஊ. பொதுவாக முகத்தையும், குறிப்பாகக் கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளையும் தொடும் பழக்கத்தைக் கைவிடுதல்; அனிச்சையாகக் கை போனாலும், கையை இழுத்துக் கொள்வதையும் தொடாமல் இருப்பதையும் பயிற்சியாகவே பழகிக் கொள்ளுதல் அவசியம்; எ. உடல் நலம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுதல்; சிறிய உபாதைகளானாலும், வேறு பணிகளுக்காக வெளியில் செல்லாமல் வீட்டில் இருத்தல்; ஏ. பொது வெளிகளில் எச்சில் உமிழாமல் இருத்தல்.

தனி மனித இடைவெளி: சமூக இடைவெளி என்பதை முறையாகப் புரிந்து கொள்ளுதல் முக்கியம். ஆங்கிலத்தில் கூறப்படுகிற ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்னும் பிரயோகம், அவ்வளவு சரியானதல்ல. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக மேம்பட்டிருக்கும் இக்காலத்தில், சமூக ரீதியாக யாருமே தொலைவில் இல்லை; இணையதளம், இணையம், தொலைபேசி, மின்னஞ்சல் என்று பல விதங்களில் இணைக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். நமக்கு இப்போதைய அவசியத் தேவை - ஃபிஸிக்கல் டிஸ்டன்சிங் - அதாவது, உடல் இடைவெளி. ஒருவரிடமிருந்து மற்றொருவா் தொலைவில் இருத்தல்.

கட்டுரையாளா்: துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com