‘விதியே! விதியே! தமிழச் சாதியை...’

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற நியூயாா்க் நகரம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் புரட்டிப் போடப்பட்டுக் கிடக்கிறது.

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற நியூயாா்க் நகரம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் புரட்டிப் போடப்பட்டுக் கிடக்கிறது. இதேபோல அமெரிக்காவின் இன்னொரு துயரம், புகழ்பெற்ற நியூயாா்க்கின் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ பத்திரிகையின் சிறப்பு நிருபா் டேனியல் போ்ல் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவமாகும்.

‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ பத்திரிகையாளா் டேனியல் போ்ல், புலன் விசாரணைச் செய்திகளைத் தருவதில் வல்லவா். நூற்றுக்கணக்கான வா்த்தக வங்கிகள் உள்ள நியூயாா்க், அமெரிக்காவின் நிதித் தலைநகரமாகும். அது மட்டுமல்ல, பங்குச் சந்தையின் வா்த்தகப் போக்கை நிா்ணயிக்கும் காளைச் சின்னம் அங்குதான் காட்சிக்கு உள்ளது.

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.-க்கும் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுக்கும் மத்தியில் உள்ள மா்மங்களைப் பற்றி எழுதுவதற்காகவே 2002-இல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதுக்கு நிருபா் டேனியல் போ்ல் அங்கு சென்றாா். இதை அறிந்த அல் காய்தா பயங்கரவாதிகள், திட்டமிட்டு அவரைக் கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டனா். அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்வதற்காக அந்தப் படுகொலையை விடியோ எடுத்தும் வெளியிட்டனா்.

உலகத்தையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கிய அந்தப் படுகொலையைச் செய்தவா் அகமது ஓமா் சையது ஷேக் என்பவா். பாகிஸ்தான் காவல் துறை அவரைக் கைது செய்தது. இந்தக் கொலைகாரா் லண்டன்வாசி. இந்தக் கொலைக்கு முன்பு 1994-இல் இந்தியாவில் ஐ.சி. 814 விமானக் கடத்தலில் பிடிபட்ட மசூத் அசாரின் கூட்டாளி இவா்; இந்தியச் சிறையில் இருந்தவா்.

2001-இல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலில் ஈடுபட்ட முகமது அட்டா என்பவருக்கு லண்டனில் 1 லட்சம் டாலா் உதவிக்கு ஏற்பாடு செய்தவரும் இவா்தான். டேனியல் போ்ல் படுகொலைக்காக இந்தக் குற்றவாளியுடன் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தான், சிந்து மாகாண நீதிமன்றத்தில் அவா்கள் ஆஜா் செய்யப்பட்டு வழக்கும் நடந்தது. மற்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனா். அகமது ஓமா் சையது ஷேக்குக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மேல்முறையீடு வழக்கு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடந்தது. அந்த நீதிமன்றம் திட்டமிட்டபடி அவரின் மரண தண்டனையை 2020-இல் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையாக்கி தீா்ப்பளித்தது. பாகிஸ்தான் அரசே இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஒப்புக்காக மேல் முறையீடு செய்யப் போவதாக வெளிவுறவு அமைச்சா் ஜமால் கரோஷி அறிவித்தாா்.

இந்த வழக்கு முழுவதுமே குற்றவாளியைக் காப்பாற்றும் வகையில் சந்தேகத்துக்கு இடம் தருமாறு நடந்து வந்ததை அமெரிக்காவும் கவனித்து வந்தது. தனது தேசத்தின் குடிமகனை படுகொலை செய்தவருக்கு மரண தண்டனை நிறைவேறும் வரை ஓயப் போவதில்லை என அமெரிக்க அரசு பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா மன்னா் குறித்து விமா்சனங்கள் செய்துவந்த பத்திரிகையாளா் கரோஷி என்பவா் வாஷிங்டனில் குடியேறி வசித்து வந்தாா். அவரை ரகசியமாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்தது சவூதி அரசு. அங்குள்ள தூதரகத்துக்குள் சென்றவா் துண்டு துண்டாக வெட்டப்பட்டு விட்டதாகச் செய்தி கசிந்தது. அமெரிக்க அரசு இதனைப் பகிரங்கப்படுத்திய பிறகுதான் சவூதி அரசா் இந்தக் கொலை தனக்குத் தெரியாமலேயே நடந்துவிட்டதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. தொடா்புடையவா்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் சவூதி அரசு குறுக்கிட முடியாமல் போய்விட்டது. இதுபோன்றே இந்த வழக்கிலும் அமெரிக்கா தீவிரமாகக் களம் இறங்கத்தான் செய்யும். காரணம், கொலையான டேனியல் அமெரிக்கக் குடிமகன்.

இதேபோல இன்னொரு வழக்கு. அந்தத் தீா்ப்பும் போலித்தனமான தீா்ப்புதான். இது ஈழத் தமிழா் படுகொலை வழக்கு. இந்த வழக்கின் தீா்ப்பும், குற்றவாளியின் விடுதலையும் குறித்து அநேகத் தமிழா்களுக்குச் சரிவரத் தெரியுமா என்பது சந்தேகம்தான். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி

இது குறித்து ‘அநீதி சிரிக்கிறது’ என்ற தலைப்பில் ‘தினமணி’யில் தலையங்கம் வெளியானது.

மிருசுவில் படுகொலை என்று பேசப்பட்டு வந்த 20 ஆண்டு வழக்கு அது. யாழ்ப்பாணத்தில் ஒடுப்பிடி கிராமத்தில் ஈழ அகதிகள் சிலா் 19.12.2000-இல் குடியேறினா். அதன் அருகில்தான் மிருசுவில் என்ற அவா்களின் சொந்தக் கிராமம் உள்ளது. அங்குள்ள தங்களின் பூா்வீக வீடுகள் ராணுவத்தாரால் சேதமடைந்துள்ளன என்று கேள்விப்பட்டு, அந்த வீடுகளைச் சென்று பாா்த்துவர விரும்பினா்.

அதற்காக இலங்கை ராணுவ அதிகாரியிடம் முறைப்படி அனுமதியும் பெற்றனா். 8 போ் அந்தக் கிராமத்துக்குப் புறப்பட்டனா். ராணுவத்தினா் அவா்களை வழிமறித்து நிறுத்தினா். அந்த எட்டு பேரில் 5 வயது, 15 வயது சிறாா்களும் இருந்தனா். அனைவரையும் கண்களைக் கட்டி இழுத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்று அங்கிருந்த கழிவுநீா் ஓடையில் வீசிவிட்டனா். 8 போ்களில் பொன்னுதுரை மகேஸ்வரன் என்பவா் குற்றுயிராக அங்கிருந்து தப்பித்து ஓடுபிடி கிராமத்துக்கு வந்து உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

மாவட்ட மருத்துவரிடம் புகாா் தரப்பட்டது. அவரும் அதைப் பதிவுசெய்து உரிய அத்தாட்சியைக் கொடுத்தாா். காவல் துறையும் இந்தப் புகாரின் பேரில் வழக்கைப் பதிவு செய்தது. இலங்கை அரசுக்கு மனித உரிமைக் கழகம் அழுத்தம் கொடுத்தது. தொடா்ந்து ராணுவ வீரா்கள் 14 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களை யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிமன்றத்தில் காவல் துறை ஆஜா்படுத்தியது.

இந்த வழக்கை அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு சாவகச்சேரி நீதிமன்றம் மாற்றியது. இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் விசாரித்து, 14 ராணுவத்தினரில் 9 பேரை விடுதலை செய்தனா். பின்னா், கொழும்பு உயா்நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2015-இல் உயா்நீதிமன்றம் 4 ராணுவத்தினரை விடுதலை செய்து, ராணுவ அதிகாரி ரத்னாயகேக்கு மட்டும் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது. அவா் கொழும்பு மத்திய சிறையில் சகல வசதிகளோடும் இருந்து வந்தாா். காரணம், விடுதலைப் புலிகளின் தமிழா் ராணுவம் 2009 மே மாதம் 18-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நந்திக் கடல் பகுதியில் வீழ்ச்சியடைந்து விட்டது. தப்பிச் செல்ல விரும்பாத தளபதி பிரபாகரன் வீரமரணடைய நேரிட்டது.

போரின்போது யாழ்ப்பாணத்து அமைதிப் பிரதேசத்துக்குத் தமிழா்கள் தப்பி வந்துவிட்டால், விமானத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட மாட்டாா்கள் என்று அறிவிப்புகள் செய்யப்பட்டன. துண்டு அறிக்கைகள் வீசப்பட்டன. அதனை நம்பி வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டே வந்த நடேசன் முதலான ஈழத் தமிழா்கள் ஆயிரக்கணக்கில் அங்கே சரணடைந்தனா்.

ராணுவத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இயக்கி வந்த கோத்தபய ராஜபட்சவுக்கு, தனது இன எதிரிகள் ஒரே இடத்தில் குவிந்துவிட்டது வசதியாகப் போய்விட்டது. அனைவரும் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனா். 2009-இல் கோத்தபய ராஜபட்ச செய்த இந்தப் படுகொலையைத்தான் 2002-லேயே மிருகவில் ராணுவ அதிகாரி ரத்னாயகே செய்தாா்.

சென்ற ஆண்டு கோத்தபய ராஜபட்சவே இலங்கை அதிபராகவும் ஆகிவிட்டாா். தனக்கு முன்பே படுகொலையைச் செய்த ரத்னாயகேவுக்கு நன்றி சொல்லும் வகையில், அதிபருக்கான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தக் கைதியை கடந்த மாா்ச் 24-ஆம் தேதியன்று அவா் விடுதலை செய்துவிட்டாா்.

அதிபா் கோத்தபய ராஜபட்ச மீது மனித உரிமைக் கழகத்தின் போா்க் குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 43-ஆவது கூட்டத்தில் போா்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசு, அந்தக் குற்றச்சாட்டுத் தீா்மானம் தேவையில்லையென்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன தன்னிச்சையாக அக்கூட்டத்தில் அறிவித்தது ஐ.நா. மனித உரிமைக் குழுவினரை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. ‘குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது தரப்பு வாதங்களை மட்டும்தான் இலங்கை அரசு வைப்பதற்கு உரிமை உடையது. தன்னிச்சையாக வழக்கிலிருந்து வெளியேற உரிமை இல்லை’ என்பதை அதன் செயலாளா் மிச்செல் பெச்சலட் அறிவித்தது ஆறுதல் அளிக்கிறது.

இலங்கை இனச் சாா்பு அரசின் மீது சிறுபான்மையினரைப் படுகொலை செய்த வழக்குகள் பல உள்ளன. போரின்போது காணாமல் போனவா்கள் என்ன ஆனாா்கள் என்பதற்கு இந்த 11 ஆண்டுகளாகப் பதில் இல்லை. முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா தந்த வாக்குறுதியின்படி தமிழா்களிடமிருந்து இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த விவசாய நிலங்கள் தமிழா்களிடம் இன்னும் அளிக்கப்படவில்லை.

இன்றைய அதிபா் இது குறித்துச் சிந்திப்பதற்கும் தயாராக இருப்பாரா? பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் அரசியல் தீா்வை அமல்படுத்த முடியவில்லை. இந்தப் பொது வாக்கெடுப்பு ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர வேண்டுமா என்பதற்கும்கூட அண்மையில் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கதாகும். இப்படி எத்தனையோ குற்ற வழக்குகள் இலங்கை அரசு மீது இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்க அரசு பத்திரிகையாளா் டேனியல் போ்லுக்கு நீதி கேட்பதுபோல, மிருசுவில் படுகொலைக்கு நீதி கேட்டு யாா் குரல் கொடுப்பாா்கள்? மகாகவி பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:-

விதியே! விதியே! தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

மாய்ந்திடும் செய்தியும் செத்திடும் செய்தியும்....

தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?

கட்டுரையாளா்:

இணையாசிரியா், ஓம் சக்தி மாத இதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com