சீறும் காவலா? சீர்மிகு காவலா?

சட்டங்களையும், அரசியல் சாசன கட்டமைப்புகளையும், நிலையான நெறிமுறைகளையும் கடைபிடிப்பதன் மூலமாகத்தான் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்' என்ற இங்கிலாந்து நாட்டின் 


"சட்டங்களையும், அரசியல் சாசன கட்டமைப்புகளையும், நிலையான நெறிமுறைகளையும் கடைபிடிப்பதன் மூலமாகத்தான் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்' என்ற இங்கிலாந்து நாட்டின் சட்ட வல்லுனர் லார்ட்  டென்னிங்க் கூறிய அறிவுரையை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

சாத்தான்குளம் காவல்நிலைய காப்பில் நிகழ்ந்த இரட்டை மரணம், உத்தர பிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட வன்புணர்ச்சியில் காவல் துறையின் மெத்தன நடவடிக்கை , பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பிகார் போலீஸூம், அது தற்கொலைதான் என்று  மும்பை போலீஸூம் புலனாய்வில் மோதிக்கொள்ளும் நிலை - இவை காவல் துறை செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அமைந்துள்ளன. 

காவல்துறையில் சில சமயம் தவறுகள் ஏற்படலாம். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத விதி மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் இவையே எல்லோருடய கவனத்தையும் ஈர்க்கின்றன; நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகிறது; காவல் பேராண்மையை நிலைகுலையச் செய்கிறது. காவல்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

இந்தியா பல விதத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், பின்தங்கிய நாடு என்ற நிலைக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால், பிரதானமாகத் தெரிவது நமது சோம்பிய மனப்போக்கு. இந்தியர்கள் நேரத்தின் அருமையை உணராதவர்கள். எல்லாவற்றிலும் தாமதம். காலப்போக்கில் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடும் மனப்பான்மை இவை துரிதமான தீர்வுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

சட்ட நிபுணர் பல்கிவாலா சொன்னதுபோல் "தனிப்பட்ட முறையில் இந்தியர்கள் வல்லவர்கள். ஆனால் கூட்டாக முட்டாள்தனம்தான் மேலோங்குகிறது' என்பதே இத்தகையப் பின்னடைவுக்குக்   காரணம். "எல்லாம் நிதானமாக நடக்கும்; நமது கையில் என்ன இருக்கிறது' என்ற அணுகுமுறை, கால தாமதம் இவை எல்லாம் தடைக் கற்கள்.

காவல் துறை சீர்திருத்த நடவடிக்கை, இதற்கு நல்ல உதாரணம். முதல் காவல் சீரமைப்பு சட்டம்1860-இல் இயற்றப்பட்டது. அதற்கு பிறகு எவ்வளவோ மாறுதல்கள். 1902-ஆம் வருடம் மத்திய காவல் சீர்திருத்த ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் காவல்துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு துணையான மாற்றங்கள். 

சுதந்திர இந்தியாவில் முதல் போலீஸ் கமிஷன் 1977-ஆம் வருடம் தரம் வீரா தலைமையில் அமைக்கப்பட்டது. 1975 -76-இல்  அவசர நிலையின்போது நடந்த காவல் அத்துமீறல்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால், காவல்துறை சீர்திருத்தத்தின் அவசியம் கருதி அப்போதிருந்த மத்திய அரசால் ஆணையம் அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், நாற்பது வருடங்கள் கடந்தும் மாநில அரசுகளால் அவை முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை.

1977 -ஆம் வருடத்தில் போலீஸ் கமிஷன் செயலர் தமிழ்நாட்டை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி நரசிம்மன்.  நல்ல பரிந்துரைகள், முக்கியமாக மாநிலங்களில் போலீஸ் துறையை கண்காணிக்க பாதுகாப்பு கமிஷன், காவல் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை, குறைந்தபட்ச பதவிக் காலம், கள அதிகாரிகள் இடமாற்றத்தைப் பரிந்துரைக்க குழு, காவல் நிலைய அளவில் புலன் விசாரணையை பலப்படுத்த தனி அதிகாரிகள் தேவை போன்றவை கொடுக்கப்பட்டன. 

பரிந்துரைகள் நிறைவேற்ற 1995-ஆம் வருடம் முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் தொடர்ந்த பொதுநல வழக்கை, உச்சநீதிமன்றம் பத்து வருடங்கள் விசாரித்து, 2006-ஆம் வருடம் செப்டம்பர்  22 அன்று  டிஜிபி நியமனம் உட்பட காவல்துறை சீர்திருத்தத்திற்கான ஏழு ஆணைகள் கொண்ட தீர்ப்பினை வழங்கியது. 

பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாது, டிஜிபி நியமனத்தில் சட்டத்திற்கு விரோதமாக தமிழகம் உட்பட பல மாநிலங்கள் செயல்பட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மாநிலங்களில் செயலாக்கம் பற்றி நேரில் ஆராய, நீதியரசர் தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2006-இல் வந்தபோது, திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அப்போது நான்கு முறை டிஜிபி-ஐ நியமனம் செய்தது. நான்குமே உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிமுறையைப் பின்பற்றாது செய்யப்பட்ட நியமனங்கள். 

நான்காவது முறை நியமனம் செய்ததை எதிர்த்து, நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம், அரசு செய்த நியமனம் செல்லாது என்றும், உச்சநீதிமன்ற வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அரசு நியமனத்தை ரத்து செய்தது. அதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கும் நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான், வேறு வழியின்றி  உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. 

பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்  தீர்ப்பின் முக்கிய ஷரத்து, உச்சநீதிமன்றம் வழிகாட்டியபடி புதிய காவல் சட்டம் இயற்றப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள, காலத்திற்கு ஒவ்வாத  காவல் சட்டம்-1860 மாற்றப்பட வேண்டும். 2013-ஆம் ஆண்டு அதிமுக அரசுதான் காவல் சட்டம் நிறைவேற்றியது. 2011 முதல், காவல்துறை தலைமை இயக்குனர் பதவி உயர்வில் உச்சநீதிமன்ற ஆணை கடைப்பிடிக்கப்பட்டது.

மத்திய காவல் அமைப்புகள் பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், ஐபி, சிபிஐ ஆகியவை, காலத்தின் தேவைக்கேற்ப சிறப்பு டிஜிபி-க்களை நியமித்துள்ளன. பல மாநிலங்களிலும் சிறப்பு டிஜிபி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது தமிழக காவல்துறை தலைமை பொறுப்பு வகிப்பவர், தமிழக  காவல் அணிகளின் தலைவர் என்ற பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) பணி புரிவதில் எந்த பிரச்னையும் இல்லை. இதைத்தான் 2010 லிருந்த அரசு செய்திருக்க வேண்டும். அதற்கான பரிந்துரையும் அளிக்கப்பட்டது. ஏனோ  அரசியல் நிர்பந்தம் காரணமாக பரிந்துரை ஏற்கப்பட வில்லை. 

தமிழக  முதலமைச்சர் இப்போது இதை நடைமுறைப்படுத்தியது வரவேற்கத்தக்கது. காவல் நிர்வாகம் சிறப்பாக செயல்பட இது வழி வகுக்கும். நிர்வாகம் சார்ந்த பல முடிவுகளை விரைந்து எடுக்க முடியும். 

காவல்துறை  சீர்திருத்தம் மூன்று வகையில் ஏற்படலாம். ஒன்று, உச்சநீதிமன்றம், பிரகாஷ் சிங் பொதுநல வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இரண்டாவது, மக்களின் எண்ணங்கள், யோசனைகள் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்வதன் மூலம், மூன்றாவது, தற்போதுள்ள காவல் அதிகாரிகளின் தவறுகளைத் திருத்தி காவல் சீர்திருத்தத்திற்கு வழி வகுக்கலாம்.

காவல் சீர்திருத்தம் என்பது உலகளாவிய பிரச்னை. நியூயார்க் நகர காவல் ஆணையர் வில்லியம் பிராட்டன் பிரசித்தி பெற்றவர். இவர் 1994-இல் பதவியேற்றபோது, கடத்தல் போதைப்பொருள் விற்பனை, கிரைம் சிண்டிகேட் என்ற கூட்டு களவானிகளின் அட்டூழியம் - இவை காவல்துறை கருப்பு ஆடுகள் துணையோடு தாண்டவமாடின. 

ஊழல் அதிகாரிகளையும், மெத்தனமாகவும், அடாவடித்தனமாகவும் பணி செய்யும் அதிகாரிகளையும் களையெடுப்பு செய்ததே அவரின் முதல் நடவடிக்கை. குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் இன்றி அவர் கடும் நடவடிக்கை எடுத்தது மக்களின் பேராதரவைப் பெற்றது. இத்தகைய நேர்மையான செயலாக்கம் காவல் சீர்திருத்தற்கு முதல் படி. 

புத்தாயிரம் பிறந்தபோது, "மில்லினியம் போலீஸ்' என்று புதிய நூற்றாண்டில் எல்லா நாடுகளும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளை "இன்டர்போல்' பட்டியலிட்டது. 

பயங்கரவாத வன்முறை, பொருளாதார குற்றங்கள், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி கடத்தல், பாலியல் குற்றங்கள், சைபர் இணையதளக் குற்றங்கள், சுற்றுப்புற சூழல், வனப் பாதுகாப்பு சார்ந்த குற்றங்கள், நிர்வாகம், அரசு செலவினங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றங்கள் இவை இன்டர் போல் பட்டியலில் அடங்கும். இதற்கு காவல்துறையினரை தயார் செய்ய வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும். 

 நம் நாட்டில் ஆடு, மாடு திருட்டுக்கும் போலீஸ் பதில் சொல்ல வேண்டும். நவீன சைபர் குற்றங்களையும் கையாள வேண்டும். சமீபத்தில் ஒரு மாநிலத்தில் முக்கிய நபரின் மாடு காணாமல் போனதைக் கண்டுபிடிக்க தனி போலீஸ் படை செயல்பட்டது என்பது அதிகாரம் படைத்தவர்கள் காவல்துறையை ஆட்டி படைக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

நமது மாநிலத்தில், 2008-ஆம் வருடம் ஊழல் வழக்கில் சிக்கியவருக்காக அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் பரிந்துரைத்தது ஊடகங்களில் கசிந்து  அதனால் அந்த அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. அதே சமயம், தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ததற்காக ஊழல் ஒழிப்புத் துறையின் நேர்மையான தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டது வினோதம். 

இங்குதான் காவல்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவது பற்றிய சர்ச்சை எழுகிறது. அரசியல் சாசனப்படி, சட்டம் - ஒழுங்கு நிர்வாகம் மாநில அரசின் ஆளுகையில் உள்ளது. உள்நாட்டு அமைதிக்கு அரசு பொறுப்பு என்ற வகையில், காவல்துறை பணி மேம்பாட்டிற்கு அரசின் தலையீடு தேவை. ஆனால் அதே சமயம், நீதின்ற விதிகள், சட்டம் இதற்கு உட்பட்டே காவல் துறை செயல் பட வேண்டும்.

சுதந்திரமாகவும்,  சட்டத்திற்கு உட்பட்டும் செயல்படும் காவலே "சீர்மிகு காவல்'.

கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com