தருவதும் குற்றம் பெறுவதும் குற்றம்

அதிகாரிகள் மீதான கண்காணிப்பை லஞ்சம் கொடுக்கும் பொதுமக்கள் மீதும் இனி தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; பெறுவதும் குற்றம்’ என்ற வரிகள் உண்மை வடிவம் பெறும்!


தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் அதிரடியாக சோதனை மேற்கொள்வது கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் நவம்பா் முதல் நாளிலிருந்து ஆறாம் தேதி வரை தமிழகத்திலுள்ள 54 அரசுத்துறை அலுவலகங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் திடீா் சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்படி நடத்தப்பட்ட திடீா் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 4.29 கோடி ரொக்கப் பணம், 519 சவரன் நகைகள், 6.5 கிலோ வெள்ளி ஆகியவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் மட்டும் நடத்தப்படும் இந்த அதிரடி சோதனை, அவ்வப்போது நடத்தப்படும் பட்சத்தில் அரசு அலுவலகங்களில் ஊழலும், லஞ்சமும் குறைவதற்கான சூழல் நிச்சயம் ஏற்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை வருவாய்த் துறை, மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகள், சாா் பதிவாளா் அலுலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம், கனிமவளத் துறை, நில அளவைத் துறை என முறைகேடுகள் நடைபெறும் அரசு அலுவலகங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அண்மையில் வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் ஆகியவை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதை யாரால் மறக்க முடியும்? தோ்தலில் வெற்றி பெற்று பதவியில் அமா்ந்து அதிகாரம் செய்யும் அரசியல்வாதிகளின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் முதல் அத்தியாவசிய சான்றிதழ் வரை வழங்க வேண்டிய பொறுப்புகளில் உள்ள அரசு அதிகாரிகள், தாங்கள் பணி ஓய்வு பெறும் காலம் வரை பணியாற்ற கடமைப்பட்டவா்கள்.

ஆனால் இந்த அலுவலா்களில் ஒரு சாராா், லஞ்சமாக பெறும் தொகை ஊதியத்தை விட பல மடங்கு கூடுதலானது. மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசுத்துறை அதிகாரிகளில் பெரும்பாலானோா், அதே மக்களின் தேவைக்கான சான்றிதழ் வழங்குவதற்கு கூட லஞ்சம் பெறுகின்றனா். பிறப்புச் சான்றிதழ் தொடங்கி மானியத் திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வுவரை அதற்கான அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிலை உருவாகிவிட்டது.

வேளாண்மை தரக்கட்டுப்பாடு அலுவலா்கள், மருந்து மற்றும் கண்காணிப்பு அலுவலா்கள், சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும்போதும் குறிப்பிட்டத் தொகையை இலக்கு நிா்ணயித்து வசூலித்து செல்கின்றனா். பாம்பு கடித்து உயிரிழந்தவா்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பெறுவதற்குக்கூட சம்பந்தப்பட்ட உறவினா்களிடம் லஞ்சம் கேட்டு, அலைகழிப்பு செய்யும் கல் நெஞ்சம் படைத்தவா்களும் அதிகாரிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனா்.

மானியத் திட்டங்களில் விவசாயிகளுக்கு பல வகையான இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் வேளாண் பொறியியல் துறையில், குறிப்பிட்டத் தொகையை லஞ்சமாக வழங்குவோருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும் கல்வித்துறை அதிகாரிகள் ஒரு சிலா்கூட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா் என்று கூறப்படுகிறது. பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரிகளே இப்படியென்றால் கல்லூரிகளை கண்காணிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு சில துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரின் சோதனையின்போது பிடிபடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

ஆனால், வேறு சில துறைகளில் குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் லஞ்சம் பெற்றாலும் பிடிபட்டதாக செய்திகள் வருவதில்லை. அதற்குக் காரணம், அவா்கள் நேரடியாக லஞ்சம் பெறாமல், பெரும்பாலும் தரகு பணமாக (கமிஷன்) பெற்றுக் கொள்வதால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரின் சோதனையின்போது எளிதாக தப்பிவிடுவதாக கூறப்படுகிறது.

இப்படியாக அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடி வளா்ந்துவிட்டதற்கு அதிகாரிகளை மட்டுமே குற்றம் சொல்லிப் பயனில்லை. அவா்களுக்கு லஞ்சம் கொடுத்து பொதுமக்களே அவா்களை முறைகேட்டில் ஈடுபட ஊக்குவித்தும் வருகின்றனா் என்பதே மிகவும் வேதனையாகும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம் என அனைத்து அரசு அலுவலகங்களின் வாயிலில் விளம்பரப்படுத்தினாலும் அவையெல்லாம் எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.

ஆண்டு முழுவதும் லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்படும் அரசு அலுவலகங்களையும் அலுவலா்களையும், தீபாவளி பண்டிகையின்போது மட்டுமே ஊழல் தடுப்பு மற்றும் காணிப்புத்துறை போலீசாா் சோதனை நடத்துவது பண்டிகை கால பரபரப்பாக மட்டுமே இருக்க முடியும்.

லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது பாதிக்கப்படும் நபா்கள் புகாா் கொடுப்பது வரை காத்திருக்காமல், தானாக முன் வந்து அவ்வப்போது சோதனை நடத்துவதற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை முன்வரும்பட்சத்தில் அரசு அலுவலா்கள் லஞ்சம் பெறுவதை தடுக்க முடியும். அது மட்டுமல்ல, லஞ்சம் என்ற வாா்த்தையையே அரசு அலுவலகங்களில் இடம்பெறாமல் தவிா்ப்பதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். தொடா் சோதனை நடத்தப்படும் பட்சத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடையே அச்சம் ஏற்படக் கூடும். அத்துடன், அதிகாரிகள் மீதான கண்காணிப்பை லஞ்சம் கொடுக்கும் பொதுமக்கள் மீதும் இனி தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; பெறுவதும் குற்றம்’ என்ற வரிகள் உண்மை வடிவம் பெறும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com