தவிர்க்க முடியாது; தள்ளி வைப்போம்!

 இன்றைக்கு நோய்த்தொற்றுப் பரவல் அச்சத்தால் எல்லாமே முடங்கிப் போயிருந்தாலும், சற்றும் முடங்காதவையாக இருப்பவை, தகவல் தொடர்புக் கருவிகளின் அமோக விற்பனையும் அவற்றின் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்ற வணிகங்களும்தான்.
 மின்னஞ்சல், முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற இணையவழித் தகவல் தொடர்புகளைக் கடந்த இன்னொரு தகவல் தொடர்பு முறை இல்லை என்பதே இன்றைய நிலை.
 குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், வணிகர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சர்வரோக நிவாரணியாக உயர்த்திப் பிடிக்கப்படுகின்ற இணையவழித் தொடர்பு முறைகள், அறிவியல் நமக்குக் கொடுத்திருக்கிற வரமா? சாபமா? இது இன்று நம்முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாகும்.
 இணையவழித் தகவல் தொடர்பு முறைகள், உலக மக்கள் அனைவரையும் ஒரே வலையின் கீழ் இணைத்திருப்பது உண்மைதான். ஆனால், மக்களோ அத்தகைய தகவல் தொடர்பு முறைகளால் தனித் தனித் தீவுகளாகிக் கொண்டிருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கூட ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள முடியாதபடி நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
 அனைத்து வசதிகளோடும் கூடிய ஓர் அலைபேசி, நூறு வகையில் ஒருவருக்குப் பயன்படுகிறது என்றால் ஐம்பது வகையில் அது அவருக்கான தொல்லையாகவும் செயல்படுகிறது என்பதுதான் உண்மை. அந்த ஐம்பது வகை தொல்லைகளும் நூறு வகைப் பயன்பாடுகளைக் காட்டிலும் வலிமையானவை.
 முதன்மையாக, சோம்பல் மனப்பான்மையை வளர்த்து, பொழுபோக்கு ஆர்வத்தைத் தூண்டி எதையும் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்து விட்டுக் கடந்து விடுகின்ற அலட்சிய உணர்வை ஏற்படுத்தி, மனிதனின் சுய ஆற்றலையும் சிந்தனைத் திறனையும் மழுங்கடித்து மறையச் செய்கின்றன.
 கடன் அட்டைகளை வழங்கும் வங்கிகள் போடுகிற கணக்கிற்குள் மறைந்துள்ள பணவெறியைக் கண்டுணரத் தெரியாத அப்பாவிப் பொதுமக்கள், தங்களது சொத்துகளோடு மானம் மரியாதையும் விற்று அத்தகைய வங்கிகளைக் கொழுக்க வைப்பதைப் போல, தகவல் தொடர்பு முறைகளைத் தாறுமாறாகக் கையாண்டு, கண்களுக்கு தெரியாத முதலாளிகளைக் கொழுக்க வைப்பவர்கள் நம்மிடையே உள்ளனர்.
 நமது நாட்டிலுள்ள விழிப்புணர்வற்ற, அறியாமை நிறைந்த மக்கள்தான் இணையவழி வணிக நிறுவனங்களின் வேட்டை இலக்குகளாக உள்ளனர்.
 அதனால்தான் அமெரிக்காவின் "கூகுள்' நிறுவனம், "கூகுள் ஃபார் இந்தியா' என்கிற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்வு, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றபோது, இந்தியாவை மின்னணு மயமாக்குவதற்காக ரூ. 75,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார், "கூகுள்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
 இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலத்திற்குள் இதே நிறுவனம் இந்தியாவின் பிரபல தகவல் தொடர்பு நிறுவனத்தில் ரூ. 33,373 கோடியை முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 இன்னொருபுறம், கடந்த வாரம் சீனாவைச் சேர்ந்த "ஒன் பிளஸ்' என்கிற அலைபேசி தயாரிப்பு நிறுவனம், ஹைதராபாத் நகரில் உலகிலேயே பெரிய அலைபேசி விற்பனை நிலையத்தைத் தொடங்கியிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு சீனாவில் கூட அவ்வளவு பெரிய விற்பனை நிலையம் இல்லையாம். இவை இரண்டு சான்றுகள்தான். இவை தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்துள்ளன.
 தகவல் தொடர்பின் அதீத வளர்ச்சி காரணமாகவே, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் மட்டும் பன்னிரண்டு காவல் மாவட்டங்களில் "சைபர்' குற்ற விசாரணைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.
 ஏற்கனவே பல்வேறு வகையான போதாமைகளோடு உழன்று கொண்டிருக்கின்ற நமது காவல்துறையினருக்கு, புதுப் புது வடிவம் கொண்டு பாய்ந்து வருகின்ற சைபர் கிரைம் குற்றங்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. மின்னணு தகவல் தொடர்புக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற "சைபர்' குற்றவாளிகளைக் கண்டறிய, காவலர்களுக்குத் தனிப்பயிற்சிகளை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது நமது காவல்துறை.
 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருபத்தைந்து கோடி மக்கள் இணைய வழித் தொடர்பு வகைகளின் பயனாளிகளாக இருந்துள்ளனர். அவர்களில் நான்கு கோடியே இருபது லட்சம் மக்கள், "சைபர்' குற்றவாளிகளால் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாயினர்.
 ஆனால், அந்தக் குற்றங்களை புலனாய்வு செய்து விசாரணை செய்வதற்கு பணியிலிருந்த சைபர் கிரைம் காவல்துறை விசாரணை அலுவலர்களோ வெறும் ஐந்தாயிரம் பேர்தான்.
 நடப்பு ஆண்டின் நிலவரப்படி, இணைய வழிப் பயனாளிகளின் எண்ணிக்கையும் இணைய வழிக் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில், காவல்துறையில் "சைபர்' குற்றப் புலனாய்வு அலுவலர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கும் என்பது நாம் கணிக்கக் கூடிய ஒன்றுதான்.
 சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, "இணைய வழிக் குற்றங்களை தடுக்க போதுமான சட்டங்கள் நம்மிடம் இல்லை. பள்ளிகளில் பிள்ளைகளுக்கான நன்னெறி வகுப்புகள் ஒரு விருப்பப் பாடத் தேர்வாகக் கூட இல்லை' என்று அண்மையில் தமது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
 தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கான "சைபர்' குற்றங்கள் நடக்கின்றன. அப்படி நடக்கின்ற குற்றங்களில் வெறும் இருபத்தைந்து விழுக்காட்டு வழக்குகள்கூட காவல் துறையில் புகார்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. காரணம், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கின்ற அவநம்பிக்கைதான்.
 "சைபர்' குற்றங்கள் அனைத்தையுமே பதிவு செய்து, அந்தக் கணக்கின் அடிப்படையில் நிதி ஒதுக்கி, வேண்டிய தொழில்நுட்ப, விசாரணை அலுவலர்களை பணியமர்த்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். ஆனால், "கொஞ்சம் பணம்தானே, போனால் போகட்டும், இதற்காக அலைய முடியாது' என்று மக்கள் கருதுவதால் வேக வேகமாக "சைபர்' குற்றாவளிகள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
 இதன் விளைவு என்ன ஆகும்? "நிலைமை விபரீதமாகி வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் அடிக்கடி தங்களது பணத்தை இழப்பார்கள். அந்தக் குற்றவாளிகளும் அச்சமின்றித் தங்களது குற்றச் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள்' என்று எச்சரிக்கிறார்கள் இணையத் தொடர்பியல் வல்லுநர்கள்.
 பணத்திருட்டு, தகவல் திருட்டு, சூதாட்டங்கள், பாலியல் சார்பு மிரட்டல்கள் போன்ற பல்வேறு வகையான இணைய வழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு மிகக் கடுமையான உளச்சிதைவுகளுக்கு ஆளாகி நடைப் பிணமாகிவிடுவோரின் எண்ணிக்கையும், பிணமாகி விடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வளரிளம் பருவத்துப் பிள்ளைகளும் விதவிதமான இணைய வலைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இது நம் சமூகம் வாழத் தகுதியற்ற சமூகமாக மாறிக் கொண்டிருப்பதன் அபாய அறிகுறியாகும்.
 இந்த கரோனா காலத்தில் மட்டும் ஐம்பது விழுக்காட்டு வளரிளம் பருவத்துப் பிள்ளைகளுக்குக் கண் தொடர்பான நோய்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். மேலும், பெற்றோருக்கும் அவர்தம் பிள்ளைகளுக்கும் கடுமையான கருத்து மோதல்களை உருவாக்குவதில் இன்றைய நிலையில் முதலிடம் பிடித்திருப்பவை அலைபேசிகள்தான்.
 பொட்டல உணவு வகைகள் நமது பிள்ளைகளை உடல் பருமன் கொண்டவர்களாகவும், அதன் விளைவான நோய்களை சுமப்பவர்களாகவும் மாற்றிக் கொண்டிருப்பது ஒருபக்கம் இருக்க, அலைபேசிகளோ அவர்களை "தகவல் பருமன் நோயாளி'களாக அதாவது தங்களுக்குத் தேவைப்படாத, தங்கள் மூளையில் வலியத் திணிக்கப்படுகின்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
 அனைத்தையும் இணைய வழியில் அறிந்து கொள்பவர்களாகவும், அனைத்துத் தேவைகளையும் இணைய வழி தொடர்பிலேயே பெற்றுக் கொள்பவர்களாகவும், வடிவமைக்கப்பட்ட இணைய அறிவைக் கடந்து புதிதாக எதையுமே சிந்திக்கக் தெரியாதவர்களாகவும் மாறிக்கொண்டு வருகின்ற நமது பிள்ளைகள், நடைமுறை எதார்த்த வாழ்க்கைக்குப் பொருந்துகிறவர்களாக இப்போது இல்லை என்பதே கசப்பான உண்மை.
 நடை, ஓட்டம், விளையாட்டு, குழுச்செயல்பாடுகள், உரத்த சிரிப்பு, உறவு முறைத் தொடர்புகள், இசை, பாடல், நடனம், ஓவியம், வீட்டு வேலைகள், சுய சார்புச் சிந்தனை, தன்பொருட்டான சிறு சிறு வேலைகள், காற்று, மழை, நீர்நிலைகள், பயிரினங்கள், பறவைகள், வனப்பரப்பு போன்ற வாழ்வின் அனைத்துக் கூறுகளில் இருந்தும் தங்களைத் துண்டித்துத் கொண்டு, இணைய வலை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக அவர்கள் மாறிப் போய் விட்டனர். இது எல்லை மீறிய அபாய நிலையாகும்.
 "இணைய வலை" குறித்த மிகக் கூடுதலான விழிப்புணர்வையும் அவற்றின் ஆபத்துகளுக்கு எதிரான உறுதியான பரப்புரைகளையும் உடனடியாக மேற்கொண்டாக வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
 இன்றைய நிலையில் இணைய வழிப் பயன்பாடுகளை நாம் தவிர்க்க முடியாது; தவிர்க்கவும் கூடாது. ஆனால், அவை நம்மையும் நமது வாழ்வையும் சீரழித்துவிடாதபடி அவற்றைக் கொஞ்சம் தள்ளி வைத்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!
 
 கட்டுரையாளர்:
 கவிஞர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com