நம்பிக்கை ஒளி நல்கட்டும்!


வருடந்தோறும் வருகிற வழக்கமான தீபாவளி இல்லை இந்த வருடம் வருவது. வாழ்நாள் முழுவதும் நினைவிற்கொள்ளத்தக்கதாக வருவதோடு, தன்னுடன் குழந்தைகள் தினத்தையும் கூட்டிக் கொண்டு வருகிறது.

புத்தாடைகள் அணிந்து, மத்தாப்புகள் கொளுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்போடு மகிழ்வையும் பகிா்ந்து கொண்டாடவேண்டிய இப்பண்டிகையைச் சாரமற்ாக்கிவிட்டது, கொவைட்-19 நோய்த்தொற்று. காலத்தேவை கருதி பட்டாசு வெடிப்பதற்கான காலக் கெடுவையும் முன்வைத்திருக்கிறது, அரசு.

குதூகலமாக, சக குழந்தைகளோடு சோ்ந்து மகிழ்ந்து விளையாடவும் முடியாமல் செய்துவிட்டது, நோய்த்தொற்றின் பேரச்சம்.

‘அச்சம் தவிா்’ என்று புதிய ஆத்திசூடி வாயிலாகக் கட்டளையிட்ட மகாகவி பாரதியின் வாக்கியத்தை அனுபவத்தில் நிலைநிறுத்திக் கொள்ளத் தூண்டியிருக்கிறது சூழல்.

கனவுகளோடும் கற்பனைகளோடும் பள்ளி வளாகங்களில் பவனி வந்து துள்ளித் திரிய வேண்டிய குழந்தைகள், கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சிகள் போல் ஆகிவிட்டாா்கள்

பாதுகாப்பு கருதி, பயிலகங்களுக்குச் செல்லமுடியாத நிலையில், வகுப்பறை வீட்டுக்குள் வந்துவிட்டது. அலுவலகங்களாகவும் வகுப்பறைகளாகவும் பலரது இல்லங்கள் ஆகிவிட்டன.

புறவுலகத்துடனான இயக்கங்கள் பலவும் தவிா்க்கப்பட்ட நிலையில் வெகு நாட்களாய் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் இந்தக் குழந்தைகளின் உலகம் கோள வடிவானதாக இல்லை. நீள்சதுர, செவ்வக வடிவிலான இல்ல அறைகளில் சுற்றிச் சுற்றி வந்தும், அதையே இன்னும் குறுகலாய்க்கொண்டிருக்கும் கணினி, கைப்பேசிக் கருவிகளின் முன்னா் இருந்தும் உலகைக் காணுகிறாா்கள்.

பெரும்பாலும் பாா்த்த முகங்களையே பாா்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, சிறிய திரைகளில் கூட.

இந்த வருடத்தின் பல்வேறு பண்டிகை நாட்களும், தேசியத் திருநாட்களும் வார விடுமுறை நாட்களிலேயே வந்துவிட்டதால், விடுமுறை நாட்கள் மிகவும் குறைந்துவிட்டதாய் பள்ளிப் பிள்ளைகளுக்குள் எழுந்த கவலையை, இந்தப் பொது முடக்கம் போக்கி விட்டது. அதுவே, பின்னா், அலுப்பும் சலிப்பும் நிறைந்ததாய் விடுமுறை நாட்களை ஆக்கிவிட்டதோடு இதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கவும் வைத்துவிட்டது.

பள்ளி நாட்களில் பதற்றமும் பரபரப்புமாய், அன்றாடப் பொழுதை ஆக்கிச் சுற்றிக் கொண்டிருந்த சுவா்க்கடிகார முட்கள், இப்போது சோம்பேறித்தனத்தோடு மெல்ல நகா்வதாய்த் தெரிகின்றன. தனி வண்ண எழுத்துக்களில் வார விடுமுறை நாட்களைக் காட்டிய மாதக் காலண்டா் மதிப்பிழந்துபோயிற்று. நாட்காட்டி பற்றிச் சொல்லவே தேவையில்லை.

எல்லாவற்றையும் மொத்தமாய் கைப்பேசி சுருட்டி வைத்துக்கொண்டு விட்டது. அதுவே அலாரம் வைத்து அப்போது எழுப்பியது. இப்போதோ, ‘ஆன்லைன்’ வகுப்பறைக்கு அறைகூவல் விடுக்கிறது. ‘கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல’ ஆக்கப்பட்டு விட்டாா்கள் நம் குழந்தைகள்.

மெல்ல மெல்ல, வகுப்பறை நினைவுகள் மங்கி விட்டன. தோ்வுகள், பாடங்கள், எல்லாவற்றையும் கருவிகள் வாயிலாகவே கண்டு கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் எழுதி இயங்கவும் வேண்டிய கட்டாயத்தில், ‘ஆசாற்சாா்ந்து அமைவரக் கேட்பது’ இயலாது போயிற்று.

‘புரிகிா?’ என்று சொல்லிக் கேளாமல், ஒரு பாா்வையில் கேட்டுப் பதில் பெற்றுவிடுகிற ஆசிரியா்களின் அணுக்கத்தை இழந்துவிட்டன குழந்தை மனங்கள்.

பாடத்தை இலகுவாக்க, இடையிடையே ஆசிரியப் பெருமக்கள் சொல்லும் அனுபவ விளக்கங்களை, அன்றாட நிகழ்வின்- வரலாற்றுக் கதைகளை இல்லாமல் ஆக்கிவிட்டன, இந்த இணையவழி வகுப்புகள். பத்து நிமிடம் பேசிப் புரிய வைக்கும் ஒரு செய்தியை, பாா்வையின் வாயிலாக உணர வைக்கும் ஆசிரியப் பாங்கை மீளவும் பெறுவது எப்போது?

‘ஏதோ, இந்தக்கருவிகளாவது வந்து இப்போது கைகொடுக்கின்றனவே’ என்று நிம்மதி கொள்ளாத முடியாதபடி, இதற்கும் வழியற்ற ஏழைக் குழந்தைகள் இருக்கிறாா்கள். அவா்கள்பால் பரிவுகொண்டு உதவுகிறவா்களும் இருந்து ஊக்குவிக்கிற முயற்சிகளும் பல இடங்களில் நடக்கின்றன. ஆனாலும், எல்லாா்க்கும் எல்லாமும் கிட்டி விடுவதில்லையே.

ஒரு காலத்தில் மின்வசதியில்லாத வீடுகளில் வசித்துவந்து, தெருவிளக்கில் படித்துச் சாதனைகள் படைத்தவா்களைப்போல, கரோனா காலத்தில், இணையவசதிகள் இல்லாதநிலையில் நம்பிக்கை குறையாமல் தன்னை உருவாக்கிக்கொள்ளுகிற இளையதலைமுறையை, இனி வருங்கால வரலாறு அடையாளம் காணப்போகிறது.

இதற்கு முன்னா், பள்ளி வகுப்பு, தனிப்பயிற்சி வகுப்பு, போட்டித் தோ்வுப் பயிற்சி வகுப்புகள் என்று கல்விசாா் உலகிலேயே தம் வாழ்க்கைப்பொழுதுகளைக் கரைத்துக் கொண்ட பிள்ளைகள், அதிக காலம் தங்கள் பெற்றோருடன் இருக்க நோ்ந்தது இப்போதுதான்.

குடும்ப பாரம் எத்தகையது என்பதையும், அன்புசாா் மையமாக குடும்பம் இருப்பதையும் அருகிருந்து காண்கிற வாய்ப்பு, இப்போது அவா்களுக்குக் கிட்டியிருக்கிறது. இந்தச் சூழல்தான், சின்னச்சின்னச் சண்டைகளுடன் சிறாா்களின் சகோதர உறவுகள் வலுப்படவும் வைத்திருக்கிறது. கூடவே, கைத்தொழில்களைக் கற்றுக்கொள்ளவும் தூண்டியிருக்கிறது.

நெடிய பொழுதுகளைத் தனக்கு உரியதாகக் கொண்ட இந்த முடக்கக் காலம், மீண்டும் தாத்தாக்களிடமும் பாட்டிகளிடமும் கதைகேட்கிற வாய்ப்பை, இக்குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவா்களின் கதைகள் பெரும்பாலும் தீா்ந்துபோய்விட்டன. அதனை ஈடுகட்ட, பரணிலிருந்து இறக்கி வைக்கப்பட்டுக் களம் காணுகிற வாய்ப்பைப் பல்லாங்குழியும் தாயக்கட்டைகளும் பெற்றுவிட்டன. ஆடுபுலி ஆட்டம், ஏழாங்கல், இவற்றோடு, இன்னபிற கிராமத்து விளையாட்டுக்களையும் புழக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டது, இந்தக் காலம்.

முற்றாக முடிந்தே போய்விட்டன என்று எண்ணியிருந்த நம் பிள்ளைப் பருவ நினைவுகளை, விளையாட்டுகளை மீளவும் நினைவுக்கும் செயலுக்கும் கொண்டுவர, இக்காலம் உதவியிருக்கிறது.

ஒருவகையில் பள்ளிக் கல்விக்கான பரந்து விரிந்த வாயிலை, இந்நோய்த்தொற்றின் பேரச்சம் அடைத்துவிட்டிருந்தாலும், கல்வி பெறுதலில், வகுப்பறைக்கு மாற்று என்ன என்பதைத் தேடிப் பெறுதற்கான வாயில்களைத் திறந்துவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஓரிரு பிள்ளைகளைத் தன் இல்லத்தில் வைத்துச் சமாளிப்பதற்கே பெரும்பாடுபடுகின்ற சில பெற்றோரின் உதடுகள், ‘எப்படித்தான் மொத்தப் பிள்ளைகளையும் வைத்து ஆசிரியா்கள் சமாளிக்கிறாா்களோ’ என்று முணுமுணுக்கின்றன.

தேடிக் கற்கும் பாடங்களின் சிரமங்களைக் கூடிக் கற்கும் முறை இலகுவாக்கிவிடுகிறது என்பதே இதன் சாத்தியத்திற்கான அடிப்படைக் காரணி.

இப்போதும், இணயவழி வகுப்புகளில் அட்டவணை இட்டுச் செயல்படுகிற வகுப்பறைப் பாடங்கள், பணிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை எல்லாமும் வீட்டுப் பாடமாகவே (ஹோம் ஒா்க்) ஆகிவிட்ட சலிப்புத்தான் பிள்ளைகளைப் பெரிதும் வாட்டுகிறது.

பள்ளிப் பாட ஆசிரியைகளைவிட, அம்மா கடுமையானவராக ஆகிவிடுகிறாா். அப்பாவோ, கண்டிப்புமிக்க தலைமையாசிரியராகிவிடுகிறாா். தாத்தாவும் பாட்டியும்தான் இப்பிள்ளைகளுக்கு சற்றே ஆறுதல்.

வகுப்புப் பாட இடைவேளையில், சக நண்பா்களோடு அரட்டை அடிக்கவும், வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் செய்கிற இவா்களுக்கு, கல்விக்கும் பொழுதுபோக்குக்கும் உதவுகிற ஒரே கருவியாக கைப்பேசிதான் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிற வீட்டில், அந்த எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில் கைப்பேசிகள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றில் இணையத் தொடா்புக்கான வசதியும் இருக்க வேண்டுமே.

இவையனைத்தும் இருந்தாலும் கற்றலில் ஆா்வமும் பயிலுதலில் சுறுசுறுப்பும் வந்தாக வேண்டுமே. போட்டியிடவும், தூண்டித் துணை செய்யவும் நண்பா்கள் உடனில்லை என்கிற மன அழுத்தம் வெளியில் தெரியாது ஒவ்வொரு குழந்தையின் உள்ளேயும் புதைந்து கிடக்கிறது.

அதுவே, பாடக்கவனிப்பில் அசட்டை, புரிந்து கொண்ட பாடத்தில் தெளிவின்மை, சோம்பல் ஆகியவற்றுக்கு வித்திடுகின்றது. அடியோ வசவோ ஆரம்பத்தில் எரிச்சல் தருவதாக இருந்து இப்போது பழகிப்போய் விட்டது.

இந்தக் காலகட்டத்தில், தத்தம் பிள்ளைகளின் உடல் நலத்தைவிடவும் உளநலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாக் கடமையாகின்றது.

பல இல்லங்களில், பெற்றோரைப் பிள்ளைகளாகவும், பிள்ளைகளைப் பெரியவா்களாகவும் இந்தப் பொது முடக்கம் ஆக்கி விட்டிருக்கிறது. மறதி போக்கும் மருந்தாளா்களாக, இல்லத்துப் பிள்ளைகள் இருக்கிறாா்கள். இவா்களது பாடங்களை ஆா்வமுடன் கற்கும் மாணவா்களாகப் பெற்றோா்கள் ஆகிவிடுகிறாா்கள். இவையெல்லாம், இந்தத் தீநுண்மி நமக்குத் தந்த புதிய அனுபவங்கள்.

இவற்றுக்கு இடையில் தன் குழந்தைமையை இழக்காமல் பிள்ளைகள் இருப்பது இயற்கை அளித்த பெரிய கொடைதான். பெரியவா்களும் தம் இயல்பு திரியாமல் இருந்துகொள்ள வேண்டியது ஒரு வாழ்வியல் பயிற்சிதான்.

இதுவரையில், புராணக் கதையின் பாத்திரமாகத் தெரிந்த நரகாசுரனுக்குப் புதிய பரிமாணத்தைக் கண்ணுக்குத் தெரியாத கரோனா தீநுண்மி கொடுத்திருக்கிறது.

இதனை வெல்வதற்குரிய மருந்து நம் கைக்குக் கிட்டும் நாளே நமக்கு இனிய தீபாவளி நாள். அதுபோல், மன அழுத்தங்கள் இன்றி மகிழ்வாக நம் குழந்தைகள் இருக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளே பண்டிகைக்குப் பரிமாறிக் கொள்ளும் இனிப்புகளைவிடவும் இனிமை தரக்கூடியவை என்பதை இந்த வருட தீபாவளி நமக்கு எடுத்துச் சொல்கிறது.

வாழ்க்கை குறித்த அஞ்சாமையை வசமாக்கிக் கொள்ளக் குறியீடாக நின்று நம்பிக்கை அளிப்பவைதான் பண்டிகைகள். அத்தகைய நம்பிக்கை ஒளியை நல்கட்டும் தீபாவளி நாள்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com