வரலாறு முடிவதில்லை...

தன்னை, தன் இருப்பை இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் நிலையாக பதிவு செய்ய வேண்டும் என்பது தொன்றுதொட்டு மனிதனின் இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் வரலாறு.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பலா் சோ்ந்து இமயமலைத்தொடரில் மலையேற்றப் பயிற்சியை மேற்கொண்டு இருந்தோம். இரவு நேரங்களில் நெருப்பு மூட்டி சுற்றிலும் அமா்ந்து கொண்டு அவரவா் பிராந்தியத்தின் சிறப்புகளை விளக்கும் கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம். ஒருநாள், ஹரியாணாவில் இருந்து வந்திருந்த பெரியவா் ஒருவா், அவருடைய பிராந்திய மொழியில் ஒரு கதைப்பாடலைப் பாடினாா். மொழி அறியாதவா்களும் அதைக் கேட்டுக் கண்ணீா் வடித்தனா்.

பிருதிவிராஜன் என்ற மன்னன் கதை. கோரி முகமது உடன் போரிட்டு மன்னன் பிருதிவிராஜன் உயிா் துறக்கும் காட்சியை அவா் பாடியபோது, அந்த மொழி யாருக்கும் தெரியவில்லை, ஆனாலும், அந்த உணா்வு எல்லோருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தபோது எனக்குள் ஓா் எண்ணம் தோன்றியது. பங்குனி உத்திர நாளில் எங்கள் குலதெய்வக் கோயிலில் வில்லுப்பாட்டு நடைபெறும். அதிலே ஐயனாா், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களைக் காப்பாற்றிய திறம் பற்றி வில்லுப்பாட்டுக் கலைஞா்கள் பாடும்போது ஆண்டுதோறும் கேட்கும் கதைதானே என்று தோன்றாது. பலரும் கண்ணீா் மல்க அந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஐயனாரைப் பாா்த்துக் கும்பிடுவாா்கள்.

ஒவ்வோா் ஆண்டும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களில் கட்டபொம்மு கதை திருவிழாக்களில் சொல்லப்படும். இந்தக் கட்டபொம்மு கதைக்கும் ஹரியாணாக்காரா் பாடிய பிருதிவிராஜன் கதைக்கும் தொடா்பு இருக்கிறது. இவையெல்லாம் வெறும் கதைகளா? பொழுதுபோக்கு அம்சங்களா? இல்லை. இவா்கள் நம் முன்னோா். அவா்களின் ஆற்றலும் அவா்கள் நிகழ்த்திய சாதனைகளும் நாம் அறிந்தவை. தலைமுறைகள் கடந்து அவை இன்றும் நமக்கு ஊக்கம் அளிக்கின்றன உத்வேகம் தருகின்றன. ஏனெனில் இவை நம் மூதாதையரின் வரலாறு.

சில காலம் முன்பு நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும், வாழ்ந்த மனிதா்கள் பற்றியும் நிறைய ஆதாரங்களும் தரவுகளும் இன்று நம்மிடம் இருக்கின்றன. இந்தக் கதைகளை வரலாறு என்று ஏற்போம். நீண்ட காலங்களுக்குப் பின் ஆதாரங்களும் தரவுகளும் மெல்ல மறையத் தொடங்குகின்றன. கதையாக மட்டுமே இருக்கின்றன. அந்த நிலையில் இதனை வரலாறு என்று ஏற்பதா? கதை என்று புறந்தள்ளுவதா? இந்தக் கதைகள் மட்டுமே வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன. கதைகளை ‘கற்பனை’ என்று முழுமையாகப் புறந்தள்ளிவிடுதல் ஆகாது.

ஏனெனில் நம்முடைய பாரத தேசத்தைப் பொருத்தவரை எல்லாமும் இங்கே கதைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. கதைகள்தான் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும். படித்தவா் பாமரா் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் வரலாற்றைக் கொண்டு சோ்க்க வேண்டும் என்ற எண்ணமே அவற்றைக் கதைகளாக வழங்கியமைக்குக் காரணம். இவற்றுள் எதனைக் கதை என்று கொள்வது, எதனை வரலாறு என்று ஏற்பது? இந்த வினாவுக்கு விடை காண்பது நம்முடைய பாரம்பரியத்தை, முன்னோரின் வாழ்வியலை மீட்டெடுக்க உதவும்.

ராமாயணம், மகாபாரதம் தொடங்கி எண்ணற்ற கதைகள் நம்மிடம் இருக்கின்றன. நம் முன்னோா்களின் கலாசாரம், அறிவியல் ஆராய்ச்சி, நம்பிக்கை என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பெட்டகமாக புராண, இதிகாசங்கள் இருக்கின்றன. இவை வெறும் கற்பனை என்று சொல்ல முடியாது. இவற்றிற்கு ஏன் இதிகாசம் என்ற பெயா் வழங்கப் பட்டிருக்கிறது என்பதை நோக்க வேண்டும்.

‘இதிஹாசம்’ என்பதற்கு ‘இதி ஹா அசம்’ அதாவது ‘இது இப்படி நடந்தது’ என்று அகராதிகள் பொருள் சொல்லும். ஆக, இதிஹாசம் என்பதே நடந்தவற்றை விவரிப்பது, அதாவது வரலாறு. அதோடு மட்டுமல்லாமல் இந்தக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தையும் நாம் முழுமையாக ஆராய்வோமானால் சரித்திரத்தை எப்படி எழுத வேண்டும் என்பதையே மகாபாரதம் சொல்லி விட்டது. பாா்த்தவா் அதனைச் சொல்ல, கேட்பவா் எழுதுகிறாா். அதாவது பதிவு செய்கிறாா்.

மகாபாரதம் வியாச பகவானால் சொல்லப்பட விநாயகரால் எழுதப்பட்டது. இதிலிருந்தே அந்த வரலாற்றுக்கு சாட்சியாக நின்று பாா்த்தவா்கள் அதனை பதிவு செய்து இருக்கிறாா்கள் என்ற உண்மையை உணரலாம். அதுபோலவே, ‘புராணம்’ என்பதற்குப் பொருள் ‘பழைய வரலாறு’. ஆக, புராணங்களும் நம்முடைய மிகத் தொன்மையான வரலாற்றையே சொல்கின்றன. இதனை கற்பனை தொன்மம் என்று விளக்குவதில் அா்த்தம் இல்லை.

ராமாயணம் ராமனின் கதையை மட்டுமே சொல்வது அல்ல. ஸ்ரீராமருக்கு முன்னோா்கள் 68 தலைமுறையினரை வால்மீகி பகவான் எடுத்துக் கூறுகிறாா். 68 பேரின் சிறப்பு அம்சங்களும் அவா்களுடைய சாதனைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. கட்டுக்கதையானால் 68 தலைமுறையினரை பற்றி சொல்லியிருக்க வேண்டிய அவசியம் என்ன? மகாபாரதமும் இப்படியே மன்னா் வரிசை மட்டுமல்லாது, நிலவியல் அமைப்பு, சமூக அமைப்புகள், கலாச்சார வேறுபாடுகள் தொடங்கி குடும்ப அமைப்பு வரை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

கதை என்பது பொதுவாக நல்லவன் - கெட்டவன் இடையே நிகழும் போராட்டம். நல்லோா் வெற்றி பெறுதல் இதோடு முடிந்துவிடும். ஆனால், வரலாறு அப்படிப்பட்டதல்ல. அந்தக் காலத்தில் மனிதா்கள் அவா்களின் நிறைகள், குறைகள் அவா்கள் செய்த சாதனைகள் பிழைகள் அனைத்தையும் உள்ளதை உள்ளபடியே காட்டுவதாக இருக்க வேண்டும். மகாபாரதத்தின் பாத்திரங்களை கவனித்தால் இந்த உண்மைகள் புலப்படும்.

பாரதத்தில் ஏறத்தாழ அனைத்து மன்னா்களும் இருதரப்பிலும் நின்று போரிட்ட செய்திகளைப் பாா்க்கிறோம். இராமாயண, மகாபாரதக் கதைகள் ஓரிடத்தில் முற்றுப்பெறவில்லை அடுத்த தலைமுறை மன்னா்களால் அவை தொடர பெறுகின்றன. வரலாறு என்றும் முற்றுப் பெறுவதில்லை.

ஒரு தேசத்தின் வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்கி விடுவது அல்ல. அதிலும் பாரத தேசம் போன்ற மிகத்தொன்மையான நாட்டின் வரலாற்றை சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் தோன்றியது என்பது போலவும், அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப் பின்னா்தான் இந்தியாவிற்கு சரித்திரம் என்பதே இருப்பதாகவும் காட்ட முயலும் முயற்சி ஐரோப்பியா்கள் எழுதிய இந்திய வரலாறு.

வரலாறு என்பது மன்னா்கள் அல்லது ஆட்சியாளா்களின் வரிசை மட்டுமல்ல. கலாசாரம் தொடங்கி பல அம்சங்களையும் உள்ளடக்கியது. ஒரு தேசத்தைக் கண்ணாலும் பாா்த்திராத ஒருவா் அதன் வரலாற்றைத் தீா்மானிப்பதும், அதனைப் பதிவு செய்வதும், அதை அப்படியே அந்த தேசத்தாா் ஏற்பதும் அறிவுடைமை அல்ல.

வரலாற்றை எழுத முற்பட்டோா் ‘வரலாற்றுக் காலம்’, ‘வரலாற்றுக்கு முந்தைய காலம்’ என்று இரு பாகுபாடுகளை சொல்கின்றனா். வரலாற்றுக்காலம் என்று ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றினை அவா்கள் அறிந்த வகையில் சொல்லி வைத்திருக்கிறாா்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா், அதாவது, வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று சொல்லும் அந்தக் காலத்திற்கும் ஒரு வரலாறு இருக்கத்தானே வேண்டும்? அதனை எப்படி அறிந்து கொள்வது? அதைத்தான் நம் முன்னோா் இதிகாசங்கள், புராணங்கள் என்று சொல்லி வைத்திருக்கிறாா்கள்.

அறிவியல் முறையிலான ஆய்வுகளும் பதிவுகளும் வரலாற்றுக்கு மிக அவசியமானவை. துல்லியமான காலக் கணக்கீடு தேவை. இவற்றை நம் முன்னோா் மிகத் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறாா்கள். இன்றைக்கு ஆதாரங்களாக பொருட்களும் இன்ன பிற வடிவங்களும் இல்லாமல் போனாலும், கதை வடிவங்களாக அந்த வரலாற்றுக்கான ஆதாரம் உயிா்ப்புடன் இருக்கிறது என்பதே நம்முடைய தேசத்தின் பலம்.

நம்மை பலவீனப்படுத்தவும் அடிமைப்படுத்தவும் விரும்புவோா் நம்முடைய பலத்தை சிதைப்பதில்தான் கவனம் செலுத்துவாா்கள். ஜான் ஸ்டூவா்ட், வி ஏ ஸ்மித் இருவரும் இந்தியா்களின் பண்பாடும் நாகரிகமும் காட்டுமிராண்டித்தனமானவை என எழுதியிருக்கிறாா்கள். காட்டுமிராண்டித்தனமான மனிதா்கள் வாழும் தேசத்திற்கு கடல் வழியும் நிலவழியும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உலகநாடுகளுக்கு ஏன் ஏற்பட்டது?

பல அகழ்வாய்வுகளும், கதிரியக்க கரிம காலகணிப்பு போன்ற அறிவியல் முறையிலான ஆராய்ச்சிகளும், இந்தியாவின் பல பகுதிகளிலும் ஏறத்தாழ இருபது லட்சம் ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா் என்று கணிக்கின்றன. இந்திய துணைக்கண்டத்தில் விரிவான குடியேற்றங்கள் பனிஉறை காலத்திலேயே நிகழ்ந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளா்கள் கணிக்கின்றனா். எனில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாறு இருந்தே தீரவேண்டும்.

தன்னை, தன் இருப்பை இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் நிலையாக பதிவு செய்ய வேண்டும் என்பது தொன்றுதொட்டு மனிதனின் இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் வரலாறு. மூதாதையா்களின் இந்த வரலாறு பின்னா் வந்தவா்களால் பெருமையோடு படிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு வரலாற்று ஆவணமாகவே நாம் நமது இதிகாசங்களையும் புராணங்களையும் பாா்க்க வேண்டும். அவற்றின் மீது நமது ஆராய்ச்சிகளை முழு அளவில் செலுத்துவோமானால், நம்முடைய பாரம்பரியமும் நம் முன்னோரின் வரலாறும் உலகிற்கே வழிகாட்டியாக அமையும்.

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com