குணமடைந்தும் தொடரும் கவலைகள்!

கரோனா நோயிலிருந்து குணமடைந்துவிட்டேன். ஆனால், அது தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

கரோனா நோயிலிருந்து குணமடைந்துவிட்டேன். ஆனால், அது தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. கூட்டுக் குடும்பமாக வசிக்கும் எங்கள் குடும்பத்தில் பத்து பேரில் எட்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டோம். துரதிருஷ்டவசமாக, எனது கடைசி சகோதரர் கொள்ளை நோய்க்கு பலியாகிவிட்டார்.  
கரோனா நோய்த் தொற்று உறுதியானவுடன், நாங்கள் நோயைக் கண்டு கவலை கொள்ளவில்லை. சுகாதாரத் துறையின் மோசமான நிலையே எங்களுக்கு அச்சத்தை அளித்தது.
உயிரிழந்தவர் உள்பட இரு சகோதரர்கள் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மன உளைச்சலை எதிர்கொண்டோம். மருத்துவமனையில் போய் சேருவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. 
நல்ல மருத்துவமனையைத் தேடுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. ஒருவழியாக மருத்துவமனையைக் கண்டுபிடித்தால், அதில் அனுமதிக்கப்பட பெரும்பாடு பட வேண்டியதாயிற்று. இருப்புக்கும் தேவைக்கும் இடையே இடைவெளி ஏற்படும்போது, அதிகபட்ச லாப நோக்குடன் செயல்படும் தன்மையை கரோனா காலத்தில் பெருமருத்துவமனைகளிடம் கண்கூடாகக் காண முடிந்தது.
ஒருவழியாக, ஒரு பெருமருத்துவமனையில் இருவரையும் சேர்க்க முடிந்தது. ஆனால், எங்கள் துன்பம் அத்துடன் தீரவில்லை. 
உயிரிழந்த எனது சகோதரர் மருத்துவமனையில் இருந்த ஏழு நாள்களுக்கான கட்டணம் ரூ. 10 லட்சம். இறுதியில், மருத்துவமனை நிர்வாகம் பெருந்தன்மையுடன் கட்டணத்தில் சலுகைகள் அளிக்காமல் இருந்திருந்தால் கூடுதலாக நாங்கள் 1,097 ரூபாய், 32 பைசா செலுத்த வேண்டி இருந்திருக்கும்! மற்றொரு சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ. 4.4 லட்சம். 
கரோனா நோயாளிகளுக்கு இடமில்லை என்று கூறி நிராகரித்துவிடுவார்கள் என்ற அச்சத்திலும், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுவது தொடர்பான அச்சத்திலும் எந்த மருத்துவமனைக்கும் நான் செல்லவில்லை. எனது குடும்ப மருத்துவர் எச்சரித்தபோதும், அதிருஷ்டவசமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு கரோனா முற்றவில்லை.
ஒரு நள்ளிரவில் சிறிது நேரம் காய்ச்சல், குளிர், நடுக்கம் இருந்தது. உடல் வெப்ப நிலை 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. அடுத்த நாள் விரைவுப் பரிசோதனை செய்தபோது கரோனா நோய்த் தொற்று உறுதியானது.
உடல் வெப்பநிலை குறையாமல் அதிகபட்சமாக ஐந்தாவது நாள் 104 டிகிரியும், அடுத்த இரு நாள்கள் 103 டிகிரியும் இருந்தது. எட்டாவது நாள் உடல் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இரண்டாவது நாளில் தொடங்கிய தொண்டைக் கட்டு, மூன்றாவது நாளில் உச்சத்துக்கு சென்றது. அப்போது எதைச் சாப்பிட்டாலும் நரக வேதனைதான். ஐந்தாவது நாள் பூரண குணமானது.
எனக்கு மருத்துவர்கள் அளித்த மருந்துகள் - அஸித்ரோமைசின் 500, டோலோ 650, லெவோசெட் எம், வைட்டமின் சி, ஸின்கோவிட், ஃபுளுவிர், ஃபாபிஃபுளு, வைட்டமின் டி3 60கே. ஐந்தாவது நாள் உடல் வெப்பநிலை உச்சத்தில் (104 டிகிரி) இருந்தபோது டெக்ஸாமெதசோன் 6 எம்ஜி மருந்து அளிக்கப்பட்டது. இந்த மாத்திரையை முதலில் உட்கொண்டபோது, வாந்தி வருவது போன்ற குமட்டல் உணர்வு இருந்தது. கிராம்பு எடுத்துக் கொண்டவுடன் இது சரியானது. இத்துடன் ஐந்து நாள்களுக்கு மீத்தைல்பிரெட்னிசோலோன் 40 எம்ஜி கொடுக்கப்பட்டது. ஐந்தாவது நாளில் இது 8 எம்ஜியாக குறைக்கப்பட்டது.
வழக்கமான மற்ற உணவுகளுடன் அதிகமான பழங்கள், காய்கறிகள், தயிர், ஒரு முட்டை ஆகியவற்றை தினசரி எடுத்துக் கொண்டேன். முதல் சில நாள்கள் அதிகமான எலுமிச்சை சாறு, வெந்நீர் அருந்தியதுடன் ஆவியும் பிடித்தேன். பல்ஸ் ஆக்ஸிமீட்டர், தெர்மாமீட்டர் ஆகியவற்றை அருகிலேயே வைத்திருந்தேன். அவ்வப்போது உடல் வெப்பநிலையையும், ஆக்சிஜன் அளவையும் பரிசோதித்துக் கொண்டேன். பல நேரங்களில் எனது ஆக்சிஜன் அளவு 95 என்ற அளவிலேயே இருந்தது. 90}க்கு கீழ் குறைந்திருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.
இவை எனது அனுபவங்கள். ஆனால், ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை: உடல் ரீதியான இடைவெளியைக் கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.
இந்தப் பெருங்கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளைப் பற்றி கூறவே தேவையில்லை. வர்த்தக நிறுவனம் போன்று லாபம் ஈட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாகவே அவை செயல்படுகின்றன. கரோனா அவர்களுக்குப் பெரும் வாய்ப்பாகவே அமைந்துவிட்டது. எங்கள் அனுபவமும் அப்படியே அமைந்தது. 
அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறையாமல் கட்டணம் வசூலித்தார்கள். சராசரி இந்தியனுக்கு நல்ல மருத்துவமனையில் தரமான சிகிச்சை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 
இந்தியாவில் சுகாதாரத் துறைக்கு சொற்பமான அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உலக அளவில் சராசரியாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத் துறைக்கு 6 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு சதவீதத்துக்கும் சற்று அதிகமாக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. 2020}21 நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதைவிட 10 சதவீதம் அதிகம். ஆனாலும், இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் ஜிடிபியான ரூ.2.24 லட்சம் கோடியில் இது வெறும் 0.30 சதவீதம்தான். மற்ற எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து ஜிடிபியில் 0.75 சதவீதம் ஒதுக்குகின்றன. நீண்ட காலத்துக்கு முன்பே, திட்டக் குழுவும், டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டியும் ஜிடிபியில் 2.5 முதல் 3 சதவீதம் ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத் துறைக்கு அரசு மிகக் குறைவாக ஒதுக்கீடு செய்வதால், கிராமப்புற பகுதிகளில் 72 சதவீதம் பேரும், நகர்ப்புற பகுதிகளில் 79 சதவீதம் பேரும் தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய சூழல் உள்ளதாக 71}ஆவது சுற்று தேசிய மாதிரி ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தங்களது திட்டங்கள் குறித்து அரசு விளம்பரப் படுத்திக் கொண்டாலும் கிராமப்புற பகுதிகளில் 86 சதவீதம் பேரும், நகர்ப்புற பகுதிகளில் 82 சதவீதம் பேரும் அரசின் எந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்குள்ளும் வரவில்லை.
ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க  வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், இந்தியாவில் 10,926 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே உள்ளது. அமெரிக்காவில் இயங்கும் "நோய் செயல்பாடு - பொருளாதாரம் - கொள்கைக்கான மையம்' அளித்த புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள், 20 லட்சம் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.
பெருமருத்துவமனைகள்- மருந்து நிறுவனங்கள் - மருத்துவர்கள் இவர்களுக்கிடையே உள்ள ரகசியக் கூட்டணி காரணமாக, உடல் நலிவுறும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளப்படுகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் காரணமாக சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 3.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்குவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
மனித ஆற்றலில் இந்தியா, மொத்தமுள்ள 195 நாடுகளில் சூடானைவிட ஒரு இடம் பின்தங்கி 158}ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளாக, தரமற்ற கல்வியும், அதிகமான நோய்களுமே உள்ளன.
சுகாதாரத் துறை வணிகமயமாவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "ஆயுஷ்மான் பாரத்' திட்டமும் சர்வதேச சுகாதாரத் திட்டங்களுக்கு இணையாக இல்லை. 130 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில், அதுவும் 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையில் மேம்போக்கான மாற்றங்கள் பயன் அளிக்காது.
அதேபோல, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட "தேசிய எண்ம சுகாதாரத் திட்டம்', "தேசிய சுகாதார அடையாள அட்டை திட்டம்' ஆகியவை எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. அதிகபட்சம், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வருவாய் தொடர்பான தங்கள் கொள்கைகளை வகுக்கவும், தங்கள் பங்களிப்பைக் குறைத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பிரீமியம் தொகையைப் பெறவுமே இந்தத் திட்டங்கள் உதவும். 
கரோனா ஏற்படுத்திய பேரழிவு, அதனால் மக்களிடம் ஏற்பட்ட மனக் கொதிப்பு ஆகியவை அரசுகளை மறுபரிசீலனை செய்ய வைத்து, சுகாதாரத் துறை வணிகமயமாவதைத் தடுக்கத் தூண்டும் என்று நம்புவோம்.

கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com